மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 மா 2021

மது பாட்டில் மாலை, மாட்டு வண்டியில் வந்து வேட்புமனுத் தாக்கல்!

மது பாட்டில் மாலை, மாட்டு வண்டியில் வந்து வேட்புமனுத் தாக்கல்!

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள், பிரபலங்கள் நேற்று (மார்ச் 15) முகூர்த்த நாளில் வேட்புமனுத் தாக்கல் செய்த நிலையில் பல்வேறு தொகுதிகளில் வித்தியாசமாக வேட்புமனுத் தாக்கல் செய்து பலரின் கவனத்தைப் பெற்றனர் வேட்பாளர்கள்.

மதுரை வடக்குத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து செல்லூரைச் சேர்ந்த சங்கர பாண்டி என்பவர் மது பாட்டில்களை மாலையாக அணிந்துவந்து வேட்புமனுவை, மாநகராட்சி மண்டலம் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கே.பிரேம்குமாரிடம் தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் மது ஒழிப்பதை முன்வைத்து வாக்கு சேகரிக்க உள்ளதாகவும், தேர்தலில் வாக்குக்குப் பணம் வாங்கக் கூடாது, நூறு சதவிகித வாக்குப் பதிவு ஆகியவற்றை வலியுறுத்தி பிரச்சாரம் செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் மாட்டு வண்டியில் ஏர் கலப்பையுடன் ஊர்வலமாக வந்து மனுத் தாக்கல் செய்த நத்தம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தார்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நத்தம் சட்டசபைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் சிவசங்கரன் போட்டியிடுகிறார். முன்னதாகவே வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இவர், தொகுதியின் பல்வேறு இடங்களிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நத்தம் தொகுதியில் போட்டியிடுவதற்கு சிவசங்கரன் நேற்று வேட்பு மனு அளித்தார்.

நத்தம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக மாட்டு வண்டியில் ஏர் கலப்பையுடன் ஊர்வலமாக நத்தம் வட்டாட்சியர் அலுவலகம் நோக்கி வந்தார். அந்த மாட்டு வண்டியில் திருவள்ளுவர், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், சீமான் ஆகியோரின் படங்கள் வைக்கப்பட்டிருந்தது.

வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலருமான திருமலையிடம் சிவசங்கரன் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, "வேளாண்மைத் தொழிலே பிரதான வாழ்வாதாரமாக அமைந்துள்ள நத்தம் தொகுதியில், விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனியார் கல்லூரியை மட்டுமே நம்பியுள்ள நத்தம் பகுதி இளைஞர்களின் உயர்கல்வி கனவை நனவாக்கும் வகையில், நத்தத்தில் அரசுக் கலைக் கல்லூரி அமைக்கக் குரல் கொடுப்பேன்.

கடந்த 40 ஆண்டுகளாக நத்தம் சட்டப்பேரவைத் தொகுதியில் உறுப்பினர்களாக இருந்தவர்கள், மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கு எவ்வித திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. அந்த குறையை நான் தேர்ந்தெடுக்கப்படும்பட்சத்தில் நிவர்த்தி செய்வேன்" என்றார் சிவசங்கரன்.

கொரோனா தடுப்புக் கவசம்

புதிய தலைமுறை மக்கள் கட்சி சார்பில் கொளத்தூரில் போட்டியிடும் அசோக் குமார் என்பவர் நேற்று மருத்துவர்கள் பயன்படுத்தும் கொரோனா தடுப்புக் கவசம் மற்றும் கையுறை அணிந்து வந்து தன்னுடைய வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

கருப்பணசாமி ஆட்டம்

காரைக்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் துரை மாணிக்கம் அரிவாள் ஏந்தி கருப்பணசாமி ஆட்டத்துடன் வந்து வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் துரை மாணிக்கம் போட்டியிடுகிறார். இவர் மாட்டு வண்டியில் பனியன், துண்டு, வேட்டி அணிந்து கொண்டு விவசாயி போன்று வந்தார். மாட்டு வண்டிக்கு முன்பாக ஆதரவாளர் ஒருவர் அரிவாள் ஏந்தி கருப்பணசாமி வேடமணிந்து ஆட்டமாடியவாறு ஊர்வலமாகச் சென்றனர். இதையடுத்து, துரை மாணிக்கம் தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

சக்தி பரமசிவன்

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

செவ்வாய் 16 மா 2021