மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 மா 2021

விவசாய கடன் தள்ளுபடி, மின் மோட்டார் வாங்க மானியம்!

விவசாய கடன் தள்ளுபடி, மின் மோட்டார் வாங்க மானியம்!

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

27. கடந்த ஆண்டு மத்திய அரசு நாடாளுமன்ற நடைமுறைகளைப் புறக்கணித்து அவசரம் அவசரமாகக் கொண்டு வந்த

விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைகள் சட்டம் 2020,

வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் சட்டம் 2020

அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020

ஆகிய இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளும் டெல்லியில் கடந்த நூறு நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து கடுமையாகப் போராடி வருகின்றனர். பிரதமர், போராடி வரும் விவசாயிகளை அழைத்துப் பேச முன்வரவில்லை என்பது அதிர்ச்சி தரத்தக்கதாகும். இச்சட்டங்களைத் திரும்பப் பெற தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி; இவற்றை ரத்து செய்திட மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டுமென வலியுறுத்தப்படும். அதேபோல், மத்திய அரசுடன் இணைந்து விவசாயிகளின் நலனுக்கு எதிராக மாநில அ.தி.மு.க அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தையும் தி.மு.க. அரசு ரத்து செய்யும்.

காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று மாநில அரசு அறிவித்த பிறகும், டெல்டா பகுதி விவசாய நிலங்களில், 'மீத்தேன் வாயு' மற்றும்

'ஷேல்வாயு' எடுக்கும் புதிய திட்டங்களை மத்திய அரசு மீண்டும் கொண்டுவர முயற்சித்தால், அதனை விவசாயிகளின் நலன் காக்கும் தி.மு.க. அரசு தடுத்து நிறுத்தும்.

29. வேளாண்மை உற்பத்தியைப் பெருக்கிடும் வகையிலும், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையிலும் ஆண்டுதோறும் விவசாயிகள் சங்கங்கள் மற்றும் அமைப்புகளைக் கலந்தாலோசித்து வேளாண்மைக்கென்று தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வேளாண் பணிகள் மேம்படுத்தப்படும்.

30. கிராமப்புறங்களில் சிறு, குறு விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல், காய்கறிகள், தானியங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உருவாக்கும் கைவினைப் பொருட்கள் ஆகியவற்றைச் சந்தைப் படுத்தும்போது இடைத்தரகர்களின் தலையீட்டால் உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இதனைக் கருத்தில் கொண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் உழவர் சந்தைகளைத் தமிழகம் முழுவதும் அமைத்து, அரசே தலையிட்டு விற்பனையை முறைப்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். அதே அடிப்படையில், ஊரகப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்குமான விற்பனை சந்தைகளை உருவாக்குவோம். அரசின் மேற்பார்வையில் இச்சந்தைகள் இயங்கும். விவசாயிகள் சந்தையில் பலியிடப்படுவது தவிர்க்கப்படும்.

31. தமிழக வேளாண் மக்கள் தங்கள் வருவாயில் மூன்றில் ஒரு பங்கு விவசாயம் சார்ந்த தொழில்களிலிருந்து பெறுகின்றனர். அவர்களது இவ்வருவாயை அதிகரிக்கும் வண்ணம் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, தனி நபர்களாகவோ அல்லது கூட்டாகவோ மேற்கொள்ள ஆவன செய்யப்படும்.

32. கேரள மாநிலத்தில் வேளாண் விளை பொருட்களுக்குத் தகுந்த விலை நிர்ணயிக்கப்பட்டு, அவ்விலை விவசாயிகளுக்குக் கிடைப்பதை உறுதி செய்யும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அத்திட்டம் ஆராயப்பட்டு, அதனைத் தமிழகத்திலும் செயல்படுத்துவோம். சந்தையின் ஏற்ற இறக்கங்களிலிருந்து விவசாயிகள் துயருறுவதைத் தவிர்ப்போம்.

சிறு குறு விவசாயிகள் கடன்கள் தள்ளுபடி

33. சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்க் கடன்கள் மற்றும் நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தி.மு.க தலைவர் தளபதி அவர்கள் 2019ல் நடைபெற்ற தேர்தல் நேரத்திலேயே ஏற்கனவே அறிவித்திருந்தார். தற்போது, அ.தி.மு.க. அரசு தேர்தல் லாபத்திற்காக அவசர கதியில் எவ்வித முன்னேற்பாடும் போதிய நிதி ஒதுக்கீடுகளும் இல்லாமல் இது தொடர்பாக அறிவித்துள்ளது. எனவே, தி.மு.க. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே அறிவித்தபடி சிறு குறு விவசாயிகளின் கடன்கள் முறையாக நிதி ஒதுக்கி முழுவதுமாகத் தள்ளுபடி செய்யப்படும்.

34. கரும்பு விவசாயிகளுக்குக் கூட்டுறவு ஆலைகளும் தனியார் ஆலைகளும் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை ஒரு கால வரையறைக்குள் பெற்றுத் தந்திட உரிய தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து உணவுப் பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை

35. வேளாண்துறை சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளை ஆய்ந்து உடனடி நிவாரணம் வழங்குவதற்கும், விவசாய நலத் திட்டங்களை உருவாக்கவும்; விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற நெல், கரும்பு, ஆகியவற்றிற்கு நிர்ணயிக்கப்படுவது போல் வாழை, மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு, பருப்பு வகைகள், மிளகாய், சிறுதானிய வகைகள், தேயிலை, எண்ணெய் வித்துகள், தோட்டக்கலை விளைபொருள்கள் போன்றவற்றிற்கும் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்க மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் விவசாயப் பிரதிநிதிகள் அடங்கிய வேளாண் மேம்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்படும். தேவையான அளவு சிறு தானியங்களை அரசே கொள்முதல் செய்து, நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும்.

36. இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த வேளாண் துறையில் தனியே ஒரு பிரிவு உருவாக்கப்படும்.

37. இயற்கை வேளாண் அறிவியல் அறிஞர் கோ.நம்மாழ்வார் பெயரில் 'இயற்கை வேளாண்மை ஆய்வு மையம்' தொடங்கப்படும்.

38. இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் வழங்கப்படும்.

39. தோட்டக்கலை விளைபொருள்களான காய் கனிகள், மலர்கள் மற்றும் மருத்துவ மூலிகைகள் ஆகியவற்றின் உற்பத்தியைப் பெருக்குவதற்கும், புதியவகை இனங்களை உருவாக்குவதற்கும் கொடைக்கானலில் உள்ள மன்னவனூரில், அரசிடம் இருக்கும் 390 ஏக்கர் நிலத்தில் மண்டலத் தோட்டக்கலை ஆய்வு மையம் அமைக்கப்படும்.

40. தமிழ்நாடு முழுவதிலும் உள்ள நீர் நிலைகளின் கொள்ளளவையும், நீரோட்டத்தையும் பாதிக்கும் வகையில் பரவி உள்ள சீமைக் கருவேலமரங்களும், ஆகாயத் தாமரைச் செடிகளும் அழிக்கப்பட்டு, நீர்நிலைகள் முறையாகப் பராமரிக்கப்படும்.

41. சொட்டு நீர்ப்பாசன முறையை ஊக்குவிப்பதற்காக அனைத்து விவசாயிகளுக்கும்

அதிகபட்சம் 5 ஏக்கர் வரை சொட்டு நீர்ப்பாசன முறையை அமைக்க 90 சதவிகித மானியம் வழங்கப்படும்.

100 நாள் ஊரக வேலை நாட்கள் 150 ஆக அதிகரிப்பு

42. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தற்போது வேலை நாட்களின் எண்ணிக்கை 150 நாட்களாக அதிகரிக்கப்படும். இந்தத் திட்டத்தைப் பேரூராட்சிப் பகுதிகளில் விரிவுபடுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். தினக்கூலி ரூ.300/- என உயர்த்தி வழங்கப்படும்.

43. விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் வகையில், விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல், விளை நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதைத் தடுத்திட நடவடிக்கைகள் மேற்கொண்டு, விளை நிலங்கள் பாதுகாக்கப்படும்.

44. மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த விவசாயிகள் அனைவருக்கும், தடையின்றி இலவச மும்முனை மின் இணைப்பு வழங்கப்படும்.

ஏழை விவசாயிகளுக்கு மின் மோட்டார் வாங்க மானியம்

45. மூன்று ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும், மின் மோட்டார் வசதி இல்லாத விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் வாங்கும் போது 10,000 ரூபாய் வரை மானியம் வழங்கப்படும்.

46. சிறு குறு விவசாயிகள் 10 பேர் இணைந்து கூட்டுப் பண்ணை முறையில் வேளாண்மை செய்தால் வேளாண் கருவிகள் வாங்க, விலையில் 10 சதவிகிதம் அளவுக்கு மானியமாக ஒருமுறை வழங்கப்படும்.

வேளாண் மகளிர்க்கு மானியம்

47. கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்கள் பத்து பேர் இணைந்து நடத்தும் ஆடு மற்றும் கோழி வளர்ப்புப் பண்ணைகளுக்கு 30 சதவிகித மானியம் வழங்கப்படும்.

48. பன்னிரண்டாம் வகுப்பு படித்த, கிராமப்புற மகளிரை உறுப்பினர்களாகக் கொண்டு கூட்டுறவு அமைப்புகள் ஏற்படுத்தப்படும். அவற்றின் மூலம் மலர்த்தோட்டம் அமைத்தல், மீன் வளர்ப்பு, வண்ண மீன் வளர்ப்பு, பாய்முடைதல், கூடைமுடைதல், மண்பாண்டம் செய்தல், கறிக்கோழி வளர்த்தல் முதலிய பணிகளில் ஈடுபடுவோருக்கு, அரசு 25 சதவிகித மானியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

49. நீர் ஆதாரம், நிலவளம், தட்பவெட்பம் ,இயற்கை பாதிப்புகள் உள்ளிட்ட சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு வேளாண் மண்டலங்கள் உருவாக்கப்பட்டு விவசாயிகள், அரசு அதிகாரிகள், சுற்றுச்சூழல் வல்லுநர்கள் ஆகியோர்களை உறுப்பினர்களாகக் கொண்ட மண்டலக் குழுக்கள் அமைக்கப்படும். இக்குழு தங்கள் மண்டலத்துக்குட்பட்ட விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி விவசாயிகள் இயற்கை பாதிப்புக்கு ஆளாகாமல் காக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும்.

50. ஒன்றியங்கள் தோறும் தேவைக்கேற்ற அளவிற்குத் தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும். இவை உலர் களங்களுடன் கூடிய கொள்முதல் நிலையங்களுடன் இணைக்கப்படும்.

51. வன விலங்குகளால் ஏற்படும் மனித உயிர் இழப்புகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றன. யானைகளால் உயிர் இழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையினைக் கருத்தில் கொண்டு, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே ஏற்படும் மோதலைத் தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். ஆகவே, வனங்களில் யானைகளும் மற்ற விலங்குகளும் பயணிக்கும் வழித்தடங்களைக் கண்டறிந்து, அப்பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்து தரும். வன விலங்குகளால் ஏற்படும் மனித உயிரிழப்புகளுக்குத் தற்பொழுது வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை 3 லட்சம் ரூபாய் என்பது, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்துக்கு அனுமதி மறுப்பு

52. பன்னாட்டு நிறுவனங்களின் மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தை இந்தியாவில் புகுத்த மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சியை தி.மு.கழகம் முற்றிலுமாக எதிர்ப்பதோடு, தமிழகத்தில் அதற்கான சோதனை முயற்சிகளுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது.

கிருஷ்ணகிரியில் தோட்டப் பல்கலைக் கழகம்

53. கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூரில் 360 ஏக்கர் நிலப்பரப்பில் தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட தோட்டக்கலைப் பல்கலைக்கழகம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

54. தென் தமிழகத்திற்கென மதுரையில் வேளாண் பல்கலைக் கழகம் அமைக்கப்படும்.

55. சத்துணவு மையங்கள், அரசு மாணவர் தங்கும் விடுதிகள் மற்றும் அரசுத் துறை நிறுவனங்களின் உணவு விடுதிகளுக்குத் தேவையான பால், பழங்கள், காய்கறிகள், வெல்லம், பனை வெல்லம் சர்க்கரை, பருப்புவகைகள், தானிய வகைகள் போன்றவை அனைத்தும் கூட்டுறவு விற்பனை மையங்கள் மூலம் மட்டுமே வாங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பனை வெல்ல உற்பத்திக்கு ஊக்கத் திட்டம்

56. பனைவெல்ல உற்பத்தியாளர்களுக்குப் பனைவெல்லம் காய்ச்சுவதற்குத் தேவையான சிறப்புக் கடன் வசதி மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகள் செய்து தரப்படும். மேலும், மாவட்ட வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகப் பனை வெல்லம் கொள்முதல் செய்யப்படும். பனைப் பொருள்கள் உற்பத்தியில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும், உற்பத்திப் பொருள்களைச் சந்தைப்படுத்தவும் தேவையான திட்டம் வகுத்துச் செயல்படுத்தப்படும். அரசின் நியாயவிலைக் கடைகளில் மற்ற பொருள்களுடன் பனை வெல்லமும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விற்பனை செய்யப்படும்.

57. பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில், தற்போது அந்தப் பகுதி முழுவதிலும் இயற்கைச் சீற்றத்தால் அழிவு ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடாகப் பயிர்க் காப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. ஒரு தனி விவசாயியின் நிலத்தில் பாதிப்பு ஏற்படும்போது காப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதில்லை. இதனைக் கருத்தில் கொண்டு தனி நிலத்தில் பயிர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டாலும் இழப்பீடு வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இயற்கைச் சீற்றம் மட்டுமின்றி, வன விலங்குகளால் ஏற்படும் பயிர்ச் சேதங்களுக்கும் இழப்பீடு வழங்கக் கூடிய வகையில் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்படும்.

58. கண்மாய்கள் மற்றும் அணைகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாய நிலங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்கும், மண்பாண்டங்கள், கைவினைப் பொருட்கள் செய்வதற்கும் மற்றும் கிணற்று மண்ணை எடுத்துச் செல்வதற்கும் அடையாள அட்டை அடிப்படையில் விவசாயிகள் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படும்.

59. தமிழகத்தின் பல பகுதிகளில் மூலிகைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டு, சித்த மருத்துவத்திற்குத் தேவையான மூலிகைச் செடிகளை வளர்க்கவும், அவற்றிற்கு உரிய விலை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

60. வேலூர் மாவட்டம் காவலூரில், முந்தைய தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு, தற்போது மூடப்பட்டிருக்கும், மூலிகைப் பண்ணை மீண்டும் திறக்கப்பட்டுச் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

61. பட்டுப்புழு வளர்ப்பு ஊக்குவிக்கப்படும் வகையில், தேவைப்படும் மாவட்டங்களில் பட்டுக்கூடு விற்பனை மையம் அமைக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புழுக் கூட்டிற்கு உரிய விலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

62. தமிழகம் முழுவதும் தென்னை விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தென்னை மரத்திலிருந்து 'நீரா' போன்ற பதநீர் இறக்கி விற்பனை செய்ய ஊக்குவிக்கப்படும்.

63. தென்னை விவசாயிகளின் நலன் கருதி, இளநீர், தேங்காய் ஆகியவற்றின் பயன்பாடுகள் பல்கிப் பெருகுவதற்கும், தென்னந்தோப்புகளில் அடுக்கு விவசாய முறை மூலம் பலவகைப் பயிர்களைப் பயிரிட்டு, ஆண்டு முழுவதும் தொடர்ச்சியான வருவாய் ஈட்டுவதற்கும் ஏற்ற திட்டங்கள் நிறைவேற்றப்படும். இது போன்ற வேளாண்மையில் ஈடுபடுவோருக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.

64. சிலந்தி நோய் மற்றும் வறட்சியால் பாதிக்கப்படும் தென்னை மரங்களுக்கும், அவ்வப்போது வருகின்ற நோய்களால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

65. பொள்ளாச்சி மற்றும் பட்டுக்கோட்டையில் தென்னை வளர்ச்சி வாரியத்தின் துணை மண்டல மையமும், ஒருங்கிணைந்த தென்னைப் பொருள்கள் உற்பத்தி வளாகமும் அமைத்துத் தரப்படும். மேலும், சேலம், பேராவூரணி, பட்டுக்கோட்டை போன்ற தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் கயிறு சார்ந்த பல்வேறு பொருள்கள் சிறு மற்றும் குடிசைத் தொழிலாகவும், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலமாகவும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றைத் தமிழக அரசுக் கூட்டுறவு நிறுவனங்கள் நேரடியாகக் கொள்முதல் செய்து விற்பனைக்கு உதவி செய்யப்படும்.

66. கொப்பரைத் தேங்காய்களைத் தமிழ்நாடு தென்னை நலவாரியத்தின் மூலம் அரசே கொள்முதல் செய்வதோடு, கொள்முதல் விலையையும் அரசே நிர்ணயம் செய்யும். மேலும், தேங்காய் எண்ணெயை அரசு கொள்முதல் செய்து, நியாய விலைக் கடைகளில் விற்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

67. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள வட்டார வேளாண்மை அலுவலகங்களில் மண் பரிசோதனை ஆய்வுக் கூடங்கள் நிறுவப்படும்.

68. சிறு தானியங்கள், செக்கு எண்ணெய், நாட்டுச் சர்க்கரை மற்றும் வெல்லம் உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் நியாய விலைக் கடைகளில் நாட்டுச் சர்க்கரையும், வெல்லமும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

69. தமிழகத்தில் விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்களுக்குத் தேவையான இடுபொருள்கள் அனைத்தும், அந்தந்தக் கிராமங்களுக்கு நடமாடும் உழவர் நண்பன் ஊர்திகளில் எடுத்துச் சென்று அரசு மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கிடும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

70. தகவல் தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம் போன்ற இந்த நூற்றாண்டின் தலைமைத் தொழில்நுட்பங்களைத் தக்க வகையில் பயன்படுத்தி, வேளாண்மையை உயர்தொழில் நுட்பத் தொழிலாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.

71. புஞ்சை நிலங்களையும், தரிசு நிலங்களையும் தகுந்த விளைச்சல் நிலங்களாக மாற்றிட, நுண்ணிய நீர்ப்பிரிமுகடு மேலாண்மை போன்ற புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும். இவ்வகை நிலங்களில் சிறுதானிய வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு அரசு உதவிடும் வகையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

72. கடலோரப் பகுதிகளில் இறால் பண்ணைகள் கட்டுப்பாடின்றி அமைக்கப்படுவதால், விவசாயிகளுக்கு ஏற்படும் இன்னல்கள் களையப்படும் வகையில் இறால் பண்ணைத் தொழில் முறைப்படுத்தப்படும்.

73. முந்தைய தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் குடுமியான் மலையில் 1000 ஏக்கர் நிலத்தில் உருவாக்கப்பட்ட வேளாண் ஆய்வு மையமான அண்ணா பண்ணை, அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் செயலிழந்த நிலையில் உள்ளது. இந்த மையம் தரம் உயர்த்தப்பட்டுத் திறம்பட மீண்டும் செயல்பட ஆவன செய்யப்படும்.

74. காவிரி பாசனப் பகுதி மற்றும் டெல்டா பகுதிகளில் உள்ள அனைத்துக் கால்வாய்களும் தூர்வாரப்பட்டுக் கரைகள் பலப்படுத்தப்படும்.

நெல், கரும்புக்குக் கூடுதல் ஆதார விலை

75. அ.தி.மு.க. அரசு நெல்லுக்குத் தற்போது குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 2000-க்கும் குறைவாக நிர்ணயித்துள்ளது. இந்தத் தொகையை தி.மு.க. அரசு ரூபாய் 2500 ஆக உயர்த்தித் தரும். அதைப் போல் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையும் ரூபாய் 4000/- ஆக உயர்த்தி நிர்ணயிக்கப்படும்.

வேளாண் இயந்திரங்கள் வாங்க கூட்டுறவு அமைப்புகளுக்கு அரசு உத்தரவாதம்

76. விவசாயத் தொழிலாளர்கள் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. வேளாண்மையில் இயந்திரங்களின் பயன்பாடும் தேவையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், வேளாண்மையில் அக்கறை கொண்ட இளைஞர்கள் பலரும் வேறு வழியின்றி மாற்றுத் தொழிலில் ஈடுபடச் சென்று விடுகிறார்கள். அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடின்றிச் சலுகைக் கட்டணத்தில் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மேலும்,அவர்களை விவசாயத் தொழிலுக்கு ஈர்த்திடவும், நவீனத் தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தி வேளாண்மையை மேம்படுத்திடவும், மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பள்ளிப்படிப்பு முடித்த, குறைந்தது 40 ஆண்கள், மற்றும் பெண்களை உறுப்பினர்களாகக் கொண்ட கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கி, அரசு நேரடியாக உதவிடும் வகையில், ஒவ்வொரு கூட்டுறவு அமைப்பிற்கும் உத்தேசத் திட்டமதிப்பு 2 கோடியே 50 லட்சம் ரூபாய்ச் செலவில், டிரெய்லருடன் கூடிய 5 டிராக்டர்கள், 5 நடவு இயந்திரங்கள் 5 அறுவடை இயந்திரங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு வங்கிக் கடன் பெற அரசு உத்தரவாதம் வழங்கும். கூட்டுறவு அமைப்பின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் முதலீடாக 50 ஆயிரம் ரூபாய் செலுத்துவர். அத்தொகையிலிருந்து வங்கிக்கு முன்தொகை செலுத்தப்படும்.

இந்தக் கூட்டுறவு அமைப்புகள், அந்தந்தப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் - கட்டண அடிப்படையில் - உழவு, நடவு, அறுவடை ஆகிய பணிகளைச் செய்து கொடுக்கும். இந்தத்

திட்டத்தின் மூலம் குறைந்தது 25,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மாநிலம் முழுவதிலும் 500 க்கும் குறையாத வேளாண் தொழில்நுட்பக் கூட்டுறவு அமைப்புகள் உருவாக்கப்படும்.

77. உழவர் சந்தைத் திட்டம் உயிரூட்டப்பட்டு, மேலும் பல நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும். நகர்ப்புற நுகர்வோர் நியாயமான விலையில் பொருள்களைப் பெறவும், விவசாயிகள் போதுமான இலாபத்தை ஈட்டிடவும் பயன்படும் வகையில், விவசாயப் பொருள்களை விற்பனை செய்ய நடமாடும் உழவர் சந்தைகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

78. தமிழகத்திற்கு ஆண்டுக்கு 1,05,000 டன் விதை நெல் தேவைப்படுகிறது. ஆனால் விவசாயத்திற்குத் தேவையான மொத்த விதைநெல்லில், அரசு 17 சதவிகிதம் மட்டுமே மானியம் வழங்குகிறது. எனவே, அனைத்து ரக விதை நெல் வகைகளும், அவற்றின் காலவரையறையைக் கணக்கில் கொள்ளாமல், முழு மானியத்தோடு விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

ஈரோட்டில் மஞ்சள் ஆராய்ச்சி நிலையம்

79. தமிழகத்தில் மஞ்சள் விளைச்சலின் தலைநகராகத் திகழும் ஈரோட்டில் நவீன மஞ்சள் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும்.

80. ஈரோடு மாவட்டத்தில் அரசு வேளாண் கருவிகள் உற்பத்தித் தொழிற்பேட்டை அமைக்கப்படும்.

பேரீச்சை வளர்க்க சிறப்பு நிதியுதவி

81. தூத்துக்குடி, வேலூர், கரூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் பேரீச்சை வளர்வதற்கு உரிய மண்வளம் இருப்பது தெரிய வந்துள்ள நிலையில், இரும்புச்சத்துச் செறிவுள்ள பேரீச்சை மரங்களை இம்மாவட்டங்களில் வளர்ப்பதற்கும், பேரீச்சை சார்ந்த தொழில்களை உருவாக்கவும் சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, பேரீச்சை வளர்க்க முன் வருவோருக்கு அரசு மானியத்துடன் கூடிய சிறப்பு நிதி உதவி வழங்கப்படும்.

மலைப்பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகளுக்குத் தடை

82. தமிழக மலைப் பகுதிகளில் பெரிய அளவில் நிலங்கள் வாங்கிப் பணப்பயிர் விளைவிப்பதற்கென மலைப்பகுதிகளில் ஆழ்குழாய்க்கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரினை முழுவதுமாக வெளியேற்றிவிடும் சூழ்நிலை தற்போது உள்ளது. இதனால் மழைக் காலங்களில் நீரைத்தேக்கி வைத்துக் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றும் நீர்த்தேக்கங்கள் மற்றும் ஓடைகள் வற்றி விடுவதால், வறட்சிக்கு வழி வகுப்பதோடு வன விலங்குகள் நீர் தேடி, காடுகளை விட்டு வெளியேறி மக்கள் வாழும் சமவெளிக்குச் செல்ல நேரிடும். இதனால் மனித - விலங்கு மோதல் அதிகரிக்கும்.

வேளாண் வயல்களில் வளரும் பயிர்களைத் தாக்குகின்ற பூச்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் மோசமான விளைவுகள் குறித்தும் முன்கூட்டியே அறிந்து அந்த நோய்களைத் தடுக்கின்ற வகையில் ஆலோசனைகளைப் பெறுவதற்கு வசதியாக ஒவ்வொரு வட்டம் அளவிலும் ஒரு வேளாண் நோய் தடுப்பு நிலையம் அமையும்.

விவசாயிகள் அவர்களின் வயல்களின் மண் தரம், நீர் ஆதாரம் மற்றும் விதைகளின் தரம் பற்றிய முழு விவரங்களைத் தெரிந்துகொள்ள வேளாண் பொறியியல் வல்லுநர்களை எளிதில் சந்தித்துக் கலந்துரையாடி ஆலோசனைகளைப் பெறலாம்.

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

சனி 13 மா 2021