மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 மா 2021

சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு இல்லை சீட்டு; வேலுமணி வைத்த வேட்டு!

சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு இல்லை சீட்டு; வேலுமணி வைத்த வேட்டு!

குழம்பி, குமுறி இப்போது கொதித்துக்கொண்டிருக்கிறது கொங்கு மண்டல அதிமுக. கடந்த முறை ஜெயலலிதாவால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, எம்.எல்.ஏக்களான பலருக்கு இப்போது சீட் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறி, அதிமுக தலைமை ஆளுமையை வெளிக்காட்டியுள்ளது. இதில் மற்ற பகுதிகளைவிட கொங்கு மண்டலத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்கள்தான் அதீதமான ஆவேசத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர். காரணம், மற்ற பகுதிகளைவிட அங்கு அதிமுகவுக்கு இருக்கும் செல்வாக்குதான்.

நேற்று வெளியிடப்பட்ட அதிமுக இரண்டாவது வேட்பாளர் பட்டியலில், பெரும்பாலும் சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் சீட் தரப்பட்டுள்ளது. ஆனால், கொங்கு மண்டலத்துக்குட்பட்ட கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள ஆறு எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

கோவையில் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, கிணத்துக்கடவு எம்.எல்.ஏ சண்முகம், வால்பாறை (தனி) கஸ்துாரி வாசு, மேட்டுப்பாளையம் ஓ.கே.சின்ராஜ் ஆகியோருக்கு சீட் வழங்கப்படவில்லை. அதேபோல நீலகிரியில் உள்ள மூன்று தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் வென்ற ராமுவுக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் எம்.எல்.ஏ நடராஜனின் பெயரும் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை.

இவர்களைத் தவிர்த்து, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனனுக்கு, அந்தத் தொகுதியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு, கோவை வடக்கு தொகுதியில் சீட் தரப்பட்டுள்ளது. தெற்கு தொகுதி, கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் அக்கட்சியின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடவுள்ளார். இந்தத் தகவல் நேற்று காலையில், வானதிக்கு விமான நிலையத்தில் வரவேற்பு கொடுத்தபோதுதான் அம்மன் அர்ஜுனன் குடும்பத்தினருக்கே தெரியவந்தது.

தகவல் தெரிந்ததும், தொகுதியில் உள்ள அம்மனின் ஆதரவாளர்கள் பப்பையா ராஜேஷ், காந்திபுரம் அசோக் என பலரும் தொண்டர்களைத் திரட்டி வந்து கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாரதிய ஜனதாவுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.

அவர்களில் சிலர் வேலுமணிக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். ‘‘அர்ஜுனன் அண்ணன், அமைச்சர் வேலுமணியைத்தான் முழுமையாக நம்பிக்கொண்டிருந்தார். ஆனால், தன்னுடைய பாரதிய ஜனதா தொடர்புகளை பகைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காக, இப்போது அவர் கைவிட்டு விட்டார். தேர்தலில் அதிமுக தோல்வியடையும்பட்சத்தில், அவர் பாரதிய ஜனதாவுக்குப் போனாலும் போய்விடுவார். உயிரே போனாலும் அர்ஜுனன் அண்ணன் அதிமுகவை விட்டுப் போகமாட்டார். கோவையில் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு ஆதரவாகவே பட்டியல் உள்ளது’’ என்று குமுறித்தீர்த்தார்கள்.

சிறிது நேரத்தில் அமைச்சர் வேலுமணியிடமிருந்தும், எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனனிடமிருந்தும் போன் வந்ததும் அந்தக் கூட்டம் எங்கே போனதென்றே தெரியாமல் கலைந்துவிட்டது. அதே அலுவலகத்தில் மாலையில் கூடிய அதே நிர்வாகிகள் பலரும், ‘வானதியை கண்டிப்பாக ஜெயிக்க வைப்போம்’ என்று சொல்லி அதிர வைத்தனர். ஆனால் கோவை தெற்கில் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக அதிமுகவினர் எவ்வளவு தீவிரமாக வேலை பார்ப்பார்கள் என்பதை இப்போதைக்கு உறுதியாகச் சொல்ல முடியாது.

சீட் மறுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் அதிகமான கொதிப்புக்கு உள்ளானது, மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ ஓ.கே.சின்னராஜ்தான். மூன்று முறை தொடர்ந்து எம்.எல்.ஏவாக இருந்தும், அந்தத் தொகுதிக்கு அவர் பெரிதாக அல்ல, சிறிதாகக் கூட எதையும் செய்யவில்லை என்ற அதிருப்தி இருப்பதால்தான் சின்னராஜ் சமுதாயமான ஒக்கலிக்க கவுடர் சமுதாயத்தைச் சேர்ந்த ஏ.கே.செல்வராஜுக்கு வேலுமணி சீட் வாங்கிக் கொடுத்ததாக அதிமுகவினர் தகவல் தெரிவித்தனர். கடைசி நிமிடம் வரை தலைமையிடம் ஓ.கே.சி முட்டி மோதியும் எந்த பலனும் கிடைக்காமல் போய்விட்டது. அவர் என்ன செய்யப்போகிறார் என்பது தெரியவில்லை.

அடுத்ததாக ஆறுக்குட்டியும் கடுமையான கோபத்தில் இருப்பதாகத் தகவல் பரவியுள்ளது. அவரும் இதே தொகுதியில் இரண்டு முறை எம்.எல்.ஏவாக இருந்தவர். இந்த முறை அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏவான பி.ஆர்.ஜி.அருண்குமாருக்கு தொகுதி மாறி சீட் வழங்கப்பட்டுள்ளது. உண்மையில் இதுதான் அருணின் சொந்தத் தொகுதி என்ற முறையில், ஆறுக்குட்டியின் எதிர்ப்பு அவரை பெரியளவில் பாதிக்காது என்று நம்புகிறார்கள் அதிமுகவினர்.

கிணத்துக்கடவு சண்முகம், பல்லடம் நடராஜன், குன்னூர் ராமு ஆகியோருக்கு இந்த முறை சீட் இல்லை என்பது எப்போதோ உறுதியான விஷயம் என்பதால் அந்தத் தொகுதிகளில் பெரிதாக எந்த அதிர்வும் ஏற்படவில்லை. ஆனால், வால்பாறை தனி தொகுதியில் கஸ்தூரி வாசுவுக்கு மீண்டும் சீட் தரப்படும் என்பதற்கு ஒரு காரண கதை உலவி வந்தது. கஸ்தூரியின் கணவர்தான் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். அவர் மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான், அவரை இத்தொகுதியிலுள்ள பல்வேறு சமுதாயத்தினரும் ஆதரித்தனர் என்றும், இப்போது வெளியூர்க்காரரான அமுல் கந்தசாமியை வேட்பாளராக அறிவித்திருப்பதால் அவருக்கு அதே அளவுக்கு ஆதரவு கிடைக்க வாய்ப்பில்லை என்றும் வால்பாறை தொகுதியிலுள்ள சமவெளிப் பகுதிகளில் பேக்கரி பெஞ்சுகளில் பலரும் பேசக்கேட்க முடிகிறது.

இதே வால்பாறை தொகுதியை தமாகா தலைவரும், முன்னாள் வால்பாறை எம்.எல்.ஏவுமான கோவை தங்கம் குறிவைத்திருந்தார். உறுதியாக அவருக்குத்தான் சீட்டு என்று தகவல்கள் பரவிவந்த நிலையில், அமுல் கந்தசாமி அறிவிக்கப்பட்டதில் தமாகா தரப்பிலும் கடும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இவர்களில் பலருக்கு சீட் கிடைக்காமல் போனதற்கும், புதியவர்கள் பலருக்கு சீட் கிடைத்ததற்கும் அமைச்சர் வேலுமணிதான் காரணம் என்று கொங்கு மண்டலத்தில் உள்ள அதிமுகவினர் அனைவருமே உறுதியாக நம்புகின்றனர்.

அதே நேரத்தில், வேலுமணியின் வியூகத்தையும் உடைத்து, தான் நிற்க விரும்பிய பொள்ளாச்சி தொகுதியில் மீண்டும் சீட் வாங்கியதில் பொள்ளாச்சி ஜெயராமன் ஜெயித்துவிட்டதையும் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். அவருடைய மகனின் பெயரை பாலியல் விவகாரத்தில் இழுத்து விட்டதில், திமுகவினருடன் அதிமுகவினர் பலரும் கைகோத்திருந்ததாக ஜெயராமனின் ஆதரவாளர்கள் முன்பே கூறி வந்தனர். அதேபோன்று, இந்த முறை பொள்ளாச்சி தொகுதியில் கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்குத்தான் வாய்ப்புத் தர வேண்டுமென்று முதல்வர் பழனிசாமியிடம் நேரடியாக கட்சி நிர்வாகிகள் பலரும் முறையிடவும் செய்திருந்தனர். எல்லா முயற்சிகளையும் முறியடித்து முதல்கட்டமாக வென்றிருக்கிறார் ஜெயராமன்.

வாய்ப்பு மறுக்கப்பட்ட சிட்டிங் எம்.எல்.ஏக்களில் ஓ.கே.சின்னராஜ், ஆறுக்குட்டி இருவருக்கு மட்டுமே ஆதரவாளர் வட்டம் இருக்கிறது. மற்றவர்கள் யாரும் உள்ளே இருந்தாலும், வெளியே போனாலும் பெரிய சாதகமோ, பாதகமோ ஏற்படப் போவதில்லை. ஆனால் வேலுமணியால்தான் தங்களுடைய வாய்ப்பு பறி போயிருக்கிறது என்று கருதும் இவர்கள் எந்த நேரத்திலும் எதிர்வினையாற்றவும் வாய்ப்பு அதிகமுள்ளது.

சீட் மறுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களின் ஆதரவாளர்கள், ‘‘வேலுமணியின் பொறுப்பில் இருந்த 21 தொகுதிகளை வேறு எந்தக் கட்சிக்கும் தராமல், பாரதிய ஜனதாவுடன் மட்டும் பங்கு போட்டுக்கொண்டதில் அவருடைய விருப்பம் மட்டுமின்றி, அவருடைய எதிர்காலத்துக்கான திட்டமும் அடங்கியிருக்கிறது. ஆனால், பாரதிய ஜனதா நிற்கும் இரண்டு தொகுதிகளிலும் அந்தக் கட்சி வேட்பாளர்கள் ஜெயிப்பது அவ்வளவு எளிதில்லை. கோவை தெற்கில் அம்மனை நிறுத்தியிருந்தால் அசால்ட் ஆக வென்றுவிடுவார். அவரை தொகுதி மாற்றியதால் இரண்டு தொகுதிகளையும் கூட்டணி இழப்பதற்கே வாய்ப்பு அதிகம்’’ என்றார்கள்.

கொங்கு மண்டலத்தில் அதிமுக வென்றாலும் தோற்றாலும்... எல்லாப்புகழும் வேலுமணிக்கே!

–பாலசிங்கம்

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

வியாழன் 11 மா 2021