மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 மா 2021

ஆட்டோ வாங்க மானியம், இலவச நாப்கின்!

ஆட்டோ வாங்க மானியம், இலவச நாப்கின்!

சொந்தமாக ஆட்டோ வாங்க ரூபாய் 10,000 அரசு மானியம் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்களும் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

155. சென்னை உள்ளிட்ட மாநகரங்களிலும், நகரங்களிலும் சொந்தமாக ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்கள், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலமாக அல்லது வங்கிக் கடன் மூலமாக ஆட்டோ வாங்குவதற்கு அரசு 10,000 ரூபாய் மானியம் வழங்கும்.

மழைக் காலத்தில் உப்பளத் தொழிலாளர் நிவாரணத் தொகை ரூபாய் 5000

156. மீன் பிடிப்பு இல்லாத காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படுவதுபோல் உப்பளத் தொழிலாளர்களுக்கும் மழைவெள்ளக் காலங்களில் நிவாரணத் தொகை 5000 ரூபாய் வழங்கப்படும்.

157. மத்திய அரசின் சேமநல நிதி பெற்று, பீடித் தொழிலாளர்கள் அதிகம் வாழும்

பகுதிகளில் 50 படுக்கை வசதிகளுடன் உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

158. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் சலவைத் துறை கட்டித்தரவும், சலவைத் தொழிலாளர்கள் மானிய விலையில் தொழில் கருவிகள் வாங்கிடவும் ஆவன செய்யப்படும்.

கல்வி - உயர் கல்வி - கல்விக் கடன்

159. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பயின்று, தமிழகக் கல்லூரிகளில் பட்டப்படிப்பை மேற்கொள்ள வங்கிக் கடன் பெற்ற தமிழக மாணவர்கள் ஓராண்டு காலத்துக்குள் கடனைச் செலுத்த இயலாவிட்டால் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் கல்விக் கடனை அரசே ஏற்றுத் திருப்பிச் செலுத்தும்.

நீட் தேர்வு ரத்து

160. முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் பள்ளி இறுதி வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிக்கான சேர்க்கைகள் நடைபெற்றன. தற்போதைய மத்திய அரசு நீட் தேர்வை அறிமுகப்படுத்தி தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் வாய்ப்பினைத் தட்டிப் பறித்திருக்கிறது. கழக ஆட்சி அமைந்தவுடன் முதல் சட்டமன்றக் கூட்டத்திலேயே நீட் தேர்வை ரத்து செய்யும் சட்டத்தை நிறைவேற்றிக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

161. தமிழக மாணவ இளைஞர்கள் மாணவர்கள் மருத்துவக் கல்வி கற்பதற்கென்று தமிழக மக்களின் வரிப்பணத்தில் மாவட்டம் தோறும் புதிது புதிதாக தமிழக மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி நடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் பட்டப்படிப்பில் 15 சதவிகித இடங்களையும், பட்ட மேற்படிப்பில் 50 சதவித இடங்களையும், சிறப்பு மேற்படிப்பில் 100 சதவீத இடங்களையும் மத்திய தொகுப்புக்கு வழங்கிட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம் தமிழக மாணவர்களுக்குப் பேரிழப்பு ஏற்படுவதுடன், தமிழக அரசின் நோக்கங்களுக்கும், அது கடைப்பிடித்து வரும் சமூக நீதிக் கொள்கைக்கும் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது மத்திய அரசு புதிதாக 500 மருத்துவக் கல்லூரிகளை அமைத்து 50,000 மருத்துவக்

கல்வி இடங்களை உருவாக்கியுள்ளதால், மாநில அரசு நடத்தி வரும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களையும் மாநிலத் தொகுப்புக்கே கொண்டுவர அமையவிருக்கும் கழக அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

அரசுப் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இலவச நாப்கின்

162. அனைத்து அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் இலவசமாக வழங்குவதற்குத் தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்படும். அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இந்த வசதி செய்து தரப்படும்.

163. தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் நான்காம் தலைமுறை / ஐந்தாம் தலைமுறை (4ஜி/5ஜி) வசதியுடன் கூடிய இணையதள இணைப்புடன் கைக்கணினி அரசு செலவில் வழங்கப்படும். அதோடு அனைத்துக் கல்வி நிலையங்களிலும் றுi-குi வசதி செய்து கொடுக்கப்படும்.

164. தி.மு.கழகம் முந்தைய ஆட்சிக் காலங்களில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்பதை ஒரு கொள்கையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுடன், கூடுதலாக மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் புதிய, அரசு மருத்துவக் கல்லூரிகளை தி.மு.க. அரசு உருவாக்கும்.

165. பொறியியல், மருத்துவம், வேளாண்மை ஆகிய தொழிற் கல்விகள் பயில ஒற்றைச் சாளர முறையில் தேர்ந்தெடுக்கப்படும் முதல் தலைமுறை ஏழை மாணவர்கள் அனைவருக்கும் சாதி-மத வேறுபாடின்றிக் கல்விச் செலவை அரசு வழங்கும் என்ற கலைஞரின் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

166. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் வெளிநாடுகளுக்குச் சென்று வேலைவாய்ப்புப் பெறுவதற்கு வசதியாக - ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அவர்களின் விருப்பத்திற்கேற்ப ஆங்கிலம், பிரெஞ்சுமொழி, ஜெர்மனிய மொழி, ஸ்பானியமொழி, அரபிக் மொழி, சீனமொழி, ஜப்பானிய மொழி, ரஷ்ய மொழி போன்ற மொழிகள் கற்றுத் தர சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

167. தமிழக மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகளில் அதிகளவு வெற்றி பெற அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அரசின் சார்பில் உயர்சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

168. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கும், தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-1, குரூப்-2 போன்ற தேர்வுகளுக்கும், ரயில்வே மற்றும் வங்கிகளால் நடத்தப்படும் பணியாளர்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கும் தயாராகும் மாணவர்களுக்குப் பயிற்சிகள் அளிப்பதற்கான மையங்கள் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை ஆகிய மாநகரங்களில் தொடங்கப்படும்.

பள்ளிக் கல்வி

169. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பெறும் வகையில் காலை வேளையில் பால் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் நூறு சதவீத கல்வியறிவு

170. மூன்றாண்டுகளுக்குள் தமிழ்நாடு நூறு சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்ற மாநிலமாக உருவாவதற்கு உரிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு விரைவாகச் செயல்படுத்தப்படும். அரசியலமைப்புச் சட்டத்தில் பொதுப் பட்டியலில் உள்ள கல்வித் துறையை மீண்டும் மாநில அரசுப் பட்டியலில் இடம்பெறச் செய்திட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

171. அரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடுவதற்குத் தேவையான பயிற்சி அளிக்கக் கூடிய வகையில், கடந்த தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டன. இப்போதைய அ.தி.மு.க ஆட்சியில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு மீண்டும் உயிரூட்டி பிரிட்டிஷ் கவுன்சில் போன்ற நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு உரிய பயிற்சி வகுப்புகள் நடத்திட ஆவன செய்யப்படும்.

172. பள்ளிக் கல்வியில் சுற்றுச் சூழல் பிரச்சினைகள் குறித்தும், வேளாண்மை குறித்தும் அடிப்படைத் தகவல்களை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், பாடத் திட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வேளாண்மையை ஒரு பாடமாக இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அது போலவே, உடற்பயிற்சிக் கல்விக்கென வாரம் மூன்று பாடவேளைகளாவது ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

173. பள்ளிக்கூடங்களில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளோடு மொழிவழிச் சிறுபான்மையினர் தங்களுடைய தாய் மொழியையும் பயில்வதற்கு உரிய வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.

174. ஆசிரியர்களின் பொது மாறுதலுக்கான கலந்தாய்வில் தற்போது பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதால் கழக ஆட்சி அமைந்ததும் ஒளிவுமறைவற்ற வெளிப்படைத் தன்மையுடன் கலந்தாய்வு நடத்தப்படும்.

175. அண்ணா நூற்றாண்டு நூலகம் புதுப்பொலிவு பெறும் வகையில் புனரமைக்கப்படும்.

176. தமிழ்நாட்டில் நூலக ஆணைக் குழுவின் கீழ் இயங்கும் அனைத்து நூலகங்களுக்கும் நூல்கள் வாங்குவதில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்பட்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்கள் உட்பட தரமான சிறந்த நூல்கள் வாங்க ஆவன செய்யப்படும்.

177. 2013 ஆம் ஆண்டுமுதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று இன்னும் வேலை வாய்ப்பினைப் பெறாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர் தேர்வுக்கான தகுதிச் சான்றிதழை ஆயுட்காலத் தகுதிச் சான்றிதழாக வழங்குவதற்குரிய சட்ட வழிவகைகள் குறித்து ஆராயப்படும்.

மோசமான செயல்பாடு கொண்ட அமைச்சர்கள்: முதல்வர் ஸ்டாலின் ப்ராக்ரஸ் ...

6 நிமிட வாசிப்பு

மோசமான செயல்பாடு கொண்ட அமைச்சர்கள்: முதல்வர் ஸ்டாலின் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்!

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? ...

10 நிமிட வாசிப்பு

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? - சிபிசிஐடி விசாரணைப் பின்னணி!

எக்சலன்ட்- வெரி குட் அமைச்சர்கள் இவர்கள்தான்!

5 நிமிட வாசிப்பு

எக்சலன்ட்- வெரி குட் அமைச்சர்கள் இவர்கள்தான்!

சனி 13 மா 2021