மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 மா 2021

தினகரனுடன் ஏன் கூட்டணி வைத்தேன்? ஓவைசி

தினகரனுடன் ஏன் கூட்டணி வைத்தேன்?  ஓவைசி

அமமுகவின் தேர்தல் அறிக்கை மற்றும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நேற்று (மார்ச் 12) இரவு சென்னை ராயப்பேட்டையில் பிரம்மாண்டமாக நடந்தது.

இந்தக் கூட்டத்தில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் ஓவைசி, எஸ்டிபிஐ தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவி, தமிழக தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரமாண்டமான இந்தக் கூட்டத்தில் பேசும்போது அதிமுக இப்போது பாஜகவிடம் போய்விட்டது என்றும், திமுக சிறுபான்மையினரிடத்தில் இரட்டை வேடம் போடுகிறது எனவும் குறிப்பிட்டார்.

அவர் உரையாற்றுகையில்,

“மாநில அளவில் எங்களுக்கு 3 தொகுதிகளைக் கொடுத்த தினகரன் சஹாபுக்கு நன்றி. உங்கள் அரசியல் பயணத்தில் நீங்கள் எங்கே சென்றாலும் நாங்கள் உங்கள் வலதுகரமாக இருப்போம்.

ஒரு காலத்தில் தமிழகத்தில் சிறுபான்மை மக்கள், தலித்துகள்,ஆதிவாசிகளுக்கு ஜெயலலிதா எப்படி உரிமையும் சலுகையும் வழங்கினார்களோ அதே நிலை தொடர வேண்டுமென்றால் தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும்.

அதிமுக என்பது இப்போது ஜெயலலிதாவின் கட்சி அல்ல. அவர் பாஜகவுக்கு தலைவணங்கியது கிடையாது. இப்போதைய அதிமுக பாஜகவுக்கு சலாம் போடுகிறது.

எங்களை பார்த்து பிஜேபியின் பி டீம் என்று சொல்கிறார்கள் சிலர். வாஜ்பாய் தேசிய அளவில் ஆட்சி செய்தபோது அவரோடு இருந்தது திமுகதானே. மதச்சார்பின்மை என்றால் என்ன? மகாராஷ்டிராவில் சிவசேனாவோடு கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். சிவசேனா இன்றும் பாபர் மசூதியை நாங்கள்தான் இடித்தோமென்று சொல்கிறது. அந்த காங்கிரஸ் மதச்சார்பற்ற தன்மையானதா?

காயிதே மில்லத் அவர்கள் போன்ற தலைவர்கள் வழியில் வந்தவர்கள் என்று சிலர் சொல்லிக் கொண்டு நடப்பதைப் பார்த்தால் காயிதே மில்லத் வேதனைப்படுவார். ஒரு சில துண்டுகளுக்காக எங்கெல்லாம் போய் நின்றுகொண்டிருக்கிறீர்கள் என்று அவர் உயிரோடு இருந்தால் அவர்களைப் பார்த்துக் கோபப்படுவார். காயிதே மில்லத்தின் அரசியலை நிகழ்காலத்தில் கொண்டு வர வேண்டுமென்றால் எங்களுக்கு வாக்களியுங்கள்.காயிதே மில்லத்தின் கனவுகளை நாங்கள் நிறைவேற்றுகிறோம்.

தமிழகத்தின் தலித் சகோதரர்களே... பிற்படுத்தப்பட்ட சகோதரர்களே எங்கள் கூட்டணி பிரகாசமான தமிழகத்தை உருவாக்கும். திமுக, அதிமுக இரண்டுமே அண்ணாவின் வழியில் இருந்து விலகி மோடியின் வழியில் போய்க் கொண்டிருக்கிறது.

ஒன்றரை மாதங்களுக்கு திமுகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் என்னை ஹைதராபாத்தில் சந்தித்தார். அவரை நான் மரியாதையோடு வரவேற்றுப் பேசினேன். அவர் திமுக தலைவர் ஸ்டாலின் அழைத்தார் என்றும் சென்னையில் நடக்கும் அவர்களின் கட்சியின் சிறுபான்மை பிரிவு நிகழ்ச்சியில் பேச வேண்டும் என்று வற்புறுத்தினார். எனக்கு அதே நாளில் உத்திரப்பிரதேசத்தில் நிகழ்ச்சி இருக்கிறது என்று கூறினேன். ஆனால் அவர் மீண்டும் மீண்டும் கூறியதால் அந்த அழைப்பை நான் ஏற்றுக் கொண்டேன். அதை அவர்களது டிவியிலேயே காட்டினார்கள். ஆனால், இரண்டு மணி நேரத்தில் ஒவைசியை நாங்கள் அழைக்கவே இல்லை என்று மாற்றிப் பேசுகிறார்கள்.

இப்படி முன்னுக்குப் பின் முரணாக பேசிய திமுகவை சிறுபான்மை மக்கள் நம்புவார்களா? உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகிறாரக்ள். அதிகாரத்துக்கு ஒருவேளை அவர்கள் வந்துவிட்டால் சிறுபான்மை மக்களை எப்படி நடத்துவார்கள் என்பதை இஸ்லாமிய மக்களிடம் சிந்திக்க வேண்டுகிறேன்.

பலரும் என்னிடம், ‘ஏன் தினகரன் சஹாப்புடன் கூட்டணி வைக்கிறீர்கள்?’என்று என்னிடம் கேட்டார்கள். எங்கள் கட்சியின் தமிழக தலைவர்கள் என்னிடம் ஆலோசித்தபோது, ‘தினகரன் உங்களிடம் மரியாதையோடு நடந்துகொண்டாரா?” என்று கேட்டேன். அதற்கு தமிழக தலைவர் வகீல் அஹமது, ‘எங்களிடம் அன்போடு கண்ணியமாக நடந்துகொண்டார்’என்று சொன்னார். நான் சொன்னேன், ’போனை வைத்துவிட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள்’ என்று கூறினேன். எங்களுக்குத் தேவை மரியாதை, கௌரவம், கண்ணியம். அதை அளிக்கக் கூடிய தினகரன் அவர்களை நாங்கள் மதிப்போம்.

நரேந்திர மோடி பாஜக அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி அனைத்து தரப்பு மக்களையும் வாட்டி வதைத்துவிட்டது. பெரும்பான்மையை வைத்து சிஏஏ சட்டத்தைக் கொண்டு வந்தது.

தினகரன் அனைத்து மலர்களும் பூக்க வேண்டும் அனைத்து மக்களும் வளமோடு வாழ வேண்டும் என்று அனைவரையும் உள்ளடக்கிய கூட்டணியை உருவாக்கியிருக்கிறார். இந்த அணி வரலாற்று வெற்றியைப் பெறும். தினகரன் எப்போது அழைத்தாலும் தமிழகத்துக்கு பிரச்சாரத்துக்கு வருவேன்”என்று பேசினார் ஓவைசி.

-வேந்தன்

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

சனி 13 மா 2021