மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 மா 2021

திருச்சி மாநாடு: நெரிசலில் சிக்கிய ஸ்டாலினுக்கு கார் கொடுத்து உதவியவர் யார்?

திருச்சி மாநாடு:  நெரிசலில் சிக்கிய ஸ்டாலினுக்கு கார் கொடுத்து உதவியவர் யார்?

திருச்சி மாநாட்டில் கூட்ட நெரிசலால் தன் காரில் தன்னால் வர முடியவில்லை என்றும், தனக்கு கார் கொடுத்து ஒருவர் உதவினார் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுகவின் சிறப்புப் பொதுக்கூட்டம் என்ற பெயரில் மாநாடு மார்ச் 7 ஆம் தேதி திருச்சியை அடுத்த சிறுகனூரில் நடந்தது. இந்த மாநாட்டில் சுமார் ஆறு லட்சம் பேர் வரை கலந்துகொண்டதாக மாநாட்டு ஏற்பாட்டாளரும் திமுக முதன்மைச் செயலாளருமான கே.என். நேரு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக நன்றி தெரிவித்து கட்சியினருக்கு ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார். அதில்,

“மனதெங்கும் நீக்கமற நிறைந்திருப்பது உங்கள் திருமுகம்தான். மகத்தான மாநாடு போல - மாற்றாரை மருள வைக்கும் வகையில் நடைபெற்ற திருச்சி - சிறுகனூர், தமிழகத்தின் ‘விடியலுக்கான முழக்கம்’ பொதுக்கூட்டத்தின் எண்ண அலைகள் எனது இதயக் கரைகளில் ஓயாது எழுச்சி ஒலி எழுப்பிக் கொண்டே இருப்பதால், அதிலிருந்து அடுத்தடுத்த பணிகளில் முழுமையாக ஈடுபட என்னால் இன்னும் இயலவில்லை.

திருச்சிக்குள் கடல் புகுந்ததா? திருவரங்கம் - திருவானைக்காவல் திருக்கோவில்களின் திருவிழாக்கள் ஒருசேர நடைபெற்றதா? திடீர் ஜனநாயகப் புரட்சிக்கான சிந்தை கவர் அடையாளமா? திக்கெட்டும் வாழும் தமிழ் இனத்தின் ஒட்டுமொத்த உணர்வுத் திரட்சியா? என்ன சொல்வது - எப்படிப் பொருத்தமாக விளக்குவது என்றே தெரியவில்லை. அப்படி ஒரு எழுச்சிப் பிரமாண்டம்!

வெற்றி… வெற்றி… மகத்தான வெற்றி... வியக்க வைக்கும் வெற்றி என்பதைத்தாண்டி சொற்கள் சுரக்கவில்லை! தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளான உங்களுக்கு, தமிழகத்தின் அடுத்த பத்தாண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டத்தை வெளியிடும் சிறப்புப் பொதுக்கூட்டம் குறித்த அறிவிப்புடன் ஒரு கடிதம் எழுதினேன். தமிழகத்தின் ‘விடியலுக்கான முழக்கம்’ என்ற பெயரில் அந்தச் சிறப்புப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது என்பதையும், அதில் இடம்பெறும் நிகழ்ச்சிகளையும் நேரத்தையும் சுட்டிக்காட்டி, உடன்பிறப்புகளாம் உங்கள் பங்கேற்புக்கான அன்பு அழைப்பு விடுத்து மற்றொரு கடிதம் எழுதினேன்.

இரண்டு கடிதங்கள் - இடைவெளியோ குறைவு - இடர்ப்பாடுகளோ ஏராளம்; எனினும் அந்தப் பயணத்தை மிகக்குறுகிய நாட்களுக்குள் இமாலய வெற்றியை வழங்கிய உடன்பிறப்புகளாகிய உங்களுக்கு, எனது இதயத்தில் பூத்த நன்றி நறுமலர்களை வாரி வழங்கி என் வாழ்த்துகளை வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ள ஸ்டாலின் தொடர்ந்து,

“மார்ச் 14-ஆம் நாள் கழகத்தின் மாநில மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, தேர்தல் தேதி வெளியிடப்பட்டதால், அதனை ஒத்தி வைத்த நிலையில், மாநாட்டு வளாகத்தை அரும்பாடுபட்டு உருவாக்கியிருந்த ஆற்றல் மிகு சகோதரர் - கழகத்தின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அவர்கள், ஒத்தி வைத்த மாநாட்டை மிஞ்சும் வகையில் வெற்றிகரமாக நடத்திக் காட்டிவிட்டார். நேருவிடம் ஒரு பணியை ஒப்படைத்துவிட்டால், நாம் அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை. எல்லாவற்றையும் நேர்த்தியாகச் செய்து முடித்துவிட்டு, நம்மை அழைக்கக்கூடிய ஆற்றலாளர்.

இம்முறையும் அதனைக் கச்சிதமாக செய்து, காண்போர் கண்களில் ஆச்சரியம் நிறைந்திடச் செய்திருக்கிறார். தி.மு.க.வின் கொள்கைகளை முன்னிறுத்தும் பணியை எள்ளளவும் குறைவின்றிச் செவ்வனே செய்திருந்தார் கே.என்.நேரு.

காலை நிகழ்வில் கழகக் கொடியை 90 அடி உயரக் கொடிக்கம்பத்தில் ஏற்றி வைக்கும்போது காணுமிடம் எல்லாம் கழகத் தோழர்கள் நிறைந்திருந்து, உணர்ச்சிமிகு முழக்கங்களை எழுப்பினார்கள். அதன்பிறகு, அலை அலையாய் - பேரலையாய் - பெருங்கடலாய் உடன்பிறப்புகள் சிறுகனூர் நோக்கி பெரும்பலம் காட்டிய நிலையில், கழகத்தின் இந்த எழுச்சியை காவல்துறை நண்பர்களால் முன்கூட்டிக் கணக்கிட முடியவில்லை. அதனால், மாலை நிகழ்வுக்காக திருச்சியிலிருந்து சிறுகனூர் பொதுக்கூட்ட வளாகத்திற்கு நான் புறப்பட்டுச்செல்லும்போது கடுமையான போக்குவரத்து நெரிசல். நேரு அவர்கள் முன்னின்று, இயன்ற அளவு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியும்கூட என்னுடைய கார், தொடர்ந்து பயணிக்க வசதியில்லை. அதனால், மாற்றுப்பாதையை உடனடியாகத் தேர்வு செய்த நேரு அவர்கள், பொதுக்கூட்டத்திற்காக வந்திருந்த மதுரையைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவரிடம் நிலைமையைச் சொல்ல, அவரும் அவருடன் வந்திருந்தவர்களும் எனது பயணத்திற்காக தங்களின் காரைத் தந்தார்கள். அதில்தான் நானும் நேருவும் பயணித்து, சிறுகனூர் பொதுக்கூட்ட மேடைக்கு ஒரு வழியாக வந்து சேர்ந்தோம்” என்று தான் மாநாட்டு மேடைக்கு வந்து சேர்ந்த விதத்தை அந்தக் கடிதத்தில் விளக்கியிருக்கிறார் ஸ்டாலின்.

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

12 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி! ...

3 நிமிட வாசிப்பு

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி!

செவ்வாய் 9 மா 2021