மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 மா 2021

ஜி.கே.வாசன்: ராஜ்யசபா ராஜினாமா?

ஜி.கே.வாசன்: ராஜ்யசபா ராஜினாமா?

அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு மட்டும் தொகுதிப் பங்கீடு இன்னும் தாமதமாகிக் கொண்டிருக்கிறது.

நேற்று (மார்ச் 10) அதிமுக வெள்யிட்ட வேட்பாளர் பட்டியலில் ஜி.கே.வாசன் தனது நிர்வாகிகளுக்காக கேட்ட முக்கிய தொகுதிகள் இடம்பெற்றிருந்ததால் அதிர்ச்சியானார். இன்று (மார்ச் 11) செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே. வாசன்,

“அதிமுக கூட்டணியில் நாங்கள் 12 சீட்டுகள் கேட்டோம்.ஆனால் 6 இடங்கள் ஒதுக்க முன் வந்தார்கள். தமாகா கௌரவமாக நடத்தப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.பேச்சுவார்த்தை இன்னும் தொடர்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் உள்ளுக்குள் நடப்பதே வேறு என்கிறார்கள் அதிமுக தலைமை வட்டாரத்தில்.

“வாசன் முதலில் 12 சீட்டுகள் கேட்டார். ஆனால் 4 சீட்டுகள் மட்டுமே தர முடியும் என்று பேச்சுவார்த்தைக் குழுவினர் தெரிவித்துவிட்டனர். அடுத்தடுத்த பேச்சுகளில் சீட்டு அதிகமாகும் என்று நம்பிய தமாகாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ தமாகாவுக்கு 3 சீட்டுகள் போதும், இரட்டை இலையில் நிற்கச் சொல்லுங்கள் என்று பேச்சுவார்த்தைக் குழுவினர் மூலம் தெரிவித்துள்ளார்.

இது வாசனுக்கு தெரியப்படுத்தப்பட மேலும் அதிர்ச்சியானார் வாசன். ‘திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகளுக்கு 6 சீட்டுகள் ஒதுக்கியிருப்பது போல் எங்களுக்கு 6 சீட்டுகள் வேண்டும்’என்று கேட்டுள்ளனர் தமாகா தரப்பில். ஆனால் அதிமுக தரப்போ, ‘உங்களுக்கு ஏற்கனவே ஒரு ராஜ்யசபா கொடுத்தாகிவிட்டது. அதனால் இப்போதைக்கு 3தான் தர முடியும்’என்று கறாராக சொல்லிவிட்டனர். மேலும் அவர் கேட்ட தொகுதிகளுக்கும் சேர்த்து நேற்று வேட்பாளர்களை நேற்று அறிவித்தது அதிமுக.

இதனால் தான் அவமானப்படுத்தப்படுவதாக உணர்ந்த வாசன், தனக்கு அதிமுக கொடுத்த ராஜ்யசபா எம்பியை ராஜினாமா செய்துவிடுவதாக இன்று காலை முதல்வருக்கு தகவல் அனுப்பினார் வாசன். ஆனால் அதிமுக தரப்பிலோ, ‘3 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் நின்றால் நில்லுங்கள். இல்லையென்றால் முடிவு செய்துகொள்ளுங்கள்’ என்று தெரிவித்துவிட்டனர்.

தனக்காக அதிமுகவிடம் பேசுமாறு பாஜக டெல்லி புள்ளிகளிடமும் பேசியிருக்கிறார் வாசன். ஆனால், “ அமித் ஷா தமிழக தேர்தல் பங்கீட்டின் முழு பொறுப்பையும் முதல்வர் எட்ப்பாடி பழனிசாமியிடமே ஒப்படைத்துவிட்டார். பாஜகவுக்கே கூட அதிக தொகுதிகளை எங்களால் பெற முடியவில்லை. எனவே உங்கள் விஷயத்தில் எங்களால் தலையிட முடியாது” என்று வாசனின் டெல்லி நட்புப் புள்ளிகளும் தயங்கியிருக்கிறார்கள்.

இதனால் அதிமுக கூட்டணியில் 3 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் நிற்பதா அல்லது ராஜ்யசபா எம்பியை ராஜினாமா செய்துவிடுவதா என்று விவாதம் நடத்திக்கொண்டிருக்கிறார் ஜி.கே.வாசன். இந்த நிலையில்தான் வாசனின் தொடர் அழுத்தம் காரணமாக ஆறு தொகுதிகளை ஒதுக்க சம்மதித்திருக்கிறது அதிமுக தலைமை என்று தமாகா வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

-வேந்தன்

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

வியாழன் 11 மா 2021