‘தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்’: முதல்வர் பழனிசாமி

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி செலுத்திக்கொண்டார்.
தேர்தல் நெருங்கியுள்ள சமயத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் உட்பட பலரும் தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். நேற்று முன்தினம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன் வருவதன் மூலம், தடுப்பூசி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று (மார்ச் 11) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர், “926 தனியார் மருத்துவமனைகள் உட்படத் தமிழகம் முழுவதும் 3606 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகின்றது. 36 லட்சத்து 14 ஆயிரம் தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளன. இதுவரை தமிழகத்தில் 11.25 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 26,000 பேருக்கு கோவாக்சின் போடப்பட்டுள்ளது. இன்று நாம் தொழில் நிமித்தமாக பல்வேறு இடங்களுக்குச் செல்கிறோம், நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறோம். அப்படிச் செல்லும் இடத்தில் வைரஸ் பரவ வாய்ப்பு இருக்கிறது. எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும்” என்று பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நேற்று 171 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக. இதைத்தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ள நிலையில் முதல்வர் இன்று தடுப்பூசி செலுத்திக்கொண்டார். முன்னதாக பிரதமர் மோடியும் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-பிரியா