மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 மா 2021

25 தொகுதிகள்: திமுக, காங்கிரஸுக்குள் ஒலிக்கும் குமுறல்கள்!

25 தொகுதிகள்: திமுக, காங்கிரஸுக்குள் ஒலிக்கும் குமுறல்கள்!

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகள் நேற்று (மார்ச் 11) அறிவிக்கப்பட்டதும் திமுக தரப்பிலும், காங்கிரஸ் தரப்பிலும் அதிர்வுகள் ஏற்பட்டிருக்கின்றன.

கூட்டணி பேசப் போன தங்களை மதிக்கவில்லை, கட்சியையும் மதித்து கேட்ட எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்கவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சத்தியமூர்த்தி பவனில் கண்ணீர் விட்டு அழுது...அதன் பின் கூட்டணியே வேண்டாம் என்று காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கோஷமிட்டனர்.அதன் பின் ராகுல்காந்தி ஸ்டாலினிடம் நேரடியாக பேசி அதன் பிறகே 25 தொகுதிகள் காங்கிரஸுக்கு கொடுத்து ஒரு வழியாக கூட்டணி முடிவு செய்யப்பட்டது.

1.தென்காசி

2. அறந்தாங்கி

3. விருத்தாசலம்

4.நாங்குநேரி

5.கள்ளக்குறிச்சி

6. ஸ்ரீவில்லிபுத்தூர்

7.திருவாடானை

8.பொன்னேரி

9.ஸ்ரீபெரும்புதூர்

10. சோளிங்கர்

11. ஊத்தங்கரை

12. ஓமலூர்-

13. உதகை.

14. கோவை தெற்கு

15.காரைக்குடி

16. மேலூர்

17.சிவகாசி

18. ஸ்ரீவைகுண்டம்

19. குளச்சல்

20. விளவங்கோடு

21. கிள்ளியூர்

22. ஈரோடு கிழக்கு

23. உடுமலைப் பேட்டை

24. மயிலாடுதுறை

25.வேளச்சேரி

ஆகிய 25 தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதில் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு போர்க்களமே நடந்திருக்கிறது.

காங்கிரஸ் தற்போது தன் வசம் வைத்துள்ள தாராபுரம், முதுகுளத்தூர் தொகுதிகள் காங்கிரஸுக்குக் கொடுக்கப்படவில்லை. தாராபுரத்துக்கு பதிலாக அதிமுக சார்பில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் போட்டியிடும் உடுமலைப் பேட்டை கொடுக்கப்பட்டிருக்கிறது.

முதுகுளத்தூர் காங்கிரஸுக்கு பாரம்பரியமான தொகுதி. சோ.பாலகிருஷ்ணன் ஜெயித்த தொகுதி. இப்போது மலேசியா பாண்டியன் காங்கிரஸ் உறுப்பினராக இருக்கிறார். யாதவர்கள் அதிகம் நிறைந்த இத்தொகுதி திமுகவில் ராஜ கண்ணப்பனுக்காக காங்கிரஸிடம் இருந்து பறிக்கப்பட்டது என்கிறார்கள் தெற்கே.

திருச்சியில் காங்கிரசில் புகழ்பெற்ற முன்னாள் எம்பி அடைக்கலராஜின் மகன் லூயிசுக்கு ஒரு தொகுதி பெற அழகிரி முயன்றார். அது நடக்கவில்லை. அண்மையில் காங்கிரஸில் ஏர்க்கலப்பை பேரணி, விவசாயிகள் மாநாட்டை முதலில் நடத்திய தனது ஆதரவாளர் செங்கம் குமாருக்கு கலசப்பாக்கம் தொகுதியைக் கேட்டார் அழகிரி. அதுவும் கிடைக்கவில்லை. சென்னையில் மாவட்டத் தலைவர் டெல்லி பாபுக்குக்காக ஆர்.கே.நகர் கேட்டது காங்கிரஸ். ஆனால் பெறமுடியவில்லை. லட்சுமி ராமச்சந்திரனுக்காக ராகுல் அலுவலகமே தலையிட்டும் மயிலாப்பூர் தொகுதியை திமுக விட்டுக் கொடுக்க மறுத்துவிட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் வீடு அமைந்திருக்கும் மயிலாப்பூர் தொகுதியில் இம்முறை திமுக நீண்டநாட்களுக்குப் பிறகு நிற்கிறது.

”நாங்கள் சென்னையில் கேட்ட தொகுதிகள் எதையும் கொடுக்காமல், வேளச்சேரியை எங்கள் தலையில் கட்டிவிட்டது திமுக. வேளச்சேரியில் ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக இருந்த வாகை சந்திரசேகர் கடுமையாக முயற்சித்தார். அவருக்கு கொடுப்பதற்கு விருப்பமில்லையோ என்னவோ நாங்கள் கேட்காத வேளச்சேரியை கொடுத்துவிட்டனர்”என்று சுணங்குகிறார்கள் காங்கிரஸார்.

தென் மாவட்டத்தில் காங்கிரஸ் தங்களிடம் இருந்து தொகுதிகளைப் பறித்துக்கொண்டதாக திமுக தரப்பினர் குமுறுகிறார்கள்.

“குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் காங்கிரஸுக்கு அதிகமாக திமுக தலைமை விட்டுக் கொடுத்துவிட்டது.

தென்காசியில் மாவட்டப் பொறுப்பாளர் சிவபத்மநாபன் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடத்துவதில் ஸ்டாலினால் பாராட்டப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர். அவருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட தென்காசி தொகுதியை பழனிநாடாருக்காக காங்கிரஸ் வற்புறுத்தி வாங்கிவிட்டது.

அதேபோல் ஸ்ரீவைகுண்டம் தொகுதியை எதிர்பார்த்து இளைஞரணித் துணைச் செயலாளர் ஜோயல் தொகுதி முழுக்க வேலைகள் செய்திருந்தார். ஆனால் அது ராகுல் காந்தியால் அண்மைப் பயணத்தில் பாராட்டப் பெற்ற ஊர்வசி அமிர்தராஜுக்காக காங்கிரஸுக்குக் கொடுக்கப்பட்டது. இத்தொகுதியை மாவட்டப் பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்கனவே காங்கிரஸுக்கு எழுதிக் கொடுத்துவிட்டார் என்று திமுகவினரே கூறுகிறார்கள்.

நாங்குநேரி தொகுதியில் ஒன்றிய செயலாளர் ஆரோக்கிய எட்வின் மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பனின் முழு ஆதரவோடு சில வருடங்களாக தொடர்ந்து வேலை செய்து வந்தார். இவர் கனிமொழியின் தீவிர ஆதரவாளரும் கூட. காங்கிரஸுடனான தொகுதிப் பேச்சுவார்த்தைக் குழுவில் கனிமொழியும் இருந்ததால் தனக்காக நாங்குநேரியை தட்டிப் பறித்துக்கொடுத்துவிடுவார் என்று நம்பிக் கொண்டிருந்தார் அவர். ஆனால் நாங்குநேரி தொகுதியை காங்கிரஸின் பொருளாளரும் தனது நம்பிக்கைக்குரியவருமான ரூபி மனோகரனுக்காக அழகிரி போராடிப் பெற்றுவிட்டார். அதுபோல அறந்தாங்கியில் காங்கிரஸுக்கு கொடுத்துவிடக் கூடாது என்று திமுகவினர் போராடியும் கூட திருநாவுக்கரசர் தன் மகனுக்காக போராடிப் பெற்றுவிட்டார்” என்கிறார்கள் திமுகவினர்.

இப்படி இந்தப் பட்டியலால் திமுக, காங்கிரஸ் இரு தரப்புமே ஆங்காங்கே அதிருப்திக் குரல்களை எழுப்பிக் கொண்டிருக்கிறது.

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

வெள்ளி 12 மா 2021