மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 மா 2021

வித்தியாசமான முறையில் வேட்புமனுத் தாக்கல்!

வித்தியாசமான முறையில் வேட்புமனுத் தாக்கல்!

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்யும் பணி நேற்று தொடங்கியது. இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வேட்பாளர்கள் வித்தியாசமான முறையில் வந்து தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், நாமக்கல் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் இன்ஜினீயர் ஒருவர் காந்தி வேடம் அணிந்து வந்து வேட்புமனுத் தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நாமக்கல் அருகே செல்லப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் டி. ரமேஷ் (40). இவர் பொறியாளராகப் பணியாற்றி தற்போது காந்திய சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். கடந்த மக்களவைத் தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டு 968 வாக்குகள் பெற்ற இவர் இந்தத் தேர்தலில் போட்டியிட தன்னை தயார் செய்துகொண்டு அண்மையில் அனைத்துக் கட்சித் தலைவர்களைக் கூட்டி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

அதில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ரூ.4 லட்சம் வரை கட்டாய கடன் வழங்கப்படும் என்று தன் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை செல்லப்பம்பட்டியிலிருந்து நாமக்கலுக்கு காந்தி வேடத்தில் வந்த ரமேஷ் குளக்கரை திடலில் காந்தி பேசிய மேடை அருகில் தனது வேட்புமனுவை வைத்து ஆசி பெற்றார்.

தொடர்ந்து சைக்கிளில் நாமக்கல் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர் தேர்தல் நடத்தும் அலுவலர் மு.கோட்டைக் குமாரிடம் நாமக்கல் தொகுதியில் போட்டியிடத் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

பலாப்பழத்துடன் வந்து வேட்புமனுத் தாக்கல்

திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்குமார் தனது சின்னமான பலாப்பழத்துடன் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்ததால் ஆரவாரம் ஏற்பட்டது.

திருப்பூர் வடக்கு தொகுதியில் அண்ணா புரட்சி தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளரான வி.செந்தில்குமாருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர், தான் போட்டியிடும் சின்னமான பலாப்பழத்துடன் வேட்புமனுத் தாக்கல் செய்ய திருப்பூர் மாநகராட்சி 1ஆவது மண்டல அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர் பழத்தை வெளியே வைத்துவிட்டு உள்ளே செல்லுமாறு அறிவுறுத்தினர்.

இதையடுத்து, அந்தப் பழத்தை தனது காரில் வைத்து விட்டு வேட்புமனுத் தாக்கல் செய்யச் சென்றார்.

திருப்பூர் வடக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான வருவாய் கோட்டாட்சியர் எம்.ஜெகநாதனிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார் வேட்பாளர் வி.செந்தில்குமார்.

கோட் அணிந்து சென்ற வேட்பாளர்

திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில், பனங்காட்டுப்படை கட்சி வேட்பாளர் ஆர்.இம்மானுவேல் காங்கேயம் தொகுதிக்கு முதல் வேட்பாளராக மஞ்சள் நிறத்தில் கோட் சூட் அணிந்து வேட்புமனுத் தாக்கல் செய்தார். பனங்காட்டுப்படை கட்சி இன்னும் முறையாக பதிவு செய்யப்படாததால், சுயேச்சை வேட்பாளராக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

மக்கள் பணத்தில் வேட்புமனு

சூலூரில் வேட்புமனுத் தாக்கல் செய்ய ரூ.10,000க்கும் சில்லறையாக கொடுத்த வேட்பாளர்.

சூலூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் பொன்.கார்த்திகேயன், தனது வேட்புமனுவைத் தேர்தல் அலுவலர் சாந்தியிடம் அளித்தார்.

வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான பணத்தை மக்களிடம் தலா ஒரு ரூபாய் வசூல் செய்து, ரூ.10,000ஐ சில்லறையாக கொடுத்துள்ளார். பொதுமக்கள் தங்கள் வாக்குகளை பணத்துக்காக விற்கக் கூடாது என்பதற்காக இவ்வாறு செய்ததாக கூறினார்.

215ஆவது முறையாக வேட்புமனு

215ஆவது முறையாக மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக பத்மராஜன் (62) வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

மேட்டூர் அருகே குஞ்சாண்டியூர் பகுதியைச் சேர்ந்த இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்காக தொடர்ந்து வேட்புமனுத் தாக்கல் செய்து வருகிறார். மேலும், வேட்புமனு தாக்கலுக்கான டெபாசிட் பணம் கட்டுவதற்கு பணம் இல்லையென்றாலும், மனைவியின் நகைகளை அடகு வைத்து பணத்தை கட்டி மனுத் தாக்கல் செய்து வருகிறார்.

வேட்புமனுத் தாக்கல் வெள்ளிக்கிழமையன்று தொடங்கினாலும், ஒரு சில முக்கிய தலைவர்கள் தவிர வேறு யாரும் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. அதனால், அதிகளவிலான வேட்புமனுத் தாக்கல் திங்கள்கிழமை நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

-சக்தி பரமசிவன்

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

5 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

4 நிமிட வாசிப்பு

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ...

3 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ஆயத்தம்! 

சனி 13 மா 2021