மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 மா 2021

தேமுதிக மாசெக்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

தேமுதிக மாசெக்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக இன்று (மார்ச் 9) நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பின் அறிவித்துள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழகத்தில் தேமுதிக தொடரவேண்டும் என்று அதிமுகவினர் பேச்சுவார்த்தை நடத்திவந்தார்கள். இறுதியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரடியாகத் தலையிட்டு, சுதீஷ் மற்றும் பார்த்தசாரதி உட்பட சிலரை வீட்டுக்கு வரவழைத்து சுமுகமாகப் பேசி அனுப்பியபோது அக்காவிடம் தெரியப்படுத்துகிறேன் என்று விடைபெற்றார்கள்.

தேமுதிக மாவட்டச் செயலாளர்களும் அதிமுகவுடன் கூட்டணி உறுதியாகிவிட்டது என்று டென்ஷனை குறைத்துக்கொண்டிருந்த நிலையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டினார் பிரேமலதா.

காலை பத்தரை மணிக்கு மேல் கூட்டம் கூடியது. “உங்களை அவசரமாக வரவழைத்தது ஏனென்றால்... அதிமுக கூட்டணியில் 13 தொகுதிகள்தான் கொடுப்பதாகச் சொல்கிறார்கள். அவர்களுடன் கூட்டணி நீடிக்க வேண்டுமா, வேண்டாமா எனக் கருத்து கேட்கத்தான் உங்களை வரச்சொன்னேன் ” என்றார் பிரேமலதா.

மதுரை மாவட்டச் செயலாளர் கவியரசு பேசும்போது, “அதிமுக,வினர் 9 சீட் கொடுப்போம் என்று பேச்சுவார்த்தை ஆரம்பித்தபோதே நாம் வெளியில் வந்திருக்கவேண்டும். இவ்வளவு லேட் செய்துட்டீங்க. அதனால்தான் அவர்கள் 13 கொடுப்பதாகச் சொல்கிறார்கள். முக்கியத்துவமும் கொடுக்காமல் அசிங்கப்படுத்துகிறார்கள். இனி அவர்களுடன் கூட்டணி வேண்டாம்” என்றார்.

அவரைத் தொடர்ந்து 20 மாவட்டச் செயலாளர்களும், “ இனி அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம். சிலர் கமல் பற்றி பேசுகிறார்கள் அவர்களுடனும் கூட்டணி வேண்டாம்”என்று கூறியுள்ளார்கள். சிலர், “அமமுகவுடன் சேர்ந்து தேர்தலைச் சந்திக்கக் கூட்டணி பேசுங்கள்”என்று கூறியுள்ளார்கள்.

பிரேமலதா, “நாம் யாரோடும் கூட்டணிக்குத் தேடிப்போய் பேசவில்லை. நம்மோடுதான் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தவர்கள். நம்ம துணைச் செயலாளர்கள் பேச்சுவார்த்தைக்குச் சென்றபோது கே.பி.முனுசாமி, ’பாமகவால் எங்களுக்கு 90 இடத்தில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உங்களிடம் அந்த அளவுக்கு இல்லை. அதனால் அவர்களுக்கு (பாமக) கொடுத்த அளவுக்கு உங்களுக்கு எப்படிக் கொடுக்கமுடியும்?’ என்று கேட்டுள்ளார். கே.பி.முனுசாமி பாமகவின் ஏஜென்ட். ஜெயலலிதா இருந்தபோதே அதிமுகவுக்கு துரோகம் செய்து பாமகவை வெற்றி பெறவைத்தவர்தான் முனுசாமி.

வரக்கூடியத் தேர்தலில் அதிமுக தோற்கவேண்டும். அப்போதுதான் அவர்கள் நமது பலத்தை உணர்வார்கள். அதற்கான வழிகளையும் சொல்கிறேன். மாவட்டச் செயலாளர்கள் ஒவ்வொருவரும் இரண்டு தொகுதியில் போட்டியிடுங்கள். இரண்டாயிரம் மூவாயிரம் ஓட்டு வித்தியாசம்தான் வெற்றியைத் தீர்மானிக்கும். அந்த வாக்குகளை நீங்கள் பிரித்தால் அதிமுக தோற்கும்” என்று பேசியுள்ளார்.

பின் கூட்டணி முறிவு பற்றிய அறிவிப்பு வெளியானதும் மக்கள் நீதி மய்யத்தின் பொன்.ராஜ் தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்தார். இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், “பொன்ராஜ் தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்திருப்பதாக செய்திதான் பார்த்தேன். அது அப்படியே இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் மீண்டும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார் பிரேமலதா. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது சாத்தியமா? நாளை வேட்பாளர்களே பணத்துக்கு ஆசைப்பட்டு வேறு ஏதாவது கட்சியில் சேர்ந்துவிட்டால் என்ன செய்வது? அல்லது அதிமுகவை தோற்கடிக்க கூட்டணி வைக்கலாமா? என்பது போன்ற ஆலோசனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன.

-வணங்காமுடி

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

செவ்வாய் 9 மா 2021