மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 மா 2021

’மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சி மொழி’: திமுக வாக்குறுதி!

’மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ்  ஆட்சி மொழி’: திமுக வாக்குறுதி!

தமிழக சட்டசபை தேர்தலுக்கான திமுக அறிக்கையை அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார். 505 வாக்குறுதிகள் இந்த தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன

மாநில சுயாட்சி

1.பேரறிஞர் அண்ணா அவர்களின் மாநில சுயாட்சி பற்றிய இறுதி விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இந்தியாவிலேயே முதல்முறையாக மத்திய - மாநில உறவுகளை ஆராய்வதற்காக, 1969 ஆம் ஆண்டில் நீதிபதி இராசமன்னார் தலைமையில் நீதிபதி சந்திராரெட்டி, டாக்டர் இலட்சுமணசாமி முதலியார் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு வல்லுநர் குழுவை கலைஞர் தலைமையிலான தி.மு.கழக அரசு அமைத்தது.

மத்திய - மாநில உறவுகள் குறித்துப் பரிசீலனை செய்ய நீதிபதி சர்க்காரியா தலைமையில் ஒரு குழுவை 1983 ஆம் ஆண்டில் மத்திய அரசு, அமைத்தது. மீண்டும், 2000 ஆம் ஆண்டில் நீதிபதி வெங்கடாசலய்யா தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. அதன் தொடர்ச்சியாக, 2004 ஆம் ஆண்டு மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைந்தபோது, மாநிலங்கள் அதிக அதிகாரங்கள் பெறுவதற்குரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டுமென்று தி.மு.க வலியுறுத்தியது, அதன் காரணமாக, 2007 இல் மத்திய - மாநில அரசுகளின் உறவுகளைச் சீரமைப்பதற்காக நீதிபதி எம்.எம்.பூஞ்சி தலைமையில் மத்திய அரசு ஓர் ஆணையத்தை அமைத்தது. அப்போது, திராவிட முன்னேற்றக் கழக அரசு வல்லுநர் குழு அமைத்து, அவ்வாணையத்திற்கு உரிய பதில்களையும், பரிந்துரைகளையும் அனுப்பியது. எனினும் முக்கியமான இந்தத் தேசியப் பிரச்சினையில் ஆக்கபூர்வமான முடிவுகள் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ஆகவே,மாநில சுயாட்சி மற்றும் மாநில உறவுகள் குறித்து மேலே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு குழுக்களின் பரிந்துரைகளையும் முழுமையான விவாதங்களுக்கு உட்படுத்தி மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெற்றிடும் வண்ணம், அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முழு ஈடுபாட்டோடு மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தும்.

2. அரசியலமைப்புச் சட்டத்தில் பொதுப் பட்டியலில் உள்ள கல்வித் துறையை மீண்டும் மாநில அரசுப் பட்டியலில் இடம்பெறச் செய்திட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

3. ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை தமிழ்நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் சமூகநீதி மற்றும் மொழிக்கொள்கை உள்ளிட்ட பல்வேறு கூறுகளை அழித்தொழிப்பதாக அமைத்துள்ளதால் திராவிட முன்னேற்றக் கழகம் அதனை முற்றிலும் நிராகரிக்கிறது.

தமிழகத்திற்கெனத் தனியே மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும். இதற்கெனக் கல்வியாளர்களை உள்ளடக்கிய உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டு உரிய பரிந்துரைகள் அடிப்படையில் இக்கொள்கை உருவாக்கப்படும்.

மொழிக் கொள்கை , தமிழ் ஆட்சி மொழி

4.நம் தாய் மொழியாம் செம்மொழித் தமிழ் மொழியைக் காத்திடவும், இந்தித் திணிப்பு - மொழி ஏகாதிபத்தியம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்த்திடவும் எப்போதும் ஈட்டி முனையாகச் செயல்படுகின்ற திராவிட முன்னேற்றக் கழகம், அதற்காக எண்ணிலடங்கா இழப்புகளை ஏற்றுக் கொண்டுள்ளதோடு தொடர்ந்து அவ்வழியில் பணியாற்றிடவும் உறுதிபூண்டுள்ளது.

இந்தி பேசாத மக்கள் விரும்புகின்ற காலம்வரை, மத்திய ஆட்சி மொழியாக ஆங்கிலமே நீடிக்கும் என்றும், பிறமொழி பேசும் மக்கள் மீது இந்தி திணிக்கப்படமாட்டாது என்றும் அப்போதைய பிரதமர் பண்டித நேரு அவர்கள் வழங்கிய வாக்குறுதி எப்பொழுதும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதைத் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம், தமது உரையில் மாநிலங்களில் ஆட்சி மொழிகளாக உள்ள இந்திய மொழிகள் அனைத்தும் மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக ஆக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். எனினும், இதுவரை மத்திய அரசு அனைத்து இந்திய மொழிகளையும் ஆட்சி மொழிகளாக ஆக்குவதற்கான எத்தகைய முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. குடியரசுத் தலைவர் அறிவித்ததைப் போல் மாநிலங்களில் ஆட்சி மொழிகளாக உள்ள தேசிய மொழிகள் அனைத்தும் மத்திய அரசின் ஆட்சி மொழிகளாகிடும் வகையில், ஆட்சி மொழிச் சட்டத்தில் உரிய திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவர திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தும்.

அதனடிப்படையில், திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியான, இலக்கணச் செறிவும் இலக்கியப் பண்பாட்டுச் செழிப்பும் நிறைந்த தமிழ்மொழியை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்க வேண்டுமென்று, 1996 ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமெனத் திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தும்.

அதுவரை மத்திய அரசுப் பணிகளுக்கும், மத்திய பணியாளர் தேர்வு வாரியம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் நடைபெறும் பணியாளர் தேர்வுகளுக்கும், தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநிலங்களின் ஆட்சி மொழிகளாக உள்ள மொழிகளையும், இணைத்து எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகளை நடத்த வேண்டும் எனவும் தி.மு.கழகம் வலியுறுத்தும்.

5. செம்மொழியான தமிழ், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இணை ஆட்சி மொழியாக பிரகடனப்படுத்தப்பட்டு, தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்தும் தமிழிலும் செயல்பட வேண்டுமென்றும், இதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டம் 343ஆவது பிரிவில் உரிய சட்டதிருத்தம் கொண்டுவர வேண்டுமென்றும் மத்திய அரசைத் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தும்.

உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகத் தமிழ்

உச்ச நீதிமன்றத்தின் பணிகளைப் பரவலாக்கிடும் நோக்கத்துடன் மேல்முறையீட்டு நீதிமன்றங்களை நான்கு மண்டலங்களில் அமைத்திட வேண்டுமெனச் சட்ட வல்லுநர்கள் வலியுறுத்தி வந்த, அக்கோரிக்கை தற்போது உச்சமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தி.மு.கழகம், அத்தகைய மேல்முறையீட்டு நீதிமன்றங்களை உடனடியாக அமைத்திட வழிவகை செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தும். மேலும், தெற்கு மண்டலத்திற்கான மேல்முறையீட்டு நீதிமன்றத்தைத் தமிழகத்தில் அமைக்குமாறும் வலியுறுத்தும்.

இந்திய ஆட்சி மொழிச் சட்டம் 1963, பிரிவு-7ன்படி, இந்தி அல்லது மாநிலங்களின் ஆட்சி மொழிகள் மாநில உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளில் மற்றும் உத்தரவுகளில் பயன்படுத்தப்படலாம் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அதனை ஆளுநர் பரிந்துரையுடன் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினால், அவர் அதனையேற்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் இந்திய ஆட்சிமொழிச் சட்டம் கூறுகிறது.

அதன் அடிப்படையில், கலைஞர் தலைமையிலான தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் தமிழகச் சட்டப் பேரவையில் 6-12-2006 அன்று தமிழை உயர் நீதிமன்ற மொழி ஆக்கிட வேண்டுமென்ற தீர்மானத்தை நிறைவேற்றி, அது சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, மற்றும் ஆளுநர் ஆகியோரின் பரிந்துரையுடன் மத்திய அரசுக்கு 11-2-2007 அன்று அனுப்பிவைக்கப்பட்டது.

ஆனால், இதுவரை மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே, தமிழகச் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தமிழை, சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக ஏற்க வேண்டுமெனத் தி.மு.கழகம் மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தும்.

தமிழ் வளர்ச்சி செம்மொழி

7. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பெருமுயற்சியால் சென்னையில் அமைக்கப் பெற்ற செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தன்னாட்சி பெற்ற அமைப்பாகத் தொடர்ந்து சென்னையிலேயே இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், புதுப்பொலிவுடன் அந்நிறுவனம் செயல்பட வும் வழிவகை செய்யப்படும்.

2004 ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைந்த நேரத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் விளைவாக, மத்திய அரசு தமிழ் மொழியைச் 'செம்மொழி' என்று அறிவித்தது. இதனால், தமிழறிஞர்களின் நூறாண்டு கால வேண்டுகோள் நிறைவேறியது. செம்மொழித் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் உலகெங்கிலும் உள்ள தமிழறிஞர்களை அழைத்து, கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினை மிகச் சிறப்பாக நடத்தினார் கலைஞர். செம்மொழித் தமிழுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் வகையில் உலகப் பொது மறையான திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசைத் தி.மு.கழகம் வலியுறுத்தும்.

8உலகெங்கிலும் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் தமிழ் இருக்கைகள் அமைக்க படிப்படியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

9. தமிழ், செம்மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டதின் அடையாளமாகத் தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் சென்னை அண்ணா மேம்பாலம் அருகே, ஒரு மிகப்பெரிய பூங்காவை உருவாக்கி அதற்கு, 'செம்மொழிப் பூங்கா' என்று பெயர் சூட்டப்பட்டது. பொதுமக்கள் பலரும் மாலை நேரங்களில் அந்தப் பூங்காவிற்குச் சென்று மகிழ்ச்சியோடு நேரத்தைக் கழித்தனர். ஆனால், அ.தி.மு.க அரசு காழ்ப்புணர்ச்சி காரணமாகச் செம்மொழிப் பூங்கா என்ற பெயரையே மறைத்துவிட்டது. அந்தப் பூங்காவைப் பராமரிப்பு இல்லாமல் புறக்கணித்துவிட்டது. தி.மு. கழக ஆட்சி அமைந்ததும் அந்தப் பூங்கா மீண்டும் சீர் செய்யப்படுவதுடன் இந்தச் செம்மொழிப் பூங்கா போல தமிழகத்திலுள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் செம்மொழிப் பூங்காக்கள் கழகத் தலைவர் தளபதி அவர்கள் தலைமையில் அமையவிருக்கும் கலைஞர் அரசினால் அமைக்கப்படும்.

10. உலகப் புகழ்பெற்ற பிறமொழி நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு அச்சிட்டு வெளியிடப்படும். இதைப் போலவே மிகச்சிறந்த தமிழ் நூல்கள் உலகமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டு தமிழ், தமிழர்களின் பெருமை உலக அளவில் பெருகிப் பரவிட அச்சு மற்றும் இணையதள வசதிகளைப் பயன்படுத்தி ஆவன செய்யப்படும்.

11. தமிழ் எழுத்துகளை எழுதும்போது, சில வரிவடிவங்களில் அரசு அங்கீகரித்துள்ள நடைமுறைகளுக்கு மாறாகச் சிலர் தம் விருப்பம் போல் எழுத்து வடிவங்களை மாற்றி எழுதுவதைப் பத்திரிகைகள் உள்ளிட்ட ஏனைய ஊடகங்களில் காண முடிகிறது. எழுத்து வடிவம் சிதைந்திடா வகையில் பின்பற்றப்படும் தூய தமிழ் வரிவடிவத்தை மட்டுமே எல்லா இடங்களிலும் கண்டிப்பாகப் பயன்படுத்திட வேண்டும் என உரிய சட்டம் இயற்றி அரசு ஆணை வெளியிட்டு நடைமுறைக்குக் கொண்டு வரப்படும்.

அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழ் அலுவல் மொழிப் பிரிவு

12. அனைத்து அரசுத் துறை மற்றும் அரசு நிறுவனங்களில் ஆட்சி மொழியாகத் தமிழ் சிறப்பாகச் செயல்படுத்தப்பட தலைமைச் செயலகம் தொடங்கி வட்டாட்சியர்/வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகங்கள்வரை ஒவ்வொரு துறையிலும்/ அலுவலகத்திலும் தமிழ் மொழி அலுவலகப் பயன்பாட்டில் உறுதி செய்வதற்கும் மேம்படுத்துவற்கும் தமிழ் அலுவல் மொழி வளர்ச்சிப் பிரிவு அமைக்கப்படும்.

ஈழத் தமிழர் நல்வாழ்வு

13. இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவை குறித்துச் சுதந்திரமானதும், நம்பகத் தன்மை வாய்ந்ததுமான சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இந்திய அரசு உலக நாடுகளை வலியுறுத்திச் செயல்படுத்த வேண்டுமென மத்திய அரசைத் தி.மு .கழகம் தொடர்ந்து வலியுறுத்தும்.

14. இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முழுவதும் நீர்த்துப்போன அரசியல் அதிகாரப் பங்கீடுகளே அனுமதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள தமிழர்களின் விருப்பத்திற்கேற்றவாறு நிரந்தரமான அரசியல் தீர்வு அமைய இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையே ஐ.நா. சபையின் மேற்பார்வையில், பொதுவாக்கெடுப்பு நடத்தவும், இலங்கையில் புதிதாக உருவாக உள்ள அரசியல் அமைப்புச் சட்டத்தில் முழுமையான அதிகாரங்கள் தமிழர்களுக்குக் கிடைத்திடும் வகையில் சட்டப் பிரிவுகளை உருவாக்கவும் இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டுமென மத்திய அரசைத் தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தும்.

தாயகம் திரும்பிய ஈழத் தமிழர் குடியுரிமை

15. இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த ஆயிரக்கணக்கான தமிழர்களும், அதே போல் 1964- ஆம் ஆண்டில் ஏற்பட்ட சாஸ்திரி - சிறீமாவோ பண்டார நாயகா இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி தாயகம் திரும்பிய பல்லாயிரக்கணக்கான தமிழர்களும் இன்று வரை அகதிகள் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

16. இலங்கையிலிருந்து இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் தஞ்சம் அடைந்த தமிழர்கள் மற்றும் அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 1964-ஆம் ஆண்டில் ஏற்பட்ட சாஸ்திரி - சிறீமாவோ பண்டார நாயகா இந்திய-இலங்கை ஒப்பந்த அடிப்படையில் நாடு திரும்பியவர்களாகப் பெற்றுக் கொள்ளப்பட வேண்டிய - இந்திய வம்சாவழியினரான மலையகத் தமிழர்களும், அவர்களது குழந்தைகளும் இந்தியக் குடியுரிமை பெறுவதற்கும்.

ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு மேலாக அகதிகள் முகாம்களில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் உறவுகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கும் மத்திய அரசைக் கழக அரசு வலியுறுத்துவதுடன், இவர்களில் இலங்கைக்குத் திரும்பிச் செல்ல விரும்புபவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்யும்.

17. வெளிநாடுவாழ் தமிழர்களின் நலன் பேணிடவும், அங்கே பல்வேறு பாதிப்புக்கு உள்ளானோர்க்கு உதவிடவும், வெளிநாடுகளில் இறந்துபோக நேரிடுவோரின் குடும்பங்களுக்குத் தமிழ்நாட்டில் தேவையான அடிப்படை உதவிகளை நல்கிடவும், நாடு திரும்பிய வெளிநாடுவாழ் தமிழர்களின் வாழ்வாதாரத்திற்குத் துணை நிற்கவும், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலனுக்காகத் தமிழக அரசில் வெளிநாடு வாழ் தமிழர்கள் துறை என்று ஒரு புதிய அரசுத் துறை உருவாக்கப்படும்.

நிர்வாகச் சீர்திருத்தம், லோக் ஆயுக்தா செயல்பட வைத்தல்

18. லோக் ஆயுக்தா முறையாகவும் முழுமையாகவும் செயல்படத் தேவையான நடவடிக்கைகளைத் தி.மு.க. அரசு உடனடியாக மேற்கொள்ளும்; அதன் மூலம் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பொது ஊழியர்கள் மீதான ஊழல் புகார்கள் தாமதமின்றி விசாரிக்கப்பட்டு; குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

19. பொது மக்களுக்கு அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய சாதிச் சான்றிதழ், பிறப்பு இறப்புச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஓய்வூதியப் பலன்கள், பொது விநியோகத் திட்டப் பலன்கள் உள்ளிட்டவற்றை விண்ணப்பித்தபின் குறிப்பிட்ட நாட்களுக்குள் இவற்றைப் பெறுவதை உறுதி செய்யும் வகையில் சேவை உரிமைச் சட்டம் நிறைவேற்றப்படும்.

ஊழலற்ற நேர்மையான நிர்வாகம்

20. மக்களோடு நெருங்கி உறவாடும் அரசுப் பணிகளில் ஊழலற்ற சுதந்திரமான வெளிப்படையான நிர்வாகத்தைத் தி.மு.க. ஆட்சி வழங்கும். அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அரசின் தலையீடுகளால் விருப்பு வெறுப்பின்றி நேர்மையாகச் செயல்படாமல் இருக்கிறது. அது சீர்படுத்தப்பட்டு செம்மையாகச் செயல்படவும், ஊழல் செய்வோர் மீது சட்ட விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கவும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

21. கடந்த பத்தாண்டுகளாக ஊழல் மலிந்த அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு, ஊழல் புகார்களுக்கு ஆளாகி உள்ள அ.தி.மு.க. அமைச்சர்கள்மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தமிழக ஆளுநரை கழகம் வலியுறுத்தி உள்ளதைத் தொடர்ந்து, கழக ஆட்சி மலர்ந்தவுடன் அத்தகைய ஊழல் அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

22. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பில் உள்ள மர்ம மரணம் குறித்து, கழக ஆட்சியில் முறையான விசாரணை நடத்தப்பட்டு தவறு இழைத்தவர் எவராயினும் அவர் உரிய சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர்.

வெளிப்படையான மாவட்ட நிர்வாகம்

23. மாவட்ட ஆட்சித் தலைவர், வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகிய அதிகாரிகள் தங்கள் வலைதளத்தில் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களின் மனுக்கள் மீது வைத்த கோரிக்கைகள் / கடிதங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய விவரங்களைப் பதிவிட வேண்டும். இதனால், பொதுமக்கள் தங்களது குறைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும். சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் வலைதளத்தில் தொகுதிவாழ் மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் ஒவ்வொன்றின் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களைப் பதிவிட வேண்டும். இதற்கு ஏதுவாக ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலும் இரண்டு கணினி அலுவலர்கள் சட்டப்பேரவைச் செயலகத்தால் நியமிக்கப்படுவர்.

24. அரசு நிர்வாகத்தில் சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அமைச்சர்கள் அதிகாரிகள் ஆகியோரின் தேவையற்ற செலவுகள், பயணங்கள் ஆகியவை தவிர்க்கப்பட்டு அதன் மூலம் செலவினங்கள் கட்டுப்படுத்தப்படும்.

தமிழ்நாட்டின் கடன் சுமை

25. கடந்த பத்தாண்டுகளில் திறமையற்ற - ஊழல் நிறைந்த - கையாலாகாத அ.தி.மு.க. அரசின் தவறான நிர்வாகம் மற்றும் தவறான பொருளாதாரக் கொள்கையினால் தமிழ்நாட்டின் கடன்சுமை ரூ.9 லட்சம் கோடி அளவில் உள்ளது. தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ரூ.1,25,000/- கடனோடு பிறக்கிறது. இந்தக் கடன் சுமையை இறக்குவதற்கும், மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் தேவையான, சரியான நடவடிக்கைகளை அரசுக்குப் பரிந்துரைப்பதற்காக ஓர் உயர்நிலைக் குழு அமைக்கப்படும். குழுவின் அறிவுரைகள் உரிய ஆய்வு செய்யப்பட்டு, அரசு முடிவுகளை விரைந்து எடுக்கும்.

தமிழ்நாடு அரசுப் பொதுத்துறை நிறுவனங்கள் சீரமைப்பு

26. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், மின்சாரத் துறை நிறுவனங்கள், டாஸ்மாக், காகித நிறுவனம், டிட்கோ போன்ற தமிழக அரசு மூலதனத்தில் இயங்கிடும் 83 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இவை அனைத்தும் வணிகம் சார்ந்த தொழில் நிறுவனங்களே. இவற்றில் சில நிறுவனங்களைத் தவிர ஏனைய நிறுவனங்கள் அனைத்தும் தொடர்ந்து பெரும் நஷ்டத்தில் செயல்படுகின்றன. இந்த அரசு நிறுவனங்களின் மொத்தத் திரண்ட இழப்பு மார்ச் 2017 வரை ரூ.78,854 கோடி ஆக இருந்தது. அரசு நிறுவனங்களில் தமிழக அரசின் மொத்த முதலீடு ரூ.1,53,870 கோடி ஆகும். பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தின் மொத்தக் கடன்சுமை இன்றைய நிலையில் ஏறத்தாழ ரூ. 3 லட்சம் கோடி அளவில் உள்ளது.

சுமார் 3 லட்சம் பணியாளர்களுடன் இயங்கும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மொத்த ஆண்டு வருவாய் ரூபாய். 1,10,850 கோடியாகும். மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இவற்றின் பங்கு ஏறத்தாழ 10 சதவிகிதம் அளவிற்கு உள்ளது. எனவே, தமிழகப் பொதுத்துறை நிறுவனங்களின் பேரிழப்புக்கான காரணங்களைக் கண்டறிந்து இந்த நிறுவனங்களை லாபம் ஈட்டும் அமைப்புகளாக மாற்றுவது மிகவும் இன்றியமையாதது . இதனைக் கருத்தில் கொண்டு அரசு பொதுத்துறை நிறுவனங்களைத் தொழில்நுட்ப ரீதியாகவும், மேலாண்மை அடிப்படையிலும் நவீன மயமாக்குவதற்கும், பொருட்களையும் சேவைகளையும் திறம்படச் சந்தைப்படுத்துவதற்கும் ஒரு உயர்நிலை வல்லுநர் குழு அமைக்கப்படும். இந்தக் குழுவின் அறிவுரைகள் மூன்று மாதங்களுக்குள் பெறப்பட்டு அவற்றின் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழக பொதுத்துறை நிறுவனங்கள் லாபத்துடனும் சிறப்பாகவும் செயல்படுவது உறுதிப்படுத்தப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

சனி 13 மா 2021