மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 மா 2021

பாமக வேட்பாளருக்கு எதிரான வழக்கு; வேட்பு மனு செய்வதில் சிக்கல்?

பாமக வேட்பாளருக்கு எதிரான வழக்கு; வேட்பு மனு செய்வதில் சிக்கல்?

பாமக வேட்பாளர் ஒருவர் குற்ற வழக்கில் இருப்பவர் என்ற தகவல், தலைமை கவனத்திற்குச் சென்றிருப்பதால் வேட்பாளரை மாற்றலாமா அல்லது முன் ஜாமீன் வாங்கச் சொல்லலாமா என்ற ஆலோசனையில் இருந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

2021 ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறப்போகும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்கள்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக வேட்பாளராக ஜெகன் என்பவரை அறிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சிட்டிங் எம்.எல்.ஏ. சபா ராஜேந்திரனை எதிர்த்துப் போட்டியிடுபவர்தான் பாமக வேட்பாளர் ஜெகன். இவர் மீது கடந்த மாதம் அரசு சொத்தை சேதப்படுத்தியதாக வழக்குப் பதிவாகியுள்ள நிலையில் நீதிமன்றத்தில் பிணை வாங்காமல் வேட்புமனு தாக்கல் செய்வதற்குத் தயாராகிவருகிறார் என்ற செய்திகள் பரவிவருகிறது.

சில தினங்களுக்கு முன்பு, நெய்வேலி சட்டமன்றத் தொகுதித் தேர்தல் அதிகாரி சிவக்குமாரிடம் ஒரு மனு அளித்துள்ளார் பாமக நிர்வாகி. அதில் அரசியல் ரீதியாகப் போடப்பட்ட வழக்கு அதை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அது என்ன வழக்கு என்று விசாரித்தோம்,

கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழூர் அருகில் உள்ள டாஸ்மாக் கடையைத் திறந்து விற்பனை செய்துகொண்டிருந்தபோது.... ஜெகன் தலைமையில் வந்த ஒரு கும்பல் சத்தம் போட்டதால் பயந்துபோன கடை (எண் 2423) சூப்பர்வைசர் அரிகிருஷ்ணன் மற்றும் விற்பனையாளர் ரமேஷ் கடையைப் பூட்டிவிட்டு வெளியில் நின்றிருந்தனர்.

அந்த வழியாக வந்த போலீஸார் என்ன கூட்டம் என்று விசாரித்தபோது, அரிகிருஷ்ணனையும் போலீஸாரையும் பிடித்துத் தள்ளிவிட்டு கடப்பாறை, மற்றும் சுத்தியால் பூட்டை உடைத்து கடைக்குள் இருந்த மது பாட்டில்களைச் சாலையில் வீசி உடைத்துள்ளார்கள். இதுகுறித்து 2021 பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி, காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

குற்ற எண் 104/ 2021 செக்‌ஷன், 147, 148, 294 (பி) 323, 447, 506, 379, பிபிடி ஆக்ட் உட்பட 9 பிரிவுகளில் ஏ 1 குற்றவாளி ஜெகன் உட்பட 21 பேர் மீது பெயர் குறிப்பிட்டும் மற்றும் பலர் என்று வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் சிலர் மட்டும் பெயிலில் சிறையிலிருந்து வெளியில் வந்துவிட்டார்கள். ஜெகன் உட்பட மற்றவர்கள் யாரும் முன் ஜாமீன் பெறவில்லை என்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.

கொலை முயற்சி மற்றும் பிபிடி ஆக்ட் வழக்கில் முன் ஜாமீன் வாங்காமல் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யப்போகலாமா என்று பாமக வழக்கறிஞர்களிடம் கேட்டோம்.

”வேட்பாளர் ஜெகனுக்கு உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மார்ச் 3ஆம் தேதி மனு தாக்கல் செய்திருந்தோம். அந்த மனு மீதான விசாரணை முடிந்து இரண்டு தினங்களுக்கு முன்பு மார்ச் 12ஆம் தேதி, பெயில் ஆர்டராகிவிட்டது. இன்று திங்கள் கிழமை 15ஆம் தேதி அல்லது வேறு ஒரு நாளில் நீதிமன்றத்தில் ஆஜராகி இரண்டு ஜாமீன்தாரர் கொடுத்துவிட்டு வந்துவிடுவார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நாட்கள் உள்ளது. அதனால் வேட்பாளர் மாற்றத்துக்கு வாய்ப்புகள் இல்லை. அவர் போலீஸ் தேடும் குற்றவாளி இல்லை பொது வாழ்வில் உள்ளவர்” என்றார்.

இதைப் பற்றி மூத்த வழக்கறிஞரும் முன்னாள் அரசு வழக்கறிஞருமான சிவராஜ்,

“தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்யும் படிவத்தில் குற்ற வழக்குகளைக் குறிப்பிடவேண்டும், பிணையில் வந்திருக்கிறீர்களா இல்லையா என்பதைக் குறிப்பிடவேண்டும். தேர்தல் அதிகாரிகள் கொடுப்பதைப் பெற்றுக்கொள்ள வேண்டுமேத் தவிர மறுக்கமுடியாது. மனு பரிசீலனையில் யாராவது எதிர்ப்புகள் தெரிவிக்கலாம், அரசு சொத்தை சேதப்படுத்தியவர், அரசு ஊழியரை பணிசெய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ள வழக்கில் போலீஸ் தேடப்படும் குற்றவாளி ஒருவர் முன் ஜாமீன் பெறாமல் மனுகொடுப்பதுப் பற்றி எதிர்ப்புகள் தெரிவிக்கலாம். தேர்தல் அதிகாரியின் அதிகாரத்துக்கு உட்பட்டு சம்பந்தப்பட்ட நபர் மனுவைத் தள்ளுபடி செய்யலாம்” என்றார்

உயர் நீதிமன்றத்தில் ஜெகனுக்கு பெறப்பட்டுள்ள முன் ஜாமீன் ஆர்டர் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே செல்லும் என்பதால் திங்கள் கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகிய பிறகு வேட்புமனுத் தாக்கல் செய்வார் என்கிறார்கள் பாமக வட்டாரத்தில்.

-வணங்காமுடி

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

திங்கள் 15 மா 2021