மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 மா 2021

ஓபிஎஸ் – இபிஎஸ் யார் ஆதரவாளர்களுக்கு அதிக சீட்டு? அதிமுக வேட்பாளர் பட்டியலில் அதிர்வேட்டு!

ஓபிஎஸ் – இபிஎஸ் யார் ஆதரவாளர்களுக்கு அதிக சீட்டு? அதிமுக வேட்பாளர் பட்டியலில் அதிர்வேட்டு!

இன்னும் இரண்டு மூன்று நாட்கள்தான் இடைவெளி இருக்கிறது. வேட்பாளர் பட்டியலை அறிவித்தே ஆக வேண்டும். அதற்குள் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதி ஒதுக்கீட்டை முடிக்க வேண்டும். தொகுதிகளை ஒதுக்க வேண்டும். அதன்பின் மீதமுள்ள தொகுதிகளுக்குத் தன் கட்சியின் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும். மற்ற கட்சிகளைவிட கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் திமுகவுக்கும், அதிமுகவுக்கும்தான் இவை அதிக நெருக்கடியுள்ள நாள்களாக இருக்கின்றன.

திமுகவைப் பொறுத்தவரை, கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு முடிந்து விட்டால், வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதில் பெரிதாக பிரச்சினை இருக்கப்போவதில்லை. ஏற்கெனவே ‘ஐபேக்’ கொடுத்த பட்டியலையும், மாவட்டத்துக்கான கட்சியின் சீனியர் பொறுப்பாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் ஆகியோர் தரும் பட்டியலையும் ஒப்பிட்டு, அவர்களில் பெஸ்ட் ஆன ஒருவரை அல்லது அதிகமாக செலவு செய்யக்கூடிய ஒருவரைத் தேர்வு செய்துவிடுவார்கள். ஆனால், அதிமுகவில் நிலைமை அப்படியில்லை.

அங்கே பலவிதமான பிரச்சினைகள் இருக்கின்றன. அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள தொகுதிகளை கூட்டணிக் கட்சிகள் கேட்பதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. வடக்கு மாவட்டங்களில் பாமகவுக்கு அதிகமான வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் அதிமுகவுக்கு எதையும் விட்டுக்கொடுக்கவில்லை என்று அங்குள்ள அதிமுகவினர் குமுறிக்கொண்டிருக்கின்றனர். அதேபோல கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு அதிக வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளை பாரதீய ஜனதா கேட்கிறது என்று ஒரு பிரச்சினையும் எழுந்துள்ளது. மீதமுள்ள தொகுதிகளில் அதிமுக வேட்பாளரை அறிவித்து விடலாம் என்றால் அதிலும் ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. அவர் இபிஎஸ் ஆதரவாளரா அல்லது ஓபிஎஸ் ஆதரவாளரா அல்லது இரண்டுக்கும் பொதுவான கட்சியின் விசுவாசியா என்று பல தகுதிப் பட்டியல்கள் அங்கே இருக்கின்றன.

இதுவரை பனிப்போராக இருந்த இபிஎஸ் – ஓபிஎஸ் மோதல், தற்போது தனிப்பெரும் போராக உருவெடுத்து வருவதாகச் சொல்கிறார்கள் கட்சியின் உள் விவகாரங்களை அறிந்த அதிமுக நிர்வாகிகள். நேற்று வரையிலும் இருவரும் ஒன்று சேர்ந்தே கட்சியினருடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தாலும் இருவருக்கும் இடையிலான அதிகார யுத்தம் தற்போது உச்சத்தை எட்டியிருப்பதாகச் சொல்கிறார்கள் இவர்கள். மீதமுள்ள மூன்று நாள்களுக்கும் இது முடிவுக்கு வருமா என்ற சந்தேகமும் அவர்களிடம் உள்ளது.

அரசல் புரசலாக ஊடகங்களில் வெளிவரும் இந்த உரசல்கள் குறித்து நம்மிடம் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார் கட்சியின் சீனியர் நிர்வாகி ஒருவர்...

‘‘தினகரன், சசிகலா, பாரதீய ஜனதா ஆதிக்கம், திமுகவின் எதிர்ப்பு அரசியல் எனப் பல விவகாரங்களையும் இதுவரை இபிஎஸ் – ஓபிஎஸ் இருவரும் சேர்ந்துதான் எதிர்கொண்டார்கள். அதனால்தான் இன்று வரையிலும் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற முடிந்தது. ஆனால் இப்போது தேர்தல் என்று வரும்போது, அவரவர் விசுவாசிகளுக்கு சீட்டு வாங்கித்தந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருவரும் இருக்கிறார்கள். ஏனெனில் இப்போது வாங்கித்தரும் சீட்டுதான், அவர்கள் இருவருடைய எதிர்காலத்தையும் தீர்மானிப்பதற்கு உதவக்கூடிய துருப்புச்சீட்டுகளாக இருக்கப்போகின்றன.

முதல்வர் பதவி, முக்கியமான துறைகள், முதல்வர் வேட்பாளர் வாய்ப்பு என அடுத்தடுத்து பல விஷயங்களையும் ஓபிஎஸ் விட்டுக்கொடுத்திருக்கிறார். கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றத்தான் அவர் இவற்றை விட்டுக்கொடுத்ததாகச் சொன்னாலும் அதன் பின்னணியில் பாரதீய ஜனதாவின் அழுத்தங்கள் இருந்தது கட்சியிலேயே எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவி அவருக்குத் தரப்பட்டதால்தான், அவர் முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்து, துணை முதல்வராக ஒப்புக்கொண்டார். எதிர்காலத்தில் ஆட்சி போனாலும் கட்சி தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்குமென்ற நம்பிக்கைதான் அதற்குக் காரணம். ஆனால் ஒருங்கிணைப்பாளரான அவரை வைத்தே ‘முதல்வர் வேட்பாளர் பழனிசாமிதான்’ என்று அறிவிக்க வைத்ததில் அவருடைய நம்பிக்கை தகர்ந்துவிட்டது.

மீண்டும் தேர்தல் என்று வரும்போது, தான் முதல்வராக நிறுத்தப்படுவதற்கான பலவிதமான வாய்ப்புகளையும் அவர் எதிர்பார்த்துக் காத்துக்கிடந்தார். பாரதீய ஜனதாவின் நிர்பந்தம், சசிகலாவின் வருகை என்று அவர் நினைத்த பல விஷயங்கள், தோல்வியில் முடிவடைந்து விட்டன. ஆனால் இப்போதும் அவருக்கும் சசிகலா தரப்புக்கும் நல்ல தொடர்பு இருக்கிறது. அவருடைய மகன் ஜெயபிரதீப், சசிகலா தரப்புடன் முக்கியமாக தினகரனுடன் பல விஷயங்களையும் பகிர்ந்துகொள்வதாக முதல்வருக்கும் தகவல் கிடைத்துள்ளது. அதனால் ஓபிஎஸ்ஸின் நடவடிக்கைகளில் தினகரனின் கைங்கர்யம் இருக்குமென்று அவர் கருதுகிறார். ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு அதிகமாக சீட் கொடுப்பது ஆபத்து என்று அவர் நினைப்பதற்கும் காரணம் அதுதான். இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டாலும், தோல்வியடைந்து குறைவான எம்.எல்.ஏக்கள் இருந்தாலும், இரண்டு சூழ்நிலைகளிலும் தன்னுடைய ஆதரவாளர்கள் அதிகமாக இருந்தால்தான் தன்னால் முதல்வராக முடியும் அல்லது கட்சியின் தலைமைப் பொறுப்பைக் கைப்பற்ற முடியுமென்று இபிஎஸ் நினைக்கிறார்.

ஓபிஎஸ்ஸும் இதேபோல நினைப்பதோடு, ஏற்கெனவே கட்சியில் தனக்கென்று ஒரு ஆதரவு வட்டத்தை உருவாக்காமல் போனதை, இந்தத் தேர்தலில் சரி செய்ய வேண்டுமென்றும் நினைக்கிறார். அதனால்தான் முதலில் தன்னுடைய ஆதரவாளர்கள் 80 பேருக்கு சீட்டு வேண்டுமென்று கேட்க ஆரம்பித்தார். அவர்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், கட்சி வேட்பாளரின் வேட்புமனுவுடன் இணைக்க வேண்டிய கட்சிப் படிவங்களில் கையெழுத்திட வேண்டும். தன்னுடைய ஆதரவாளர்களுக்குப் போதிய அளவு சீட் தரப்படவில்லை என்றால் அவர் கையெழுத்திடாமல் மறுக்கவும் தாமதிக்கவும் நிறையவே வாய்ப்புண்டு. அதனால்தான் அவரை எப்படியாவது சமாதானப்படுத்த வேண்டுமென்று நினைக்கும் முதல்வர் தரப்பு, அதே நேரத்தில் அவர் கேட்கின்ற சீட்டுகளையும் தரக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, ஓபிஎஸ் 65 சீட்டுகளுக்கு இறங்கி வந்திருப்பதாகவும், ஆனால் 40 சீட்டுகள்தான் தர முடியுமென்று முதல்வர் தரப்பில் முரண்டு பிடிப்பதாகவும் தெரியவந்திருக்கிறது.

இன்னும் இரண்டு நாள்களே மீதமிருக்கும் நிலையில், இரு தரப்பும் இப்படி முரண்டு பிடித்துக் கொண்டிருந்தால் மார்ச் 12ஆம் தேதிக்குள் வேட்பாளர் பட்டியல் வருவது சந்தேகம்தான். ஒருவேளை அவருடைய ஆதரவாளர்கள் பலருக்கு சீட் தரப்படாதபட்சத்தில், அவர்கள் அமமுகவில் சீட் வாங்கி தேர்தலைச் சந்திக்கவும் வாய்ப்புள்ளதை மறுக்கமுடியாது. அமமுக தேர்தல் களத்தில் நிற்பதால், தென்மாவட்டங்களில்தான் அதிக பாதிப்பு ஏற்படும் என்பதால்தான், அமித் ஷா சென்னைக்கு வந்திருந்தபோது அவரை நேரில் சந்தித்த ஓபிஎஸ், ‘சசிகலாவைக் கட்சியில் சேர்க்காவிட்டால் தேனியிலேயே நான் வெற்றி பெறுவது கஷ்டமாகிவிடும்’ என்கிற அளவிற்கு படு ஸ்ட்ராங்காக நிலைமையை விளக்கினார். ஆனால் அதுபற்றி அமித் ஷா பேசியும் இபிஎஸ் அதைவிட ஸ்ட்ராங்காக நின்று விட்டதால்தான் இணைப்பு சாத்தியமில்லாமல் போய்விட்டது. தான் நினைத்த எதுவுமே தனக்கு சாதகமாக நடக்கவில்லை என்ற விரக்தியில் இருக்கும் ஓபிஎஸ், வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் விஷயத்திலும் அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுத்து விடுவார் என்று தோன்றவில்லை. என்ன நடக்கப்போகிறதோ என்ற அச்சமும் குழப்பமும் கட்சியில் எல்லோருக்குமே இருக்கிறது’’ என்று தெள்ளத்தெளிவாக விளக்கினார்.

ஓபிஎஸ் தரும் வேட்பாளர் பட்டியலில் தினகரனின் ஆதரவாளர்கள் பலரும் இடம்பெற வாய்ப்புள்ளதா என்று அமமுக முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டதற்கு, "நிச்சயம் வாய்ப்பிருக்கிறது. அதற்காக அமமுக அந்தத் தொகுதியில் போட்டியிடாமல் போகாது. போட்டியை எங்களுடைய இரண்டு வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டியாக மாற்றுவோம். ஓபிஎஸ்ஸின் நகர்வுகள், அவருடைய ‘பரதன்’ விளம்பரத்தின் அர்த்தம் எல்லாமே தினகரனுக்குத் தெரியும். அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும்முன் ஏதாவது நடக்குமென்று இப்போதும் எங்கள் கட்சிக்காரர்கள் பலரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்’’ என்றார்.

தேர்தலில் ஜெயிப்பதை விட வேட்பாளர் பட்டியலில் யார் ஜெயிப்பது என்பதில் இப்படியொரு போட்டி நடப்பது அகில இந்திய அண்ணா திமுகவுக்கு மட்டுமல்ல; அகில உலகத்திற்கே ஒரு புதிய அனுபவம்தான்!

– பாலசிங்கம்

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

அண்ணாமலையை கைது செய்: ட்ரெண்டிங் ஹேஷ்டேக்!

5 நிமிட வாசிப்பு

அண்ணாமலையை கைது செய்: ட்ரெண்டிங் ஹேஷ்டேக்!

குலாமா? ஆசாத்தா? பத்ம பாலிடிக்ஸ்!

6 நிமிட வாசிப்பு

குலாமா? ஆசாத்தா? பத்ம பாலிடிக்ஸ்!

செவ்வாய் 9 மா 2021