மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 மா 2021

பேருந்து கட்டணம் சீரமைப்பு, புதிய ரயில் பாதை!

பேருந்து கட்டணம் சீரமைப்பு, புதிய ரயில் பாதை!

போக்குவரத்து மேம்பாடு குறித்து திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

423.அரசு மற்றும் தனியார் பயணிகள் போக்குவரத்துகளில் புவியிடங்காட்டி வசதி செய்யப்பட்டு சிறப்பு உதவிக்கான தொலைபேசி எண்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

கொடைக்கானல் பழனி மலைகள் இடையே கேபிள்கார் போக்குவரத்து

424.ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் பழனி மற்றும் கொடைக்கானல் இடையே உலகத் தரம் வாய்ந்த கேபிள்கார் வசதி அமைக்கப்படும்.

425.அனைத்து நகராட்சி, மாநகராட்சி பேருந்து நிலையங்களும் தரம் உயர்த்தப்பட்டு, அங்குப் பெண் பயணிகளுக்கு வசதியாகக் கழிப்பிடம், குளியல்அறை ஆடை மாற்றும் அறைகள் மற்றும் தாய் மார்கள் குழந்தைகளுக்குப் பாலுட்டும் அறைகள் தனியே அமைக்கப்படும்.

426. தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் சாதாரண பேருந்துகள் செல்ல இயலாத கிராமப் புறங்களிலிருந்து விவசாயிகள், தொழிலாளர்கள், பள்ளிக்கூட மாணவர்கள், ஆகியோர் பயணம் செய்வதற்கு வசதியாக மினி பஸ் உரிமம் வழங்கப்பட்டுப் பேருந்துகள் இயக்கப்பட்டுவந்தன. ஆனால், அ.தி.மு.க ஆட்சியில் இத்திட்டம் அவர்களுடைய கட்சியின் சின்னத்தை விளம்பரப்படுத்துவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. மீண்டும், தி.மு.கழக ஆட்சி அமைந்தவுடன் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப கிராம மக்கள் பெரிதும் பயன் அடையும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு நிறைவேற்றப்படும்.

427. அரசு போக்குவரத்துக் கழகங்கள் லாபத்தில் இயங்குவதற்காக தி.மு.க குழு 2018 இல் தமிழக அரசுக்கு அளித்த பரிந்துரைகள் செயல்படுத்தப்படும். மேலும், பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு பேருந்து பயணக் கட்டணங்கள் சீரமைக்கப்படும்.

428. அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பயணம் செய்வோர் விபத்தில் சிக்கும்போது உரிய இழப்பீடு பெறும் வகையில் காப்பீட்டுத் திட்டம் திருத்தப்பட்டுச் செயல்படுத்தப்படும்.

சாலைப் போக்குவரத்து

429. தி.மு.கழக ஆட்சிக் காலத்தின்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் நான்கு வழிச்சாலைத் திட்டம் விரைந்து நிறைவேற முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

430.தமிழகத்திலுள்ள முக்கிய இருவழிச் சாலைகள் நான்குவழிச் சாலைகளாகவும், நான்கு வழிச்சாலைகள் ஆறு வழிச் சாலைகளாகவும், போக்குவரத்துப் பயன்பாட்டிற்காகப் படிப்படியாக மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

431.போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் தமிழகத்தில் தேவைப்படும் நகரங்களில் புறவழிச்சாலைகள் அமைக்கப்படும்.

432.சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை போன்ற மாநகரங்களில் போக்குவரத்து நெருக்கடி பெரிதும் உருவாகியுள்ள பகுதிகளில் பறக்கும் சாலைத் திட்டம் செயல்படுத்தப்படும்.

433.தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ள சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்குக் கடற்கரைச் சாலை விரிவாக்கம், குமரி வரை முழுமையாக நிறைவேற்றப்பட முழு முயற்சி மேற்கொள்ளப்படும்.

434. மத்திய அமைச்சரவையில் தி.மு.கழகம் பங்கேற்றிருந்தபோது சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஆறு வழிப்பாதை அமைப்பதற்குக் கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டு ஆறு வழிச்சாலைக்கான மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, இனிமேலும் எந்தவிதத் தாமதமும் இன்றி ஆறு வழிப் பாதைத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறையைத் தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தும்.

435.தமிழகத்தில் வளர்ந்து வரும் பெருநகரங்களில் உருவாகியுள்ள போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த வசதிகள் கொண்ட புதிய பேருந்து நிலையங்களும் அவற்றை இணைத்திட புறவழிச்சாலைகளும் அமைக்கப்படும்.

சென்னையில் போக்குவரத்துத் துறை மேம்பாடு

436.தி.மு.க. அரசினால் சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகத் தொடங்கப்பட்ட மேம்பாலங்கள் பல இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை. இந்த மேம்பாலங்கள் எல்லாம் துரிதமான நடவடிக்கையின் மூலம் விரைவில் கட்டி முடிக்கப்படும்.

437.திருவான்மியூரிலிருந்து மாமல்லபுரம் வரை பறக்கும் இரயில் செல்வதற்கு புதிய பாதை அமைக்கப்படும்.

438. பயணிகள் போக்குவரத்திற்காக எண்ணூரிலிருந்து சென்னை சென்ட்ரல் வரையிலும்; தீவுத்திடலிலிருந்து மாமல்லபுரம் வரையிலும்; பக்கிங்காம் கால்வாய் சீரமைக்கப்படும்.

439. சிறுசேரி பகுதியில் வெளியூர் செல்லும் நவீன பேருந்து நிலையம் ஒன்று அமைக்கப்படும். ரயில் போக்குவரத்து

தமிழ்நாட்டில் சரக்குரயில் போக்குவரத்து நெடும்பாதை

440.விஜயவாடாவிலிருந்து சென்னை, எண்ணூர், தூத்துக்குடி துறைமுகங்களுக்குத் தனித்துவமான சரக்கு இரயில் போக்குவரத்து நெடும்பாதை விரைவில் அமைத்திட மைய அரசினை வலியுறுத்துவோம்.

திண்டுக்கல் - கம்பம் - கூடலூர் புதிய ரயில் பாதை

441. திண்டுக்கல் - கம்பம் - கூடலூர் வழித்தடத்தில் ஒரு புதிய அகல ரயில் பாதை அமைப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்துவோம். மத்திய அரசு அதற்குத் தயாராக இல்லையெனில் ரயில்வே துறையிடம் இருந்து தடை இல்லாச் சான்று பெற்று மாநில அரசு இந்த முக்கியமான ரயில் பாதைத் திட்டத்தை நிறைவேற்றும்.

442. புதிய இரயில் பாதைத் திட்டங்கள்

* திருக்குவளை- நாகப்பட்டினம்,

* திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - காரைக்குடி

* தஞ்சாவூர் -ஒரத்தநாடு- பட்டுக்கோட்டை,

* மன்னார்குடி - மதுக்கூர் - பட்டுக்கோட்டை,

* காரைக்குடி - இராமநாதபுரம் - தூத்துக்குடி,

* மதுரை - தேனி-போடி,

* அரியலூர் - தஞ்சாவூர்

* கும்பகோணம் - அரியலூர் / ஜெயங்கொண்டம் - விருத்தாசலம்

* மதுரை-மேலூர்-காரைக்குடி,

* மதுரை-அருப்புக்கோட்டை-தூத்துக்குடி,

* ஆவடி-திருப்பெரும்புதூர் - கூடவாஞ்சேரி,

* பேரளம் - காரைக்கால்,

* ஈரோடு-பழனி

* மேட்டுப்பாளையம்-சத்தியமங்கலம்-கோபிசெட்டிபாளையம்

* வண்டலூர் - வாலாஜாபாத்

ஆகிய ஊர்களுக்கிடையே புதிய அகல ரயில்பாதைத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற மத்திய அரசைத் தி.மு.கழகம் வலியுறுத்தும்.

443. சென்னை ஐ.சி.எப் ரயில்பெட்டி தொழிற்சாலையின் இரண்டாவது அலகு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆகவே, இந்தத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த மத்திய அரசைத் தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தும்.

444.ரயில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சேவையை மேம்படுத்திடும் வகையில் ஆள் இல்லாத லெவல் கிராசிங்கில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க, ஆங்காங்கே பாலங்கள் கட்டப்படவும் தானாகவே இயங்கும் அறிவிப்பு ஒலி இயந்திரம் நிறுவப்படவும் வேண்டுமென்று மத்திய அரசைத் தி.மு.கழகம் வலியுறுத்தும்.

மெட்ரோ ரயில்

445. திரிசூலம் முதல் வண்டலூர் வரையிலும், திருமங்கலம் - முகப்பேர் - அம்பத்தூர் வரையிலும், கத்திப்பாரா முதல் பூந்தமல்லி வரையிலும், மெட்ரோ ரயில் திட்டம் விரிவுபடுத்தப்படும். மேலும் கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்களிலும் மெட்ரோ இரயில் திட்டம் நிறைவேற்றப்படும்.

446. சென்னை மெட்ரோ ரயிலில் கல்லூரி மாணவர்களுக்கு கட்டணச் சலுகை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.

விமானப் போக்குவரத்து

447. மதுரை விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக முறைப்படி அறிவிக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதோடு, சேலம் மற்றும் தூத்துக்குடி ஆகிய விமான நிலையங்கள் நவீன முறையில் விரிவாக்கம் செய்யப்பட மத்திய அரசைத் தி.மு.கழகம் வலியுறுத்தும்.

புதிய விமான நிலையங்கள்

448.வேலூர், கரூர், ஓசூர், இராமநாதபுரம் ஆகிய நகர்களை மையமாகக் கொண்டு பெருகி வரும் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு இங்கெல்லாம் புதிய விமான நிலையங்கள் அமைப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்துவோம்.

கலை மற்றும் பண்பாடு

449. தொன்மையான தமிழர் வாழ்வியலை காட்சிப்படுத்தும் வகையிலான அருங்காட்சியகம் ஒன்றை உலகளாவிய ஆய்வாளர்களையும் பார்வையாளர்களையும் ஈர்க்கும் தரத்தில் சிவகங்கையில் உருவாக் கப்படும் .

450.கல்விக் கூடங்களில் நாட்டுப்புறக் கலைகளை பயிற்றுவிப்பது, நாட்டுப்புறக் கலைகளை அரசு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக்குவது, ஆண்டுக்கொரு முறை அரசின் சார்பில் நாட்டுப்புறக் கலை விழாக்களை நடத்துவது ஆகியவற்றின் மூலம் இக்கலைகளையும், கலைஞர்களையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.

451.மக்கள் தொகையில் அறுபது சதவிகித மக்களின் நலனுக்காக கழக ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம் உள்ளிட்ட பல்வேறு நலவாரியங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் சரிவரச் செயல்படவில்லை. நாட்டுப்புறக் கலையை நலிவிலிருந்து மீட்டு மேம்படுத்தி, நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதோடு, அவர்களுக்கான ஓய்வூதியத்தையும் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

452. ஆண்டுதோறும் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் ஒன்றிய அளவிலும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் அனைத்து வகை விளையாட்டுப் போட்டிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்குவதோடு நாட்டுப்புறக் கலைஞர்களின் கலாச்சாரக் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

நினைவுச் சின்னங்கள்

திராவிட இயக்கத் தீரர்கள் கோட்டம்

453.தமிழகம் சாதி, மத பேதங்கள் அற்ற பிறப்பால் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமத்துவமும், சமதர்மமும் மலர்ந்து மணம் வீசிடும் எழுச்சி பெற்ற மாநிலமாக திகழ்வதற்கும் இந்திய துணைக் கண்டத்தில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கக் கூடிய அளவிற்கு இன்று நிமிர்ந்து நிற்பதற்கும், அடித்தளமான திராவிடப் பேரியக்கத்திற்கு வேரூன்றி அதற்கு அரும்பெரும் உழைப்பெனும் நீரூற்றி ஆலமரமாய் இன்று வளர்ந்து நிற்பதற்குக் காரணமான டாக்டர் சி. நடேசனார், சர். பிட்டி தியாகராயர், டாக்டர் கூ ஆ நாயர், ஆகியோரின் சிறப்புகள், பெருமைகளை எதிர்காலத் தலைமுறையினர் அறிந்து பெருமிதமும், இன உணர்வும் பெறுகின்ற வகையிலும் இம்மூன்று தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, இவர்கள் காலத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள், திராவிட இயக்க சரித்திர நிகழ்வுகள் ஆகியவற்றைத் தாங்கி ஒரு வரலாற்றுச் சின்னமாய் அமைகின்ற அளவிற்கு, திராவிட இயக்கத் தீரர்கள் கோட்டம் தலைநகர் சென்னையில் அமைக்கப்படும்.

454.ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் தளகர்த்தர் பொல்லானுக்கு ஈரோட்டிலும், வீரமங்கை வேலுநாச்சியாருக்குப் பெருந்துணையாக நின்று தன் உடலில் வெடிகுண்டுகளைக் கட்டிக் கொண்டு வெள்ளையர்களின் ஆயுதக் கிடங்கில் குதித்து அதைத் தகர்த்துத் தன்னுயிரைத் தியாகம் செய்த வீராங்கனை குயிலிக்கு சிவகங்கையிலும் சிலைகள் நிறுவப்படும்.

455.வெள்ளையர்களை எதிர்த்து முதன்முதலில் தீரமாய்ப் போரிட்ட மாவீரர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் ஆகியோருக்குச் சென்னையில் சிலைகள் நிறுவப்படும்.

456.சென்னை மாகாணத்தில் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற முதல் தமிழர் திரு. பி.சுப்பராயன். இவர் முதலமைச்சராக இருந்த காலத்தில்தான் இட ஒதுக்கீட்டு முறையே சென்னை மாகாணத்தில்நடைமுறைக்கு வந்தது. மிகப் பெரிய செல்வந்தரான இவர் தனது சொத்துகளில் பெரும் பகுதியை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கியவர். நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் மாநில ஆளுநராகவும் பணியாற்றி உள்ள இவரது பணிகளை நினைவுகூரும் வகையில் திரு. பி. சுப்பராயன் அவர்களுக்கு நாமக்கல் நகரில் மணி மண்டபம் அமைக்கப்படும்.

457.தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை அவர்களுக்கு மயிலாடுதுறையில் சிலை நிறுவப்படும்.

தொல்பொருள் ஆய்வு

458. உலகிலேயே தொன்மையான இனமாகிய தமிழ் மக்களின் நீண்ட நெடிய வரலாற்றில், இன்றைய வளர்ச்சியடைந்த சமுதாயம் பயன்படுத்துகின்ற அனைத்தையும் 2500 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்து, பயன்படுத்தி, நாகரிகத்தின் தொட்டிலாக விளங்கிய இம்மண்ணின் கடந்த காலப்

பெருமைகளைப் பறைசாற்றும் பல பொருட்கள் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினரால் கீழடி, ஆதிச்சநல்லூர், கொற்கை போன்ற பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன; இத்தகைய பழம்பெரும் பாரம்பரியத்தின் அடையாளமாகத் திகழும் அரிய பொருட்களைப் பாதுகாத்திட அந்தந்தப் பகுதியில் அருங்காட்சியங்கள் அமைக்கப்படும்.

459.கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின்அலுவலகத்தில் உள்ள கல்வெட்டுகள், தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட நடவடிக்கைமேற்கொள்வதுடன், அவற்றை உரிய வகையில் பதிப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய கல்வெட்டுகள் நல்ல முறையில் பாதுகாக்கப்பட உரிய வசதிகள் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

சனி 13 மா 2021