மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 மா 2021

இறுக்கும் அதிமுக... ஏற்கும் தேமுதிக?

இறுக்கும் அதிமுக... ஏற்கும் தேமுதிக?

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக ஆகிய கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு முடிவடைந்துவிட்ட நிலையில் தேமுதிக மட்டும் இன்னும் இழுத்துக்கொண்டிருக்கிறது.

பாமகவைவிட அதிக தொகுதிகள் வேண்டும், ராஜ்யசபா உறுப்பினர் வேண்டும் என்று தேமுதிகவின் நிபந்தனைகள் தொடர்வதால் அதிமுக குழுவினருடன் தேமுதிக பிரதிநிதிகள் நேற்று (மார்ச் 6) நடத்திய பேச்சுவார்த்தையும் தொடர்கிறது.

நேற்று மாலை தேமுதிக சார்பில் பார்த்தசாரதி, அக்பர் உள்ளிட்டோர் சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோருடன் பேச்சு நடத்தினார்கள்.

அதேநேரம் தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொருளாளர் பிரேமலதா, கட்சியில் விருப்பமனு தாக்கல் செய்தவர்களுடன் நேர்காணல் செய்துகொண்டிருந்தார். நேர்காணலின்போதே கூட்டணி பற்றிய கேள்விகளையும் கேட்டிருக்கிறார் பிரேமலதா.

அப்போது தனித்துப்போட்டியிடலாம் என்று கணிசமானோரும், திமுக கூட்டணியில் சேர்ந்தால் வெற்றி வாய்ப்பிருக்கிறது என்று கணிசமானோரும் பிரேமலதாவிடம் கூறியிருக்கிறார்கள். அதற்கு பிரேமலதா, “இந்தச் சூழ்நிலையில் நாம் தனித்துப் போட்டியிட முடியாது. அது உங்களுக்கே புரியும். மேலும் நம்மை மதித்து இன்றுவரை அதிமுக குழு பேசிக் கொண்டிருக்கிறது. இப்போதுகூட நமது பிரதிநிதிகள் அங்கே பேசிக்கொண்டிருக்கிறார்கள். நாளைக்குள் எல்லாம் முடிந்துவிடும்” என்று பிரேமலதா சொல்லியிருக்கிறார்.

இரவு 8.30 மணியளவில் சுதீஷின் செல்போனுக்கு பார்த்தசாரதி போன் செய்திருக்கிறார். பேச்சுவார்த்தைக்குப் பிறகு சுதீஷ் போன் மூலம் பிரேமலதாவிடம் பேசியிருக்கிறார் . அதிமுக தரப்பின் தகவல்களை அவர் பிரேமலதாவிடம் சொல்ல, அதன் பிறகு நேர்காணல் முடிந்திருக்கிறது.

பேச்சுவார்த்தை முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய பார்த்தசாரதி, “கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை ஒன்றும் இல்லை.40 தொகுதிகள் கேட்டு வந்த நிலையில் இன்று 23 தொகுதிகள், 1 மாநிலங்களவை உறுப்பினர் இடம் என சற்று இறங்கி வந்துள்ளோம். இதில் மாநிலங்களவை உறுப்பினர் இடம் வழங்க உறுதியளித்துள்ளார்கள். இந்த எண்ணிக்கை குறித்து தலைமையிடம் சொல்லி நாளை அல்லது நாளை மறுநாள் பேச்சுவார்த்தை இறுதி செய்யப்படும்” என்று கூறினார்.

“ஏற்கனவே தாமதமாகிக் கொண்டிருப்பதால் தேமுதிக மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையான கோபத்தில் இருக்கிறார். அதனால்தான் 12 தொகுதிகள் ப்ளஸ் ஒரு ராஜ்யசபா என்ற ஆஃபரைக் கொடுத்து சீக்கிரம் வந்து கையெழுத்து போடுங்கள் என்று தேமுதிகவுக்கு சொல்லிவிட்டார்கள். ஆனால் தேமுதிக தொகுதிகள் விஷயத்தில் முரண்டுபிடிப்பதால் அதிமுக நேற்று இறுதியாக எச்சரிக்கை விட்டுள்ளது. எனவே அநேகமாக இன்று தேமுதிக கூட்டணி இறுதி செய்யப்படும்” என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.

-வணங்காமுடி வேந்தன்

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

ஞாயிறு 7 மா 2021