மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 மா 2021

4 ஆண்டுக்கு முன் சீட் கிடையாது: இன்று உத்தரகாண்ட் முதல்வர்!

4 ஆண்டுக்கு முன் சீட் கிடையாது: இன்று உத்தரகாண்ட்  முதல்வர்!

உத்தரகாண்ட் முதலமைச்சராக திராத் சிங் ராவத் நேற்று (மார்ச் 10) பதவியேற்றார். எளிமையாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ஆளுநர் பேபி ராணி மௌர்யா அவருக்குப் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தும், திராத் சிங்குக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆனால், இன்றோ முதலமைச்சர் பதவி அவரைத் தேடி வந்திருப்பது சுவையானதுதான். மக்களோடு மக்களாக சாதாரணமாகப் பழகுபவர் எனப் பெயர் எடுத்திருக்கும் இவர், தன்னை இந்தப் பதவி தேடிவரும் என நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார் என்கிறார்கள் பாஜக வட்டாரத்திலேயே.

நல்லதோ, கெட்டதோ பதவி விலகிய முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்துக்குத்தான் இவர் நன்றி சொல்ல வேண்டும். இப்போதைக்கு மக்களவை உறுப்பினராக இருந்தாலும், திராத் ராவத்துக்கு கட்சி, அரசியல் பதவிகள் புதிது அல்ல. கட்சிக்குள் மாநிலத்திலும் அகில இந்திய அளவிலும் இவர் பொறுப்புகளை வகித்திருக்கிறார்.

உத்தரப்பிரதேசத்திலிருந்து உத்தரகாண்ட் பிரிக்கப்பட்டபோது, இடைக்காலத்துக்கு அமைக்கப்பட்ட அரசாங்கத்தில் திராத் ராவத் கல்வி அமைச்சர் ஆனார். அதாவது, உத்தரகாண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரை முதல் கல்வியமைச்சர்.

பாஜகவில் 2013 முதல் 2015 வரை மாநிலத் தலைவராக இருந்துள்ள திராத், இப்போது அகில இந்திய செயலாளர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற உத்தரகாண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் சௌபத்தக்கல் தொகுதியில் போட்டியிட திராத் வாய்ப்பு கேட்டார். அதற்கு முன்னர் 2012ஆம் ஆண்டு தேர்தலில் அங்கு அவரே சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை முன்னுரிமையாகக் கருதி வாய்ப்பு கேட்டபோதும், கட்சிக்குள் பெரும் செல்வாக்குமிக்கவரான சத்பால் மகாராஜுக்கே வாய்ப்பு தரப்பட்டது.

ஆனாலும் திராத்துக்கு அகில இந்திய செயலாளர் பதவியை அளித்த கட்சி மேலிடம், 2019 மக்களவைத் தேர்தலில் பௌரி கார்வால் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தியது. அதில் வெற்றிபெற்று, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவருகிறார்.

அந்த வெற்றியும் சும்மா நிகழ்ந்துவிடவில்லை. 3,02,669 வாக்குகள் வித்தியாசத்தில் போட்டி வேட்பாளரைத் தோற்கடித்து, எம்.பி ஆனவர் திராத். இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டவர், முன்னாள் முதலமைச்சரும் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான பி.சி.கந்தூரியின் மகன் மணிஷ் கந்தூரி.

அந்தப் போட்டியில் பெரிய கந்தூரிக்கு ரொம்பவும் தர்மசங்கடமானது தனிக்கதை. திராத்தான் கந்தூரியின் அரசியல் வாரிசு எனப் பரவலாக அறியப்பட்டநிலையில், குடும்ப வாரிசும் அரசியல் வாரிசும் எதிரெதிராகப் போட்டியிட்ட நிலைமை. இரண்டு பேரும் மனஸ்தாபம் அடைந்துவிடக் கூடாது என யாருக்கும் ஆதரவாக கள வேலைகள் செய்யாமல், ஒதுங்கிக்கொண்டார் பி.சி. கந்தூரி. ஆனாலும் அவரின் சீடரான திராத்துக்குதான் வெற்றி கிடைத்தது, அதுவும் பெரு வெற்றி.

தாறுமாறாக கட்சிக்குள் ஆள்களை நுழைத்துவிட்டு, கடுமையான பிரச்னைகளை எதிர்கொண்டுவிட்டு, சோதனையான கட்டங்களில் அதை மீண்டும் தூக்கி நிறுத்துவது யார் என்னும் கேள்வி எழும்போதுமட்டும், எந்தக் கட்சியிலும் வரலாற்றை ஆய்வுசெய்து, தேவதூதரைத் தேடிக் கண்டடைகிறார்கள்.

உத்தரகாண்ட் சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு(?) நடைபெறும் தேர்தலில், இந்த தேவதூதர் நற்செய்தியை அளிப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- இளமுருகு

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ...

4 நிமிட வாசிப்பு

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ஸ்டாலின்

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

3 நிமிட வாசிப்பு

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா? ...

3 நிமிட வாசிப்பு

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா?

வியாழன் 11 மா 2021