மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 மா 2021

கோவையில் கமல்: கலக்கப்போவது யாரு...கலங்கப்போவது யாரு?

கோவையில் கமல்: கலக்கப்போவது யாரு...கலங்கப்போவது யாரு?

அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என்று ரஜினி சொல்லிக் கொண்டு இருக்கும்போதே, திடீரென கட்சியைத் துவங்கி எல்லோரையும் கவனம் ஈர்த்தவர் கமல். நாடாளுமன்றத் தேர்தலில் அவருடைய மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டபோது, பிஜேபியின் பி டீம் என்று அவருக்கு முத்திரை குத்தப்பட்டது. ஆனால் பல தொகுதிகளில் பாரதிய ஜனதாவுக்கான வாக்குகளையும் கமல் கட்சி பறித்திருந்தது. அதற்குப் பின் நீண்ட நாட்களுக்கு அவரால் கட்சி நடத்த முடியாது; அதனால் ஏதாவது ஒரு கூட்டணியில்தான் அவர் அடைக்கலம் புக வேண்டுமென்று அரசியல் கட்சியினர் அறுதியிட்டுச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அவர் எதையும் கண்டுகொள்ளாமல் ஊர் ஊராகச் சென்று, மக்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார். யார் நினைத்தபடியும் எந்தப் பெரிய கட்சியுடனும் அவர் கைகோர்க்கவில்லை. ஆனால் தன்னுடைய தலைமையில் தமிழகத்தில் மூன்றாவது அணியை உருவாக்க வேண்டுமென்று நினைத்து, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் என்று பல கட்சிகளுக்கும் அவர் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார். யாருமே கண்டு கொள்ள வில்லை. இப்படி அவரைப் பற்றி மற்றவர்கள் நினைத்ததும் நடக்கவில்லை; அவர் எதிர்பார்த்ததும் நிறைவேறவுமில்லை. சங்கமே அபராதத்தில்தான் ஓடுது என்ற நிலையில் தேர்தல் அறிவிப்பு வந்து விட்டது.

இப்போது அவர் மயிலாப்பூரில் போட்டி போடுவாரா, பரமக்குடியில் போட்டி போடுவாரா என்று எல்லோரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், பரம ரகசியமாக ‘சர்வே’ நடத்தி கோவை தெற்கில் களமிறங்கியிருக்கிறார் கமல். அவர் நேரடியாகக் களமிறங்கும் முதல் தேர்தல் என்ற வகையில், அவருடைய இந்த முடிவு, அரசியல், திரைத்துறை இரண்டிலும் ஆச்சரியத்தை அள்ளித்தெளித்துள்ளது. கமல் ஏன் இந்தத் தொகுதியைத் தேர்ந்தெடுத்தார் என்பதற்கு பல விதமான கருத்துக்கள் உலா வருகின்றன.

கோவையைச் சேர்ந்த தி.மு.க., நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, ‘தங்கள் கட்சியின் தேசிய மகளிரணி செயலாளர் வானதி சீனிவாசனை ஜெயிக்க வைக்க வேண்டுமென்பதற்காக, பாரதிய ஜனதா ஏற்பாட்டின்பேரில் அவர் நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரஸ் வேட்பாளருக்கு விழும் சிறுபான்மையினர், அரசு அலுவலர்கள் வாக்குகளைப் பிரித்து விட்டால், வானதி வென்று விடுவார் என்று அவர்கள் கணக்குப் போடுகிறார்கள். ஆனால் கமல் நிற்பதால் தி.மு.க., கூட்டணியில் நிற்கும் காங்கிரஸ் வேட்பாளருக்கு விழும் வாக்குகள் எதுவும் மாறுவதற்கு வாய்ப்பேயில்லை. ஏற்கெனவே அந்தத் தொகுதியின் எம்எல்ஏ அம்மன் அர்ச்சுனனுக்கு சீட் தராததால் அதிமுகவினர் அனைவரும் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

அவர்கள் யாரும் வானதி சீனிவாசனுக்கு வேலை பார்க்கவே மாட்டார்கள். அதிமுகவினர் வாக்குகளும் அவருக்கு முழுதாகக் கிடைக்காது. அந்த வாக்குகள், அமமுகவில் நிற்கும் சேலஞ்சர் துரைக்குப் போகும். இல்லாவிட்டால் கமலுக்குப் போகும். வானதிக்குக் கிடைப்பது ரொம்பவும் குறைவாகவே இருக்கும். தொகுதிக்குள் இஸ்லாமியர், கிறிஸ்தவர் வாக்குகள் கணிசமாகவுள்ளன. காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்படவுள்ள மயூரா ஜெயக்குமார் சார்ந்த தேவர் சமுதாய வாக்குகள், 30 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும். இந்த இரண்டு தரப்பு வாக்குகளும் மயூரா ஜெயக்குமாருக்கு அப்படியே கிடைக்கும். அதைத் தவிர்த்து, தி.மு.க., காங்கிரஸ் வாக்குகளும் கிடைக்கும்பட்சத்தில் அவர் எளிதில் வென்று விடுவார். எங்களுடைய கணிப்பின்படி, இனி போட்டியே கமலுக்கும் மயூரா ஜெயக்குமாருக்கும்தான்!’’ என்று புதிய கோணத்தில் ஒரு தகவலைத் தெரிவித்தார்கள்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, ‘‘கடந்த 2016 தேர்தலில் அம்மன் அர்ச்சுனன் 59,788 வாக்குகளும், வானதி சீனிவாசன் 33 ஆயிரத்து 113 வாக்குகளும் வாங்கியுள்ளனர். மயூரா ஜெயக்குமார் 42,369 வாக்குகள் மட்டுமே வாங்கினார். மார்க்சிஸ்ட் வேட்பாளர் வாங்கியதும் 7,248 வாக்குகள்தான். இரண்டையும் சேர்த்தாலும் அ.தி.மு.க., கூட்டணி வாங்கிய வாக்குகளில் பாதியளவு கூட வாங்க முடியாது. இதில் 10 சதவீத வாக்குகள் குறைந்தாலும் நாங்கள்தான் வெற்றிபெறுவோம். இன்னும் சொல்லப்போனால் இந்தத் தொகுதியில்தான் திருச்சி ரோடு பாலம், அவினாசி ரோடு பாலம், ரேஸ்கோர்ஸ் மாடல் ரோடு என ஏராளமான வேலைகள் நடந்திருக்கின்றன. தொகுதியிலுள்ள இரண்டரை லட்சம் வாக்குகளில் இரண்டு லட்சத்துக்கும் குறைவான வாக்குகள்தான் பதிவாகும். அவற்றில் சிறுபான்மையினர், அரசு அலுவலர்கள் வாக்குகள் 60 ஆயிரத்துக்கும் குறைவாகவே இருக்கும். மற்றபடி கமல் அதிகபட்சமாக 30 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் வாங்க முடியாது. அமமுக அதற்கும் குறைவாகத்தான் நிச்சயம் வாங்கும். கூட்டிக்கழித்துப் பார்த்தால் எங்களுக்கு வெற்றி எளிதாகக் கிடைக்குெமென்பது புரியும்!’’ என்றார்.

கமலுக்காக இந்தத் தொகுதியில் தேர்தல் பணியாற்றும் மக்கள் நீதி மய்யம் மற்றும் ஆம்ஆத்மி நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்...

‘‘நாங்கள் சிறுபான்மையினர் வாக்குகள் என்றோ, இந்துக்கள் வாக்குகள் என்றோ பிரித்துப் பார்க்கவில்லை. இந்தத் தொகுதியில் படித்தவர்கள், தொழில் செய்வோர், கீழ்த்தட்டு மக்கள் என எல்லோரும் கலந்து இருக்கின்றனர். முழுக்க முழுக்க நகர்ப்புறங்களை உள்ளடக்கிய தொகுதி என்பதால், எல்லா சமுதாயத்தினரும் வசிக்கின்ற தொகுதியாகவும் இருக்கிறது. இதுதான் எங்களுக்கு பலம். கமல் இங்கு போட்டியிடுகிறார் என்ற தகவல் பரவியதுமே, நகருக்குள் பல தரப்பிலிருந்தும் எங்களுக்கு ஆதரவு குவிகிறது. கமல் வீதியில் இறங்கி பரப்புரை செய்தால், வேற லெவலில் ஆதரவு பெருகும். அதிருப்தியில் உள்ள அதிமுகவினர், காங்கிரஸ் நிற்பதால் திருப்தியில்லாத திமுகவினர், பிற கட்சியினர், நடுநிலையாளர்கள் என எல்லோரும் அவருக்குதான் வாக்களிப்பார்கள். கோவையிலிருந்து கமல் சட்டமன்றத்துக்குப் போனால் அது கோவைக்குதான் பெருமை சேர்க்கும், நன்மை பயக்கும். மற்றபடி பிஜேபி வேட்பாளரை ஜெயிக்க வைப்பதற்காக கமல் இங்கு போட்டி போடுகிறார் என்று சொல்வது, மிகவும் அற்பத்தனமான குற்றச்சாட்டு. சொல்லப்போனால் போட்டியே கமலுக்கும் வானதிக்கும்தான்!’’ என்றார்கள்.

கமல் சென்னையில் போட்டியிடாமல் கோவையில் போட்டி போடுவதற்குக் காரணம், அங்குள்ள மக்களிடம் அவர் வைத்துள்ள அதீத நம்பிக்கைதான் காரணமாகத் தெரிகிறது. அந்த நம்பிக்கைக்கு அவர்கள் என்ன பரிசு தரப்போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள மே 2 வரை காத்திருக்கத்தான் வேண்டும்.

கலக்கப்போவது யாரு...கமலால் கலங்கப்போவது யாரு?

-பாலசிங்கம்

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

சனி 13 மா 2021