மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 மா 2021

'பலம் வாய்ந்த கூட்டணி’: வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு எடப்பாடி

'பலம் வாய்ந்த கூட்டணி’: வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு எடப்பாடி

வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி கட்சிகளுக்கு இடையே கூட்டணி,  தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை என தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது.

 கட்சி வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிட தங்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்த வண்ணம் உள்ளனர்.  அந்த வகையில் இன்று  முதல்வரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி, எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவதற்காக தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி  தனலிங்கத்திடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வேட்பு மனு தாக்கலின் போது தேர்தல் அலுவலரின் அறைக்கு வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்திருந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் அலுவலகத்திற்கு 100 மீட்டருக்கு முன்பே தனது வாகனத்தை நிறுத்திவிட்டு தனி ஒரு ஆளாக நடந்து சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “1989ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொடுத்த வாய்ப்பில் சேவல் சின்னத்தில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். தொடர்ந்து, மாபெரும் மக்களின் செல்வாக்கோடு தொடர்ந்து வெற்றி பெற்று எடப்பாடி தொகுதியில் பல்வேறு திட்டங்களையும் செய்து கொடுத்துள்ளேன். எம்.எல்.ஏ, எம்.பி . மற்றும் அமைச்சர், அதிமுகவில்  பொறுப்பு என பல்வேறு நிலைகளிலும் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்து வந்துள்ளேன். எடப்பாடி மக்களுக்காக அரும்பாடு பட்டுள்ளேன்.

அதிமுக தேர்தல் அறிக்கை எடுபடுகிறதா இல்லையா என்பது குறித்து தேர்தலுக்கு பிறகு தெரியவரும். அடித்தட்டு மக்கள் உட்பட பலரும் தேர்தல் அறிக்கையை வரவேற்றுள்ளனர்.      

இந்தியா முழுவதும் எந்த மாநிலத்தில்தான் கடன் இல்லை. கடன் இருந்தாலும் வளர்ச்சி திட்டப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிமுக தலைமையிலான கூட்டணி பலம் வாய்ந்தது. நிச்சயம் வெற்றி பெறுவோம்.  

அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்தியது உட்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். சிஏஏவை கைவிட மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். மக்களின் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றித் தரப்படும்” என்றார்.

எடப்பாடி பழனிசாமி 1989, 1991, 1996, 2006, 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டுள்ளார். தற்போது 7ஆவது முறையாக போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

 

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

5 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

4 நிமிட வாசிப்பு

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ...

3 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ஆயத்தம்! 

திங்கள் 15 மா 2021