மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 மா 2021

கொடியேரி மனைவிக்கும் நோட்டீஸ்...கேரள இடதுகளை விடாத டாலர் வழக்கு!

கொடியேரி மனைவிக்கும் நோட்டீஸ்...கேரள இடதுகளை விடாத டாலர் வழக்கு!

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க கேரள மாநிலத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் மீதே தங்கக்கடத்தல் வழக்கு மீண்டும் பாய்ந்திருக்கிறது. இந்த விவகாரத்தில் சிறையில் அடைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய ஸ்வப்னா, பினராயி பற்றி அளித்த கமுக்க வாக்குமூல வடிவில் புகைச்சல் ஆகியுள்ளது.

முன்னாள் அரபு அமீரகத் தூதரக அதிகாரிக்கும் பினராயி விஜயனுக்கும் இடையில் நெருக்கம் இருந்தது எனும் ஸ்வப்னாவின் எழுத்துபூர்வ வாக்குமூலம் அண்மையில் கசிந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இந்த விவகாரத்தை அடுத்து கேரள மாநில சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் பதவியிலிருந்து விலகியிருக்கும் கொடியேரி பாலகிருஷ்ணன் மனைவி வினோதினிக்கு சுங்கத்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

டாலர் கடத்தல் வழக்கில் வரும் 10ஆம் தேதி கொச்சியில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

இதே 12ஆம் தேதியன்று விசாரணைக்கு வருமாறு வழக்கில் கேரள மாநில சட்டப்பேரவைத் தலைவர் பி.ஸ்ரீராமகிருஷ்ணனுக்கும் சுங்கத் துறையினர் அழைப்பாணை அனுப்பியிருக்கின்றனர்.

( 1.3 கோடி ரூபாய்) அமெரிக்க டாலரில் 1.9 லட்சம் ரொக்கம் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டது என்பது வழக்கு. அதில் அமீரகத் தூதரக அதிகாரியாக இருந்த ஜமா அல் ஜாபி, அவருடைய முன்னாள் அதிகாரி ரசீத் கமிஸ் அலி முசைக்ரி மற்றும் முன்னாள் நிதித்துறை தலைமை அதிகாரி காலித் அலி சௌக்ரி ஆகியோர் மூலம் கேரளத்துக்கு கடத்தப்பட்டுள்ளது என்பது குற்றச்சாட்டு.

இதில் ஜமால் அல் ஜாபியின் பையில் இருந்து கடந்த மாதம் சோதனையில் ஒரு செல்போனும் பென் டிரைவும் கைப்பற்றப்பட்டன. அதில் முக்கியமான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக சுங்கத்துறை கூறியுள்ளது.

ஸ்வப்னா கூறியபடி பினராயி விஜயனுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஐபோன்கள் தரப்பட்டதாக இந்த வழக்கில் கைதான சந்தோஷ் என்பவர் வாக்குமூலம் தந்திருக்கிறார். அவரிடம் வினோதினியும் ஐபோன் வாங்கினார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஐபோன் வாங்குமளவுக்கு என்ன நெருக்கம், அதற்கு கைமாறாக அரசுத் தரப்பில் சந்தோஷுக்கு என்ன செய்யப்பட்டது என்பவையெல்லாம் விசாரணையில் எழுத்துபூர்வமாகக் கேட்கப்படும் என்கின்றன, சுங்கத் துறை வட்டாரங்கள்.

தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னாவால் குற்றம்சாட்டப்பட்டு, இடைநீக்கம் செய்யப்பட்ட முதலமைச்சரின் முன்னாள் முதன்மைச்செயலாளர் சிவசங்கரும் ஐபோன் பெற்றவர்கள் லிஸ்ட்டில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கக்கடத்தல் வழக்கு ஒரு சுற்று பெரு மழை பெய்து ஓய்ந்ததைப் போல, இப்போது டாலர் கடத்தல் வழக்கு சூடுபிடித்துள்ளது.

சுங்கத்துறையைக் கருவியாக வைத்து கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் பெயரைக் கெடுப்பதற்காக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து சதிசெய்வதாக பினராயி விஜயன் வெளிப்படையாகக் குற்றம்சாட்டியுள்ளார். ” முழுக்க முழுக்க இது தேர்தலையொட்டி மூர்க்கத்தனமாக செய்யப்படும் தாக்குதல் இது. கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியமானது நாட்டுக்கே வளர்ச்சிக்கான மாற்று முன்னுதாரணம் படைக்கக்கூடிய நிலையில், அதை சீர்குலைப்பதற்காக அதையும் இதில் கோத்துவிட்டிருக்கிறார்கள். சுங்கத்துறையை இதில் ஏவிவிட்டிருக்கிறார்கள்.” என்று நேற்று பினராயி காட்டமாகக் கூறியதுடன், அவரின் சிபிஎம் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் சுங்கத்துறை அலுவலகங்கள் முன் போராட்டமும் நடத்தப்பட்டது.

ஆனால் முதலமைச்சர் பினராயி விஜயனின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதுடன், அவர் மாநில அரசின் அதிகாரத்தையும் கட்சித் தொண்டர்களை ஏவியும் மத்திய அமைப்புகளை மிரட்டுகிறார் என்கிறார் மாநில பாஜக தலைவர் சுரேந்திரன்.

இந்த நிலையில்தான் பாஜக முக்கிய தலைவரான மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று கேரளத்துக்கு வருகைதருகிறார். மாநில பாஜக சார்பில் நடத்தப்பட்ட வெற்றி யாத்திரையை முடித்துவைக்கும் நிகழ்வில் அவர் கலந்துகொள்கிறார். அதில் இந்த விவகாரத்தைப் பற்றி அவர் பேசுவாரோ இல்லையோ அதற்கு முன்னதாக ஆளும் கட்சிக்கு எதிரான விவகாரத்தைக் கிளறிவிட்டு, அதை பேசுபொருள் ஆக்கியிருப்பது மட்டும் நிஜம்.

மேற்குவங்கத்திலும் மம்தா அரசாங்கத்துக்கு எதிராக உள்ளூர் தலைவர்கள் புகார்களை அடுக்கி அடுக்கி பரபரப்பைக் கூட்ட, பிறகு அதை பிரதமர் மோடியும் அமித் ஷாவும் தொட்டுப் பெரிதாக்கி, அதை விவாதப்பொருள் ஆக்கியது ஒப்பிட்டுப் பார்க்கப்படக்கூடியது.

இளமுருகு

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

4 நிமிட வாசிப்பு

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

4 நிமிட வாசிப்பு

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

ஞாயிறு 7 மா 2021