மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 மா 2021

வேட்பாளர் மாற்றம்: அதிமுக அலுவலகத்தில் தாக்குதல்- உயிர் தப்பிய அமைச்சர் மகன்!

வேட்பாளர் மாற்றம்: அதிமுக அலுவலகத்தில் தாக்குதல்-  உயிர் தப்பிய அமைச்சர் மகன்!

அதிமுக வேட்பாளரை அதிரடியாக மாற்றியதால், ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்தை சூறையாடினார்கள். அமைச்சரின் விலை உயர்ந்த காரை உடைத்து, அமைச்சர் மகனைத் தாக்க முயன்ற போது போலீஸார் காப்பாற்றியுள்ளனர்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமியை திமுகவுக்கு முன்னதாகவே வேட்பாளராக அறிவித்தது அதிமுக தலைமை.

பழனிசாமி நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட கவுன்சிலருக்கு போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். அதற்கு முன்பு பழனிசாமியின் மனைவி மணிமேகலை கடலூர் ஒன்றிய குழு தலைவராக இருந்தபோது பொருளாதாரத்தில் அசுர வளர்ச்சியைக் கண்டார்.

குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு பழனிசாமியை வேட்பாளராக அறிவித்ததும், ‘திமுக வேட்பாளராக எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்தான் நிற்பார். அவர் இப்போதே வெற்றிபெற்றுவிட்டார்”என்று பரவலாகப் பேசினார்கள். அதேபோல திமுக சார்பில் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் நிலவரம் முதல்வருக்குத் தெரிந்து, அமைச்சர் சம்பத் மற்றும் அருண்மொழித்தேவனை அழைத்துப் பேசி வேட்பாளரை மாற்ற முடிவு செய்தார்கள். இதையடுத்து நேற்று (மார்ச் 14) இரவு 7.30 அளவில் புவனகிரி தொகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயத்தை பழனிசாமிக்கு பதிலாக வேட்பாளராக அறிவித்தனர்.

தகவல் அறிந்த சில மணித்துளிகளில் கோபமான பழனிசாமி ஆதரவாளர்கள் பாதிரி குப்பத்தில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை கழகத்தில் நுழைந்து அமைச்சர் அறையை சூறையாடினார்கள். அமைச்சர் காரையும் சேதப்படுத்தி போர்க்களமாக இருந்தபோது போலீஸார் கூட்டத்துக்குள் நுழைந்து லத்தி ஜார்ஜ் செய்து அமைச்சர் மகன் ப்ரவீனை பாதுகாப்பாக உள்ளேயிருந்து அழைத்துவந்துள்ளார்கள்.

சம்பவ இடத்திலிருந்தவர்களிடம் விசாரித்தோம்.

“பழனிசாமியை வேட்பாளராக அறிவித்ததும், இருந்த அசையா சொத்துக்களை விலை பேசினார். கையிலிருந்த பணம் மற்றும் கடன் வாங்கிய பணத்தைக், கடந்த இரண்டு நாட்களில் முக்கியஸ்தர்களையும் கூட்டணி கட்சியினரையும் மரியாதை நிமித்தமாகச் சந்திக்கவும் உபரி செலவுகள் செய்யவும் ஏகப்பட்டதை அழித்துவிட்டார்.

சுகர் மற்றும் பிபி அதிகமாக இருப்பவர். சமீப காலமாக டென்ஷன் ஏதுமின்றி இருந்தார். நேற்று வேட்பாளரை மாற்றியதும் டென்ஷனாகிவிட்டார். இதனால் பழனிசாமி, அவரது மகன், மற்றும் ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்துக்கு ஆத்திரமாக சென்றிருக்கிறார்கள். அவருடன் வந்தவர்கள் மது போதையிலிருந்துள்ளார்கள். போதாக்குறைக்கு பழனிசாமி மகன் சுனில் மற்றும் அவரது நண்பர்களும் மது அருந்திட்டு அதிமுக அலுவலகத்துக்குச் சென்றார்கள். பழனிசாமி அமைச்சர் சம்பத்துக்கு எதிராகக் கோஷமிட்டு சாலையில் படுத்துக்கொண்டார்.

சுனில் தலைமையில் சென்ற கூட்டம் அமைச்சர் காரை உடைத்தனர். இன்னொரு க்ரூப் உள்ளே நுழைந்து அமைச்சர் அறையைச் சேதப்படுத்தினார்கள். வெளியிலும் கண்ணாடிகளை உடைத்தது ஒரு கூட்டம்,

”அமைச்சர் மகன் எங்கடா இருக்கிறான்?” என்று ப்ரவீனைக் குறிப்பிட்டு பழனிசாமி ஆதரவாளர்கள் சிலர் கெட்ட வார்த்தைகளால் திட்டியபடியே தேடினார்கள். இதையறிந்த ப்ரவீன் ஆதரவாளர்கள் அவரை பாதுகாப்பாக முதல் மாடிக்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள்.

போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், அதிகமான போலீஸார் விரைந்துவந்து இருதரப்பையும் லத்தி சார்ஜ் செய்து கூட்டத்தைக் கலைத்துவிட்டு, முதல் மாடியில் பதட்டத்துடன் இருந்த அமைச்சர் மகன் ப்ரவீனை பாதுகாப்புடன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள்.

அமைச்சர் வீடு, அதிமுக அலுவலகம் மற்றும் முன்னாள் வேட்பாளர் பழனிசாமியின் இரு வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு தற்போது போடப்பட்டுள்ளது.

பழனிசாமி ஆதரவாளர்களிடம் பேசியபோது, “ஆரம்பத்திலேயே ஆராய்ந்து வேட்பாளர்களை நியமித்திருக்கலாம். மாறாக வேட்பாளரை நியமித்த மூன்றாவது நாளில் மாற்றினால் யாரால்தான் தாங்கிக்கொள்ளமுடியும், எவ்வளவு அவமானம், இதற்கு அமைச்சர்தானே காரணம்?

அமைச்சர் மகன் ப்ரவீன் கட்சி ஆபீஸில், கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஆட்களை வைத்துக்கொண்டிருக்கிறார், ப்ரவீன் நண்பர்கள், ‘ப்ரவீன் தம்பிகள்’ என்ற ஒரு குரூப்பை உருவாக்கி முதல் மாடியில் நூற்றுக்கணக்கானவர்களை அழைத்து வகுப்பு நடத்துகிறார். இவரால் கட்சியில் உள்ள பல நிர்வாகிகளும் ஒதுங்கி இருக்கிறார்கள். அந்த கோபத்தில்தான் இந்த பிரச்சினையில் ப்ரவீனும் குறிவைக்கப்பட்டிருக்கிறார்” என்கிறார்கள்.

அதிமுக அலுவலகத்தில் அரங்கேறிய மோதலும் போலீஸ் லத்தி சார்ஜும் திமுக வேட்பாளருக்கு இன்னும் பலத்தைக் கூட்டியிருக்கிறது என்கிறார்கள் கடலூர் அதிமுகவினரே!

-வணங்காமுடி

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

திங்கள் 15 மா 2021