மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 மா 2021

மீனவர்களுக்கு 2 லட்சம் புது வீடுகள்!

மீனவர்களுக்கு 2 லட்சம்  புது வீடுகள்!

திமுக தேர்தல் அறிக்கையில் மீனவர்களுக்காக பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

அவை

114. மீனவ சமுதாயத்தைக் கடல்சார் பழங்குடியின மக்கள் என்று பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கும், பழங்குடியினருக்குள்ள அனைத்துச் சலுகைகளையும் மீனவர்கள் பெறுவதற்கும் தி.மு.கழகம் முயற்சி செய்யும்.

115. தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தினரால் தொடர்ந்து தாக்கப்படுவதையும், சிறைப்பிடிக்கப்படுவதையும், கொல்லப்படுவதையும் குறித்து தி.மு.கழகம் கடுமையான முறையில் தனது கண்டனத்தைத் தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இந்தப் பிரச்சினை தீர்க்கப்படுவதற்கு இலங்கை அரசு இதுவரை உரிய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. மத்திய அரசு உடனடியாக இப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு ஒன்றினைக் காணவேண்டும் என்று தி.மு.கழகம் வலியுறுத்துவதுடன், இரு நாட்டுக் கடற்கரைப் பகுதிகளிலும் சிக்கல் தீர்க்கும் மையங்களை உருவாக்கிட மத்திய அரசைத் தி.மு.கழகம் வற்புறுத்தும்.

116. சென்னை மாநகரிலும், கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களிலும் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போது மக்களைக் காப்பாற்ற முன்வந்த மீனவர்கள் சமுதாயம் நீண்ட கடற்கரையைக் கொண்ட தமிழகத்தில் அடிக்கடி ஏற்படுகின்ற புயல்வெள்ளப் பாதிப்பில் சிக்கிக் கொள்ளும் நிலை உருவாகின்றது. இந்த நிலையில் இருந்து மீனவமக்களைப் பாதுகாக்க முந்தைய தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட சிங்காரவேலர் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் தமிழகக் கடற்கரையோரப் பகுதிகளான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மீனவர்களுக்கு 2 இலட்சம் வீடுகள் கட்டித் தரப்படும். மேலும், ஏற்கனவே குடிசைமாற்று வாரியத்தால் கட்டப்பட்டு 25 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட வீடுகள் சிதிலமடைந்துள்ளதால், அங்கு வசிக்கும் மீனவர்கள் நலன் கருதி புதிய குடியிருப்புகள், மீனவர் வீட்டு வசதி வாரியத்தால் கட்டித் தரப்படும்.

117. இந்தியாவில் உள்ள அனைத்துக் கடலோர, உள்நாட்டு மீனவர்களின் நலன்களைப் பாதுகாத்திட தேசிய மீனவர் நல ஆணையம் அமைத்திட வேண்டும் என்று தொடர்ந்து தி.மு.கழகம் மத்திய அரசை வலியுறுத்தும்.

118. ஆழ்கடல் மீன்பிடிக் கொள்கையை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட மீனாகுமாரி குழுவின் பரிந்துரைகள் இந்திய மீனவர்களின் நலன்களுக்கு எதிராக அமைந்திருப்பதால், அந்த அறிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தி.மு.கழகம் வலியுறுத்தும்.

119. நடுக்கடலில் உயிரிழக்கும் மீனவர்களின் குடும்பங்கள், இறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு ஏழாண்டுகள் காத்திருக்கும் அவலநிலையைப் போக்கி, மீனவர் சங்கங்களின் பிரமாண வாக்குமூலத்தின் அடிப்படையில் இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட ஆவன செய்யப்படும்.

120. மீனவர்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக மீன்வளத்துறை அமைச்சர் - மாவட்ட ஆட்சித் தலைவர் பங்கேற்புடன் தலைமையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குறை தீர்ப்புக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

121. உயர் கல்வியைப் பரவலாக்கும் நோக்கிலும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கிலும், புதிய மீன்வளக் கல்லூரிகள், கடல்சார் கல்லூரிகள் உருவாக்கப்படும்.

122. மீனவர் பகுதிகளில் புதிய பள்ளிக் கூடங்கள் தொடங்கப்படும். மேலும், ஏற்கனவே உள்ள மணப்பாடு, ஆலந்தலை, கல்லாமொழி போன்ற மீனவப் பகுதிகளில் தொடங்கப்பட்ட ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.

மழைக்கால மற்றும் மீன்பிடித் தடைக்கால நிவாரணம்

123. மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகையாகத் தற்போது வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாய் என்பது 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். மேலும், மழைக்கால நிவாரணமாக மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூபாய் 5 ஆயிரம் என்பது 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

124. விசைப் படகிற்கு வழங்கப்படும் மானிய விலை டீசல் 1800 லிட்டர் என்பது 2000 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும். இதைப் போல் கட்டுமரம், நாட்டுப் படகு, ஃபைபர் படகு இவற்றிற்குத் தற்போது வழங்கப்படும் எரிபொருள் அளவு 300 லிட்டர் என்பது 400 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும்.

125. மீனவர்களுக்குத் தேவையான படகு, வலை, கட்டுமரம், தேடுவிளக்கு ஆகியன மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வாங்கிட, மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படும். உள்நாட்டு மீனவர்கள் பரிசில் மற்றும் வலைகள் வாங்குவதற்காக 50 சதவிகிதம் மானியம் வழங்கப்படும்.

126. மீன்வளத்துறை சார்பில் தேவைப்படும் இடங்களில் படகுகளை மீட்டெடுக்கத் தேவையான டிராக்டர்களைக் குறைந்த வாடகையில் மீனவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

127. முந்தைய தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் ஷ கட்டுமரம் போன்ற படகுகளில் மீன் பிடிப்பவர்களுக்கு மானிய விலையில் முன்பு வழங்கப்பட்ட ஐஸ் பெட்டிகள் மீண்டும் வழங்கப்படும். அதேபோல், மீன் வியாபாரம் செய்யும் பெண்களுக்கும் ஐஸ் பெட்டிகள் வழங்கப்படும்.

128. படகுகளில் இஞ்சின்களைப் பயன்படுத்தும் மீனவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் 20 சதவிகித மானியம் உயர்த்தி வழங்கப்படும்.

129. கன்னியாகுமரி - திருநெல்வேலி - தூத்துக்குடி மாவட்டங்களின் கடல் அமைப்பின் காரணமாக மீனவர்கள் பயன்படுத்திவரும் வெளிநாட்டு வெளிப்பொருத்தும் இயந்திரங்கள் ஆண்டுக்கு 750 வீதம் இறக்குமதி செய்யப்பட்டு தேவையான பகுதிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

130. அனைத்து மீனவ கிராமங்களுக்கும் மீன் உலர்த்தும் தளம் அமைத்துத் தரப்படும்.

131. மீன் பிடிக்கச் சென்று காணாமல் போன மீனவர் ஒருவரின் குடும்பத்திற்கு ஒரு நாளைக்கு 250 ரூபாய் வீதம் நிதி உதவி இரண்டு ஆண்டுகளுக்கு வழங்குவது போல், தோணியில் சென்று கடலில் காணாமல் போன மீனவர் குடும்பங்களுக்கும் வழங்கப்படும்.

132. தேவைப்படுகின்ற கடற்கரையோர மீனவ கிராமங்களில் கடல் அரிப்பினைத் தடுக்கத் தூண்டில் வளைவுத் தடுப்புச் சுவர் அமைத்துத் தரப்படும்.

133. தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் மீன்பிடித் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான மீன்பிடித் துறைமுகங்களும், குளிர்பதன சேமிப்புக் கிடங்குகளும் தேவையான பகுதிகளில் உருவாக்கப்படும்.

134. தமிழகத்திலுள்ள அனைத்து மீன்பிடித் துறைமுகங்களும் மறு சீரமைப்பு செய்யப்படும். காசிமேடு, அக்கரைப் பேட்டை, இராமேஸ்வரம் மற்றும் தொண்டியில் உள்ள மீன்பிடித் துறைமுகங்கள் நவீன வசதிகளுடன் விரிவுபடுத்தப்படும்.

135. குளச்சலில் மீன்பிடிப் படகுத் தொழிற்சாலை தொடங்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

136. சுற்றுச்சுழல் மாற்றங்களால் ஏற்படும் புயல், சுனாமி போன்ற நிகழ்வுகளின்போது ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்குத் தகவல் தொடர்புகள் கிடைக்காமல், மீனவர்கள் கரை சேர முடியாமல், நடுக்கடலில் மாயமாகி மாள்கிறார்கள். திசை தெரியாமல், பிற மாநிலங்களின் கரைகளைச் சேர்ந்தாலும், அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்களால் விரட்டியடிக்கப்படும் தொல்லைகளுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகிறார்கள். இத்தகைய தருணங்களில் தமிழக மீனவர்களைக் காப்பதற்காகத் தகவல்களை உடனுக்குடன் அவர்களுக்குத் தெரிவிக்க; அவர்களிடமிருந்து தகவல்கள் கரைக்குக்

கிடைத்திடத் தக்கவகையில் தமிழகக் கரையோரங்களில் உயர்கோபுரங்கள் அமைத்துத் தங்கு தடையற்ற தொலைத் தொடர்பு வசதிகளை உருவாக்கப்படும். அவற்றின் மூலம் தகவல்களை நெடுந்தொலைவில் பயணிக்கும், ஆழ்கடல் மீன் பிடி வணிகக் கப்பல்களுக்கும் , மத்திய பாதுகாப்பு அமைச்சக கப்பல்களுக்கும் , மற்றும் துறைமுகக் கழகங்களின் தொலைத் தொடர்பு மையத்திற்கும் உடனுக்குடன் தெரிவித்து மீனவர்களையும் படகுகளையும் காத்திட வழிவகுக்கப்படும்.

நெசவாளர் நலன்

137. தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் காஞ்சிபுரத்தில் அறிவிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா பட்டுப் பூங்கா மீண்டும் தொடங்கப்பட்டு, 25,000 நெசவாளர்கள் பயன் பெறத்தக்க வகையில் செயல்பட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

138. நெசவாளர்களுக்கென்று தனியாகக் கூட்டுறவு வங்கி அமைக்கப்படும். நெசவாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.

139. மக்களுக்கு அரசு வழங்குவதற்குத் தேவையான இலவச வேட்டி, சேலைகளை நெய்வதில் தமிழகக் கைத்தறி நெசவாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அதுபோல், பள்ளிச் சீருடைகளுக்கான துணிகள் உற்பத்தி தமிழக விசைத்தறி நெசவாளர்களிடம் மட்டுமே ஒப்படைக்கப்படும்.

140. நெசவாளர்களுக்குத் தடையின்றி நூல் கிடைக்க அரசே கொள்முதல் நிலையங்கள் அமைத்து நெசவாளர் சங்கங்களுக்கு நூல் வழங்கப்படும்.

141. கைத்தறி நெசவாளர்களுக்குக் கூடுதல் பயன்கள் கிடைக்கும் வகையில் கைத்தறிக்கெனத் தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் துணிவகைகளின் பட்டியல் மறுசீராய்வு செய்யப்படும்.

142. ஜவுளித் துறையை மேம்படுத்துவதற்குத் தனியாக ஜவுளி ஆணையம் அமைக்கப்படும்.

143. பட்டுநூல் முறுக்காலை அமைக்க மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும்.

144. தேசிய கைத்தறி வளர்ச்சிக் கழகத்தின் மூலமாகப் பட்டு / பருத்தி நூல் கொள்முதல் செய்யப்படும்போது தரப்படும் மானியத் தொகை 10 சதவிகிதம் என்பது 15 சதவிகிதமாக உயர்த்தித் தரப்படும்.

145. கைத்தறி நெசவாளர்களுக்குத் தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் இரண்டு மாதத்திற்கு 200 யூனிட் என்பது 300 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும்.

146. விசைத்தறிக்கு இரண்டு மாதத்திற்கு 750 யூனிட் ஆக உள்ள இலவச மின்சாரம் 1000 யூனிட் ஆக உயர்த்துவது குறித்துப் பரீசிலிக்கப்படும். இச்சலுகை விசைத்தறிப் பாய் நெசவுத் தொழிலுக்கும் அளிக்கப்படும். விசைத்தறித் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் அரசு முழுமையாக அளிக்கும்.

147. நெசவாளர்களுக்கு வீடுகள் கட்ட மானியமாக வழங்கப்படும் தொகை 4 இலட்சம் ரூபாய் என உயர்த்தித் தர நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் நகர்ப்புற நெசவாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

148. நெசவாளர்களுக்குக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும் கடனுக்கான வட்டி 12 சதவிகிதத்தில் இருந்து 8 சதவீதமாகக் குறைக்கப்படும்.

149. நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்குத் தற்போது வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை 1000 ரூபாய் என்பது 2000 ரூபாயாக உயர்த்தித் தரப்படும்.

150. அனைத்துக் கூட்டுறவு சங்கங்களுக்கும் அரசால் வழங்கப்பட வேண்டிய தள்ளுபடி மானியத் தொகை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தொழிலாளர் நலன்

151. தமிழகத்தில் தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் பல்வேறு பணிகளை மேற்கொண்டிருக்கும் அமைப்புசாரா தொழிலாளர்கள் வாழ்வு மேம்படவும், அவர்களுடைய எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டும் 36 வகைத் தொழிலாளர்களுக்குத் தனித்தனி நலவாரியங்ளை அமைத்து அவர்களுக்கு மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியம், கல்வி, திருமண உதவித்தொகை போன்ற சமூகப் பாதுகாப்பு உதவிகள் வழங்கப்பட்டன. அப்படி அமைக்கப்பட்ட நலவாரியங்கள் :

* தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் நலவாரியம்,

* தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம்,

* தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர் நல வாரியம்,

* தமிழ்நாடு ஆட்டோ ரிக்சா மற்றும் வாடகை ஊர்தி ஓட்டுனர் நல வாரியம்,

* தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் நல வாரியம்.

* தமிழ்நாடு முடிதிருத்துவோர் நல வாரியம்.

* தமிழ்நாடு தையல் தொழிலாளர் நல வாரியம்,

* தமிழ்நாடு கைவினைத் தொழிலாளர் நல வாரியம்,

* தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரியம்,

* தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர் நல வாரியம்,

* தமிழ்நாடு காலணி தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடுதல் தொழிலாளர் நல வாரியம்,

* தமிழ்நாடு ஓவியர் நல வாரியம்,

* தமிழ்நாடு பொற்கொல்லர் நல வாரியம்,

* தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர் நல வாரியம்,

* தமிழ்நாடு வீட்டுப் பணியாளர் நல வாரியம்,

* தமிழ்நாடு விசைத்தறி நெசவாளர் நல வாரியம்,

* தமிழ்நாடு பாதையோர வணிகர்கள் மற்றும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நல வாரியம்,

* சமையல் கலைஞர்கள் நல வாரியம்,

* தமிழ்நாடு கேபிள்டிவி தொழிலாளர்கள் நல வாரியம்,

* தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம்,

* தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம்,

* தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம்,

* தமிழ்நாடு கிராமக் கோவில் பூசாரிகள் நல வாரியம்,

* தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியம்,

* தமிழ்நாடு அரவாணிகள்(திருநங்கையர்) நல வாரியம்,

* தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம்,

* தமிழ்நாடு தூய்மைப்பணிபுரிவோர் நல வாரியம்,

* தமிழ்நாடு மீனவர் நல வாரியம்,

* தமிழ்நாடு உலமா மற்றும் பணியாளர் நல வாரியம்

* தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம்,

* தமிழ்நாடு திரைப்படத் துறையினர் நல வாரியம்,

* தமிழ்நாடு ஆடு வளர்ப்போர் நல வாரியம்,

* தமிழ்நாடு கதர் நூல் நூற்போர் மற்றும் நெசவாளர் நல வாரியம்,

* தமிழ்நாடு பாரம்பரிய மருத்துவர் நல வாரியம்,

* தமிழ்நாடு பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர் நல வாரியம்,

* தமிழ்நாடு ஆவண எழுத்தர் நல வாரியம்.

அ.தி.மு.க அரசு, இந்த அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களை முடக்கிப் போட்டு, ஏறத்தாழ இரண்டு கோடித் தொழிலாளர்களுக்கு எவ்வித சமூகப் பாதுகாப்பும் இல்லாமல் செய்து விட்டது. தி.மு.கழக ஆட்சி அமைந்தவுடன், ஏற்கனவே தனித்தனியாக அமைக்கப்பட்ட தொழிலாளர் நலவாரியங்கள் மீண்டும் முழுவீச்சில் செயல்படுத்தப்படும்; நலவாரிய அமைப்புகளில் இதுவரை இடம் பெறாத தமிழ்நாடு புகைப்பட / வீடியோ கலைஞர்கள் போன்ற பல அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் நல வாரியங்கள் புதிதாக உருவாக்கப்படும். மேலும், நலவாரிய உறுப்பினர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுவந்த ஓய்வூதியம், மருத்துவ உதவி, கல்வி உதவித் தொகை, விபத்து இழப்பீட்டுத் தொகை முதலியவை சீரமைக்கப்பட்டு உயர்த்தி வழங்கப்படும்.

போக்குவரத்துப் பணியாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்

152. தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் 1998 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட போக்குவரத்துப் பணியாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் அ.தி.மு.க ஆட்சியில் 1.4.2003 முதல் நிறுத்தப்பட்டுவிட்டது. இந்தத் திட்டம், அனைத்துப் போக்குவரத்துத் தொழிலாளர்களும் பயனடையும் வண்ணம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

153. அறநிலையத்துறை, காகித ஆலைகள், கூட்டுறவு நூற்பாலைகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரியம், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள், உள்ளாட்சித் துறையில் மேல்நிலைக் குடிநீர்த் தொட்டிகள் பராமரிப்புப் பணியாளர்கள், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அரசுத் துறை மற்றும் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்துவரும் அனைத்து ஒப்பந்த மற்றும் தற்காலிகப் பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்வது குறித்துப் பரிசீலிக்கப்படும்.

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

சனி 13 மா 2021