மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 மா 2021

வால்பாறையில் சுயேச்சையாக போட்டியா? தமாகா துணைத் தலைவர் கோவை தங்கம் பேட்டி!

வால்பாறையில் சுயேச்சையாக போட்டியா? தமாகா துணைத் தலைவர் கோவை  தங்கம்  பேட்டி!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் 12 தொகுதிகள் கேட்கப்பட்ட நிலையில், 6 இடங்களே ஒதுக்கப்பட்டன. அதுவும் தமாகாவின் முக்கிய நிர்வாகிகள், தலைவர்கள் கேட்ட தொகுதிகள் மறுக்கப்பட்டு அதிமுக தலைமையின் விருப்பப்படியே தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக தமாகா துணைத் தலைவரும் மூப்பனார் காலத்து அரசியல்வாதியுமான கோவை தங்கத்துக்கு வால்பாறை தொகுதியை வற்புறுத்திக் கேட்டிருந்தார் அக்கட்சித் தலைவர் ஜிகே வாசன். ஆனால் தமாகாவுக்கு முடிவு சொல்லும் முன்பே அதிமுகவின் வேட்பாளர் பட்டியலில் வால்பாறை இடம்பெற்றிருந்தது. இதனால் வாசன் அதிருப்தி அடைந்தார்.

இந்தப் பின்னணியில்... 2001, 2006 தேர்தல்களில் வால்பாறையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட சட்டமன்ற உறுப்பினரான கோவை தங்கம் இம்முறை வால்பாறை தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கப் போவதாக தமாகாவில் தகவல்கள் பரவி வருகின்றன.

“வால்பாறையின் வெற்றி நாயகனே நீங்கள் நின்றால் வெற்றி களம் காணுங்கள்”என்றும், ‘சதியை வென்று உங்களை நம்பி இருக்கும் வால்பாறை மக்களுக்கு உழைத்திட வா ஓய்வறியா உழைப்பாளியே’என்றும் ஃபேஸ்புக்கில் அவரது ஆதரவாளர்கள் பதிவிட்டு வருகிறார்கள். தமாகா மூத்த நிர்வாகிகளிடத்தில் இதுகுறித்து கேட்டபோதும், “வால்பாறையில் கோவை தங்கத்தை சுயேச்சையாக போட்டியிடச் சொல்லி வற்புறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. நீங்கள் அவரிடமே பேசிவிடுங்களேன்” என்று கூறினர்.

இதையடுத்து தமாகா துணைத் தலைவரான கோவை தங்கத்தை மின்னம்பலம் இணைய இதழுக்காக தொடர்புகொண்டோம். சில கேள்விகளை முன் வைத்தோம்.

“நீங்கள் சுயேச்சையாக வால்பாறையில் போட்டியிடுவதாக தகவல்கள் வருகின்றனவே?”

“நான் மூப்பனார் குடும்பத்து விசுவாசி. வால்பாறை மக்களுக்கு நான் செய்த சேவை உன்னதமான சேவை என்பதால் அவர்கள் எல்லாம் என்னிடம் வால்பாறை தொகுதியில் நிற்கச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். ‘நின்றால் உங்களை ஜெயிக்க வைத்துக் கொடுக்கிறோம்’என்று சொல்கிறார்கள். வால்பாறையில் இருக்கும் திமுக, அதிமுகவினர் உள்ளிட்ட கட்சி வேறுபாடில்லாமல் அனைத்துத் தரப்பு மக்களும் நான் தேர்தலில் நிற்பதை விரும்புகிறார்கள். எனக்காக உயிரைக் கொடுக்கக் கூடிய, வாழ்க்கையை அர்ப்பணிக்கக் கூடிய நண்பர்கள் இருக்கிறார்கள். அதனால் யோசனை பண்ணிதான் செய்வேன். நான் வால்பாறையில் நிற்க வேண்டும் என்பது என் மேல் அன்பும் பாசமும் வைத்திருக்கும் மக்களின் விருப்பம்.அவர்களிடம் போய், ‘நீ என் மீது பாசம் வைக்காதே, அன்பு வைக்காதே’என்று சொல்லவா முடியும்?”

வால்பாறையைத் தவிர வேறு தொகுதியில் நிற்கச் சொல்லி உங்களை அதிமுக முக்கியப் புள்ளிகள் வற்புறுத்துகிறார்கள் என்று அதிமுக வட்டாரத்தில் சொல்கிறார்களே?

“அதிமுகவின் முக்கிய புள்ளியும் கோவை மாவட்ட அமைச்சருமான வேலுமணி என்னிடம்,’நீங்க ஒரு ஸ்டேட் லீடர். என் மாவட்டத்துல வால்பாறை வருது. அதை விட்டுடுங்க. வால்பாறையிலயே போட்டியிட வேண்டும்னு ஏன் நினைக்கிறீங்க. நீங்க சென்னை திருவிக நகர்ல நில்லுங்க. உங்களை ஜெயிக்க வைச்சுக் காட்டுறோம்’என்று சொன்னார்.

ஆனால்,’எங்கே நீங்கள் எம்.எல்.ஏ.சீட் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு ஓடுகிற ஆள் கோவை தங்கம் அல்ல.நின்றால் வால்பாறை மக்களுக்கு சேவை செய்ய வால்பாறையில்தான் நிற்பேன்’என்று அவர்களுக்கு நான் பதில்கொடுத்துவிட்டேன்.

இன்னொரு முக்கியமான விஷயம், இரட்டை இலையில் நிற்பதற்கு என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. நான் மூப்பனாரால் வளர்க்கப்பட்டவன். எங்கேயோ போய் நிற்பதற்கு நான் சுயேச்சையாகவே வால்பாறையில் நின்று ஜெயித்துவிடுவேன். 2016இல் ஜெயலலிதா அம்மையார் கூறியபோது கூட நாங்கள் இரட்டை இலையில் நிற்க மறுத்துவிட்டோம். நான் மக்கள் தலைவர் மூப்பனார் மேல் விசுவாசம் கொண்டவன். என் தலைவர் வாசன் மீது மரியாதை உள்ளவன். யாருக்கும் பாதிப்பு இல்லாமல் ஒரு முடிவெடுப்பேன். இப்போது யோசித்துக் கொண்டிருக்கிறேன். யோசித்து முடிவெடுப்பேன்” என்று கூறினார் கோவை தங்கம்.

-ராகவேந்திரா ஆரா

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

சனி 13 மா 2021