மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 மா 2021

’சீட்டு மொட்டை...’ - ஒரே நாளில் பிரபலமான கேரள மகளிர் காங். தலைவர்!

’சீட்டு மொட்டை...’ - ஒரே நாளில் பிரபலமான கேரள மகளிர் காங். தலைவர்!

கேரள காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை விட அதைக் கண்டித்து மொட்டையடித்துக்கொண்ட மகளிர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஒரே நாளில் ஒட்டுமொத்த நாட்டிலும் பிரபலம் ஆகிவிட்டார். இதனால் அந்த மாநில காங்கிரஸ் தலைவர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.

மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டதும், தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் மகளிர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் லத்திகா. அது மட்டுமின்றி, திருவனந்தபுரத்தில் உள்ள கேரள காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தின் முன்பு தன் தலையை மொட்டையடித்துக்கொண்டார். அவரின் இந்த எதிர்ப்புமுறையால் மேலிடத் தலைவர்கள் செய்வதறியாது திகைத்துப்போனார்கள்.

”எத்தனை பேர் விண்ணப்பித்தாலும் தொகுதிக்கு ஒருவரைத்தான் நிறுத்தமுடியும்; வாய்ப்பு கிடைக்காதவருக்கு பின்னர் வாய்ப்புகள் வழங்கப்படும்” என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா சமாதானமாக கூறியிருக்கிறார். அதுபோன்று எதிர்ப்பைத் தெரிவிக்க இது வழிமுறை அல்ல என்று முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். லத்திகாவுக்கு தொகுதி தரப்படும் என உறுதியளிக்கவில்லை என்று மறுத்திருக்கிறார், முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி. ஆனால் அதற்கு நேர்மாறாகத்தான் நடப்பு இருக்கிறது என விவரிக்கிறார்கள், கேரள காங்கிரஸ் நிர்வாகிகள் தரப்பில்.

கேரள காங்கிரசில் அதிரடியான பிரமுகராக அறியப்படும் லத்திகா, கோட்டயம் மாவட்டம், ஏற்றுமானூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். இந்தத் தொகுதியில் தனக்கு வாய்ப்பு தராவிட்டால் சுயேச்சையாகக் களமிறங்குவேன் என மேலிடத் தலைவர்களிடம் அவர் ஏறக்குறைய மிரட்டலாக சொல்லியிருந்தார்.

ஆனால் அந்தத் தொகுதியை கூட்டணிக் கட்சியான கேரள காங்கிரஸ்(ஜோசப்)கட்சிக்கு ஒதுக்கிவிட்டனர். அதையடுத்து எர்ணாகுளம் மாவட்டம் விபின் தொகுதியில் அவரை நிறுத்துவது பற்றி கட்சிக்குள் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.

கோட்டயம் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலராக இருந்துள்ள லத்திகா, 2011 தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தனை எதிர்த்து மலம்புழா தொகுதியில் போட்டியிட்டவர். ஆனால் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. 2018ஆம் ஆண்டில் மகளிர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியில் அமர்ந்தவர், இந்த முறை எப்படியும் போட்டியிடுவது என்பதில் உறுதியாகவும் நம்பிக்கையோடும் இருந்தார். நேற்று வேட்பாளர் பட்டியலில் அவரின் பெயர் இடம்பெறாததால், வழக்கமான அதிரடி பாணியில் தன் எதிர்ப்பைத் தெரிவித்து, இந்திய அளவில் நேற்று ஊடகங்களில் செய்தியாகி அதிக பிரபலம் ஆகிவிட்டார். பிரச்னையையும் பிரபலமாக்கிவிட்டார்!

ஆனாலும் வேட்பாளர் தேர்வில் மாநிலத் தலைவர்களின் தலையீடு எதுவும் இல்லை என அடித்துச்சொல்லும் கேரள கதர்ச்சட்டைக்காரர்கள், முழுக்கமுழுக்க ராகுல்காந்தி சொன்னபடிதான் பட்டியல் தயாரிக்கப்பட்டது, என்கிறார்கள்.

நேற்று அறிவிக்கப்பட்ட 86 தொகுதிகளின் வேட்பாளர்களில் 9 பேர் பெண்கள். இதில், 50 வயதுக்குக் குறைவானவர்கள் 46 பேர். இவர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் பட்டதாரிகள். அவர்களில் இரண்டு பேர், பி.எச்டி. ஆய்வுப்பட்டம் பெற்றவர்கள். இரண்டு பேர் மருத்துவர்கள்.

77 வயதான உம்மன்சாண்டி உள்பட மூன்று பேர் மட்டுமே 70 வயதைக் கடந்தவர்கள். 26 வயது கே.எம். அபிஜித் என்பவர்தான் இருப்பதிலேயே இளம் வேட்பாளர்.

வழக்கம்போல இந்த கோஷ்டி அந்த கோஷ்டி என்பதெல்லாம் அறவே கூடாது என ராகுல் கறாராக இருந்திருக்கிறார். குறிப்பாக, உள்ளாட்சித் தேர்தலில் வேலைசெய்து வெற்றியை ஈட்டிய இளைஞர்களுக்கு முக்கியத்துவம் தந்து, இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், 58 வயதான லத்திகாவுக்கு மட்டும் விதிவிலக்கு அளிப்பதை யோசித்துப்பார்க்கவே முடியாது என இன்னொரு பின்னணியைச் சொல்கிறார்கள், கேரள காங்கிரசார்.

ஆனால், பட்டியலுக்கு முன்பே 20 சதவீதமாவது பெண்களுக்கு வாய்ப்பு தரவேண்டும் எனக் கேட்டேன்; குறைந்தது மாவட்டத்துக்கு ஒரு பெண்ணையாவது வேட்பாளராக அறிவிப்பார்கள் என நம்பினேன்.” என்கிறார், லத்திகா.

ஏற்றுமானூரில் சுயேச்சையாகப் போட்டியிடுவாரோ என காங்கிரஸ் கட்சியைவிட, கூட்டணியில் போட்டியிடும் ஜோசப் பிரிவு காங்கிரஸ் கட்சி கலங்கிப்போய் இருக்கிறது. இன்று மதியம் லத்திகாவைச் சந்தித்து ஆதரவைக் கேட்டிருக்கிறார், அந்தக் கட்சியின் வேட்பாளர் லூக்கோஸ்.

லத்திகா என்ன செய்யப்போகிறாரோ?

- இளமுருகு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

திங்கள் 15 மா 2021