மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 மா 2021

ஜெ.விடம் இருந்த பக்குவம் எடப்பாடியிடம் இல்லை: பிரேமலதா

ஜெ.விடம் இருந்த பக்குவம் எடப்பாடியிடம் இல்லை: பிரேமலதா

ஜெயலலிதாவிடம் இருந்த பக்குவம் பழனிசாமியிடம் இல்லை என்றும், இந்த கூட்டணியை வெற்றி கூட்டணியாக மாற்றும் பக்குவம் அவரிடம் இல்லை எனவும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியிலிருந்து விலகி தற்போது அமமுகவில் தேமுதிக இணைந்தது. அமமுக கூட்டணியில் தேமுதிக 60 தொகுதியில் போட்டியிட ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் தேமுதிக சார்பில் அவைத் தலைவர் இளங்கோவனும், அமமுக சார்பில் டிடிவி தினகரன் சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான செந்தமிழனும் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் இன்று (மார்ச் 15) செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது குறித்து விளக்கமளித்தார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “தேமுதிக பக்குவமில்லாத அரசியலைச் செய்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். அவருக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஜெயலலிதாவிடம் இருந்த பக்குவம் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை.

2011 தேர்தலில் தனது பிரச்சாரத்தையே ரத்து செய்து, விஜயகாந்த் வந்தால்தான் பிரச்சாரத்துக்குச் செல்வேன் என்று கூறி, 41 தொகுதிகளைத் தேமுதிகவுக்குக் கொடுத்து, தேர்தலில் தங்களின் கூட்டணியை வெற்றிக் கூட்டணியாக மாற்றியவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அந்த பக்குவம் இவரிடம் இல்லை.

தேசிய ஜனநாயகக் கூட்டணி வழியாகத்தான் அதிமுகவினர் கூட்டணிக்கு வந்தார்கள். நாங்கள் ஒருபோதும் அதிமுகவுடன் கூட்டணிக்குச் செல்லவில்லை. அதிமுகவினர் வந்து விஜயகாந்த்தைச் சந்தித்தார்கள். நாடாளுமன்றத் தேர்தலின் போதே காலதாமதமாக 4 தொகுதிகள் கொடுத்தார்கள். அதுவும் நாங்கள் விரும்பாத தொகுதிகள். அதனால் அப்போது தோல்வி ஏற்பட்டது.

அதுபோன்று இந்த தேர்தலில் ஏற்படாமல் இருக்கக் கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்க ஜனவரி மாதமே சொன்னோம். ஆனால் அதே தவறுதான் செய்தார்கள். தேமுதிகவை அழைக்கவில்லை. பாஜக, பாமகவை அழைத்துப் பேசி இறுதியாகத்தான் எங்களை அழைத்தார்கள். கூட்டணியில் உள்ள அனைவரையும் ஒரே நேரத்தில் அழைக்க வேண்டும் என்று சொன்னோம். அதற்கும் செவிமடுக்கவில்லை.

இதையடுத்து வெறும் 13 தொகுதிகள் என்று மட்டும் தான் பேசினார்கள். இறுதியில் சுதீஷ் பேசும் போது கூட 13 தொகுதிகள் தான் என்று பிடிவாதமாக இருந்தார்கள். இதையடுத்து கூட்டணி உடையக்கூடாது, வெற்றிக் கூட்டணியாக இருக்க வேண்டும் என்று அமைதியாக இருந்தோம்.

இறுதியாக 18 தொகுதி, ஒரு ராஜ்யசபா கொடுங்கள் என்று கேட்டோம். அதற்கும் மறுத்தார்கள். ஆனால் 13 தொகுதி தான் என்று பிடிவாதமாக இருந்தவர்கள், அவை எந்தெந்த தொகுதி என்றும் சொல்லவில்லை.

இவ்வாறு இழுபறி நீடித்த நிலையில், முதல்வரிடம் சுதீஷ் கூட்டணியிலிருந்து விலக வேண்டி இருக்கும் என்று சொன்னார். இதற்கு அவர், உங்கள் பிரியம், நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கராராகக் கூறிவிட்டார். இதையடுத்து நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் யாரும் 13 என்ற நம்பரை ஒத்துக் கொள்ளமாட்டோம் என்று கூறிவிட்டனர். எனவே தான் இந்த கூட்டணியை விட்டு விலகுகிறோம் என்று கேப்டன் அறிவித்தார். இது தான் உண்மையில் நடந்தது. ஆனால் எங்களுக்கு பக்குவம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். ஆனால் அவர் எப்படி பதவி வாங்கினார் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த பக்குவம் எங்களிடம் இல்லை” என்று விமர்சித்தார்.

மேலும், ”தினகரன் எங்களுடன் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த தேர்தலில் தேமுதிக - அமமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று தமிழக அரசியலில் சரித்திரம் படைக்கும். இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தினகரன் தான்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த அவர், வாக்கு சதவீதத்தின் அடிப்படையில்தான் தொகுதி எண்ணிக்கை என்றால், அதிமுக கடந்த எம்.பி. தேர்தலில் 18 சதவீதம் தான் பெற்றது. அப்படிப் பார்த்தால் அந்த வாக்கு வங்கியின் அடிப்படையில்தான் இத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறதா? என்று கேள்வி எழுப்பினார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

திங்கள் 15 மா 2021