மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 மா 2021

கூட்டணியா- தனித்தா? தேமுதிக தொண்டர்கள் மனநிலை என்ன?

கூட்டணியா- தனித்தா?  தேமுதிக தொண்டர்கள் மனநிலை என்ன?

ஆறு முறை அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், மார்ச் 7 ஆம் தேதி இரவு எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் முதல்வர், துணை முதல்வரை சந்தித்து பேச்சு நடத்தியும் இன்று வரை அதிமுக- தேமுதிக கூட்டணி பற்றிய ஒரு இறுதி முடிவு வரவில்லை.

இந்த நிலையில்தான் தேமுதிக மாவட்டச் செயலாளர்களின் அவசரக் கூட்டம் இன்று (மார்ச் 9) காலை 11 மணியளவில் தொடங்கியது. விஜயகாந்த் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அவைத்தலைவர் டாக்டர்.V.இளங்கோவன், கழக கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் , கழக துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, ஏ.எஸ்.அக்பர், பேராசிரியர்.S.சந்திரா மற்றும் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டம் நடந்துகொண்டிருக்கும் புகைப்படங்கள் விஜயகாந்தின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் தளத்தில் 11.45மணிக்கு பதிவேற்றப்பட்டது. அந்த பதிவில் தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் பல கருத்துகளை பின்னூட்டங்களாக இட்டிருந்தனர்.

ரோஹித் என்பவர், “ தற்பொழுதைய சூழலில் அஇஅதிமுக கூட்டணியில் பதிமூன்று தொகுதிகள் கிடைத்தாலும் அத்தனையிலும் வென்று கட்சியின் அங்கீகாரத்திற்கு ஆபத்தில்லாமல் பார்த்துக் கொள்வதே சாணக்கியத்தனம்... தனித்து நின்று ஓட்டுகளை பிரிப்பதை விட பதிமூன்று தேமுதிக சட்டசபை உறுப்பினர்கள் தான் முக்கியம்... கட்சி வளர்க்க இது உதவும்”என்று பதிவிட்டிருந்தார்.

உடனே பல தேமுதிகவினர், “ரோஹித் பேக் ஐடி,நீ சங்கி. உன் கூட்டணி வச்சிதாண்டா நாங்க இப்படி ஆனோம்”என்று கோபத்தை இறைத்துள்ளனர்.

ராக்ஃபோர்ட் பாலா என்பவர், “கூட்டணி வேண்டாம்.தனித்து களம் காணுங்கள்.எதிர்காலம் நமக்கு நல்ல வாய்ப்பை தர காத்திருக்கிறது,கேப்டன் உருவாக்கிய கட்சியை கேவலமாக பார்ப்பவர்களுக்கு,நமது பலத்தை நிரூபித்து அவர்களுக்கு தக்க பாடத்தை புகட்டலாம்.நமக்கு தொண்டர்கள் ,ரசிகர்கள் பலம் அதிகமுள்ள தொகுதிகளில் களம் காணலாம். பெரும்பாலான பொதுமக்களின் கருத்து,தேமுதிக தனித்து நின்றால் விஜயகாந்த் அவர்களுக்கு தான் என் ஓட்டு என்கிறார்கள்.இரு தலைமையை, விரும்பாதவர்களும், புதிய இளம் வாக்காளர்களுக்கும், முதல் தேர்வு ,நமது தலைவரே !என் காதுபட கேட்டறிந்தது. இப்போதுஅதிமுக கூட்டணிக்கு செல்வாக்கில்லை! கூட்டுவைத்தால் நமக்கும் அதே நிலைதான்.எதிர்காலம் கேள்வி குறியாயிடும்!நல்லவர் ஆரம்பித்த கட்சியை பலவீனப்படுத்தாமல், தனித்து நின்று தன் தனிதிறனை வெளிப்படுத்தி,பலத்தை நிறுவிப்போம் சில தொகுதிகளில் வெற்றிப் பெற வாய்ப்பும் இருக்கிறது. நமது கட்சியின் செல்வாக்கை நமது தலைமை முதல் நம்ப வேண்டும்.முயற்சியே பல நல்ல மாற்றங்களை தரவல்லது. 2016 கடந்த கால நிகழ்வுகளை நினைத்து பயப்பட வேண்டாம்.அது சூழ்ச்சி! இன்றைய அரசியல் களம் வேறு”என்று கூறியுள்ளார்.

“கேப்டனே தனியாக நின்று தோற்பதை விட கூட்டணியில் இருந்து 5.6 எம்எல்ஏவை சட்டமன்றதுக்கு அனுப்பலாம்” என்று சின்னதம்பி என்பவர் பதிவிட்டுள்ளார்.

பாலகிருஷ்ணன் மருதமுத்து என்பவர், “இந்த கூட்டணியில் சேர்வதால் நம் தேமுதிக வில் அதிகளவில் உள்ள சிறுபான்மையினர் ஓட்டும் கிடைக்க வாய்ப்பு குறைவு. உண்மை தொண்டர்களின் வேதனையை எதிர்கொள்ள நேரிடும். தமிழ்நாட்டில் பி ஜே பி எதிர்ப்பலை அதிகம் உள்ளதால் எதிர்பார்ப்பு ஏமாற்றம் தான் .. வேட்பாளர் அறிவிக்கும் முன்பே நம் நிலைப்பாட்டை (தனித்து) எடுத்துவிடலாம்.. எதுவாயினும் இறைவன் கருணையினால் நன்றாக அமையும்”என்று கூறியுள்ளார்.

சந்துரு என்பவர் வித்தியாசமான ஒரு கருத்தை கூறியுள்ளார். “தொண்டர்கள் விருப்பப்படி தினகரன் பக்கம் போவோம்.அவரை தலைமை ஏற்று தேர்தலை சந்திப்போம் என்று பல மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் சொல்லிய நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் பிடிவாதம் காரணமாக தோல்வி உறுதியான நிலையில்... பல மாவட்டங்களில் வேட்பாளர்கள் தேர்தலில் நான் நிற்க போவதில்லை என்று போர்க்கொடி தூக்கி கொண்டு உள்ளார்களாம்.மக்கள் பேசிக் கொள்கிறார்கள்”என்று அவர் பதிவிட்டுள்ளார்.

விஜயகாந்த்தின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வந்த மாசெக்கள் கூட்டம் பற்றிய அறிவிப்பில் விஜயகாந்தின் பெயரே இல்லை. இதைக் குறிப்பிட்டு, “முதலில் கேப்டன் பெயரை போடுங்க”என்று காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஜெயலட்சுமி பதிவிட்டுள்ளார்.

விஜயகாந்த் நன்றாக இருந்தால் இந்த நிலை நமக்கு வந்திருக்காது என்று பலரும், தனித்துப் போட்டியிடுங்கள், தினகரனோடு இணைந்து பயணியுங்கள் என்று கணிசமானோரும் கருத்துக் கூறியிருக்கிறார்கள்.

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

செவ்வாய் 9 மா 2021