மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 மா 2021

17,000 கிலோ பேரீச்சை மோசடி... கேரள அரசியலில் பாயும் புது வழக்கு?

17,000 கிலோ பேரீச்சை மோசடி... கேரள அரசியலில் பாயும் புது வழக்கு?

தமிழகம், புதுவையுடன் ஏப்ரல் 6ஆம் தேதியன்று சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கும் கேரளத்தில் தங்கக்கடத்தல், டாலர் கடத்தல் வழக்குகள் பிரச்சாரத்தில் சூடுபறக்க வைக்கின்றன. அதன் தொடர்ச்சியாக 17,000 கிலோ பேரீச்சை பழங்களை மோசடியாகக் கொண்டுவந்ததாக இன்னுமொரு விவகாரத்தைக் கிளப்புகிறார்கள்.

ஐக்கிய அரபு அமீரக நாட்டின் தூதரக அதிகாரி மூலமாக சட்டவிரோதமாகத் தங்கத்தையும் அமெரிக்க டாலர்களையும் கடத்திக் கொண்டுவந்ததாக வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில் தூதரக அதிகாரிகளும் முதலமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றியவர்களும் கூட்டுவைத்து மோசடியில் ஈடுபட்டதாக இந்த வழக்குகளை விசாரிக்கும் மத்திய அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன.

தேர்தல் பரபரப்பு தொடங்கிவிட்டால் பொதுவாக நாட்டில் எந்த விவகாரம் பற்றியும் யாருக்கும் கவனம் செல்லாது. ஆனால், இந்த விவகாரம் பிரச்சாரத்திலேயே முக்கிய பேசுபொருளாக இருப்பதால் சூட்டைக் கூட்டுகிறது. கடத்தலில் முக்கியமான குற்றச்சாட்டுதாரியான ஸ்வப்னா, முதலமைச்சர் பினராயி சொல்லித்தான் அவரின் முன்னாள் தனிச்செயலாளர் தனக்குப் பணம் கொடுத்தார் எனக் கூறியதாக கடந்த வாரம் ஒரு வாக்குமூலம் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் ஸ்வப்னாவை மத்திய அமலாக்கத் துறையினர் மிரட்டி, கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெற்றதாக உடனிருந்த மாநில போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியது, அரசாங்கத்துக்கு பெரிய சாதகமாக அமைந்தது.

இதற்கிடையே, இதே வழக்கில் சிறையில் இருக்கும் இன்னொரு குற்றச்சாட்டுதாரி சந்தீப் நாயர், வழக்கை விசாரிக்கும் எர்ணாகுளம் நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் அதிர்ச்சியளிக்கும் புகாரைத் தெரிவித்துள்ளார். பினராயி விஜயனுக்கும் அமைச்சர்களுக்கும் முக்கிய தலைவரின் மகனுக்கும் பணப்பரிவர்த்தனையில் தொடர்பு இருக்கிறது எனக் கூறிவிட்டால், சந்தீப்பின் பிணை மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என அமலாக்கத் துறையினர் பேசியுள்ளனர். இதுதான் நீதிபதிக்கு சந்தீப் எழுதிய கடிதத்தின் முக்கிய அம்சம்.

திருவனந்தபுரம் மைய சிறையின் கண்காணிப்பாளர் வழியாக சந்தீப்பின் கடிதம் நீதிமன்றத்துக்குக் கிடைத்துள்ளது. அதைப் பெற்றுக்கொண்ட நீதிமன்றம், அமலாக்கத்துறையிடம் இதைப் பற்றி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

பிரச்சாரப் பேசுபொருளாக மாற்றப்பட்டுவிட்ட இந்த விவகாரத்தில், அமலாக்கத்துறைக்கு இது சோதனையான கட்டம்தான். நீதிமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படவேண்டிய கமுக்கமான தகவல்களை அதற்கு முன்னரே வெளியில் கசியவிட்டதற்காக, விசாரணை அதிகாரிகள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

ஆனால் அந்த அளவு பிரச்சினை சந்தீப் விவகாரத்தில் இல்லை என துணிவாக இருக்கிறார்கள் சம்பந்தப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள். ஏனென்றால் ஏற்கெனவே சந்தீப்பிடம் விசாரணையில் பிரச்சினை ஏதும் இருந்தால் தெரிவிக்குமாறு நீதிமன்றம் மூன்று முறை கேட்டது. அப்போதெல்லாம் சந்தீப்பிடமிருந்து எந்த முறையீடும் சொல்லப்படவில்லை. காலம் கடந்த அவரின் குற்றச்சாட்டு எந்த அளவுக்கு எடுபடும் என்பது தெரியவில்லை என்கிறார்கள், குற்றவியல் சட்ட வல்லுநர்கள்.

இந்தச் சூழலில் கடத்தல் வழக்கில் விசாரணைக்கு வருமாறு சிபிஎம் மாநில முன்னாள் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் மனைவி வினோதினிக்கு சுங்கத்துறையினர் முறைப்படி அழைத்தும், மார்ச் 12ஆம் தேதி அவர் புறக்கணித்துவிட்டார். இரண்டாவதாகவும் அழைப்பாணை அனுப்பியிருக்கிறார்கள். அதையும் பெற்றுக்கொண்டு அவர் வராவிட்டால், மூன்று நாள்களுக்குள் மூன்றாவதாக ஒரு அழைப்பாணையை அனுப்புவார்கள். அதற்கும் வராவிட்டால் நீதிமன்றத்தில் முறையிட்டு பிடி ஆணை வாங்கி, வினோதினியிடம் விசாரணை நடத்தப்படும் என நடைமுறைகளை விவரிக்கிறார்கள் அமலாக்கத் துறை அதிகாரிகள்.

இதைப்போல, சட்டப்பேரவைத் தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கும் சுங்கத்துறை அழைப்பாணை அனுப்பினர். விசாரணையில் பங்கேற்பதற்குத் தனக்கு கூடுதல் அவகாசம் தர வேண்டும் என அவர் முறைப்படி கடிதம் அனுப்பிவிட்டு, தன் பங்குக்கு விசாரணையைப் புறக்கணித்துவிட்டார். அவருடைய விவகாரத்தில் சட்ட ஆலோசனையைக் கேட்டிருக்கிறது சுங்கத்துறை.

கேரளத்தை ஆளும் சிபிஎம் கட்சியும், அரசாங்கமும் ஒத்துழையாமையைக் கடைப்பிடிப்பது என முடிவெடுத்து செயல்படுவதாகத்தான் தெரிகிறது. குறைந்தபட்சம் இந்தத் தேர்தல் முடியும்வரை அவர்கள் இந்த உத்தியைக் கடைப்பிடிக்கவே வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.

இது இப்படிப்போக, சுங்கத்துறை அடுத்த ஓர் அம்பை எய்து புதிய ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது எனலாம். ஆம், அதே ஐக்கிய அரபு அமீரக தூதரக வழியாக ராஜ்யரீதியிலான சில விதிவிலக்கு எனும் பெயரில், 17,000 கிலோ பேரீச்சைப் பழம் வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளது; அதைப் பற்றியும் விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய புலனாய்வு அமைப்புகளிடம் சுங்கத்துறை கேட்டிருக்கிறது.

இடது கூட்டணி அரசாங்கம் குறிப்பாக சிபிஐ-எம் கட்சி இதை எப்படி கையாளுமோ?

- இளமுருகு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

திங்கள் 15 மா 2021