எடப்பாடி திமுக வேட்பாளர் சம்பத்குமார்: முதல்வரின் ரியாக்‌ஷன்!

politics

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து அவரது எடப்பாடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக யார் நிறுத்தப்படப் போகிறார்கள் என்பதை அறிய திமுகவினர் மட்டுமல்ல முதல்வருமே ஆவலாகக் காத்திருந்தார். அந்த வகையில் ஸ்டாலினால் சம்பத்குமார் என்ற 37வயது இளைஞர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்துக் களமிறக்கப்பட்டிருக்கிறார். மார்ச் 12 வேட்பாளர் பட்டியலில் சம்பத்குமார் ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

எடப்பாடி தொகுதியில் இருந்து 23 பேர் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுகொடுத்திருந்தார்கள்.

முதல்வரை எதிர்த்து முன்னாள் அமைச்சரும் மாவட்டப் பொறுப்பாளருமான செல்வகணபதி நிறுத்தப்படலாம் என்று முன்பு தகவல் நிலவிய நிலையில், திமுக தொடர்ந்த சுடுகாட்டு ஊழல் வழக்கில் தண்டனை பெற்று அது தொடர்பான சட்ட சிக்கல் இருப்பதால் செல்வகணபதி வேண்டாம் என்று முடிவெடுத்தனர். பின் செல்வகணபதியின் குடும்பத்தில் சிலரை நிறுத்த பரிசீலனை நடந்தது. ஆனால் எடப்பாடி தொகுதியிலும் திமுக குடும்ப அரசியல் செய்கிறது என்ற பிரச்சாரத்தை முதல்வரே மேற்கொள்வார் என்பதால் அந்தத் திட்டமும் கைவிடப்பட்டது.

வளர் அண்ட்கோ சுப்பிரமணியன் இப்பகுதியைச் சேர்ந்த மிகப்பெரிய கான்ட்ராக்டர். அவர் 2016 தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்துப் போட்டியிட சீட் கேட்டார். இந்த முறையும் விருப்ப மனு கொடுத்தார். நேர்காணலுக்கு சென்று வந்தார். அவர் இப்போது அரசின் பல ஒப்பந்தங்களை எடுத்துச் செய்து வருகிறார். இந்த வகையில் அவரை எடப்பாடிக்கு எதிராக நிறுத்தலாமா என்று தலைமை யோசனை செய்ததாகவும், அவரே சீட் வேண்டாம் என்று சொல்லிவிட்டார் என்றும் இருவேறு தகவல்கள் எடப்பாடிக்குள் உலவுகின்றன.

தவிர, கொங்கணாபுரம் முன்னாள் சேர்மன் பரமசிவன் எடப்பாடி முழுதும் மக்களால் அறியப்பட்டவர். அவரும் சீட் கேட்டார். ஆனால் கொடுக்கவில்லை. கடந்த மார்ச் 9 ஆம் தேதி எடப்பாடியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. ஐ.கணேசன், அவரது மகன் ஐ.ஜி.நாகராஜன் ஆகியோர் திமுகவில் சேர்ந்தனர். இவர் ஏற்கனவே பாமகவில் இருந்து அதிமுகவுக்கு சென்றவர். ஆரம்பகாலத்தில் எடப்பாடி பழனிசாமியோடு கடுமையாக மோதியவர். அதனால் எடப்பாடி அமைச்சரானதில் இருந்தே அவர் ஓரங்கட்டப்பட்டுவிட்டார். கடைசி நேரத்தில் இவர் பெயரும் எடப்பாடிக்கு எதிரான வேட்பாளர் வரிசையில் இருந்தது.

இந்த நிலையில்தான், கொங்கணாபுரம் ஒன்றிய மாணவரணியில் இருந்து பின் சேலம் மேற்கு மாவட்ட துணைச் செயலாளராக இருக்கும் 37 வயதேயான வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த சம்பத்குமாருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து நிற்க வாய்ப்பு கொடுத்துள்ளது திமுக தலைமை.

கொங்கணாபுரம் ஒன்றியத்தில் எட்டிக்கோட்டை மேடு, வெள்ளாளபுரம் பஞ்சாயத்து வரை எடப்பாடி தொகுதிக்குள் வருகின்றன. அதற்கு மேல் சங்ககிரி தொகுதிக்குப் போய்விட்டன. கொங்கணாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த சம்பத் குமார் அந்த ஒன்றியத்தில் கட்சியினரிடம் அறிமுகமானவர். மீதியிருக்கும் எடப்பாடி ஒன்றியம், நங்கவள்ளி ஒன்றியம், பூலாம்பட்டி பேரூராட்சி, ஜகண்டாபுரம் பேரூராட்சி, எடப்பாடி நகராட்சி பகுதிகளில் அவ்வளவாக அறிமுகம் பெற்றவர் இல்லை என்று திமுகவினரே கூறுகிறார்கள். தற்போதைய மாவட்டப் பொறுப்பாளர் செல்வகணபதிக்கு நிழலைப் போன்றவர். 37 வயதான சம்பத்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

சம்பத்குமாரின் பிரச்சார உத்தி என்ன என்று விசாரித்தோம்.

“எடப்பாடி தொகுதியில் கடந்த ஜனவரி 18 ஆம் தேதி கிராம சபை கூட்டத்துக்கு வந்த திமுக தலைவர் ஸ்டாலின், மேடையில் ஒரு மேஜையை போட்டு காகிதங்களை அடுக்கி வைத்திருந்தார்.அப்போது பேசிய ஸ்டாலின், ’எடப்பாடி பழனிசாமி உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார். லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப் போவதாக அவர் கூறினார். ஆனால் இந்த எடப்பாடி தொகுதியில் யாருக்காவது இந்த அ.தி.மு.க. ஆட்சியில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா?

இதோ இந்த மேஜையில் அடுக்கி வைத்திருப்பதைப் பாருங்கள். இது என்ன தெரியுமா? வேலை வேண்டும் என்று கேட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இந்த எடப்பாடி தொகுதியிலிருந்து மட்டும் படித்த பட்டதாரி இளைஞர்கள் 9,600 பேர் பதிவு செய்திருக்கிறார்கள். பதிவு செய்த அந்த நகல்தான் இது. ஆதாரத்தோடு இங்கே வைத்திருக்கிறோம். இதில் ஒருவருக்காவது வேலை கிடைத்திருக்கிறதா? இல்லை?’ என்று பேசினார். இதன் அடிப்படையில் இளைஞர்களிடம் பிரச்சாரம் செய்து முதல்வர் எடப்பாடியை வெற்றி கொள்ளும் நோக்கத்தில்தான் சம்பத்குமார் நிறுத்தப்பட்டிருக்கிறார். திமுகவின் பாரம்பரிய பிரச்சாரம் ஒருபக்கம் நடந்தாலும் இன்னொரு பக்கம் தொகுதியில் இருக்கும் முதல் முறை வாக்காளர்கள், இளைஞர்கள், மாணவர்களை நோக்கி சம்பத் குமார் செல்லப் போகிறார்”என திமுகவினர் கூறுகிறார்கள்.

சம்பத் என்றால் செல்வம் என்று பொருள். ஆனாலும் இந்த சம்பத் குமாருக்கு பெரிய அளவு பொருளாதாரப் பின்புலம் இல்லாவிட்டாலும், செல்வகணபதி செலவுப் பொறுப்பை ஏற்றிருக்கிறார்

எடப்பாடி பழனிசாமியின் காதுக்கு அவரை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர் சம்பத்குமார் என்று தெரிவிக்கப்பட்டதும் யார் என்ன என்று கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கிறார். “உங்க அரசியல் அனுபவம்தாண்ணே அந்த பையனோட வயசு”என்று அதிமுகவினர் சொன்னதும் சிரித்துக்கொண்டார். ஆனாலும் சம்பத் குமாரின் பின்னால் செல்வகணபதியின் வொர்க்கிங் ஸ்டைல் இருப்பதால் அதிமுக நிர்வாகிகள் உஷார்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

“1996 இல் பர்கூர் தொகுதியில் முதல்வராக தேர்தலை சந்தித்த ஜெயலலிதாவை மண்ணை கவ்வ வைத்தபோது திமுக வேட்பாளர் சுகவனத்தின் வயது 39, அன்புமணியை பென்னாகரத்ததில் தோற்கடித்த திமுக வேட்பாளர் இன்பசேகரனின் வயது 32, தற்போது எடப்பாடிக்கு எதிராக நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளராக 37வயதான சம்பத்குமாரும் இந்த சரித்திரத்தில் இடம்பெறுவார்” என்று உறுதியாகக் கூறுகிறார்கள் செல்வகணபதி வட்டாரத்தில்.

தேர்தல் முடிவுகள்தான் பதில் சொல்ல வேண்டும்!

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *