மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 மா 2021

அவதூறு வழக்கு: ஸ்டாலின் ஆஜராக உத்தரவு!

அவதூறு வழக்கு: ஸ்டாலின் ஆஜராக உத்தரவு!

முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாகத் தொடர்ந்த வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், என். வைரவன்பட்டியில் , பிப்ரவரி 8 ஆம் தேதி ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, திமுக தலைவர் ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிரச்னைகளை கேட்டறிந்து பலரது மனுக்களைப் புகார் பெட்டி மூலம் வாங்கிக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துப் பேசினார். மத்திய பாஜக ஆட்சி, அதிமுக ஆட்சியை விமர்சித்த அவர், “புதிய வேளாண் சட்டங்களை ஆதரித்து இந்திய விவசாயிகளின் வாயில் விஷத்தை ஊற்றியவர் பழனிசாமி” என்று கடுமையாக விமர்சித்தார்.

இதனைத்தொடர்ந்து சிவகங்கை அதிமுக சார்பில் ஸ்டாலின் மீது மாவட்ட எஸ்.பியிடம் புகார் கொடுக்கப்பட்டது. சிவகங்கை மாவட்ட குற்றவியல் அரசு வழக்கறிஞர் ராமநாதன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அனுமதியோடு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் திமுக தலைவருக்கு எதிராக மனு தாக்கல் செய்தார்.

கடந்த மார்ச் 3ஆம் தேதி தாக்கல் செய்த மனுவில், “ முதல்வரைப் பற்றி அவதூறாகப் பேசக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இவ்வாறு பேசியிருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுமதி சாய்பிரியா ஏப்ரல் 9 ஆம் தேதி சிவகங்கை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலினை நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

இதனிடையே, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்தும், அரசு மற்றும் காவல்துறை செயல்பாடுகள் குறித்தும் உண்மைக்குப் புறம்பாகக் கூறியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசின் சார்பில் தொடர்ந்த 5 அவதூறு வழக்குகளை நேற்று சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

4 நிமிட வாசிப்பு

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

செவ்வாய் 9 மா 2021