�சிறப்புக் கட்டுரை: தலைவர்கள் பேச்சு மொழிபெயர்ப்புத் தடுமாற்றங்களைத் தவிர்க்கும் வழி!

politics

அ. குமரேசன்

தேர்தல் காலகட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு ஏற்படுகிற முக்கியமான தேவைகளில் ஒன்று மொழிபெயர்ப்புப் பணி. குறிப்பாக, அகில இந்தியக் கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்கள் பரப்புரைகளுக்காகத் தமிழகம் வருகிறபோது அவர்களுடைய உரைகளை அந்த நேரத்திலேயே மொழிபெயர்த்துச் சொல்ல வேண்டியதாகிறது. மாநிலக் கட்சிகளின் மாநாடு, விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு வேறு மாநில தலைவர்கள் விருந்தினர்களாக அழைக்கப்படுகிறபோதும் இதே தேவை ஏற்படுகிறது. கட்சிகள் அல்லாத பிற அமைப்புகளின் கூடுகைகளிலும் மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது.

மூல உரையின் பொருள் மாறாமல், உணர்ச்சி குன்றாமல் மொழியாக்கம் செய்வது ஒரு சவாலான பணிதான். இதில் வல்லுனர்கள் என்று சொல்லக்கூடிய அளவுக்கு நன்கு மொழிபெயர்க்கிற தலைவர்கள் சிலர் இருக்கிறார்கள். ஆனால் மிகப்பெரிய அளவுக்கு ஒரு பற்றாக்குறை நிலவுகிறது. இந்த நிலைமை எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது.

சில கட்சிகளின் அகில இந்திய தலைவர்களுடைய உரைகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டு சிரிப்புக்கும் கிண்டலுக்கும் உள்ளாவது அண்மைக்கால செய்திகளாகியுள்ளன. உரிய திருத்தங்கள் செய்யப்படுவதற்கு முன்பாகவே, சமூக ஊடகங்களின் புண்ணியத்தில், அந்தக் குளறுபடிகள் பரவிவிடுகின்றன.

மேடையில் தலைவர் பேசிய உரை அங்கேயே மொழிபெயர்க்கப்பட்டு அமைதியாகக் கடந்துவிடும், பின்னர் உரையின் முக்கியமான பகுதிகளை பத்திரிகைகளில் படிக்கிறபோது, தொலைக்காட்சிகளில் பார்க்கிறபோது, “அட தலைவர் இப்படியெல்லாம் சொல்லியிருக்கிறார், மொழிபெயர்த்தவர் இதையெல்லாம் விட்டுவிட்டாரே” நொந்துகொள்வார்கள்.

எதையும் விட்டுவிடக்கூடாது என்பது ஒருபுறமிருக்க, சிலர் தங்கள் சொந்தச் சரக்குகளைச் சேர்த்துவிடுவார்கள். விடுதலைப் போராட்டக் காலத்தில், கேரள காங்கிரஸ் தலைவர் ஒருவரது பேச்சைத் தமிழாக்கம் செய்த ஐ.மாயாண்டி பாரதி தனது கருத்துகளையும் உணர்ச்சிபொங்கச் சேர்த்துவிட்டார். சிலநாட்களில், வன்முறையைத் தூண்டிவிடும் வகையில் பேசியதாகக் குற்றம் சாட்டி அவரைக் கைது செய்தார்கள். மதுரையில் இவரையும் கைது செய்தார்கள். இருவரும் ரயில் நிலையத்தில் சந்தித்தபோது, “நான் என்ன பேசினேன்? நீ என்ன மொழிபெயர்த்தாய்,” என்று கேரளத் தலைவர் கோபத்தோடு கேட்டாராம். “நீ என்னவோ பேசினாய், நான் என்னவோ சொன்னேன். எப்படியானாலும் நம்மைக் கைதுசெய்வதாகத்தான் இருந்தார்கள். எல்லாம் நாட்டுக்காகத்தானே, பொறுத்துக்கொள்ளப்பா,” என்றாராம் ஐமாபா!

மேடையில் இப்படிக் கூடுதலாகச் சொல்வது நேர இழுத்தடிப்புக்கும், மையமான கருத்திலிருந்து விலகலுக்கும், இரு மொழிகளும் தெரிந்தவர்களிடையே என்ன இப்படிச் செய்கிறார் என்ற விமர்சனத்திற்கும் இட்டுச்சென்றுவிடும். ஆனால், வெவ்வேறு மொழிகளின் பயன்பாட்டில் அந்தந்த மாநிலம், மாவட்டம், வட்டாரம் சார்ந்த வேறுபாடுகள் இருக்கின்றன. ஆகவே அப்படியே நேரடியாக மொழிபெயர்க்காமல், மக்களின் மொழிப் புழக்கத்திற்கு ஏற்பச் செய்வது சிறப்பாக அமையும். ஒரு முறை, வேறு மாநிலத் தலைவர் ஒருவர் தனது ஆங்கில உரையில், “ராபர்ட் கிளைவ் கேம் டு இந்தியா, அன் பிகேம் ராபர் கிளைவ்” என்று பேசினார். மொழியாக்கம் செய்தவர் அண்ணா. அவர் தமக்கே உரிய தமிழாளுமையோடு, “திரு ராபர்ட் கிளைவ் இந்தியாவுக்கு வந்தார், திருடன் ராபர்ட் கிளைவாக மாறிவிட்டார்,” என்று சொன்னாராம். இதனை, ஒரு பேட்டித் தொகுப்பில் குறிப்பிட்டுள்ளார் மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ். ஊடகவியலாளர்களிடமும், மொழிபெயர்ப்பில் ஈடுபடும் தலைவர்களிடமும் கருத்துக் கேட்டு அந்தத் தொகுப்பை எழுதியிருப்பவர் ஆர்.கே. ஸ்ரீவித்யா (‘டங் ட்விஸ்ட்டட்’, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், மார்ச் 6).

**தொழில்முறை நியமனம்?**

பத்திரிகையாளர்களில் சிலர், இந்த மொழிபெயர்ப்பு வேலையைத் தொழில்முறை வல்லுநர்களிடம் ஒப்படைக்கலாம் என்று கூறியுள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இதில் மாணவர்களை ஈடுபடுத்த முயல்வது பற்றிய தகவலும் தொகுப்பில் இருக்கிறது. “இவ்வாறு மாணவர்களை ஈடுபடுத்துவதில் சில சாதகங்கள் இருக்கின்றன. அவர்கள் தவறு செய்தால், தலைவர்களின் தடுமாற்றங்கள் போலப் பெரிதுபடுத்தப்பட மாட்டாது,” என்று கூறியிருக்கிறார் மற்றொரு மூத்த பத்திரிகையாளர் கவிதா முரளிதரன். இளைஞர்களுக்கு இது எதிர்காலத்தில் ஒரு நல்ல வேலைவாய்ப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

“அரசியல் கட்சிகள் தங்களது பல வேலைகளை வெளியே தனியார் அமைப்புகளிடம் விடுகிறபோது ஏன் தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்களை நியமித்துக்கொள்ளக்கூடாது,” என்று நானே கேட்டு நானே அதற்குச் சொன்ன, பின்வரும் பதிலும் அந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

“ஆனால், அடிப்படையில் கட்சியின் அனைத்துப் பணிகளும் அதன் உறுப்பினர்களிடம்தான் விடப்பட வேண்டும். எல்லாக் கட்சிகளிலும் மொழியில் ஆர்வம் உள்ளவர்கள் நிச்சயம் இருப்பார்கள். உயர்மட்டத் தலைமை, பதவிப் படிநிலை அடிப்படையில் முடிவு செய்யாமல், இவர்களை அடையாளங்கண்டு வளர்க்க வேண்டும். ஒரு தலைவரின் பேச்சுத்திறனை வளர்த்துக்கொள்ள அளிக்கப்படுகிற முக்கியத்துவம் இப்படிப்பட்ட மொழி ஆர்வலர்களின் மொழிபெயர்ப்புத் திறனை வளர்ப்பதற்கும் அளிக்கப்பட வேண்டும்.”

தனிப்பட்ட முறையில் செயல்படுகிற மொழிபெயர்ப்பாளர்களின் திறமைகளை, பங்களிப்புகளை சிறிதும் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. உலகளாவிய கருத்துச் செல்வங்களைத் தமிழுக்குக் கொண்டுவருவதிலும், இங்கிருந்து உலக மேடைகளுக்குக் கொண்டுசேர்ப்பதிலும் போற்றுதலுக்குரிய பணியைச் செய்துகொண்டிருப்பவர்கள் அவர்கள்.

தொழில்முறைக் கோணத்தில் பார்த்தால், அவர்களை ஏன் அரசியல் தலைவர்களது பேச்சுகளை மொழிபெயர்க்கப் பயன்படுத்தக்கூடாது என்ற கேள்வி சரியானதே. ஆனால், அரசியல் இயக்கம் என்ற கோணத்தில் இது பொருத்தமற்றது என்றே கருதுகிறேன்.

தொகுதி நிலவரக் கணிப்பு, வட்டாரச் செல்வாக்கு நிலைகள் பற்றிய மதிப்பீடு, மக்கள் மனநிலை குறித்த ஆய்வு, தனிப்பட்ட தலைவர்களின் செயல்பாடு தொடர்பான ஒப்பீடு, போட்டிக் கட்சிகளின் தாக்கம் என பல்வேறு தரவுப் பணிகள் இப்போது தனியார் முகமைகளிடம் தரப்படுவது ஒரு அகில இந்தியக் கலாச்சாரமாகவே உருவாகி வருகிறது. உலகில் வேறுபல நாடுகளிலும் இது நடைமுறையில் இருக்கக்கூடும். ஐபேக் போன்ற நிறுவனங்களோ, கிஷோர் பிரசாந்த் போன்ற வல்லுநர்களோ அலசி ஆராய்ந்து அளிக்கிற அறிக்கைகள் துல்லியமானவைதானா, நம்பகமானவைதானா என்பதல்ல கேள்வி. இவர்களை ஒப்பந்தம் செய்துகொள்கிற கட்சிகள் வெற்றி பெறுகின்றனவா அல்லது வெற்றிபெறுகிற கட்சிகளோடு இவர்கள் ஒப்பந்தம் செய்துகொள்கிறார்களா என்ற நுட்பமான கேள்வியும் இருக்கிறது. இவர்கள் வேறு கட்சிகளுக்கு இந்தத் தகவல்களைக் கைமாற்ற மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்ற கேள்வியும் சுற்றிக்கொண்டேதான் இருக்கிறது.

ஆனால், அவைகள் நூற்றுக்கு நூறு கச்சிதமான ஆய்வுகளாகவே இருந்தாலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முற்றிலும் நேர்மையாகச் செயல்பட்டாலும், ஒரு இயக்கத்தின் இத்தகைய பணிகள் இப்படிப்பட்ட முகமைகளிடமோ, தனி வல்லுநர்களிடமோ ஒப்படைக்கப்படக்கூடாது. கட்சியின் வேர்மட்டத் தொண்டர்கள் தொடங்கி வட்டாரத் தலைவர்கள் வரையிலான உறுப்பினர்களிடம்தான் இந்தப் பொறுப்பு அளிக்கப்பட வேண்டும். அதுவே அவர்களை முழு ஈடுபாட்டுடன் இயங்க வைக்கும். தனி முகமைகளிடம் இதை விடுவது தொண்டர்களைப் படிப்படியாகக் கள நிலைமைகளிலிருந்து விலக்கிவைக்கும், மக்களிடமிருந்து அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தனிமைப்படுவதற்கே இட்டுச்செல்லும்.

**புலமை மட்டுமா?**

இது மொழிபெயர்ப்புக்கும் பொருந்தும். தலைவர்களின் பேச்சுகள், கட்சி அறிக்கைகள், இயக்கப் புத்தகங்கள் ஆகிய அனைத்து மொழிபெயர்ப்புகளுக்கும் பொருந்தும். ஏனென்றால் இது மொழிப் புலமையோடு மட்டும் தொடர்புடையதல்ல. அரசியல் புரிதலும், கொள்கைத் தெளிவும் தேவைப்படுவது.

கட்சிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு நூல் மொழிபெயர்ப்பில் கூட, பொதுவான அறிவோடு செய்வதற்கும், கருத்து ஈடுபாட்டோடு செய்வதற்கும் வேறுபாடு இருக்கிறது. இலக்கியப் படைப்பு ஒன்றை மொழிபெயர்க்கிற ஒரு திறமையாளர் அதைச் சரியாகச் செய்ய முடியும். ஆனால், இலக்கிய ஈடுபாட்டாளரால்தான் அதை நன்றாகச் செய்ய முடியும். சாதியம் பற்றிய ஒரு புத்தகத்தை வேறுமொழிக்கு மாற்றுகிற திறமையாளர் சரியாகவே செய்வார். ஆனால், சாதி ஒழிப்பு லட்சியக்காரர் அதை நன்றாகச் செய்வார். அறிவுப்பூர்வமாகச் செய்வதற்கும் உணர்வுப்பூர்வமாகச் செய்வதற்கும் உள்ள வேறுபாட்டை இத்தகைய மொழியாக்கங்களிலும் காணலாம்.

ஆகவே, கட்சி அல்லது இயக்கம் சார்ந்த மொழிபெயர்ப்புகளுக்கு மாணவர்களையோ தொழில்முறைத் திறனாளர்களையோ நியமிக்கத் தேவையில்லை. அப்படியானால் மாற்று என்ன?

**இதுவே மாற்று**

கட்சிக்கு உள்ளேயே அப்படிப்பட்ட திறனாளர்களை வளர்ப்பதுதான் சரியான, நம்பகமான மாற்று. மொழியில் ஆர்வமும் அக்கறையும் அறிவும் உள்ளவர்கள் எல்லாக் கட்சிகளிலும் இருக்கிறார்கள். கட்சிகளின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறவர்கள் இப்படிப்பட்ட திறமையாளர்களைக் கண்டறிந்து, ஊக்குவிக்க வேண்டும். பேச்சுகள் உள்ளிட்ட பல்வேறு மொழியாக்க முயற்சிகளிலும் அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

நாட்டின் வேறு பகுதிகளிலிருந்து, வேறு மொழி பேசுகிற தலைவர்கள் வருகிறபோது அவர்களுக்கு நிகரான, அல்லது அடுத்த மட்டத்திலான பதவிப் படிநிலைகளில் இருக்கிறவர்கள்தான் மொழிபெயர்க்க வேண்டும் என்ற நடைமுறை பல கட்சிகளிலும், அமைப்புகளிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. இப்படிப் படிநிலைக்காக இந்தப் பணி ஒப்படைக்கப்படுகிற தலைவர்கள் தடுமாறுவதையும், முக்கியமான செய்திகளை விட்டுவிடுவதையும் ஊடகவியலாளர்கள் பல அரங்குகளில் கண்டு ரசித்திருக்கிறார்கள்.

கல்வி உரிமை தொடர்பான அகில இந்திய மாநாடு ஒன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. அரங்கின் பல பகுதிகளில் தொலைக்காட்சித் திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒரு மாநிலப் பிரதிநிதி உரையாற்றியபோது, தமிழிலும் ஆங்கிலத்திலும் உடனுக்குடன் மொழிபெயர்க்கப்பட்டு அந்தத் திரைகளில் எழுத்துவடிவில் ஒளிபரப்பப்பட்டது. ஒரு பகுதியில், கணினிகள் வைக்கப்பட்டு அவற்றின் முன், தட்டச்சு செய்கிறவர்கள் தயாராக இருந்தார்கள். அருகில் அமர்ந்திருந்த மொழிபெயர்ப்பாளர்கள், உரையாளர் பேசப்பேச அதைக் கேட்டு தமிழிலும் ஆங்கிலத்திலும் சொல்ல, வேகமாகத் தட்டச்சு செய்து திரைகளுக்கு அனுப்பப்பட்டது. பெருமளவு நேர்த்தியாக அமைந்த அந்த முயற்சிக்கு முக்கியமான காரணம், மொழிபெயர்ப்பாளர்கள் கல்வி உரிமைக் களத்தில் ஈடுபடுகிறவர்களாகவும் இருந்ததேயாகும்.

இயக்கத்தைச் சார்ந்தவர்களே மொழிபெயர்ப்பதில் மற்றொரு வாய்ப்பும் இணைந்துகொள்ளும். சொற்பொழிவாளரோடு மொழிபெயர்ப்பாளர் முன்கூட்டியே கலந்துரையாடி, அவர் என்ன பேசப்போகிறார் என்ற அடிப்படைப் புரிதலோடு தனது பணியைச் செய்ய முடியும். நான் மொழிபெயர்ப்பில் ஈடுபட்ட சில அரங்க நிகழ்வுகளில், இவ்வாறு முன்கூட்டியே கலந்துகொண்டு செய்ததால் பாராட்டுப் பெற்றதும் உண்டு, அப்படிக் கலந்துகொள்ள முடியாமல்போன ஓரிரு நிகழ்வுகளில் தட்டுத்தடுமாறிச் சங்கடப்பட்டதும் உண்டு.

இப்படிப்பட்ட தடுமாற்றங்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும் – படிநிலை பார்க்காமல், அக்கறை உள்ளவர்களுக்குத் தொடர்ச்சியாக வாய்ப்பளிப்பதுதான் அதற்கான வழி. அது அவர்களுக்கு அடிப்படையான நடைமுறைப் பயிற்சியாகவும் அமையும்.

இதுதான் சாக்கென்று சில பேர், “இதுக்குத்தான் தேசம் முழுசும் ஒரே தேசிய மொழி ஆட்சி மொழியா இருக்கணும்கிறது,” என்று கிளம்பக்கூடும். பன்முகப் பண்பாட்டுக் காடாகச் செழித்திருக்கும் நாட்டில் எல்லா மொழிகளும் சமமாக மதிக்கப்பட்டாக வேண்டும், எந்த மொழியும் எவர் மீதும் திணிக்கப்படக் கூடாது என்ற மக்களாட்சிச் சிந்தனையை அவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொல்லியாக வேண்டும்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *