மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 மா 2021

சுற்றுச் சூழல் போராட்ட வழக்குகளை திரும்பப்பெறாதது ஏன்?

சுற்றுச் சூழல் போராட்ட வழக்குகளை திரும்பப்பெறாதது ஏன்?

திருச்சியில் திமுக சார்பில் நடைபெற்று வரும் சிறப்புப் பொதுக்கூட்டம் என்கிற மாநாட்டில் ஒவ்வொரு துறை சார்ந்த வல்லுநர்கள் பேசி வருகிறார்கள். அந்த வகையில் நீர்வளம் என்ற பொருளில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் தலைவர் சுந்தர்ராஜன் பேசினார்.

“இந்தியாவில் இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளில் சுற்று சூழல் அணி என்ற ஒன்றை உருவாக்கியது திமுக மட்டும்தான்.

தமிழர்களின் அற்புதமான நூல் சிலப்பதிகாரம். அது மழையைக் கொண்டாடுகிறது. மாமழை போற்றுதும் என்கிறது சிலப்பதிகாரம். வள்ளுவர் வான் சிறப்பு என்று அதிகாரமே அமைத்து வானமிழ்தம் என்கிறார்.

ஆனால் இப்படி மழையைக் கொண்டாடிய தமிழ் சமூகம் மழை என்றாலே பயந்து நடுங்கும்படி ஆக்கிவிட்டனர் இந்த ஆட்சியாளர்கள்:.இதற்கு உதாரணம் 2015 ஆம் ஆண்டு சென்னை மழை வெள்ளம்.

அந்த வெள்ளத்தில் சென்னையில் ஈக்காடுத்தாங்கலில் டிஃபென்ஸ் காலனியில் வசிக்கும் முன்னாள் ராணுவ கர்னல் வெங்கடேசன் அவரது மனைவியோடு துணை ராணுவப் படையால் சடலமாக மீட்கப்பட்டார். எல்லையில் கூட இப்படி அவர் போராடியிருக்கமாட்டார். அந்த அளவுக்கு மழையால் உயிருக்குப் போராடினார் வெங்கடேசன். ஆயிரம் பேர் வரை சென்னை மழையால் உயிரிழந்தார்கள்.

சென்னைக்கு மட்டுமல்ல...தமிழகம் முழுவதற்கும் இந்த சூழல் உண்டு. ஒவ்வொரு மாவட்டத்திலும் நீர் நிலைகள் தூர்வாரப்படாமல் துவண்டு கிடக்கின்றன.

2015 டிசம்பரில் மழை வெள்ளம்... 2016 ஏப்ரலில் வறட்சி. இதுபற்றிவிளக்குவதற்காக நாங்கள் நீரியல் நிபுணர்களோடு அரசிடம் சென்றோம். ஆனால் அரசோ ஆறுகளுக்கு காம்பவுண்ட் கட்டுகிறோம் என்கிறார்கள்,நீர்வளம் என்றால் நீர்வள மேலாண்மை என்றால் என்ன என்பதே தெரியாத ஆட்சியாளர்கள்தான் நம்மை இப்போது நிர்வகித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் தமிழக நீர் மேலாண்மை பற்றி விரிவான அறிக்கையோடு எல்லா கட்சிகளையும் பார்த்தோம். அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலினையும் பார்த்தோம். ஆனால் ஸ்டாலின் மட்டும்தான் இதை நாங்கள் திமுகவின் தொலை நோக்குத் திட்ட அறிக்கையில் பயன்படுத்திக் கொள்கிறோம் என்று உறுதியளித்தார்” என்று பேசினார் பூவுலகின் சுந்தர்ராஜன்.

தொடர்ந்துபேசியவர், “தேர்தல் நெருங்குவதால் பல வழக்குகள் திரும்பப் பெறுவதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால் சுற்று சூழல் தொடர்பான போராட்டத்துக்காக போடப்பட்ட வழக்குகள் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை. கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் காரர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படவில்லை. காவேரி டெல்டா பாதுகாப்புக்காக போரடியவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படவில்லை. பேராசிரியர் ஜெயராமன் வாரத்துக்கு மூன்று நாள் நீதிமன்றம்சென்று வருகிறார். எட்டு வழிச் சாலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படவில்லை. இதுதான் சுற்று சூழலுக்கு அரசு கொடுக்கும் முக்கியத்துவம்” என்று பேசினார் பூவுலகின் நண்பர்கள் சுந்தர் ராஜன்.

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

ஞாயிறு 7 மா 2021