மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 மா 2021

ஸ்ரீனிவாசன் டு சரவணன்: பாஜக மதுரை வடக்கு வேட்பாளர் மாறியது எப்படி?

ஸ்ரீனிவாசன் டு சரவணன்:  பாஜக மதுரை வடக்கு வேட்பாளர்  மாறியது எப்படி?

மற்ற கட்சிகளில் இருந்து நாங்கள் வித்தியாசமானவர்கள் என்று மார் தட்டிக் கொள்ளும் பாஜக, மதுரை சம்பவத்துக்குப் பிறகு சற்றே தயக்கத்துடன், “நாங்களும் சராசரி அரசியல் கட்சிதான்” என்பதை பறைசாற்றியிருக்கிறது.

திருப்பரங்குன்றம் திமுக எம்.எல்.ஏ.வான டாக்டர் பி. சரவணன் நேற்று (மார்ச் 14) காலை பாஜக மாநிலத் தலைவர் எல். முருகனை சந்தித்து பாஜகவில் இணைந்தார். அன்று பிற்பகலே அவர் மதுரை வடக்கு தொகுதியின் பாஜக வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்த அறிவிப்பு மதுரை வடக்கு பாஜகவினருக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உடனடியாக எவ்விதத் திட்டமிடலும் இல்லாமல் பாஜகவினர் திரண்டு, “வேண்டும் வேண்டும் பேராசிரியருக்கு சீட் வேண்டும்” என்று முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தை நடத்தினர். ஆனாலும் தலைமையின் அறிவிப்பில் எவ்வித மாற்றமும் இல்லை. பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசனுக்காக அமைக்கப்பட்டிருந்த தேர்தல் பணிமனைகளையும் இழுத்து மூடிவிட்டுச் சென்றுவிட்டனர் பாஜகவினர்.

மதுரை வடக்கு தொகுதியை பாஜகவுக்காக கேட்டுப் பெற்று, அதைத் தேர்தலுக்காக தயார் செய்து வைத்திருந்த ஸ்ரீனிவாசனுக்கும் இது அதிர்ச்சியைதான் ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை பாஜகவில் என்ன நடக்கிறது என்று விசாரித்தோம்.

“திமுகவின் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. சரவணன் இந்தத் தேர்தலிலும் அங்கே சீட் கேட்டிருந்தார். ஆனால் மாவட்டச் செயலாளருக்கும் அவருக்கும் கடுமையான மோதல் இருந்து வந்தது. கடந்த மார்ச் 7 ஆம் தேதி திருச்சியில் நடந்த திமுக மாநாட்டுக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்ற சரவணன், தனக்கு மீண்டும் திருப்பரங்குன்றத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் மார்ச் 11 ஆம் தேதி திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஆறு தொகுதிகளில் தனது திருப்பரங்குன்றம் தொகுதியும் இருப்பதை அறிந்து அதிர்ந்து போனார் சரவணன்.

மாவட்டச் செயலாளருக்கும் தனக்குமான மோதலின் வெளிப்பாடுதான் இது என்பதை உணர்ந்துகொண்ட சரவணன், ‘நான் கட்சிக்காக எவ்வளவு செலவு செய்திருக்கிறேன். என்னை இப்படி புறக்கணித்துவிட்டார்களே?’ என்று புலம்பியபடி தனக்கு நெருக்கமான சிலருடன் ஆலோசனை செய்திருக்கிறார். ஏற்கனவே பாஜகவில் இருந்தவர் டாக்டர் சரவணன்.

சரணவன் முக்குலத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் மதுரை பாஜகவில் இருக்கும் சில முக்குலத்துப் பிரமுகர்கள் சரவணனுக்கு ஒரு தகவல் அனுப்பினார்கள். ’உடனடியாக பாஜகவுக்கு வாருங்கள். மதுரை வடக்கு தொகுதி பாஜகவுக்கு நேற்றுதான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அங்கே பாஜகவின் மாநிலப் பொதுச் செயலாளர் ஸ்ரீனிவாசன் போட்டியிடுவதாகத்தான் இருக்கிறது. ஆனால் நீங்கள் பாஜகவுக்கு வருவதாக இருந்தால் தேர்தல் செலவுகளை செய்வதாக இருந்தால் நீங்களே பாஜகவின் வேட்பாளராக போட்டியிடலாம்’ என்று சரவணனுக்கு தகவல் அனுப்பினார்கள்.

’மதுரை பாஜக பொதுச் செயலாளர் ஸ்ரீனிவாசன் ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர். கட்சிக்காக நீண்ட வருடங்கள் உழைத்துக் கொண்டிருப்பவர். நல்ல பேச்சாற்றல் கொண்டவர். மதுரை வடக்கு தொகுதியில் பாஜக போட்டியிடலாம் என்று கடந்த சில வருடங்களாகவே கணித்து தொடர்ந்து மதுரை வடக்கு தொகுதியில் வேலை செய்து வருகிறார். ஆனால் மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் மகாசுசீந்திரனின் ஆதரவாளர்கள், ‘மதுரையில் பாஜகவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதை முக்குலத்தோருக்கே கொடுக்க வேண்டும்’ என்று தலைமையிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர். மதுரை வடக்கு தொகுதி பாஜகவுக்கு என்று அறிவிக்கப்பட்ட பின்னர் மதுரை புறநகர் மாவட்ட பாஜகவின் பல பிரிவுகள் சார்பில் மாநிலத் தலைமைக்கும் தேசிய தலைமைக்கும், ‘மதுரை வடக்கு தொகுதியில் முக்குலத்தோர் அதிகமாக இருக்கிறர்கள். ஆகவே வடக்கு தொகுதியை மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரனுக்கே கொடுக்க வேண்டும். வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கொடுத்தால் தொகுதி நம் கைவிட்டுப் போகும்” என்று தகவல்களையும் வேண்டுகோள்களையும் அனுப்பிக் கொண்டிருந்தனர்.

அதாவது மதுரையில் எந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டாலும் அது மாநிலப் பொதுச் செயலாளரான பேராசிரியர் ஸ்ரீனிவாசனுக்குதான் என்பது எல்லாராலும் எதிர்பார்க்கப்பட்டது. மாநிலப் பொதுச் செயலாளர் பதவி என்பது பாஜகவில் அதிகாரம் மிக்க பதவி. மாநிலத் தலைவருக்கு இணையான சில அதிகாரம் மாநிலப் பொதுச் செயலாளருக்கும் உண்டு. இந்நிலையில் பொதுச் செயலாளர் பதவியில் இருக்கும் ஸ்ரீனிவாசனுக்கு சீட் கொடுக்கக் கூடாது என்று கட்சிக்குள் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என்பதால், ‘சாதி’ என்ற அஸ்திரத்தை சிலர் கையிலெடுத்தனர்.

இந்த நிலையில்தான் திருப்பரங்குன்றம் திமுக எம்.எல்.ஏ. சரவணனுக்கு சீட் கிடைக்காமல் போக அவரையே கருவியாக்கி மதுரை ஸ்ரீனிவாசனை வீழ்த்த நினைத்தனர். அதன்படியே சரவணனை பாஜகவில் சேர்வதற்கு முன்பே எம்.எல்.ஏ.சீட் கேட்க வைத்திருக்கிறார்கள்.

பாஜக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட மார்ச் 14 ஆம் தேதிக்கு முதல் நாள் மார்ச் 13 ஆம் தேதியே பாஜகவின் தேசிய தலைமையின் தமிழக பொறுப்பாளர்கள் சிலரும், தமிழக அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், மாநிலத் தலைவர் முருகன் ஆகியோர் பொதுச் செயலாளர் ஸ்ரீனிவாசனுக்கு போன் செய்திருக்கிறார்கள்.

திமுக எம்.எல்.ஏ. சரவணன் பாஜகவுக்கு வர இருக்கும் விஷயத்தையும், அவர் மதுரை வடக்கு தொகுதியில் வாய்ப்பு கேட்பதையும் ஸ்ரீனிவாசனிடம் கூறியிருக்கிறார்கள். ’நீங்கள் ரொம்ப சீனியர். நீங்கள் எங்கள் இடத்தில் இருந்தால் என்ன முடிவெடுப்பீர்கள் என்று சொல்லுங்கள். அதன்படி நாங்கள் முடிவெடுக்கிறோம்’என்று ஸ்ரீனிவாசனிடம் அவர்கள் கூறியுள்ளனர். இதைக் கேட்டு குழம்பிய ஸ்ரீனிவாசன், ‘தனிநபரா கட்சியா என்றால் கட்சிதான் முக்கியம்.கட்சி என்ன முடிவெடுக்கிறதோ அதை ஏற்பேன். நான் வேட்பாளராக வேண்டும் என்று நான் பாடுபடவில்லை. கட்சி ஜெயிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். ‘தற்போதுள்ள நிலைமையில் கட்சியை வளர்க்க வேண்டும். பிற கட்சிகளில் இருந்து பிரபலமானவர்கள், பொறுப்பானவர்கள் நமது கட்சிக்கு வந்தால் அவர்களுக்கு தேர்தல் வாய்ப்பளிக்கலாம். உங்களுக்கு உரிய மரியாதையை கட்சி அளிக்கும்’என்று கேசவ விநாயகம் கூறியிருக்கிறார். இதற்கு ஸ்ரீனிவாசன் மறுப்பேதும் சொல்லவில்லை. இதன் பிறகுதான் மதுரை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளராக சரவணன் அறிவிக்கப்பட்டார்” என்று நடந்ததை விளக்கினார்கள்.

ஆனால் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டபோதுதான் மதுரை வடக்கு பாஜகவினருக்கு வேட்பாளர் மாறிய தகவல் தெரிந்தது. அதனால்தான் அவர்கள் அதிர்ச்சி அடைந்து போராட்டத்தில் இறங்கினார்கள். அவர்களிடம் போராட்டத்தைக் கைவிடுமாறு ஸ்ரீனிவாசன் வற்புறுத்தியுள்ளார்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் மதுரை ஆத்திகுளத்தில் உள்ள ஸ்ரீனிவாசனின் அலுவலகத்துக்கு இன்று சரவணன் எம்.எல்.ஏ. வருகை தந்தார். ஸ்ரீனிவாசனின் கரங்களைப் பிடித்துக்கொண்டு நன்றி கூறியிருக்கிறார்.

இதற்கிடையில் இந்த வேட்பாளர் மாற்றத்தில் தனது பெயர் அடிபடுவதை அறிந்த மதுரை புறநகர் மாவட்ட பாஜக தலைவர் மகாசுசீந்திரன், “தாய் பரிவார் புனித இயக்கங்களின் வழிகாட்டுதலில் வளர்ந்து வரும் நாம் அரசியல் பொறுப்புகளுக்காகவும், பதவிகளுக்காகவும் ஜாதியையோ மதத்தையோ சொல்லி ஒருவரை தாழ்த்தி விமர்சனம் செய்வது, நமது இயக்கத்துக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் என்று கருதுகிறேன்.

ஆகவே நான் சார்ந்திருக்கும் இயக்கத் தொண்டர்களும், நண்பர்களும், உறவினர்களும் வாட்ஸப். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக தளங்களிலும் போராட்டம் என்ற பெயரில் பொது இடங்களிலும் விமர்சனம் செய்வதைத் தவிர்ப்போம்” என்று இன்று (மார்ச் 15) ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

”மதுரை இராம ஸ்ரீனிவாசனை தவிர வேறு யாரேனும் இந்த இடத்தில் இருந்திருந்தால் மதுரை பாஜகவில் பெரும் போராட்டம் வெடித்திருக்கும். அவர் பக்குவப்பட்டவர் என்பதால் சர்ச்சையாக்காமல் விட்டுவிட்டார்” என்கிறார்கள் தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில்.

-ராகவேந்திரா ஆரா

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர் ...

4 நிமிட வாசிப்பு

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர்  முருகன்

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

3 நிமிட வாசிப்பு

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

திங்கள் 15 மா 2021