மிஸ்டு கால் உறுப்பினரை மிஞ்சிய மிஸ்டு வேட்பாளர்!

politics

பாஜகவின் தமிழகத் தலைவராக தமிழிசை இருந்தபோது, மிஸ்டு கால் உறுப்பினர் சேர்க்கை இங்கு பரவலாக அறிமுகமானது. அதே அளவுக்கு சமூக ஊடகங்களில் கேலிகிண்டலுக்கும் உள்ளானது. அதை மிஞ்சும்படியாக வேட்பாளருக்கே தெரியாமல் அவருடைய பெயரை அறிவித்து சமூக ஊடகங்களில் வறுவலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

கேரளத்தின் மலைப்பகுதியான வயநாடு மாவட்டத்தின் மானந்தவாடி சட்டப்பேரவைத் தொகுதி, பழங்குடியினருக்கான தனி தொகுதி ஆகும். நேற்று ஞாயிறன்று அறிவிக்கப்பட்ட கேரள பாஜக வேட்பாளர் பட்டியலில் மானந்தவாடி தொகுதியில் சி.மணிகண்டன் எனும் பெயர் இடம்பெற்றிருந்தது. முதல் தலைமுறைப் பட்டதாரியான இவர், பனியா சமூகத்தைச் சேர்ந்தவர். உற்றார் உறவினர் வட்டத்தில் மணிக்குட்டன் என செல்லமாக அழைக்கப்படும் மணிகண்டன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், அவருக்கு வேண்டியவர்கள் எல்லாருக்கும் ஒரே மகிழ்ச்சி!

ஆனால் சம்பந்தப்பட்ட மணிகண்டனுக்கோ அதிர்ச்சி. தகவலைக் கேள்விப்பட்டதும் யாரோ விளையாட்டாகச் சொல்கிறார்கள் என்றுதான் அவர் நினைத்தார். அது உண்மைதான் என்று தெரியவந்ததும் அதிர்ந்துதான் போனார். நண்பர்களும் உறவினர்களும் இந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அவருக்கு ஆலோசனையும் வாழ்த்தும் கூறத் தொடங்கினார்கள். ஆனால், மணிகண்டனுக்கு அதில் ஆர்வம் இல்லை.

முப்பத்தொரு வயதான இந்த வயநாட்டு இளைஞர், எம்.பி.ஏ. பட்டதாரி. இங்குள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

”வேட்பாளராக என்னை முன்மொழிந்திருப்பது எனக்குக் கிடைத்த கௌரவம்தான். ஆனால் எந்தக் கட்சியின் நிறத்தையும் பூசிக்கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. இந்த வேலையையும் குடும்பத்தையும் கவனித்துக்கொள்வதில்தான் உண்மையில் எனக்கு மகிழ்ச்சி. ஆகையால் என்னை வேட்பாளராக நிறுத்தியதை மகிழ்ச்சியோடு நிராகரிக்கிறேன்.” என்று மணிகண்டன் பேசியுள்ள காணொலி, இணையத்தில் தீயாய்ப் பரவிவருகிறது.

கூடவே அவருக்கு பாராட்டுகளும் குவிந்தவண்ணம் உள்ளது.. இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு ஆளா என்று.. வயநாட்டில் மட்டுமல்ல வலை உலகத்திலும்!

பா.ஜ.க.வுக்கோ இவர் ஓர் (இழப்பு) மிஸ்டு வேட்பாளர்! ஆமாம், மானந்தவாடிக்கு இன்னொரு வேட்பாளரை அவர்கள் அறிவித்தாகவேண்டும்!

இவ்வளவு விசித்திரம் நடந்திருக்கிறதே, பாஜக தரப்பில் என்ன ரியாக்சன் என கேள்வி எழுவது இயல்புதான்; அவர்கள் தரப்பிலிருந்து இன்று மாலைவரை சின்ன முணுமுணுப்பைக்கூட காணோம்!

**- இளமுருகு**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *