மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 மா 2021

மீண்டும் சட்டமன்ற சட்ட மேலவை.... குடிசைகளே இல்லாத தமிழகம்!

மீண்டும்  சட்டமன்ற சட்ட மேலவை.... குடிசைகளே இல்லாத தமிழகம்!

இன்று (மார்ச் 13) திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தமிழகம் குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

373.தமிழர்களின் வீரம், பண்பாடு, கலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழும் ஜல்லிக்கட்டுக் காளைகளை வளர்ப்போருக்கு ஊக்கத்தொகையாக மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும்.

சட்டமன்றம் சட்ட மேலவை

374. அரசியல் அறிஞர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிலாளர்களின் பிரதிநிதிகள், சமூக சேவகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோரிடம் பெற்று, அரிய ஆலோசனைகளைக் கூறத் தக்க வகையில், தமிழ்நாட்டில் மீண்டும் சட்டமன்ற மேலவையை விரைவில் கொண்டுவர உரிய அரசியல் சட்டத்திருத்தம் செய்ய வலியுறுத்துவோம்.

நேரடி ஒளிபரப்பு

375.நாடாளுமன்றம் மற்றும் பல மாநில சட்டமன்றக் கூட்டங்களின் கூட்ட நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படுவது போல் தமிழக சட்டப் பேரவை நிகழ்ச்சிகளும் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

குறைந்தது 100 நாட்கள் சட்டப்பேரவை அமர்வு

376. தமிழ்நாடு சட்டப்பேரவை 2011-க்கு பிறகு அமைந்த அ.தி.மு.க ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டிலும் மிகவும் குறைந்த நாட்கள் அளவிலேயே செயல்பட்டுள்ளது. அதனால் பல மக்கள்பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு காணப்படவில்லை. எனவே, வரும் கழக ஆட்சியில் சட்டமன்றம் குறைந்தது 100 நாட்களுக்கு மேல் முறையாக நடக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நூறு நாட்களில் தீர்வு

377. "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற தலைப்பில் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மாவட்டந் தோறும் பொது மக்களின் அன்றாடப் பிரச்சனைகள் குறித்த மனுக்களைப் பெற்றுக் கழகம் ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுத் தீர்வு காணப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.

அந்த வாக்குறுதி அடிப்படையில் கழக அரசு அமைந்தவுடன் இதற்கென ஒரு தனித்துறை முதமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உருவாக்கப்படும். பெறப்பட்டுள்ள மனுக்களை ஆய்வு செய்ய, தொகுதி அளவில் - ஊராட்சி அளவில் முகாம்கள் அமைத்து இப்பிரச்சனைகள் குறித்து நேரடியாக விசாரணை நடத்தி நிறைவேற்றித் தரப்படும்.

சட்டமன்றத் தொகுதிகளில் மக்கள் குறைகேட்பு முகாம்கள்

378.அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் மக்கள் குறைகேட்கும் முகாம்கள் நடத்தப்பட்டு மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

379.தமிழகத்தில் ஆட்சி நிர்வாகம் சிறந்த முறையில் செயல்படும் வகையில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் மற்றும் இந்திய காவல்பணி அதிகாரிகள் மட்டத்தில் சீரமைப்பு மேற்கொள்ளப்படும்.

புதிய மாவட்டங்கள்

380.நிர்வாக வசதிகளை மேம்படுத்திட புதிய மாவட்டங்கள் அமைக்கப்பட உயர்மட்டக்குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பெரிய பேரூராட்சிகளைப் பிரிப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும்.

புதிய மாநகராட்சிகள்

381.சாலைகள், போக்குவரத்து, பொது சுகாதாரம், தூய்மைப் பணிகள், குடிநீர், பாதாள சாக்கடை போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவற்காக காஞ்சிபுரம், தாம்பரம், கடலூர், திருவண்ணாமலை, கும்பகோணம், தேனி - பெரியகுளம் - அல்லிநகரம், கரூர், நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படும்.

மழைக் காலங்களில் வெள்ள நீர் தேங்கிப் பல நாட்கள் வடியாமல் பொது மக்களுக்குப் பல வகையிலும் தொல்லைகள் ஏற்படுவதால், தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதி முழுவதும் மழை வெள்ள நீர் வடிகால் உடனடியாக அமைக்கப்படும்.

காவல்துறை

382. அனைத்துக் காவலர்களுக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும்.

383.சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பணியின்போது காவலர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்குவதுடன், இழப்பீட்டுத் தொகை உயர்த்தி வழங்கப்படும். உயிர் நீத்தவர்கள் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் ஆறுதல் தொகை வழங்கப்படும்.

போலீஸ் கமிஷன்

384. தமிழகத்தில் முதல் போலீஸ் கமிஷன் அமைத்து, பரிந்துரைகளைப் பெற்று, நடைமுறைப்படுத்திய பெருமை கலைஞர் தலைமையிலான தி.மு.கழக அரசையே சாரும். அதனை முன்னெடுத்துச் செல்லும் வகையில் மீண்டும் கழக அரசு அமைந்ததும், போலீஸ் கமிஷன் அமைக்கப்பட்டு ஒரு கால வரையறைக்குள் அதன் பரிந்துரைகள் பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

385.காவலர் குறைகளைக் கேட்டறிந்து, பரிசீலித்து அவற்றைச் சரி செய்வதற்காக மாநில மற்றும் மாவட்ட அளவில் குறை தீர்க்கும் அமைப்பு ஏற்படுத்தப்படும்.

386.காவலர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள துறை ரீதியான சிறு தண்டனைகள் அனைத்தும் ரத்து செய்யப்படு வதுடன் அவர்கள் உரிய காலத்தில் பதவி உயர்வுகள் பெறவும் வழி வகுக்கப்படும் .

387. காவலர் பணியிடங்கள் ஆண்டுதோறும் நிரப்பப்படும். கருணை அடிப்படையிலான பணியிடங்கள் கால தாமதமின்றி வழங்கப்படும்.

388. காவலர்களுக்கு வழங்கப்படும் மருத்துவப் படி, இடர்காலப் படி உள்ளிட்ட சலுகைகள் உயர்த்தி வழங்கப்படும்.

389.இரண்டாம் நிலைக் காவலர்களாகப் பணியில் சேருபவர்களும் ஏழு ஆண்டுகள் முதல்நிலைக்காவலராகப் பணிபுரிந்தவர்களும், பத்து ஆண்டுகளில் தலைமைக் காவலராகவும், இருபது ஆண்டுகளில் எஸ்.எஸ்.ஐ என பதவி உயர்வும் வழங்கப்படும்.

ஊர்க்காவல் படையினர் நலன்

390. காவல் துறையினருக்குப் பல வகையிலும் உறுதுணையாக நிற்கும் ஊர்க்காவல் படையினரின் நலன் காக்கும் நோக்கில் அவர்களின் பணி நாட்கள் உயர்த்தப்படும். ஊர்க்காவல் படையினரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கப்படும்.

நகர்ப்புற மேம்பாடு

391.சென்னை போன்ற பெருநகரங்களில் நவீன அடுக்குமாடி கார் நிறுத்தும் வசதிகள் செய்து தரப்படும்.

392. பெருந்துறை, சேலம், சங்ககிரி, திருச்சி, திருச்செங்கோடு போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஆட்டோ நகர்கள் அமைக்கப்படும்.

393. சென்னையிலும் மற்ற முக்கிய நகரங்களான மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகியவற்றிலும் நவீன வசதிகள் கொண்ட புதிய புறநகரங்களை உருவாக்கி அங்கே அனைத்துக் கட்டமைப்பு வசதிகளும் செய்து தரப்படும்.

குடிநீர் வசதி

394.சென்னை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் குடிநீர் லாரிகள் மூலமாகக் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்படுவதால் அதிக எண்ணிக்கையில் விபத்துகள் நடக்கின்றன. ஆகவே, இதனைத் தவிர்த்துப் புதிய குழாய்கள் அமைத்து அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

கிராமங்களில் புதிய குடிநீர் குழாய்கள் அமைக்க சிறப்புத் திட்டம்

395.அனைத்துக் கிராமங்களிலும் தூய்மையான குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்படும். தமிழகமெங்கும் கிராமங்களில் பல ஆண்டுகளுக்குமுன் கழக ஆட்சிக் காலத்தில் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டன. இந்தக் குழாய்கள் எல்லாம் காலாவதியாகி பல ஆண்டுகள் முடிந்த பிறகும் அகற்றப்பட்டு புதிய குழாய்கள் பதிக்கப்படாததால் இவற்றின் வழியே தரப்படும் குடிநீரின் தூய்மையை உறுதிப்படுத்த முடியாது. எனவே, இந்த அத்தியாவசியத் தேவையைக் கருத்தில் கொண்டு அனைத்துக்

கிராமங்களிலும் உள்ள பழுதடைந்த, காலாவதியான குடிநீர்க் குழாய்கள் அகற்றப்பட்டு புதிய குழாய்கள் அமைத்திட சிறப்புத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.

396.தி.மு.கழக ஆட்சிக் காலங்களில் மீஞ்சூர், நெம்மேலி, நரிப்பையூர் ஆகிய மூன்று இடங்களில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், நரிப்பையூரில் தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் அ.தி.மு.க ஆட்சியில் பராமரிப்பின்றிக்

கிடப்பில் போடப்பட்டுள்ளது. மீண்டும் தி.மு.கழக ஆட்சி அமைந்தவுடன், அப்பகுதி மக்களின் குடிநீர்த் தேவைக்குத் தட்டுப்பாடு எதுவும் ஏற்படாத வகையில் நரிப்பையூர் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படுவதோடு, அனைத்துக் கடலோர மாவட்டங்களிலும் பொருத்தமான இடங்களில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

397. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் குடிநீர்க் குழாய் இணைப்புக்கு விண்ணப்பம் கொடுத்த 15 நாட்களில் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வீட்டு வசதி

398. குடிசைகளே இல்லாத தமிழகம் உருவாக வேண்டும் என்ற நோக்கத்தோடு தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட திட்டம், "கலைஞர் வீடு வழங்கும் திட்டம்" 2010 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தைப் பெயர் மாற்றம் செய்ததோடு, மேலும் தொடராமல் அ.தி.மு.க அரசு முடக்கி விட்டது. இத்திட்டத்தைப் புதுப்பித்துக் கிராமப் புறங்களில் கான்கிரீட் வீடு கட்டுவதற்கான மானியத் தொகை ஒரு வீட்டிற்கு 4 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே தி.மு.கழக ஆட்சியில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்ட அத்தனை குடும்பங்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். கட்டட வேலை முடியாமல் பாதியில் நிற்கும் அனைத்து வீடுகளும் முழுமையாகக் கட்டித் தரப்படும். இந்த வீடுகளைப் பெற சிலருக்குத் தகுதியில்லை என்ற நிபந்தனையும் மறுபரிசீலனை செய்யப்படும்.

399.தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிசை மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றில் மாதத் தவணைமுறை திட்டத்தில் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு உண்டான விற்பனைத் தொகை முழுவதையும் செலுத்தி முடித்துப் பல ஆண்டுகளாகியும் வீடுகளின் விற்பனைக் கிரயப் பத்திரம் வழங்கப்படாதவர்களின் பிரச்சினை குறித்து, உரிய முறையில் பரிசீலனை செய்து அவர்களுக்கு விற்பனைக் கிரயப் பத்திரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சமத்துவபுரங்கள்

400. சாதி, மத பேதங்கள் அற்ற எடுத்துக்காட்டு கிராமங்களை அமைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட 240 தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் கழக ஆட்சி முடிந்த 2011-க்கு பிறகு கட்டுமானப் பணிகள் நிறைவேறிய சில சமத்துவபுரங்கள் இன்றைய ஆட்சியாளர்களால் முறையாக ஒதுக்கீடு செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டு அதன் விளைவாகச் சில சமத்துவபுரங்கள் சமூக விரோதிகளின் கூடாரமாகிவிட்டது. கழக ஆட்சி அமைந்தவுடன் அந்தக் குறிப்பிட்ட சமத்துவபுரங்கள் சீர் செய்யப்பட்டு, அவை உருவானதன் நோக்கம் நிறைவேறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் புதிய சமத்துவபுரங்கள் உருவாக்கப்படும்.

401.ஆதிதிராவிட மக்களுக்கான தொகுப்பு வீடுகள் திட்டம், வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள ஏழை எளிய மக்களுக்கான இந்திரா நினைவு வீட்டு வசதித் திட்டம் மற்றும் குடிசை மாற்றுவாரிய வீட்டு வசதித் திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் கட்டித்தரப்பட்டு, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழுதடைந்த வீடுகளைச் சீரமைத்தோ அல்லது புதியதாகவோஅமைத்துத் தரப்படும்.

வீட்டு மனைகளுக்குப் பட்டா

402.பல்லாண்டு காலமாகக் கிராம நத்தம் பகுதிகளில் வீடமைத்து வசித்து வரும் பலருக்கும் இதுவரை மனைப் பட்டா கிடைக்காத நிலை உள்ளது. இப்படிப் பட்டா இல்லாதவர்கள் நெடு நாட்களாகப் பட்டா வழங்கக்கோரி வேண்டுகோள் வைத்து வருகின்றனர். எனவே, இந்த அடிப்படைப் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில் கிராம நத்தத்தில் நீண்ட காலமாக உள்ள குடியிருப்பு வீடுகளுக்கு அடிமனைப் பட்டாக்கள் வழங்கப்படும்.

நகர்ப்புறங்களில் ஆட்சேபனை இல்லாத இடங்களில் குடியிருப்போருக்கு மனைப் பட்டா வழங்க ஆவன செய்யப்படும்.

403.பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை வேளையில் பால் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதால் பால் உற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பாலை முழுமையாக ஆவின் நிறுவனத்திடமே விற்பனை செய்யும் வாய்ப்பு உருவாக்கப்படும். மேலும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாலுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்வதற்கு ஆவின் நிறுவன அதிகாரிகள், அரசுச் செயலாளர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்படும்.

404.அதிக அளவில் பால் சார்ந்த பொருள்களை உற்பத்தி செய்யவும், பிற மாநிலங்களில் சந்தைப்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்பம் மிக்கதாக ஆவின் நிறுவனம் மாற்றப்படும். அதிக எண்ணிக்கையில் பால் கூட்டுறவு சங்கங்களும், பால் பொருள் உற்பத்தியைப் பெருக்கிடத் தொழிற்கூடங்களும் உருவாக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்து சமய அறநிலையத்துறை

முக்கிய மலைக்கோயில்களில் கேபிள் கார் வசதி

405. முக்கிய மலைக்கோயில்களான திருத்தணி, சோளிங்கர், திருநீர்மலை, திருச்சிமலைக்கோட்டை, திருச்செங்கோடு, போன்ற கோயில்களில் கேபிள்கார் வசதிகள் அமைக்கப்படும்.

கிராமக் கோயில் பூசாரிகளுக்கு நிதி உதவி

406.தி.மு.க. அரசு காலத்தில் உருவாக்கப்பட்ட பூசாரிகள் நல வாரியத்தில் இணைந்துள்ள கிராம கோயில் பூசாரிகளுக்கு தி.மு.க. அரசினால் மாதந்தோறும் ஊதியமாக 2000 ரூபாய் வழங்கப்படும். 60 வயதில் ஓய்வு பெற்ற பூசாரிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் 3 ஆயிரம் ரூபாய் என்பது 4 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

407.திருவண்ணாமலையில் கிரிவலப் பாதை கான்கிரீட் சாலையாகத் தரம் உயர்த்தப்படும். அத்துடன், அந்தச் சாலையின் இருமருங்கிலும் நிழல் தரும் அதிகமான மரங்களும் செடிகளும் வளர்க்கப்படும். கிரிவல மலைப் பகுதியில் மரக்கன்றுகள் நட்டுப் பசுமையான சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

408. திருவண்ணாமலை தேரோடும் வீதி முழுவதும் சிமெண்ட் கான்கிரீட் சாலையாக மாற்றப்படும்.

409.திருவண்ணாமலை தேரோட்டத்தின்போது மேலேயுள்ள மின் கம்பிகளால் ஏற்படும் இடர்ப்பாடுகளைக் களையும் வகையில் அக்கம்பிகள் தரைமட்டத்திற்கு கீழ் புதைக்கப்பட்டு புதைவட மின் பாதையாக மாற்றித் தரப்படும்.

410.திருவண்ணாமலை மலைப்பகுதி முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டுப் பசுமைக் காடுகள் வளர்த்திட ஆவன செய்யப்படும்.

411.தமிழகத்தின் அனைத்துக் கோயில்களிலும் உள்ள தெப்பக்குளங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தூர்வாரப்பட்டு நீர் நிரப்பப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

412.திராவிடர் கட்டடக்கலைச் சின்னங்களாக விளங்கும் தமிழகக் கோயில்களின் பழைமை மாறாமல் அவை புதுப்பிக்கப்படும்.

413. கோயில்களில் தமிழில் அர்ச்சனைகள் செய்யும் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

414. தி.மு.கழக அரசு 1989ல் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் அமைத்திருந்த இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின்படி கோயில்களின் நிர்வாகம் மேலும் சிறப்புடன் நடைபெறுவதற்குத் தகுந்த அதிகாரங்களுடன் கூடிய சட்டரீதியான உயர்நிலை ஆலோசனைக் குழு அமைத்துச் செயல்படுத்தப்படும்.

ஆலயங்கள் குடமுழுக்கு

415.தமிழகம் முழுவதும் உரிய காலம் கடந்தும் குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்படாத கிராமக் கோயில்கள் உள்ளிட்ட அனைத்துக் கோயில்களிலும் குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்படும். இதற்காகக் கழக அரசு 1000 கோடி ரூபாயினை ஒதுக்கீடு செய்யும்.

416.இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் பணியாற்றும் பகுதிநேர மற்றும் ஒப்பந்த முறை பணியாளர்கள் அனைவரின் பணிகளும் வரன்முறைப்படுத்தபட்டு முழு நேர அரசு ஊழியர்களாக ஆக்கப்பட்டு காலமுறை ஊதியம், இதர படிகள் மற்றும் ஓய்வூதியம் முதலியன வழங்கப்படும்.

14 ஆண்டுகளாக காத்திருக்கும் 205 பேருக்கு அர்ச்சகர் பணி நியமனம்

417.தமிழக அறநிலையத் துறையின் கீழ் உள்ள இந்து சமயத் திருக்கோயில்களில் தகுதி வாய்ந்த பயிற்சி பெற்ற அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என, கழக ஆட்சிக் காலத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 23.5.2006 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆணையை நடைமுறைப்படுத்திட நீதி அரசர் ஏ.கே. ராஜன் அவர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு; அக்குழு வழங்கிய பரிந்துரைகள் அடிப்படையில் இந்துக்களில் 18 முதல் 24 வயது வரை உள்ள தகுதி வாய்ந்தவர்களை அர்ச்சகர்களாகத் திருக்கோயில்களில் நியமனம் செய்வதற்காக, சைவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்கள் திருவண்ணாமலை, மதுரை, திருச்செந்தூர், பழனி ஆகிய இடங்களிலும்; வைணவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்கள் திருவல்லிக்கேணி, திருவரங்கம் ஆகிய இடங்களிலும் உரிய முறையில் 2007 முதல் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சி பெற்றவர்களில் ஆதிதிராவிடர்கள் 34 பேர், பிற்படுத்தப்பட்டோர் 76 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 55 பேர், இதர வகுப்பினர் 42 பேர் என மொத்தம் 207 பேர் ஆவர். இடையில் இத்திட்டத்தில் ஏற்பட்ட நீதிமன்ற வழக்குகளால் இவர்களை நியமனம் செய்வதில் இடர்ப்பாடுகள் ஏற்பட்டன. பின்னர், இவர்களில் 2018இல் ஒருவரும், 2020ல்

ஒருவரும் என இருவர் மட்டுமே இதுவரை நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 205 பேரும் அமைய இருக்கும் கழக அரசில் திருக்கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள். இவர்களது நியமனத்திற்குத் தேவையான வயது உச்சவரம்புச் சலுகை அளிக்கப்படும். இது போன்ற பயிற்சி அளிப்பதும் அப்பயிற்சியில் தேர்வு பெற்றவர்களைத் திருக்கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிப்பதும் கழக அரசு மூலம் தொடரும்.

ஆன்மிகச் சுற்றுலா நிதியுதவி

418. தமிழகத்தில் உள்ள இந்து சமய மக்களின் வழிபாட்டு உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவர்கள் இராமேஸ்வரம், காசி, கேதார்நாத், பத்ரிநாத், திருப்பதி, பூரி ஜகன்னாதர் ஆலயம் முதலிய திருக்கோயில்கள் ஏதேனும் ஒன்றுக்கு ஆன்மிகச் சுற்றுலா செல்வதற்கும்; இத்திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு ஒருமுறை பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் பயணத்திற்காக அதிகபட்சம் 25 ஆயிரம் ரூபாய் வரை ஒரு லட்சம் பேருக்கு நிதியுதவிகள் வழங்கப்படும். இந்தத் திட்டம் தமிழ்நாடு அரசு சுற்றுலா துறை மூலமாகச் செயல்படுத்தப்படும்.

வள்ளலார் சமரச சன்மார்க்க சங்கம்

419.சாதி, சமய நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் அருட்பிரகாச வள்ளலாரின் சமரச சுத்தசன்மார்க்கப் போதனைகளைப் போற்றும் வகையில் வடலூரில் ஒரு வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும்.

420.மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவைகளைச் சீரமைப்பதற்கும், புதுப்பிப்பதற்கும் ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

புனித நகரங்களில் சுற்றுலா வளர்ச்சி

421.புனித நகரங்களான பழனி, திருத்தணி, திருவண்ணாமலை, திருவரங்கம், திருச்செந்தூர், இராமேஸ்வரம், கன்னியாகுமரி, சிதம்பரம், நாகப்பட்டினம், குற்றாலம், நாகூர், வேளாங்கண்ணி மற்றும் வடலூர் ஆகியவற்றிற்குப் பக்தர்கள் சுற்றுலா செல்லும் வகையில் பேருந்து நிலையங்கள், தங்கும் இடங்கள் முதலியவை நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறைமுகம்

சென்னை துறைமுகம் - திருவொற்றியூர் கடல்வழி மேம்பாலம்

422.சென்னை துறைமுகத்திற்குச் செல்லும் அணுகுசாலைகள் மேம்படுத்தப்பட வேண்டியதைக் கருத்தில் கொண்டும், துறைமுகத்தை ஒட்டியுள்ள மாநகரப் பகுதிகளில் உள்ள சாலைகளில் தற்போது காணப்படும் கடும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டும், சென்னை துறைமுகத்திலிருந்து, மணலி சாலை - திருவொற்றியூர் சந்திப்பிற்கு, கடல் வழியாக மேம்பாலம் கட்டுவதற்கு மத்திய அரசை தி.மு.க. வலியுறுத்தும்.

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ...

4 நிமிட வாசிப்பு

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ஸ்டாலின்

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

3 நிமிட வாசிப்பு

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா? ...

3 நிமிட வாசிப்பு

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா?

சனி 13 மா 2021