மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 மா 2021

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டை விசாரிக்க உயர்நிலைக் குழு!

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டை விசாரிக்க  உயர்நிலைக் குழு!

டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்து விசாரிக்க குழு, வழக்கறிஞர்கள் சேமநல நிதி உயர்வு உள்ளிட்ட அம்சங்களும் திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

அவை,

பேரிடர் மேலாண்மை

460.குறுஞ் செய்திகள் மூலமாகவும், தொலைக்காட்சி மூலமாகவும் ஒரே சமயத்தில் அனைத்துமக்களுக்கும் புயல், வெள்ளம் உள்ளிட்டபேரிடர் குறித்த முன்னெச்சரிக்கைச் செய்திகள் கிடைக்கும் வகையில் தக்க தொழில்நுட்ப வசதிகள் உருவாக்கப்படும்.

461.கனமழை மற்றும் வெள்ளப் பேரிடர் காலங்களில் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுகின்றகாவல் நிலையங்கள், வருவாய் அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் தடையற்ற மின்சாரத் தேவைக்கு ஜெனரேட்டர் வசதி செய்து தரப்படும்.

462.சென்னையில் 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தால்பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் கடும் பாதிப்புக்கு ஆளாயின. அ.தி.மு.க அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியது. இந்நிலையில், வெள்ளப் பாதிப்பினால் அவதியுற்றபொதுமக்களைக் காப்பாற்ற பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், ஆயிரக்கணக்கானஇளைஞர்களும் உடனடியாக முன் வந்து பொதுமக்களைக் காப்பாற்றியதோடு, அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, உடனடி மருத்துவ சிகிச்சை கிடைக்கவும் உதவினர். பேரிடர்நேரத்தில் சென்னை மக்களின் மனிதாபிமான நடவடிக்கைகள், உலக மக்கள் பலராலும் வியந்து போற்றப்பட்டன. மீட்புப் பணியில் ஈடுபட்ட பல தனிநபர்களும், தொண்டு நிறுவனங்களும் பேரிடர் மீட்புப் பணிகளில் முழுப் பயிற்சி பெற்றவர்களாக இல்லாவிட்டாலும், தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பொதுமக்களைக் காப்பாற்றிய அவர்களது செயல் பாராட்டுக்குரியதாகும். எனவே, பேரிடர் மீட்புப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள முன்வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும்தனிமனிதருக்கு அரசுத் துறைகளின் மூலம் உரியபயிற்சி அளித்து, அவர்களுடைய தொண்டு மனப்பான்மைக்கு உதவி ஊக்கமளித்திட தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் சிறப்பான திட்டம் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

கிராமப்புற வளர்ச்சி

463.தமிழகக் கிராமப்புறங்களில் கழிப்பிட வசதிகள் உருவாக்கப்படாத காரணத்தால், வெட்டவெளியைக் கழிப்பிடமாகப் பயன்படுத்தும் பழக்கத்துக்கு மக்கள் ஆளாகி உள்ளனர். இதனால், பொதுச் சுகாதாரத்துக்கு ஊறு ஏற்படும் வாய்ப்பு உள்ளதைக் கருத்தில் கொண்டு, தமிழகத்திலுள்ளஅனைத்து வீடுகளிலும் கழிப்பறை வசதி செய்துதர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், குடிசைவீடுகள் நிறைந்த பகுதிகளில் பொதுக் கழிப்பிடங்களை அமைத்து அவற்றின் தொடர்பராமரிப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். மொத்தத்தில் முழுமையான சுகாதார மயமான மாநிலமாகத் தமிழகம் விளங்க தி.மு.கழகம் முழு முயற்சிகள் மேற்கொள்ளும்.

464.தமிழ்நாடு கிராமப்புற மேம்பாட்டு நிதியம் உருவாக்கப்பட்டு கிராமப்புற மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் தரப்படும்.

465.கிராமப்புறங்களில் சுய வேலைவாய்ப்புகளை உருவாக்க இளைஞர்களுக்கு எலக்டிரிசியன், பிளம்பர் போன்ற தொழில் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படுவதோடு, கால்நடைகளைப் பாதிக்கும் கோமாரி

போன்ற நோய்கள் குறித்துக் கிராமமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அந்தந்தத் துறை சார்ந்த நிபுணர்களை அழைத்துப் பயிற்சிகளும் அளிக்கப்படும்.

466.தமிழ்நாட்டில் உள்ள குக்கிராமங்கள், மலையடிவாரக் கிராமங்கள் மற்றும் மலைமேல் உள்ளகிராம மக்களுக்குச் சாலை, மின்சார வசதி, வீட்டு வசதி, மருத்துவ வசதி, போக்குவரத்து வசதி, குடிநீர், கல்வி போன்ற வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும்.

சுய வேலைவாய்ப்புக் குழுக்கள்

467. அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், நமக்கு நாமே திட்டம் ஆகியவற்றுக்குப் புத்துயிர் ஊட்டப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு இல்லாத பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரிகள் கொண்ட சுய வேலைவாய்ப்புக் குழுக்களை அமைத்து, அந்தக் குழுக்களின் மூலம்கிராமங்களுக்கான அடிப்படைக் கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

கட்டடத் தொழில்

468.முக்கியமான கட்டுமானப் பொருள்களான சிமெண்ட், கம்பி, செங்கல், மணல், மரம் போன்ற பொருள்களை அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலில் கொண்டு வந்து பொதுமக்களுக்கு நியாயமான விலையில் கிடைக்க தி.மு.கழக அரசு ஆவனசெய்யும்.

469.நிலங்களுக்கும், வீட்டு மனைகளுக்கும் பத்திரப் பதிவுத் துறை நிர்ணயம் செய்யும் வழிகாட்டி மதிப்பீட்டை அ.தி.மு.க அரசு பன்மடங்கு உயர்த்தியுள்ள காரணத்தால் வீடு கட்டும் தொழிலில் ஈடுபடுவோரும் பெருமளவில் பாதிப்புக்கு ஆளாகியிருப்பதோடு, ஏற்கனவே வீடு கட்டும் தொழிலில் செலவிடப்பட்ட முதலீடுகளும் முடங்கிப் போய் பணப் புழக்கம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுபோல, கட்டுமானப் பொருள்களான இரும்பு, மரம், மின் இணைப்புப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தின் விற்பனையும் முடங்கிப்போய் அதன் விளைவாக வணிகர்களும் பாதிப்புக்குஆளாகியுள்ளனர். இந்த நிலையைப் போக்க வழிகாட்டு மதிப்பீட்டை நியாயமாக நிர்ணயிப்பதற்கு இத்துறைகள் சார்ந்த அமைப்புகளின் பிரதிநிதிகள், பயனாளிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய ஆய்வுக் குழு நியமிக்கப்பட்டு, அக்குழுவினரிடம் அறிக்கை பெற்றுக் கட்டுமானத் தொழிலில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தீர்க்கப்படும்.

470.குடியிருப்புகள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிகக் கட்டடங்கள், ஆகியவை கட்டப்படுவதற்கான அனுமதிக்கு விண்ணப்பித்த 60 நாட்களுக்குள் ஒற்றைச் சாளரமுறையில் அனுமதி வழங்கப்படும். அடுக்கு மாடி கட்டடங்களில் சூரிய மின்சாரம், மழைநீர் அறுவடை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்குச் சாய்வு தளமேடை அமைப்பது கட்டாயமாக்கப்படும். கட்டட அனுமதிக்கான கட்டணம் சீரமைக்கப்படும்.இரத்த சொந்தங்களுக்குள் சொத்துகளை மாற்றும்போது குறைந்த கட்டணத்தில் பதிவு செய்ய ஆவன செய்யப்படும்.

471.மருத்துவர்களுக்கும் வழக்குரைஞர்களுக்கும் உள்ளது போல் கட்டுமானத் தொழிலை முறைப்படுத்துவதற்காகக் கட்டுமானப் பொறியாளர்களுக்கும் தனியாக ஓர் அமைப்பு உருவாக்க வல்லுநர் குழு அமைத்து ஆராயப்படும்.

472.சொந்த இடத்தில் வீடு, அலுவலகம், தொழிற்சாலைகள் ஆகியவற்றிற்குக் கட்டடங்கள் கட்டுவதற்குத் திட்ட ஒப்புதல் பெறும் முறைகள் எளிதாக்கப்படும்.

நீதித்துறை

473. வழக்கறிஞர்கள் சேமநல நிதி 7 லட்ச ரூபாய் என்பது 10 லட்சம் ரூபாயாக உயர்த்தித் தரப்படும்.

474.மாவட்ட நீதிமன்றங்கள் வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கு அலுவலக அறைகள் கட்டித்தரப்படும்.

475. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரித்து நீதி வழங்கிட தனி நீதிமன்றங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்தப்பட்டு வழக்குகள் விரைவாக விசாரிக்கப்பட்டு நீதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

476. பாலியல் கொடுமைகளால் பாதிக்கப்பட்டோர் குறித்த விபரங்கள் முழுமையான ரகசியத்துடன் பாதுகாக்கப்படும். பெறப்படும் புகார்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளத் தனிப்பிரிவுகள் அமைக்கப்படும்.

முன்னாள் ராணுவத்தினர்

477.முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் நல்வாழ்விற்காகக் குழு ஒன்றுஅமைத்து ஆய்வு செய்து அவர்களின் நியாயமான கோரிக்கைளுக்கு ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் தீர்வு காணப்படும். ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கு உரிய வேலைவாய்ப்புகளில் தகுந்த முன்னுரிமை அளிக்கப்படும்.

கால்நடை வளம்

478.தமிழகத்தில் தேவையான மையங்களில் ஆம்புலன்ஸ் வசதிகளுடன் கூடிய கால்நடை மருத்துவமனைகள் அமைத்துத் தரப்படும்.

479.ஒவ்வொரு ஒன்றியத்திலும் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த ஆவன செய்யப்படும்.

480. சாலைகளில் வேகமாகச் செல்லும் வாகனங்களால் அடிபட்டு உயிர் இழக்கும் கால்நடைகளுக்கு அரசு சார்பில் உரிய இழப்பீடு வழங்கப்படும்.

481. தமிழகத்துக்குப் பெருமை சேர்த்து வரும் காங்கேயம் காளைகள், இராஜபாளையம் சிப்பிப் பாறை, கோம்பை வகை நாய்கள் போன்ற தமிழகத்திற்கே உரித்தான அரிய வகை விலங்கு இனங்களைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

482.பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் செல்லப் பிராணிகளான நாய்கள், பூனைகள்ஆகியவற்றிற்கும் ஆடு, மாடுகள் உள்ளிட்ட விலங்குகளுக்கும் மருத்துவச் சோதனைஅட்டைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பொது

483.பொதுமக்கள் புழக்கம் அதிகமாக உள்ள அனைத்து இடங்களிலும், குறிப்பாக அரசு, தனியார் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் பேருந்து நிலையங்கள், காவல்நிலையங்கள், அறநிலையத்துறை ஆலயங்கள் ஆகிய இடங்களில் கண்காணிப்புக் காமிராக்கள் பொருத்தப்பட்டுக் கண்காணிப்பதற்கு உரிய சட்டம் நிறைவேற்றப்படும்.

பொய் வழக்குகள் ரத்து

484.அ.தி.மு.க ஆட்சியில், நியாயமான கோரிக்கைகளை முன்னிறுத்தி ஜனநாயக வழியில்ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீதான பொய் வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வு ஆணையத்தில் -

தேர்வு முறைகேடுகள்

485.அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அரசுப் பணியாளர்களைத் தேர்வு செய்யும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வு ஆணையத்தில் முறைகேடுகளும் ஊழல்களும் மலிந்து அதன் மாண்பு சீர்கெட்டுப் போனது. அதன் விளைவாக ஆணையம் நடத்தும் தேர்வுகள் அனைத்திலும் தகுதி உள்ளவர்களும்நேர்மையான முறையில் தேர்வு பெற முடியாத சூழல் உருவானது. இது குறித்து விசாரிக்க ஓர் உயர்நிலைக் குழு அமைத்து உரிய நடவடிக்கைகள் எடுத்துக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.

486.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வெளிப்படையான நேர்மையான தேர்வு முறை நடந்திட அனைத்து நடவடிக்கைகளும் உறுதியாக மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

சனி 13 மா 2021