மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 மா 2021

ரங்கசாமிக்கு வந்த டெல்லி கால்... புதுவை பாஜக கூட்டணி பின்னணி!

ரங்கசாமிக்கு வந்த டெல்லி கால்... புதுவை பாஜக கூட்டணி பின்னணி!

தொகுதிப் பங்கீட்டுப் பிரச்னையால் புதுவையில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் தனியாகச் செயல்பட முயன்றது, இப்போதைக்கு கைமேல் பலனைக் கொடுத்திருக்கிறது.

ஆசைகாட்டி மோசம் செய்யப்போன கதையாக, கடைசி நேரத்தில் முதலமைச்சர் பதவியை ரங்கசாமிக்கு உறுதிப்படுத்தாமல் பாஜக போக்குகாட்டியது. சுதாரித்துக்கொண்ட ரங்கசாமி ஆர்ப்பாட்டமில்லாமல் தன் பலத்தைத் திரட்டுவதில் இறங்கினார். இதை எதிர்பார்க்காத பாஜக தரப்பு, அவரை சமாதானப்படுத்த முயன்றது. அதில் ஒரு முன்னேற்றமும் ஏற்படாதநிலையில், அடுத்தகட்ட நகர்வு குறித்து கடந்த இரண்டு நாள்களாக பாஜகவில் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது.

புதுவை நிர்வாகிகளுடன் கனரக தொழில்துறை அமைச்சரும் தேர்தல் பொறுப்பளருமான அர்ஜூன்ராம் மேக்வால், கட்சி மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ஆகியோர் நேற்று முன்தினம் (மார்ச் 7) ஆலோசனை நடத்தினர்.

தனியாகப் போட்டியிட்டால் எத்தனை இடங்கள் கிடைக்கும், கூட்டணி அமைத்து போட்டியிட்டால் எத்தனை இடங்கள் கிடைக்கும் என ஒவ்வொரு நிர்வாகியிடமும் இருவரும் கருத்துக்கேட்டனர். தனித்து நின்றால் வாக்குகளைப் பெறலாம்; ஆனால் வெற்றிபெறுவது உறுதியில்லை என்றும் கூட்டணியில் போட்டியிட்டால் 9 அல்லது 11 இடங்களைப் பிடிக்கமுடியும் என நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

யாருடன் கூட்டணி எனக் கேட்டதற்கு, என்.ஆர். ரங்கசாமியுடன் கூட்டணி என்றும் கருத்துத் தெரிவித்தனர். அந்தக் கூட்டணி அமைந்தால் 10-11 தொகுதிகளில் வெல்லலாம் என்றும் உறுதிபட சொல்லியிருக்கிறார்கள். அதையடுத்து, புதுச்சேரியில் உள்ள ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடனும் சில பணியிலிருக்கும் அதிகாரிகளுடனும் அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அவர்களும் ரங்கசாமியுடன் கைகோர்த்தால் பாஜக ஆட்சியமைக்க முடியும் என்பதையே வழிமொழிந்திருக்கிறார்கள்.

அதைக் கேட்டுக்கொண்ட மக்வால், நேற்று முன் தினம் இரவு டெல்லிக்குச் சென்றார். நேற்று காலையில் மாநிலங்களவைக் கூட்டம் தொடங்கிய நிலையில், மதிய உணவு நேரத்தில் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை அமைச்சர் மெக்வால் சந்தித்துப் பேசியுள்ளார். புதுவையில் என்.ஆர். காங்கிரசை விட்டுவிடக்கூடாது என அழுத்தமாகக் கூறியிருக்கிறார்.

புதுவையில் பாஜக ஆட்சி அமைய என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்யுங்கள் என மோடி கூறிவிட்டார். உடனே அங்கிருந்து ரங்கசாமியின் கைபேசிக்கு அழைப்பு பறந்திருக்கிறது. “ கூட்டணி ஆட்சிதான்; நீங்கள் கேட்டபடி 17 தொகுதிகளை எடுத்துக்கொள்ளுங்கள். மீதமுள்ள 13 தொகுதிகளை அதிமுக, பாமக, நாங்கள் பிரித்துக்கொள்கிறோம். வெற்றிபெறுவோம். ஒத்துழையுங்கள். இன்று(8ஆம் தேதி) மாலை எங்கள் ஆள்கள் உங்களை சந்திப்பார்கள். ஆல் தி பெஸ்ட்.” என்று கூறப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்று மாலை புதுவை பாஜக மேலிடப் பொறுப்பாளர் சுரானா உள்பட மூன்று பாஜக நிர்வாகிகள், ரங்கசாமியை புதுச்சேரி அக்கார்டு ஓட்டலில் சந்தித்துப் பேசினர். மாலை 5 மணியிலிருந்து நான்கு மணி நேரம் பேச்சுவார்த்தை நீடித்தது. இரு தரப்புக்கும் திருப்தியாக பேச்சு முடிந்திருக்கிறது. ஆட்சியைப் பொறுத்தவரை கூட்டணி ஆட்சி; முதலமைச்சர் ரங்கசாமி, துணைமுதலமைச்சர் பாஜக; மற்ற விசயங்களை தேர்தலுக்குப் பிறகு பேசிக்கொள்ளலாம் என விடைபெற்றுள்ளனர்.

- வணங்காமுடி

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

5 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

4 நிமிட வாசிப்பு

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ...

3 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ஆயத்தம்! 

செவ்வாய் 9 மா 2021