மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 மா 2021

காங்கிரஸுக்குள் சீட் போராட்டம்: கடுப்பில் திமுக!

காங்கிரஸுக்குள் சீட் போராட்டம்: கடுப்பில் திமுக!

தமிழகத்தில் திமுக கூட்டணியில் 25 தொகுதிகளைக் கண்ணீர் விட்டுப் பெற்ற காங்கிரஸ், இப்போது அந்தத் தொகுதிகளில் யாரை நிறுத்துவது என்ற குஸ்தியில் ஈடுபட்டிருக்கிறது.

ஒரே நாளில் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர் அழகிரியை எதிர்த்துப் போராட்டம், ஆதரித்துப் போராட்டம், இவருக்கு சீட் கொடு என்று போராட்டம், சீட் கொடுக்காதே என்று போராட்டம் என்று வேட்பாளர் பட்டியல் வெளியிடும் முன்பே போராட்டப் பட்டியல் வெளியிடும் நிலைக்கு காங்கிரஸ் ஆளாகிவிட்டது.

இதை கோஷ்டி பூசல் என்று காங்கிரஸுக்கு வெளியே பார்க்க, ஜனநாயகம் என்கிறார்கள் காங்கிரஸுக்கு உள்ளே இருப்பவர்கள். காங்கிரஸ் பெற்ற தொகுதிகளில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான பணியில் காங்கிரஸ் தலைமை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. வேட்பாளர்கள் பட்டியலுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் டெல்லி சென்றனர்.

இந்த நிலையில் பணம் பெற்றுக்கொண்டு வேட்பாளர்களைத் தேர்வு செய்வதாக காங்கிரஸ் செயல் தலைவர் விஷ்ணு பிரசாத் எம்.பி, சென்னை சத்திய மூர்த்தி பவனில் நேற்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி நடத்தினார். இதற்குப் பின்னணி இருக்கிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தொகுதியை இம்முறை காங்கிரஸ் திமுக கூட்டணியில் பெற்றிருக்கிறது. பொதுவாகவே இந்தத் தொகுதிக்கு இன்னார் என்று எழுதி வைக்கும் பழக்கம் காங்கிரஸில் குறையவில்லை.

2016 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஏ.எம்.முனிரத்னம் நின்று தோல்வி அடைந்தார். 1989, 91, 96 தேர்தல்களில் காங்கிரஸ், தமாகா சார்பாக எம்.எல்.ஏ ஆனவர் முனிரத்னம். நடுவில் 2006, 2011 தேர்தல்களில் முன்னாள் எம்.பி அன்பரசுவின் மகன் அருள் அன்பரசு காங்கிரஸில் நின்றார். 2006இல் ஜெயித்துவிட்டார். 2011இல் தோல்வி அடைந்தார். மீண்டும் 2016 தேர்தலில் ஏ.எம்.முனிரத்னமே நின்றார். வெற்றி வாய்ப்பை இழந்தார்.

இம்முறை தேர்தலில் நிற்க அருள் அன்பரசு தரப்பு, முனிரத்னம் தரப்பு இருவருமே கடுமையாக முயற்சி செய்து வந்தனர்.

“சில மாதங்களுக்கு முன்பே முனிரத்னம் திமுக மாவட்டச் செயலாளர் காந்தியைப் போய் பார்த்து பொன்னாடை போர்த்தினார். அவரை அழைத்துக்கொண்டு போய் ஸ்டாலினையும் பார்த்தார். இந்த முறை சோளிங்கர் சீட் தனக்கே வேண்டுமென்றும், அதற்காக திமுகவில் சேரச் சொன்னாலும் தயாராக இருப்பதாக முனிரத்னம் கூறியதாகவும், ‘கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியில் இருந்து திமுகவில் சேர்த்துக்கொண்டால் நன்றாக இருக்காது’ என்று ஸ்டாலின் திருப்பி அனுப்பிவிட்டதாகவும் அப்போதே மாவட்டத்தில் தகவல்கள் பரவின.

அதையடுத்து இப்போது ஈவிகேஎஸ்.இளங்கோவன் மூலமாக சோளிங்கர் சீட்டைப் பெற முனிரத்னம் கடுமையாக முயற்சி செய்து வருகிறார். ஆனால், ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சோளிங்கர் தொகுதியில் முன்னாள் எம்.பி அன்பரசுவின் மகன் அருள் அன்பரசுவோ, மகள் சுமதி அன்பரசுவோ நிறுத்தப்பட வேண்டுமென்று விரும்புகிறார் எம்.பி விஷ்ணு பிரசாத். காரணம் வன்னியர்கள் என்ற பாசம் என்கிறார்கள்.

அதுமட்டுமில்ல, தற்போது அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடுகிற நிலையில், அவர்களுக்கு ஈடுகொடுத்து நிற்க வன்னியர் வேட்பாளரையே காங்கிரஸ் நிறுத்த வேண்டும் என்கிறார் விஷ்ணு பிரசாத். அதனால்தான் ஏற்கனவே தமாகா சென்று வந்து தற்போது சீட்டுக்காக திமுக செல்லவும் முயன்றவர்களுக்கு சீட் கொடுக்கக் கூடாது என்று முனிரத்னத்தை எதிர்த்து விஷ்ணு பிரசாத் போராட்டம் நடத்தினார்.

விஷ்ணுபிரசாத் எம்.பி என்பதால் போராட்டத் தகவல் டெல்லி வரை எட்டியது. நேற்று இரவு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி போராட்டத்தில் ஈடுபட்ட விஷ்ணு பிரசாத்தை அழைத்துப் பேசியபிறகு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் விஷ்ணு பிரசாத். ஆனால் வேட்பாளர் பட்டியலில் சோளிங்கருக்கு முனிரத்னமே அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

கே.எஸ்.அழகிரிக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் மற்றொரு தரப்பினரும் சென்னை சத்தியமூர்த்தி பவனில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே விஜயதரணிக்கு சீட் தரக்கூடாது எனக் கூறி காங்கிரஸ் அலுவலகத்தில் மேலும் ஒரு தரப்பினரும் போராட்டம் நடத்தினர். சென்னை சத்தியமூர்த்தி பவனில் அடுத்தடுத்து அரங்கேறிய இந்தப் போராட்டத்தால் அங்கு பரபரப்புக்கு பஞ்சமில்லை. இதன்மூலம் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு தொடர்பாக அக்கட்சித் தலைவர்களிடையே கருத்து மோதல் நிலவி வருவதும் வெளிப்படையாகத் தெரிந்தது.

இதுகுறித்து விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது ட்விட்டரில் கூறியதாவது, ”தன் தந்தையால் எம்.எல்.ஏ இப்ப எம்.பி வாங்கியவர்கள் இப்போது மகன்களுக்குக் கூடாது என தொண்டர்களை ஏமாற்றலாமா? அல்லது பாஜக, அதிமுகவுக்கு உதவும் வகையில் இந்த குழப்பமா? நான் உட்கட்சி விவகாரத்தை பொது வழியில் இந்த நாள்வரை பேசியதில்லை. ஆனால் இன்று நாடகங்களின் சீன் அதிகமாக இருப்பதால் உண்மையின் சில துளிகள்.

கட்சிக்காக உழைத்த முன்னாள் மாவட்டத் தலைவருக்கு அதுவும் சில நூறு ஓட்டில் தோல்வியடைந்தவருக்கு மீண்டும் வந்த தொகுதியை வாங்கக்கூடாது என சண்டை போட்டு வரவிடாமல் தடுத்தவர்கள் இன்று நியாயம் பேசலாமா?

சோனியா காந்தி தலைமையில் நடக்கும் மத்திய தேர்தல் குழுவில் எடுக்கும் முடிவு ஒவ்வொரு உண்மையான காங்கிரஸ் தொண்டனுக்கும் நியாயமான முடிவாகக் கிடைக்கும். ஆனால், சிலர் விளம்பரத்துக்காக காங்கிரஸ் இயக்கத்துக்கு மிக பெரிய இழிவை ஏற்படுத்தி எதிரிகளுக்கு உதவும் துரோகிகளைக் கண்டுகொள்ளுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

சென்னையில் காங்கிரஸ் நிலைமை இப்படி இருக்க, காரைக்குடியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் கட்சியினரிடம் ஒத்துழைப்பு இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதும் பலரது கவனத்தை ஈர்த்தது.

காரைக்குடி புதுவயலில் பூத் கமிட்டி கூட்டம் நேற்று நடந்தது. இதில் காங் பொறுப்பாளர்கள் அதிகம் பேர் வரவில்லை. இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற ப.சிதம்பரம் பேசுகையில், கட்சி என்றால், கடமை உணர்வுடன் செயல்பட வேண்டும். இல்லாவிடில் அடுத்த முறை 25 சீட் கூட கிடைக்காது. காரைக்குடி தொகுதியில் கட்சியினரிடம் ஒத்துழைப்பு இல்லை. தொண்டர்கள் சரியில்லை என்றால், தோழமை கட்சிகளை நம்பியே தேர்தலைச் சந்திக்க வேண்டும். கட்சியினரிடம் ஒத்துழைப்பு இல்லை. காரைக்குடி தொகுதியைத் திருப்பி கொடுத்து விடலாமா என அவர் பேசியது மூத்த காங்கிரஸ் நிர்வாகிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோதிமணி தனது சமூக வலைதளப் பக்கத்தில், இன்று காங்கிரஸ் கட்சியில் தொகுதி, வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை. நிறைய தவறு நடக்கிறது. தட்டிக்கேட்டேன். பதிலில்லை. தொண்டர்களின் ரத்தத்தைக் குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலைச் செவிமடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரசில் நடக்கும் உள்கட்சி சண்டை திமுகவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. “வேட்பாளர் பட்டியல் அறிவிப்புக்கு முன்பே இப்படி என்றால், வேட்பாளர் பட்டியல் அறிவிப்புக்குப் பின் காங்கிரசில் என்னென்ன கூத்துகள் நடக்குமோ?அது எப்படியெல்லாம் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாகுமோ என்று பயமாக இருக்கிறது. இப்போ தெரியுதா? காங்கிரஸ் கட்சிக்கு நாங்க ஏன் சீட்டை குறைச்சுக் கொடுத்தோம்னு?” என்று நிர்மா வாஷிங் பவுடர் விளம்பரப் பாணியில் கேட்கிறார்கள் திமுகவினர்.

-ஆரா, சக்தி பரமசிவன்

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

ஞாயிறு 14 மா 2021