மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 மா 2021

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்: ஸ்டாலின் அறிவிப்பு!

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்: ஸ்டாலின் அறிவிப்பு!

திருச்சியில் நேற்று (மார்ச் 7) நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் நிறைவுரை ஆற்றிய திமுக தலைவர் ஸ்டாலின், “இது வெறும் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் மட்டுமல்ல; பேரழிவை நோக்கிச் சென்று கொண்டு இருக்கும் தமிழகத்தைக் காப்பாற்றி, முன்னேற்றப் பாதையை நோக்கி அழைத்துச் செல்வதற்கான தேர்தல்” என்று கூறியுள்ளார்.

தமிழகத்தின் அடுத்த பத்து ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்ட அறிக்கையை வெளியிட்டு, ‘தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம்’ பிரமாண்டமான மாநாட்டில் நிறைவுரை ஆற்றினார் ஸ்டாலின்.

“இதனை மாநாடு என்று நான் அறிவிக்கவில்லை, மாபெரும் பொதுக்கூட்டம் என்றுதான் அறிவித்தேன். ஆனால் கழகத்தின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அவர்களும் மற்ற மாவட்டச் செயலாளர்களும் இதை மாநாடாகவே நடத்தி விட்டார்கள். இதை ஒரு மாநாடு என்று கூடச் சொல்ல முடியாது. ஐந்து மாநாடு ஒரே நேரத்தில் நடப்பதுபோல இருக்கிறது. ‘நேரு என்றால் மாநாடு, மாநாடு என்றால் நேரு’ என்று நான் சொல்லி இருக்கிறேன். எதிரியை நேருக்கு நேராக எதிர்ப்பதிலும், நட்பை நெஞ்சுக்கு நெஞ்சாக அரவணைப்பதிலும் நிகரானவர் நேரு என்றும் நான் சொல்லி இருக்கிறேன். இதற்கு மேல் எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. நேருக்கு நிகர் நேருதான் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

அவர் மட்டுமல்ல, இந்த ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, காடுவெட்டி தியாகராஜன், வைரமணி ஆகிய மூவரும் முப்படைத் தளபதிகளைப் போல வழிநடத்தி வருகிறார்கள். அவர்களுடைய திறமை எவ்வளவு பெரியதென்றால், இந்த மாநாடு அளவுக்கு பெரியதென்றுதான் சொல்ல வேண்டும். அவர்களையும் அவர்களுக்குத் தோளோடு தோள் கொடுத்து பாடுபட்டிருக்கும் தோழர்களையும் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்” என்று முதலில் இம்மாநாட்டின் முதுகெலும்புகளை வாழ்த்தினார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், “நீங்கள் தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கான அடித்தளத்தை இந்த திருச்சியில் அமைத்திருக்கிறீர்கள். கடந்த பத்தாண்டுக் காலத்தில் தமிழகத்தை முழுமையாக நாசம் ஆக்கிவிட்டார்கள். மொத்தமாக உருக்குலைத்துவிட்டார்கள்.

இந்த ஆட்சிக்கு ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி முற்றுப்புள்ளி வைக்கப்பட இருக்கிறது. மே 2ஆம் நாள் தமிழகத்தின் புதிய விடியலுக்கான அழகிய பூபாளமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைய இருக்கிறது.

அப்படி அமைய இருக்கும் ஆட்சி, தந்தை பெரியார் விரும்பிய சமூகநீதி ஆட்சியாக - பேரறிஞர் அண்ணாவின் மாநில சுயாட்சியின் ஆட்சியாக - முத்தமிழறிஞர் கலைஞரின் நவீன மேம்பாட்டு ஆட்சியாக - பெருந்தலைவர் காமராசரின் கல்வி வளர்ச்சி ஆட்சியாக - தோழர் ஜீவா விரும்பிய சமத்துவ ஆட்சியாக - அமையும். இத்தகைய ஆட்சியை எப்படிக் கொண்டு செலுத்துவது என்பதற்காக, ஒரு தொலைநோக்குத் திட்டத்தை நான் வடிவமைத்துள்ளேன்.

கழக முன்னணி நிர்வாகிகள் - தமிழகத்தின் சிந்தனையாளர்கள் - பல்துறை வல்லுநர்கள் ஆகியோரிடம் கலந்துபேசி இந்தத் திட்டத்தை உருவாக்கியுள்ளேன். தமிழகத்தின் மிக முக்கியமான ஏழு துறைகளை முழுமையாகச் சீரமைத்து - வளர்த்தெடுப்பதையே எனது முதல் பணியாகக் கருதுகிறேன்.

எனது அரசு முன்னுரிமை வழங்கவிருக்கும் பத்தாண்டு இலக்கை, இந்த மாபெரும் கூட்டத்தின் வாயிலாக தமிழக மக்களுக்கு அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன்.

இந்த உறுதிமொழிகளுக்கு ‘ஸ்டாலினின் ஏழு உறுதிமொழிகள்’ என்று பெயர் சூட்டி உள்ளேன். இந்த இலக்குகள் - வளமான - ஏற்றத்தாழ்வற்ற தமிழகத்தை உருவாக்கிடத் தேவையான ஏழு முக்கிய துறைகள் சார்ந்தது.

1. பொருளாதாரம், 2. வேளாண்மை, 3. நீர்வளம், 4. கல்வி மற்றும் சுகாதாரம், 5. நகர்ப்புற வளர்ச்சி, 6. ஊரக உட்கட்டமைப்பு, 7. சமூகநீதி இவை அனைத்தும் முக்கியமானவை என்பதை நீங்கள் அனைவரும் ஒப்புக்கொள்வீர்கள்.

வளரும் வாய்ப்புகள், வளமான தமிழ்நாடு, மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி, குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர், அனைவருக்கும் உயர்தரக் கல்வி மற்றும் உயர்தர மருத்துவம், எழில்மிகு மாநகரங்களின் மாநிலம், உயர்தர ஊரகக் கட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கைத் தரம், அனைவருக்கும் அனைத்துமான தமிழகம் இந்த இலக்குகளை எட்டியாக வேண்டும்” என்றவர் இந்த ஏழு இலக்குகளை எப்படி அடைய இருக்கிறோம் என்பதை விரிவாக விளக்கினார்.

“நாளை மார்ச் 8. மகளிர் தினம். தலைவர் கலைஞர் ஆட்சியில் மகளிர்க்கு நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அனைத்தும் உங்களுக்குத் தெரியும். மகளிர் முன்னேற்றத்திற்காக பெண்களுக்கு சொத்தில் சம உரிமை; வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 விழுக்காடு - உள்ளாட்சி அமைப்புகளில் 33 விழுக்காடு இட ஒதுக்கீடு; மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றை மனதில்வைத்துச் சொல்கிறேன்,

தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்க இருக்கிறோம். ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்களைப் பெறும் அனைத்துக் குடும்பங்களும் இதனால் பயனடையும்” என்று குறிப்பிட்டார் ஸ்டாலின்.

மேலும், “இந்த தொலைநோக்குத் திட்டங்கள் அனைத்தும் பத்தாண்டுத் திட்டமாக படிப்படியாகச் செயல்படுத்தப்படும். 2031-க்குள் நிறைவேற்றப்படும். இவை தனிப்பட்ட மு.க.ஸ்டாலினின் திட்டங்கள் மட்டுமல்ல. இந்தத் திடலில் திரண்டிருக்கும் லட்சக்கணக்கான உடன்பிறப்புகளின் திட்டம் மட்டுமல்ல. இவைதான் கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் திட்டங்களாக மாற வேண்டும்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் முதன்முதலில் முதலமைச்சரானபோது சொன்ன வரிகள் என் நினைவுக்கு வருகிறது. “எல்லா எண்ணங்களும் ஓர் அடிப்படையான லட்சியத்தையே சுற்றி வட்டமிடுகின்றன. மக்களுக்கு நல்வாழ்வு தர வேண்டும் என்ற லட்சியம். லட்சியம் மிகப்பெரியது; நான் மிகச் சாமானியன். ஆனால் உங்கள் தோழன். ஆகவே என்னுடைய திறமையை நம்பி அல்ல, உங்கள் எல்லோருடைய திறமையையும் நம்பி இந்தப் பணியில் ஈடுபடுகிறேன்” என்றார். அதேபோல் உங்கள் மீது நம்பிக்கைவைத்து இந்த உறுதிமொழியை எடுத்துக் கொள்கிறேன்.

கோடிக்கணக்கான மக்களின் ஆதரவோடு நாம் அமைக்கும் ஆட்சியானது, இவற்றை நிறைவேற்றித் தரும் ஆட்சியாக அமையும். ஏழு கோடி மக்களின் இதயங்களை வெல்வதன் மூலமாக - இந்த ஏழு தொலைநோக்குத் திட்டங்களையும் நம்மால் செயல்படுத்திக் காட்ட முடியும். கழக ஆட்சி என்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் ஆட்சியாக இல்லாமல் - ஒரு இனத்தின் ஆட்சியாக அமையும். தனிப்பட்ட ஒரு அரசியல் இயக்கத்தின் கொள்கையை மட்டும் இல்லாமல் - இந்த மனித சமுதாயத்தின் உயர்ந்த லட்சியங்களை அடையக் கூடிய ஆட்சியாக அமையும்.

நாம் கொள்கைக்கு சொந்தக்காரர்கள். அந்தக் கொள்கையைச் செயல்படுத்தும் கடமை நமக்குத் தான் இருக்கிறது. அந்தக் கடமையை நாம்தான் செய்தாக வேண்டும். நம்மைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. நம்மை விட்டால் யாராலும் செய்ய முடியாது.

தந்தை பெரியாரின் கனவுகளை, பேரறிஞர் அண்ணாவின் கனவுகளை, முத்தமிழறிஞர் கலைஞரின் கனவுகளைச் செயல்படுத்தும் கடமை எனக்கு இருக்கிறது. நம்மால் முடியும்! நம்மால் மட்டும் தான் முடியும்! வீழ்ச்சியுற்ற தமிழகத்தை எழுச்சி பெற வைப்போம்!

இன்னும் இரண்டே மாதங்கள்தான் இருக்கின்றன. பரந்து விரிந்த இந்த தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு அமைய இருக்கிறது.

அப்படி அமையும் அரசு, தனிப்பட்ட ஸ்டாலினின் அரசாங்கம் அல்ல. நம் அனைவரின் அரசாங்கமாக இருக்கும். இதற்கான உறுதிமொழியை, இந்தத் தமிழ்ச்சமுதாயத்தின் முன்னால் நாம் அனைவரும் சேர்ந்து எடுத்துக் கொள்வோம்!

இன்று மார்ச் 7; தேர்தல் தேதி ஏப்ரல் 6. இடைப்பட்ட இந்த ஒருமாத காலத்துக்குள் கோடிக்கணக்கான தமிழ் மக்களின் இதயங்களுக்கு இதனை நாம் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டோம் என்றால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது.

வீடு வீடாகச் செல்லுங்கள்! வீதி வீதியாகச் செல்லுங்கள்! கூட்டம் கூட்டமாகச் செல்லுங்கள்! தனியாகச் சென்றும் சந்தியுங்கள்! தமிழகத்தின் எதிர்காலத்தை மனதில் வைத்து தீட்டப்பட்ட இந்த ஏழு திட்டங்களைப் பற்றி எடுத்துச் சொல்லுங்கள்!

தமிழகத்தின் எதிர்காலத்தை மனதில் வைத்து வாக்களிக்கச் சொல்லுங்கள்! இது வெறும் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் மட்டுமல்ல, பேரழிவை நோக்கிச் சென்று கொண்டு இருக்கும் தமிழகத்தைக் காப்பாற்றி, முன்னேற்றப் பாதையை நோக்கி அழைத்துச் செல்வதற்கான தேர்தல்!

ஜனநாயகப் போர்களத்தில் நாம் மட்டுமல்ல, நம்மோடு பல்வேறு அரசியல் கட்சிகள் தோள் கொடுக்க முன்வந்துள்ளன. அவர்கள் தேர்தல் நேரத்து தோழமைகள் அல்ல, தொடர்ந்து நம்மோடு அனைத்துப் போராட்டங்களிலும் தோள் கொடுத்தவர்கள். ஜனநாயகம் காக்க, மக்கள் உரிமைகளுக்காக, ஊழலை எதிர்த்து நாம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் பங்கெடுத்தவர்கள். அத்தகைய அரசியல் கட்சிகள், இந்த தேர்தல் களத்திலும் தோழமையோடு இணைந்துள்ளார்கள்.

கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிந்து பெரும்பாலும் பங்கீடு என்பது இறுதிக் கட்டத்தை அடைந்துவிட்டது. அடுத்து கழக வேட்பாளர் பட்டியலை வெளியிட இருக்கிறோம்; தேர்தல் அறிக்கை வெளியிட இருக்கிறோம். அதன்பிறகு எனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்க இருக்கிறேன்.

இதோ இன்று முதல் அதிமுக ஆட்சியின் முடிவதற்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. இன்னும் முப்பதே நாளில் அதிமுக ஆட்சிக்கான முற்றுப்புள்ளியை வைக்க தமிழ்நாட்டு மக்கள் தயாராகி விட்டார்கள்” என்று தனது நிறைவுரையை நிறைவு செய்தார் ஸ்டாலின்.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

திங்கள் 8 மா 2021