மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 மா 2021

பெண் சிசுக் படுகொலை தடுப்பு சட்டம், கலைஞர் உணவகம்!

பெண் சிசுக் படுகொலை தடுப்பு சட்டம், கலைஞர் உணவகம்!

பெண் சிசுக் படுகொலையை தடுக்க சட்டங்கள் இயற்றப்படும் என்றும் 500 இடங்களில் கலைஞர் உணவகம் அமைக்கப்படும் என்றும் திமுக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில்,

326. தமிழகத்தில் சிறார்கள், சிறுமிகள் மற்றும் கைக்குழந்தைகளைக் கடத்திச் செல்வது அதிகரித்து வருகிறது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்களை மீறி இந்தக் கடத்தல்கள் நடைபெறுகின்றன. இந்தச் சமூக அவலத்துக்கு முடிவு கட்டவும், இந்தச் செயலில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனை வழங்குவதற்கும், குழந்தைகள் கடத்தல் (தண்டனை) சட்டம் ஒன்று நிறைவேற்றப்படும்.

327.பிறக்கும் போதே ஊட்டச்சத்துக் குறைவினால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்குச் சத்தான உணவு வழங்கிட குழந்தைகள் நலப் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகள் கொண்ட உணவுக் கூடைத் திட்டம் செயல்படுத்தப்படும்.

328. பெண் சிசு படுகொலைகளைத் தடுக்க கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பெண் சிசுக் கொலை முற்றிலும் தடுக்கப்படும்.

329. குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டம் கட்டாயமாக - கண்டிப்புடன் அமல்படுத்தப்பட்டு குழந்தைகள் கல்வி முன்னேற்றத்தில் அதிக கவனம் செலுத்தப்படும்.

சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம்

330.தமிழகத்தில் தற்போது அரசு உதவித்தொகை பெற்று வரும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் ஆதரவற்ற மகளிர், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், திருமணமாகாத 50 வயதிற்கும் மேற்பட்ட பெண்கள், அகதிகளாகத் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் உட்பட 32 லட்சம் பேருக்குத் தற்போது வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை 1000 ரூபாய் என்பது 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

500 இடங்களில் கலைஞர் உணவகம்

331. எந்த வித வருவாயும் இன்றி ஒருவேளை உணவுக்கும் வழியின்றித் தவிக்கும் ஏழை மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் உணவு வழங்கிட வேண்டும் என்ற நோக்கில் கலைஞர் உணவகம் திட்டம்அறிமுகப்படுத்தப்படும். முதல் கட்டமாக கலைஞர் உணவகம்"" தமிழகம் முழுவதும் 500 இடங்களில் அமைக்கப்படும்.

332.அ.தி.மு.க. அரசு அண்மையில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு அளித்துள்ளது. ஆனால், இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழு 10 சதவிகிதம் அளவுக்கு இடஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று பரிந்துரைத்தது. இதில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இந்த சலுகை மறுக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு

உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மீதமுள்ள 2.5 சதவிகிதத்தைத் தனி ஒதுக்கீடாக வழங்குவது அவசியம். கழக அரசு அமைந்தவுடன் இது செயல்படுத்தப்படும்.

333. இரவு நேரங்களில் சாலை ஓரங்களில் உறங்கும் மக்களுக்கு உதவிடும் வகையில் இரவு நேரக் காப்பிடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

334.தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் முன்பு மாணவர்களுக்குச் சாதிச் சான்றிதழ்கள் அவரவர் படிக்கும் பள்ளிக் கூடங்களிலேயே வழங்கப்பட்டன. தற்போது இந்தப் பணி நடைபெறவில்லை. பள்ளிக் கூடங்களிலேயே மாணவர்களுக்குச் சாதி மற்றும் வருமானச் சான்றிதழ் வழங்கும் முறை மீண்டும் செயல்படுத்தப்படும்.

335.சமூகத்தில் வலியோர்களால் எளியோருக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய கட்டப் பஞ்சாயத்து, கந்துவட்டி மற்றும் சாதிவெறிக் கொலைகள் போன்ற நிகழ்வுகளால் பொதுமக்கள் மிகவும் நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்த நிலையைப் போக்குவதற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் உள்துறைச் செயலாளர், சட்டத்துறைச் செயலாளர், மூத்த காவல்துறை பெண் அதிகாரி, மூத்த பத்திரிகை ஆசிரியர், அரசு சாரா அமைப்பினர் கொண்ட உயர்நிலைக்குழு அமைத்து உரிய ஆலோசனைகள் பெற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இடஒதுக்கீடு

336. தமிழகத்தில் உள்ள பல்வேறு சமுதாய மக்கள், சாதிப் பெயர் மாற்றம், உள் ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர்.

சமூக நீதிக்கான போர் முழக்கத்தோடு உருவான தி.மு.கழகம், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் வழிநின்று அனைவரின் நலனையும் பாதுகாக்கக் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

பத்திரிகையாளர்கள் நலன்

337.பத்திரிகையாளர் உள்ளிட்ட ஊடகத் துறையினருக்கான புதிய ஊதிய விகிதத்தை நிர்ணயம் செய்வதற்கென மும்பை உயர்நீதிமன்ற நீதியரசர் மஜிதியா அவர்கள் தலைமையில் 2011 ஆம் ஆண்டு ஒரு குழு அமைக்கப்பட்டு, அக்குழு தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது. பல மாநிலங்களிலும் மஜிதியா குழுவின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், தமிழகத்தில் மட்டும் இன்னும் புதிய ஊதிய விகிதம் வழங்கப்படவில்லை. இது குறித்த கேள்வி எழுந்தபோது, அன்றைய அ.தி.மு.க அரசின் தொழிலாளர் நலத்துறை புதிய ஊதியம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தவறான அறிக்கையை மஜிதியா குழுவினரிடம் அளித்துள்ளது. அ.தி.மு.கஅரசின் இந்தப் பத்திரிகையாளர் விரோதப் போக்கைக் கண்டிப்பதோடு பத்திரிகையாளர்களுக்கான ஊதிய நிர்ணயத்தைக் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மறு சீராய்வு செய்தல், பத்திரிகையாளர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், பத்திரிகையாளர்களுக்கும் நிறுவன உரிமையாளர்களுக்கும் இடையே ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல், பத்திரிகையாளர்களுக்கும், பொது மக்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே எழும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல், பத்திரிகையாளர்களுக்கான குழுக் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியம் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்துதல், பத்திரிகையாளர்களுக்கான குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருதல், பத்திரிகையாளர் குடும்பநல நிதியை உயர்த்தித் தருதல் போன்ற பல்வேறு பிரச்சினைகளை ஆராய்ந்து முடிவெடுக்க மூத்த பத்திரிகையாளர்கள், நிறுவன உரிமையாளர்கள், செய்தித்துறை - தொழிலாளர் நலத்துறை சார்ந்த அரசுப் பிரதிநிதிகள் மற்றும் காவல்துறைப் பிரதிநிதிகள் கொண்ட ஆணையம் அமைக்கப்பட்டு பத்திரிகையாளர் நலன் காக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

338.முந்தைய தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ள பத்திரிகையாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தில் குறைபாடுகள் சரிசெய்யப்பட்டு மீண்டும் சிறப்பானதாக மாற்றி அமைக்கப்பட்டு அவர்களுக்குத் தற்போது வழங்கப்படும் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும்.

339.பணியின் போது பாதிக்கப்படும் பத்திரிகையாளர்களுக்கும், சேதமுற்ற உபகரணங்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும்.

340. மறைவெய்திடும் பத்திரிகையாளர் குடும்ப நிவாரண நிதியாக 5 லட்சம் வழங்கப்படும்.

341.மதுரை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை போன்ற முக்கிய நகரங்களில் பத்திரிகையாளர்களுக்குக் குடியிருப்பு மனைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

342.கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் பத்திரிகையாளர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்தில் போடப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்.

மக்கள் நல்வாழ்வு

கொரோனாவால் உயிரிழந்தோருக்கு இழப்பீடு

343. கொரோனா நோய்த் தொற்று தீவிரமாக இருந்த நேரத்தில் பணியில் இருந்தபோது கொரோனா தொற்று தாக்கி உயிர் இழந்த மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், நகராட்சி மற்றும் அரசு அலுவலர்கள், காவலர்கள் போன்ற முன்களப் பணியாளர்களின் குடும்பத்தார்க்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.

344. மாவட்டத் தலைமை மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டு ஊகூ ஸ்கேன் வசதி உள்ளிட்ட நவீன பரிசோதனைக் கூடங்கள், புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு, குழந்தையின்மை சிகிச்சைக்கான தனிப்பிரிவு, உயிர் காக்கும் உயர் சிகிச்சைப் பிரிவு ஆகியவை தொடங்கப்படுவதுடன், சிறுநீரகப் பாதிப்பிற்குள்ளான நோயாளிகளுக்கு இரத்தம் சுத்திகரிக்கவும் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்குக் குறைந்த செலவில் இரத்தம் மாற்றும் சிகிச்சைஅளிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

345. தொழிலாளர்கள் மிக அதிக அளவில் வசிக்கும் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தொழிலாளர் வைப்பு நிதி மருத்துவமனைகள் இல்லை. எனவே, மத்திய அரசை வலியுறுத்தி ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் அமைக்க ஆவன செய்யப்படும்.

346.தமிழ்நாடு பிசியோதெரபி கவுன்சில் முழுமையாகச் செயல்பட நடவடிக்கை எடுப்பதுடன், அனைத்து வட்ட மருத்துவமனைகளிலும் இயன்முறை மருத்துவப் பிரிவு தொடங்கப்படும்.

347.ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்குப் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுப் பெரும் வரவேற்பைப் பெற்ற உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான "கலைஞர் காப்பீட்டுத் திட்டமும்", "வருமுன் காப்போம் திட்டமும்" அ.தி.மு.க ஆட்சியில் பயனாளிகளுக்கு உரிய வகையில் பயனளிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, இவ்விரண்டு திட்டங்களும் மீண்டும் முறைப்படுத்தப்பட்டு உயிர்க் கொல்லி நோய்களான மாரடைப்பு, புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு போன்ற நோய்களுக்கு இலவசச் சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சாலை விபத்துகளுக்கும் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் உடனடி மருத்துவ வசதி கிடைத்திட ஏற்பாடுகள் செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் மருத்துவ வசதி பெறுவோரின் நோய் மற்றும் மருத்துவ விவரங்கள் முறையாகப் பதிவுசெய்யப்பட்டு ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்கப்படும்.

புதிய உயர் சிறப்பு மருத்துவமனைகள்

348. கோவை, நெல்லை, திருச்சி மற்றும் கிருஷ்ணகிரியில் மாநில அரசின் நிதியிலிருந்து புதிய உயர் சிறப்பு மருத்துவமனைகள் கட்டப்பட்டு மூன்றாண்டுகளுக்குள் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.

349.கிராம மக்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க அதிக அளவில் நடமாடும் மருத்துவமனைகள் தொடங்கப்படும். மேலும், தற்போது செயல்பட்டு வரும் "108" ஆம்புலன்ஸ்திட்டத்தின் கீழ் இயங்கி வரும் ஆம்புலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கையை முதல் கட்டமாக 2000 அளவிற்கு அதிகப்படுத்தி, மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் ஓர் ஒன்றியத்திற்குக் குறைந்தது 6 என்ற எண்ணிக்கையில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

350.மாவட்ட நெடுஞ்சாலைகளில் 50 கி.மீ தொலைவிற்கு ஒன்று வீதம் அவசர சிகிச்சை மருத்துவமனை அமைக்கப்படும்.

351. நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி போன்ற மலைப்பகுதி வாழ் மக்கள் உயிர் காக்கும் உயர் சிகிச்சை பெற பலமணி நேரம் பயணம் செய்து சமவெளிப் பகுதிக்குச் செல்ல வேண்டியிருப்பதைக் கருத்தில் கொண்டு நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைநகரங்களில் பல்நோக்கு மருத்துவமனைகள் அமைக்கப்படும்.

352.சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்குச் சிகிச்சை அளிக்க அனைத்து அரசு மருத்துவனைகளிலும் தனிப்பிரிவு தொடங்கப்படும்.

353. பச்சிளம் குழந்தைகளைத் தாக்கும் கொடுமையான நோய்களான மூளைக் காய்ச்சல், வயிற்றுப் போக்கு, மஞ்சள் காமாலை மற்றும் கோவிட்-19 போன்றவற்றைத் தடுக்க தடுப்பூசிகள் மாநில அரசின் சார்பில் இலவசமாக வழங்கப்படும். இந்த வசதி நூறு சதவிகிதம் குழந்தைகளுக்குக் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

சென்னையில் மூன்று நவீன அரசு மருத்துவமனைகள்

354.விரிவுபடுத்தப்பட்ட சென்னைப் பெருநகரில் ஏழை மக்களின் உடல் நலத்தையும், அதிகரித்து வரும் மருத்துவத் தேவைகளையும் கருத்தில் கொண்டு தாம்பரம், சோழிங்கநல்லூர், மதுரவாயல் ஆகிய

மூன்று இடங்களில் நவீன வசதிளுடன் கூடிய புதிய அரசு மருத்துவமனைகள் கட்டப்படும்.

355.சென்னையிலும் மதுரையிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் இருதய அறுவை சிகிச்சை செய்ய வசதிகள் இருப்பதைப் போல மாவட்டங்களில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் அனைத்திலும் இருதய அறுவை சிகிச்சை வசதிகள் செய்து தரப்படும்.

356.அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படுவதோடு, ஒப்பந்த நியமன முறையில் தற்போது பணியாற்றும் மருத்துவர்களும், செவிலியர்களும் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள்.

357.மருத்துவம் சார்ந்த பணியாளர்களின் தேவை, வெளிநாடுகளிலும் நம் நாட்டிலும் அதிகரித்து வருவதால் இதற்குரிய மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பட்டயப் படிப்பிற்கான கல்வி மையங்கள் தொடங்கப்படும்.

358.தமிழகத்தில் தற்போது தடுப்பூசி / மருந்து வழங்கும் திட்டத்தின் கீழ் 56 சதவிகித குழந்தைகளே பயன்பெற்று வருகின்றனர். தி.மு.கழக ஆட்சி அமைந்தவுடன் 100 சதவிகிதம் குழந்தைகளுக்கும் தடுப்பூசி / மருந்து கிடைக்கத்தக்க வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

359. முறையான பட்டம் பெற்றுப் பணியாற்றி வரும் ஆயுர்வேதம், சித்தா, ஹோமியோ, அக்குபஞ்சர், யுனானி மருத்துவர்களுக்கு உரிய அரசு அங்கீகாரம் வழங்கப்படும்.

360.மதுவுக்கு அடிமையானவர்கள் மது பழக்கத்திலிருந்து விடுபடவும், படிப்படியாக மது விலக்கை மேற்கொள்ளவும், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும். மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் மாவட்டங்கள் தோறும் மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டு,மது பழக்கத்திற்கு ஆளானவர்களுக்கு உரிய மனநலப் சிகிச்சைகளும் பயிற்சியும் வழங்கப்படும்.

சுற்றுச்சூழல்

361.சென்னை மாநகரில் ஓடுகின்ற ஆறுகளான அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய், மாம்பலம் கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய், ஓட்டேரி நல்லா, விராங்கல் ஓடை ஆகிய ஆறுகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுத்து, சுத்திகரித்து, பின்னர் சுத்திகரிக்கப்பட்ட நீரை மேற்கண்ட ஆறுகளில்விடுவதன் மூலம், திடக்கழிவுகள் அகற்றப்பட்டு, நீரோட்டம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன் மூலம் கொசு உற்பத்தி, கெட்ட நாற்றம் முற்றிலும் ஒழியும். மத்திய அரசில் தி.மு.கழகத்தின் சார்பில் அமைச்சர்கள் பணியாற்றியபோது கடந்த 2001 ஆம் ஆண்டில் அரசின் தேசிய நதி நீர்த் தூய்மைத் திட்டத்தின் கீழ்த் தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளைத் தூய்மைப்படுத்த 1300 கோடி

ரூபாயும், இதில், சென்னைக்கு மட்டும் 490 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இந்தத் திட்டம் முழுமை பெறவில்லை. தற்போது தி.மு.கழக ஆட்சி அமைந்தவுடன், இத்திட்டத்தை விரைவுபடுத்தி நிறைவேற்றப்படும்.

362.தமிழகம் முழுவதிலும் ஓடும் காவிரி, வைகை, தாமிரபரணி, தென்பெண்ணை, பாலாறு, வெள்ளாறு, சிறுவாணி, அக்னியாறு, பாம்பாறு, குண்டாறு, கல்லாறு, நம்பியாறு, கோதையாறு, நொய்யல், கெடிலம், பவானி, மணிமுத்தாறு, அமராவதி உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் கலக்கும் தொழிற்சாலைக் கழிவு உள்ளிட்ட அனைத்துக் கழிவுகளையும் கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு ஆறுகள் பாதுகாப்புத் திட்டம் உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.

363.தமிழகத்தில் உள்ள பொதுக் கட்டடங்கள், சாலைகள், பாலங்கள், அரசு உடைமைகள், அரசு அலுவலகச் சுவர்கள் ஆகியவற்றின் தூய்மையையும், சுற்றுச் சூழலையும் பாதுகாக்கும் வகையில், அவற்றின் மீது சுவரொட்டிகள் ஒட்டுவது, சாயப் பூச்சுகளால் எழுதுவது, எளிதில் மக்கிப் போகாத பாலிதீன் துணிகளில் அச்சிடப்பட்ட சுவரொட்டிகள், பதாகைகள் அமைத்தல் ஆகியவற்றை முற்றிலும் தடை செய்வதற்கு, ஏற்கனவே தமிழகத்தில் நடைமுறையில் உள்ள பொது இடங்கள் சிதைவுபடுத்தும் சட்டத்தில் கடுமையான திருத்தங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்படும்.

364.தமிழகத்தில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் பழவேற்காடு, வேடந்தாங்கல், கரிக்கிளி, கரைவெட்டி, உதயமார்த்தாண்டபுரம், வடுவூர், சித்திரங்குடி, கூந்தங்குளம், வெள்ளோடு, மேல்செல்வனூர், வேட்டங்குடி ஆகிய இடங்களில் சுற்றுலா வசதிகள் மேம்படுத்தப்பட்டு நீர் நிலைகளில் தேவையான நீர் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன், முக்கிய பறவைகள் சரணாலயங்களில் பறவைகள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளக் கூடிய வகையில் பறவைகள் ஆய்வு மையங்கள் அமைக்கப்படும்.

365.மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்' என்ற வரிகள் நம் நினைவில் வாழும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அடிக்கடி நமக்கு நினைவூட்டும் பசுமை வரிகளாகும். மக்கள் வாழ்வில் மரம் வளர்ப்பு முக்கியமானதாகும். மனிதன் உயிர் வாழத் தேவையான பிராணவாயு மரங்களின் மூலமே கிடைக்கிறது. மேலும், காற்றில் கலக்கும் கரியமில வாயுவை உள்வாங்கிக் கொண்டு தனக்கு உணவாக மாற்றிக் கொள்வதோடு, காற்றையும் மரங்கள் தூய்மைப்படுத்துகின்றன.

தி.மு.கழக ஆட்சிக் காலங்களில் இலட்சக்கணக்கான மரங்கள் நடப்படுவது உறுதிசெய்யப்பட்டது. அதுபோல் மீண்டும், தமிழகத்தில் மிக அதிக எண்ணிக்கையில் மரங்களை வளர்ப்பதற்கு உரிய திட்டத்தை வகுத்துச் செயல்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

366. டெல்லியில் இயக்கப்படுவது போல எரிவாயுவில் இயங்கும் புகையில்லாப் பேருந்துகள் தமிழகத்திலுள்ள அனைத்து நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் படிப்படியாக இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

367. சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குக் காடுகள் வளர்ப்புத் திட்டத்தை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுப்பதோடு தமிழகத்தின் தனிச் சிறப்புமிக்க இயற்கை வளங்களையும், பறவைகளையும், வன உயிர்களையும் பாதுகாப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மொத்த நிலப்பகுதியில் குறைந்தபட்சம் 33% காடுகள் உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

வன ஆணையம்

368.தமிழகத்தில் உள்ள வன வளங்களைப் பாதுகாக்கவும், வன விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஏற்படும் மோதலைத் தவிர்த்து வனவாழ் உயிரினங்களைக் காப்பாற்றிடவும், வனத்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பணி அம்சங்களை ஆய்வு செய்து தேவையான ஊக்குவிப்புகளை வழங்கிப் பணிப் பாதுகாப்பை ஏற்படுத்திடவும், வன வளம் சார்ந்த மற்றும் வனப்பகுதி மக்களின் அன்றாட மற்றும் நெடுங்காலப் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வுகள் கண்டிடும் வகையிலும் வன ஆணையம் அமைக்கப்படும், அதன் பரிந்துரைகள் தாமதமின்றி நடைமுறைப் படுத்தப்படும். மேலும், வன வளங்கள் சார்ந்த கல்வியை மேம்படுத்தும் நோக்கில் புதிய வன இயல் கல்லூரிகள் தருமபுரி, தென்காசி, கோபிசெட்டிப்பாளையம் போன்ற இடங்களில் அமைக்கப்படும்.

விளையாட்டு

369.ஒலிம்பிக் விளையாட்டுகளுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் தமிழ்நாட்டை நான்குபகுதிகளாகப் பிரித்து ஒலிம்பிக் அகாடமிகள் திறக்கப்படும். எல்லா விளையாட்டிலும் சாதிக்கக் கூடிய விளையாட்டு வீரர்களுக்குச் சிறப்பு உயர்நிலைப் பயிற்சி, ஊக்கத்தொகை, போட்டிகளுக்குச் சென்று வர பயணச் செலவு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும்.

370.சென்னையில் பிரம்மாண்டமான விளையாட்டு நகரம் அமைத்து எல்லா வகைப் போட்டிகளுக்கும் உயர்தரப் பயிற்சிகள் அளிக்கப்படும்.

371. அரசு வேலைவாய்ப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு நிர்ணயம் செய்யப்படும் முழுமையாகச் செயல்படுத்தப்படுவதோடு, தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் சேர்த்துக் கொள்ளப்படும்.

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

சனி 13 மா 2021