மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 மா 2021

மம்தா தொண்டர் மீது துப்பாக்கிச் சூடு... தலைதூக்கும் வங்கத் தேர்தல் வன்முறை!

மம்தா தொண்டர் மீது துப்பாக்கிச் சூடு... தலைதூக்கும் வங்கத் தேர்தல் வன்முறை!

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே அங்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக இடையே மோதல் தொடங்கிவிட்டது. கடந்த புதன்கிழமையன்று பிரச்சாரத்தின்போது காரில் சென்ற முதலமைச்சர் மம்தா காரிலிருந்து கீழே விழச் செய்யப்பட்டார். தோள்பட்டை, இடுப்பு, காலில் காயமடைந்த அவர் கொல்கத்தா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த விவகாரத்தை முன்னிட்டு, மம்தா போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பதற்ற நிலை உருவாகியுள்ளது. மம்தா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் பிரூலியா பசார் பகுதியில் நேற்று பாஜகவினருக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டது.

மாவட்ட பாஜக துணைத்தலைவர் பிரலாய் பால் தலைமையில் அக்கட்சியினர் நேற்று காலை 10 மணிக்கு பிருலியா பசார் பகுதியில் குழுமினர். மம்தா சதிசெய்து தாக்கப்பட்டதாகக் கூறியதைக் கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முற்பட்டனர். பாஜகவினர் மத்தியில் பால் பேசிக்கொண்டிருந்தபோது, திரிணமூல் கட்சியின் தலைவர் பிரபாகர் பேராவும் தன் ஆதரவாளர்களுடன் அங்கு வந்தார். 500 பேராவது அவருடன் இருந்திருப்பார்கள். பாஜகவினரே மம்தா மீது தாக்குதலை நடத்தியதாகக் கூறி, பாஜகவுக்கு எதிராக முழக்கம் எழுப்பினார்கள்.

இரண்டு தரப்பினரும் மாறிமாறி முழக்கம் எழுப்பவே, பிரச்னை அதிகரித்தது. இதனால் அந்த வட்டாரத்தில் 12 இடங்களில் சாலைகள் முடக்கப்பட்டு, போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

சோனாச்சுரா மற்றும் கோகுல்நகர் ஆகிய பகுதிகளும் இதில் அடக்கம். இந்த இடத்தில்தான் 2007 நந்திகிராம் போராட்டத்தில் 14 பேர் அப்போதைய இடது முன்னணி அரசாங்கத்தால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.

ரேயபுரா, டெங்குவா ஆகிய பகுதிகளில் ஏட்டிக்குப்போட்டி போராட்டங்களால் மோதல் நிலைமை உண்டானது. மம்தாவை பாஜகவினர் தாக்கியதாகக் கூறி, அவர்களைக் கண்டித்து ரேயபுரா பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம் நடத்தினார்கள். ரேயபுரா பகுதியில்தான் பிரச்சாரம்வரை மம்தா தங்கியிருக்கும் வீடு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, மால்டா மாவட்டம் ஆலம்பூர் பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவமும் நடந்திருக்கிறது. பிபால் மண்டல் எனும் அந்தத் தொண்டரின் காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. அவருக்கு மால்டா மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

கசோல் அருகில் உள்ள ரைனிகஞ்ச்சில் வசிக்கும் ஆலம்பூருக்கு ஒரு வேலையாக சென்றுவிட்டு, ஊருக்குத் திரும்புகையில் தாக்குதல் நடந்திருக்கிறது. இது பற்றி ஊடகங்களிடம் பேசிய மண்டல், ”இருசக்கர வாகனங்களில் வந்த சிலர், என்னை பாஜகவுக்கு வந்து தேர்தல் வேலை செய்யும்படி சொன்னார்கள். முடியாது என நான் சொன்னதும் என் மீது சுடத் தொடங்கினார்கள். ஐந்து ரவுண்டு சுட்டார்கள். என்னுடைய வலது காலில் ஒரு குண்டு தாக்கியது. நான் அலறியதைக் கண்டு அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் ஓடிவந்ததும், அவர்கள் ஓடிப்போய்விட்டார்கள்.” என்று கூறியுள்ளார்.

போலீஸ் விசாரணை நடந்துவருகிறது. தேர்தல் காலம் என்பதாலும் முதலமைச்சர் போட்டியிடும் தொகுதி என்பதாலும் உண்மையை பெரிய அளவில் யாரும் மறைத்துவிட வாய்ப்பில்லை.

நடந்தது என்ன என்பது விரைவில் தெரிந்துவிடும்!

- இளமுருகு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...

12 நிமிட வாசிப்பு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

7 நிமிட வாசிப்பு

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

வெள்ளி 12 மா 2021