மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 மா 2021

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்! அடுத்து என்ன?

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்!  அடுத்து என்ன?

அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்துள்ளது. இன்று (மார்ச் 9) தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடந்த மாசெக்கள் கூட்டம் பிற்பகல் 1 மணிக்கு மேல் முடிந்தது.

மாவட்டச் செயலாளர்களின் கூட்டத்தில் பேசிய பொருளாளர் பிரேமலதா, “இன்று உங்களை அவசரமாக வரச் சொல்லியிருக்கிறோம். காரணம், அதிமுக கூட்டணியில் நமக்கு 13 இடங்கள்தான் தருவதாக கடைசியில் சொல்கிறார்கள். இதுபற்றி கேட்பதற்காகத்தான் உங்களை வரச் சொல்லியிருக்கிறோம்” என்று சொல்ல...

சில மாவட்டச் செயலாளர்கள் எழுந்து, “அவர்கள் ஒன்பது சீட்டுகளில் இருந்து என்றைக்கு ஆரம்பித்தார்களோ அப்போதே நாம் கூட்டணியில் இருந்து விலகியிருக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு வந்து இப்படிச் சொல்கிறீர்கள். நாம் கூட்டணியில் இருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லை. அதிமுக தலைமையிலேயே சிலர் பாமகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டோடும் தேமுதிகவை வெளியேற்றும் முயற்சியோடும் இருக்கிறார்கள். எனவே தாமதமான இந்த முடிவை இப்போதாவது நாம் எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார்கள்.

இதன் அடிப்படையில், கூட்டம் முடிந்ததும் விஜயகாந்த் வெளியிட்ட அறிவிப்பில், “நடைபெற உள்ள 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றைக் கருத்தின் அடிப்படையில் இன்றிலிருந்து அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆலோசனைக் கூட்டத்திலிருந்து வெளியே வந்த எல்.கே சுதீஷ் , “சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற தொகுதிப் பங்கீடு குறித்தப் பேச்சுவார்த்தையில் நாங்கள் கேட்ட தொகுதி எண்ணிக்கையும், கேட்ட தொகுதிகளையும் வழங்க அதிமுக தயாராக இல்லை. எனவே, கூட்டணியிலிருந்து வெளியேறுவது என்று முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றுதான் தேமுதிக தொண்டர்கள் அனைவருக்கும் தீபாவளி. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்படும்”என்று கூறியுள்ளார்.

கூட்டணியில் தனக்காக பாஜக எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என்பதால் பாஜக மீதும் கோபத்தில் இருக்கிறார்கள் தேமுதிக தலைமை நிர்வாகிகள்.

தேமுதிக அடுத்து தனித்துப் போட்டியிடப் போகிறதா, வேறு ஏதேனும் கூட்டணிக்கு போகிறதா என்ற விவாதம் அரசியல் அரங்கில் சூடுபிடித்துள்ளது.

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

செவ்வாய் 9 மா 2021