மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 மா 2021

புதிய நீர்வள ஆதாரங்களுக்கு அமைச்சகம்!

புதிய நீர்வள ஆதாரங்களுக்கு அமைச்சகம்!

திமுக தேர்தல் அறிக்கையில் புதிய நீர்வள ஆதாரங்களுக்கு அமைச்சகம் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில்,

83. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும் என அறிவித்து, முதற்கட்டமாக 5-2-2009 அன்று ரூபாய் 189 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கரூர் மாவட்டம் மாயனூர் அருகே கட்டளை கிராமத்தில் காவிரியில் கதவணை கட்டிட 9-2-2009 அன்று அடிக்கல் நாட்டி திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். 2011 ல் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு பத்தாண்டுகளாக இத்திட்டத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு, இப்போது சட்டமன்றத் தேர்தல் வந்துவிட்டது என்பதற்காக தாம் புதிதாகக் கொண்டுவந்த திட்டம் போல அறிவித்து அடிக்கல் நாட்டி ஒரு நாடகத்தை நடத்தியுள்ளது. ஆனால், அவர்கள் இத்திட்டத்தை நிறைவேற்றப் போவதில்லை. கலைஞர் அன்று தொடங்கிய இந்தக் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை அமையவிருக்கும் தி.மு.க. அரசு விரைந்து நிறைவேற்றிப் பாசன வசதியும் குடிநீரும் கிடைத்து வறண்ட பகுதிகள் பயன்பெறச் செய்யும்.

தாமிரபரணி - கருமேனி - நம்பியாறு இணைப்புத் திட்டம்

இதே போல, தாமிரபாணி - கருமேனி - நம்பியாறு இணைப்புத் திட்டம் 369 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என 2008 ஆம் ஆண்டில் அறிவித்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 21-2-2009 அன்று அடிக்கல் நாட்டி திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்கள். நான்கு கட்டங்கள் கொண்ட இத்திட்டப் பணிகளில் இரண்டு கட்டங்கள் முடிவடைந்து பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த வேளையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதாவினால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது, தேர்தல் நேரம் என்பதால் அ.தி.மு.க அரசின் திட்டம் போல இத்திட்டத்தையும் புதிதாக அறிவித்துள்ளது. ஆயினும், இத்திட்டத்தை கழகத் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமையவிருக்கும் கழக அரசு முன்னுரிமை அளித்து நிறைவேற்றி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் வறண்ட பகுதிகளை வளப்படுத்தும்.

84. தமிழ்நாடு - கேரள எல்லையில் அமைக்கப்பட்டுள்ள செண்பகவல்லி அணையிலிருந்து தமிழகத்துக்கு நீர் பகிர்ந்திட அமைக்கப்பட்ட கன்னிகா மதகுக் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதன் விளைவாக தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீர் வரத்து பல்லாண்டுகளாக நின்று விட்டது. இந்த மதகு சீர்செய்யப்பட்டால் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள 40,000 ஏக்கர் நிலங்கள் வளம் பெறும். கடந்த 30 ஆண்டு காலமாக இந்த மாவட்ட விவசாயிகள் இந்தப் பிரச்சனைக்காகப் போராடி வருகிறார்கள். கேரள அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி கன்னிகா மதகினைச் சீரமைக்கும் பணி முன்னுரிமை அளித்து மேற்கொள்ளப்படும்.

85. கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளச் சேதம், வறட்சித் துயர் போன்ற இயற்கைப் பேரிடர் முரண்பாட்டு நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு உரிய திட்டங்களைச் செயல்படுவதற்கும், தமிழகத்திற்குக் கிடைக்கும் நீரை முறைப்படுத்தித் தொடர்ச்சியாக வேளாண்மைக்குப் பயன்படும் வகையில் சேமித்து வைப்பதற்கும், தற்போது பொதுப்பணித் துறையோடு இணைந்திருக்கும் நீர்ப் பாசனத்துறைக்கெனத் தனியாக ஒரு அமைச்சகம் உருவாக்கப்படும்.

86. தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள், நீரோடைகள், ஏரிகள், குளங்கள் ஆகியவற்றைச் சீரமைக்கவும், ஆக்கிரமிப்புகளைத் தடுக்கவும், அகற்றவும் மற்ற மாநிலங்களிலிருந்து, தமிழகத்திற்குக் கிடைக்கக் கூடிய நீரின் அளவை உறுதி செய்யவும் நீர் மேலாண்மை ஆணையம் ஒன்றினை அமைப்பதற்குச் சட்டம் இயற்றப்படும். இந்த ஆணையத்தில் வானிலை ஆய்வறிஞர்கள், நீரப்பாசனத்துறைப் பொறியாளர்கள் உள்ளிட்டவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள்.

காவிரி, வைகை மற்றும் தாமிரபரணி ஆற்றின் கரைகள் மேம்பாடு

87. திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் காவிரி வைகை மற்றும் தாமிரபரணி ஆற்றுக் கரைகள், சாலைகள் ஆகியவற்றில் பூங்காக்கள் ஏற்படுத்தி அழகுபடுத்துவதற்காகத் தனித்தனியான ஆணையங்கள் உருவாக்கப்படும்.

88. வெள்ளக் காலங்களில் கிராமங்கள் துண்டிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்படாமல் தடுப்பதற்காக மாநிலம் முழுவதிலும் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் இதர நீர்நிலைகள் ஆகியவைகளில் கட்டப்பட்ட தரைப் பாலங்கள் உயர்மட்டப் பாலங்களாக மாற்றிக் கட்டப்படும்.

89. தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாசன வசதியையும், குடிநீர் வசதியையும் மேம்படுத்துவதற்கும் தி.மு.கழக ஆட்சி அமைந்தவுடன், மாநிலம் தழுவிய நீர் மேலாண்மைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கென 10 ஆயிரம் கோடி ரூபாய் முதல் கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

90. திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பாயும் பாமினி, கோரையாறு, வெண்ணாறு, காவிரி, கொள்ளிடம், குடமுருட்டி உள்ளிட்ட பல்வேறு ஆறுகளின் குறுக்கேயும் தடுப்பணைகள் அமைத்து விவசாயிகள் பயன்பெற வழிவகை செய்யப்படும். முதற்கட்டமாக, 200க்கும் குறையாத தடுப்பணைகள் கட்டப்படுவதற்கு உரிய மதிப்பீடு செய்யப்பட்டு, 2000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ரூபாய்.3000 கோடியில் கொள்ளிடத்தில் கல்லணைக்கு கிழக்கே விசுவந்தட்டை, விளாங்குடி, வீரமாங்குடி, குடிதாங்கி, வாழ்க்கை ஆகிய இடங்களில் உயர்மட்ட மேம்பாலத்துடன் கூடிய 5 கதவணைகள் கட்டப்படும்.

91. தமிழகப் புவியியல் அமைப்பின் தற்போதைய நில மட்டங்களைப் புதிதாக அளவிட்டு, நீர்மட்டத்தைக் கணக்கிட்டு, அதன் அடிப்படையில் நீர்நிலைகளின் ஓடுபாதைகள் சரியாகக் கணிக்கப்பட்டு நீர்நிலைகளின் தரைமட்டங்களும், அவற்றில் ஓடும் நீரின் மேல்மட்டமும் மேலாண்மை செய்யப்படுவதற்கு அரசு முழு முயற்சி மேற்கொள்ளும்.

92. சென்னையில் புயல் வெள்ளக் காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தவும், மழைநீர்க் கால்வாய்கள் போன்ற அமைப்புகளை உருவாக்கி, சென்னையை வெள்ளத்திலிருந்து காப்பாற்றும் வகையிலும் நகரமைப்பு வல்லுநர்கள், சுற்றுச் சூழல் அறிஞர்கள் மற்றும் நீர் நிர்வாகத் துறை வல்லுநர்கள் அடங்கிய சென்னைப் பெருநகர் வெள்ளத் தடுப்பு மேலாண்மைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அவர்களுடைய ஆலோசனையின் பேரில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சென்னை நகரின் ஆறுகள் பாதுகாப்புக்கு ரூபாய் 5000 கோடி ஒதுக்கீடு

93. சென்னையின் மையப் பகுதியில் கூவம், அடையாறு ஆகிய இரண்டு ஆறுகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் குசஸ்தலை ஆறும் ஓடுகின்றன. சென்னை மாநகராட்சியின் ஏழு நீர் மண்டலங்களில் பெரும்பாலான நீரைக் கடலுக்குக் கொண்டு செல்லும் பணியை அடையாறு செய்கிறது. இந்த ஆற்றில் செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீரைத் திறப்பதால் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. ஆனால் பெரிய ஏரியான செம்பரம்பாக்கம் ஏரி நிரம்புவதற்கு உதவுகின்ற குன்றத்தூர் மற்றும் திருப்பெரும்புதூர் வட்டத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி, உபரி நீர் அடையாறு ஆற்றில் பல்வேறு கிளைக் கால்வாய்கள் மூலம் இணைகின்றன. இந்த வகையில், திருப்பெரும்புதூர் வட்டத்தில் உள்ள 96 ஏரிகளில்

50 ஏரிகளின் உபரி நீர் அடையாறு வழியாகக் கடலுக்குச் செல்கின்றது.

அடையாற்றில் உபரி நீர் கடலுக்குச் செல்லும்போது ஏற்படுகின்ற வெள்ளச் சேதம் சென்னையின் மையப் பகுதியையும், தென் சென்னைப் பகுதியையும் மிகவும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. அதைப் போலவே, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உற்பத்தியாகின்ற குசஸ்தலை ஆறு, திருவள்ளூர் மாவட்டம் வழியாக 120 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து மீஞ்சூரை அடுத்த நாப்பாளையம் அருகே வங்கக் கடலில் கலக்கிறது. ஆகவே, மழை நீர் மற்றும் உபரி நீர் வெள்ளத்தால் ஏற்படுகின்ற பேரழிவிலிருந்து சென்னை மாநகரைக் காப்பாற்றுவதற்குச் செம்பரம்பாக்கம், போரூர், திருநீர்மலை, எருமையூர், சோமங்கலம், நந்தம்பாக்கம், நடுவீரப்பட்டு, நல்லூர், மணிமங்கலம், பிள்ளைப்பாக்கம், திருப்பெரும்புதூர், மலைப்பட்டு, மண்ணிவாக்கம், வண்டலூர், முடிச்சூர், பெருங்களத்தூர், இரும்புலியூர், ஊரப்பாக்கம், ஆதனூர், கூடுவாஞ்சேரி, நந்திவரம், படப்பை, நாட்டரசன் பட்டு, காட்டாங்கொளத்தூர், ஆதனஞ்சேரி, ஒரத்தூர், சாலமங்கலம், வஞ்சுவாஞ்சேரி, வல்லம், மாகாண்யம், அழகூர், வைப்பூர், சரப்பணஞ்சேரி, வடக்குப்பட்டு, சென்னாங்குப்பம், போந்தூர், கண்ணந்தாங்கல், பால்நெல்லூர், மாம்பாக்கம், வெங்காடு கொளத்தூர், பூந்தண்டலம், பழந்தண்டலம், பழவேற்காடு, ரெட்டேரி, வேளச்சேரி, சோழவரம் ஆகிய ஏரிகளையும் பாப்பான் கால்வாய், மண்ணிவாக்கம் கால்வாய், மணப்பாக்கம் கால்வாய், ராமாபுரம் கால்வாய், திருமுடிவாக்கம் இணைப்புக் கால்வாய், ஊரப்பாக்கம் இணைப்புக் கால்வாய், வீராங்கால் ஓடை, ஒக்கியம் வடிகால், ஓரத்தூர் ஓடை கால்வாய்களையும், சென்னை நகரைச் சுற்றியுள்ள பூண்டி, புழல் ஆகிய பெரும் நீர் நிலைகளையும் தூர்வாருவதற்காகவும் மேலும் பக்கிங்காம் கால்வாய், மாம்பலம் கால்வாய், ஓட்டேரி நல்லா, கேப்டன் காட்டன் கால்வாய், ஆகிய ஆறுகளையும் ஆழப்படுத்தி தூய்மைப்படுத்திடவும், குசஸ்தலை ஆறு, கூவம், அடையாறு ஆகிய நதிகளை இணைக்கும் வகையில், வடக்கு தெற்காக ஓடும் பக்கிங்காம் கால்வாய் கூடுதல் நீரைக் கடத்திச் செல்வதற்கேற்ற வகையில் சீரமைக்கப்படுவதற்காகவும் வெள்ளத்தினால் ஏற்படும் சேதத்தைத் தடுத்திடும் நடவடிக்கை மேற்கொள்வதற்காகவும் முதற்கட்டமாக 5 ஆயிரம் கோடி

ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து சிறப்புத் திட்டம் ஒன்று செயல்படுத்த வழிவகை காணப்படும்.

94. கடலில் கலக்கும் தமிழக ஆறுகளின் முகத்துவாரங்களில் அடிக்கடி ஏற்படும் கடல் அலையின் திசை மாறுபாடுகளாலும், வேகத்தினாலும் ஏற்படும் விளைவுகளால் மழைக்காலத்தில் ஆற்றில் கரைபுரண்டு பெருக்கெடுத்துவரும் வெள்ளநீர் கடலுக்குள் செல்ல இயலாமல் நகருக்குள் புகுந்து பெரும் சேதம் விளைவிப்பதைத் தடுக்கும் வகையில் முகத்துவாரங்கள் மணல் திட்டுகளால் அடைபடுவதைத் தடுத்திடவும், பெருமழைக் காலங்களில் ஏரிகளிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை அவ்வப்போது கட்டுப்படுத்திடவும், கண்காணிக்கவும் மழைக் காலச் சிறப்புக் கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்படும்.

95. தமிழகத்தில் அ.தி.மு.க அரசு வெளிநாட்டுக் குளிர்பான நிறுவனங்களுக்கு உதவி செய்வதற்காகவும், அரசே குடிநீரைச் சந்தை விலையில் விற்பனை செய்வதற்கு வசதியாகவும், 2013 ஆம் ஆண்டில் தமிழக நிலத்தடி நீர் பாதுகாப்புச் சட்டத்தையே ரத்து செய்துவிட்டது. இதனால், நிலத்தடி நீரை முறையாக நிர்வகிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு நிலத்தடி நீர்ப் பாதுகாப்புச் சட்டம் புதிதாக நிறைவேற்றப்பட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

96. தஞ்சை மாவட்டத்தில் கல்லணைக் கால்வாய்ப் பாசனப் பகுதிகளான தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் மற்றும் கடைமடைப் பகுதிகளுக்கு நீர் முறையாகக் கிடைக்கும் வகையில் நீரோடை வழித்தடங்கள் தூர்வாரப்படும். அது போலவே, கட்டளை வாய்க்கால், உய்யக் கொண்டான் வாய்க்கால் பாசனப் பகுதிகளான செங்கிப்பட்டி, பூதலூர், வல்லம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் நீர்வரத்தை உறுதி செய்யும் வகையில் நீரோடை வழித் தடங்கள் உருவாக்கப்படும்.

97. தி.மு.கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பாலாறு - தாமிரபரணி ஆற்றுப் படுகைகள் சீரமைப்புத் திட்டத்தைத் தொடர்ந்து மற்ற ஆற்றுப் படுகைகளுக்கும் விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

98. இந்திய நதிகளை இணைக்கும் திட்டத்தை நிறைவேற்றுமாறு மத்திய அரசை வலியுறுத்துவதோடு, முதற்கட்டமாக, தென்னக நதிகளை இணைக்கும் திட்டம் ஒன்றை உருவாக்கிச் செயல்படுத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

99. கேரள அரசோடு 1969ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தின் கீழ் இடைமலையாறு அணையினைக் கேரள அரசு கட்டி முடித்த நிலையில், ஆனைமலையாற்றில் அணை கட்ட பேச்சு வார்த்தை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

100. மேல் நீராற்றிலிருந்து 15 கி.மீ தூரத்திற்குச் சுரங்க நீர்ப்பாதை அமைத்து அதன் மூலம் நல்லாறு - திருமூர்த்தி அணைக்கு நீர் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

101. பெரியார் - வைகை பிரதானப் பாசனக் கால்வாயிலிருந்து சாத்தையாறு அணைக்குப் புதிய கால்வாய் அமைத்துச் சாத்தையாறு அணையினுடைய ஆயக்கட்டுப் பகுதியை அதிகரிப்பதோடு, விவசாயத்திற்குப் போதுமான தண்ணீர் விநியோகம் செய்வது உறுதி செய்யப்படும்.

102. பேச்சிப்பாறை அணை தூர்வாரப்பட்டுச் சீரமைக்கப்படும்.

103. நொய்யல் ஆறு சீர்படுத்தப்பட்டு, பவானி - நொய்யலாறு -அமராவதியாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

104. வரதமா நதி, சண்முகா நதி, அமராவதி ஆகிய ஆறுகளில் உபரி நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுத்து ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி பகுதிகளுக்குக் கால்வாய் அமைத்து விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும்.

105. விருதுநகர் மாவட்டத்தின் வறட்சியான கிழக்குப் பகுதிகள் பாசன வசதி பெற தெற்காறு - குண்டாறு இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும்.

106. சேலம் மேச்சேரி நீரேற்றுத் திட்டம் நிறைவேற்றப்படும்.

107. கொளத்தூர் தோணிமடுவுத் திட்டம் - நான்கு மலைகளிலிருந்து வரக்கூடிய நீரைத் தடுப்பணை கட்டித் தேக்கி வைத்து விவசாயத்திற்குப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

108. சேலம் சாணார்பட்டி - மூலக்காடு சாம்பல் நீரேற்றுத் திட்டம் நிறைவேற்றப்படும்.

109. பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு காலங்களில் கிடைக்கும் உபரிநீரைக் கொண்டு கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள குளங்களில் நீர் நிரப்பி, அந்தப் பகுதிகளில் குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளுக்குப் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட அத்திக்கடவு - அவினாசித் திட்டம் போர்க்கால அடிப்படையில் விரைந்து நிறைவேற்றப்படுமென 2016 தேர்தல் அறிக்கையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. பத்தாண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் இத்திட்டத்தை நிறைவேற்றாமல் விட்டுவிட்டுத், தேர்தல் ஆதாயத்திற்காகத் தற்போது இத்திட்டத்தைத் தொடங்கியுள்ளது. கலைஞர் உருவாக்கிய இந்தத் திட்டத்தை தி.மு.க. அரசு முனைப்போடு செயல்படுத்தி விரைந்து நிறைவேற்றும்.

110. கிருஷ்ணகிரியில் உள்ள படேதால் ஏரியிலிருந்து வெண்ணம்பள்ளி, அச்சமங்கலம், சிகரளபள்ளி, கப்பல்வாடி, கோடமண்டபட்டிகால்வாயையும் சுண்டம்பட்டி, ஒரப்பம், பாலினயனப்பள்ளி, ராசிப்பள்ளி, கெட்டூர், செந்தாரப்பள்ளி, மோடிக்குப்பம், நக்கல்பட்டி, புதூர், கரீம் சாயபுஏரி ஆகிய ஏரிகளையும் இணைக்கும் வகையில் கால்வாய்கள் வெட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

கடலூரில் வெள்ளப் பாதுகாப்புக்கு அரிவாள் மூக்கு வடிகால் திட்டம்

111. கடலூர் துறைமுக முகத்துவாரம் முதல் புவனகிரி அருகில் வெள்ளாற்று வடிகால் முகத்துவாரம் வரையில் உள்ள 40 கி.மீ தூரத்திற்குக் கீழ் பரவனாற்றிலிருந்து நேரடி தனி வடிகால் இல்லாத காரணத்தால் புயல், வெள்ள காலங்களில் ஏற்படும் வெள்ளச் சேதத்தால் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் பாதிக்கப்படுகின்ற நிலை உருவாகிறது. இப்பாதிப்பிலிருந்து விவசாயிகளைக் காப்பாற்றுவதற்காகக் கீழ்பரவனாற்றில் பூண்டியாங் குப்பத்திற்கும் ஆலப்பாக்கத்திற்கும் இடையே கடலில் நேரடியாகக் கலக்க ஏதுவாக வடிகால் ஒன்றினை ஏற்படுத்தி, கடல் முகத்துவாரத்தில் மதகுகள் அமைத்து வெள்ளக் காலங்களில் திறக்கவும், மற்ற நாட்களில் கடல் நீர் உட்புகாமல் தடுக்கவும், அப்பகுதி மக்களின் நீண்ட காலக்கோரிக்கையான "அரிவாள்மூக்கு வடிகால் திட்டம்" போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்படும்.

சேது சமுத்திரத் திட்டம்

112. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி வேலைவாய்ப்புகளைப் பெருமளவு உருவாக்கக் கூடிய தமிழக மக்களின் 150 ஆண்டு காலக் கனவுத் திட்டம் - பெருந்தலைவர் காமராசரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் நீண்ட காலமாகப் போராடி வந்த மாபெரும் திட்டம் சேதுசமுத்திரத் திட்டம். இத்திட்டம், ஏறத்தாழ 2500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2.7.2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு கணிசமான பணிகள் முடிவடைந்த நிலையில் பிற்போக்குச் சக்திகளால் முடக்கப்பட்டுள்ளது. தடைகளை உடைத்து, அனைத்துத் தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய பாதையில் இத்திட்டம் முழுமையாக நிறைவேறவும், தென் தமிழகம் பொருளாதார வளர்ச்சி பெறவும் தி.மு.கழக அரசு தொடர்ந்து பாடுபடும்.

கச்சத் தீவு

113. கச்சத் தீவின் உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்று 1974 ஆம் ஆண்டிலிருந்து தி.மு.கழகம் இந்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 1974 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தில் தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த மீன் பிடிப்பதற்கும், மீன் வலைகள் உலர்த்துவதற்கும், தேவாலயங்களில் வழிபாடு நடத்துவதற்கும் இருந்த உரிமைகள் தொடர்பான பிரிவுகள் 1976 ஆம் ஆண்டு அவசரநிலை காலத்தில் பறிக்கப்பட்டன. இதன் காரணமாக அடிக்கடி கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தினரால் தாக்கப்படுவதும், சிறைப் பிடிக்கப்படுவதும் தொடர் நிகழ்வுகளாக அதிகரித்து வருவதால் தமிழக மீனவர்களைப் பாதுகாத்திட, கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

சனி 13 மா 2021