மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 மா 2021

‘‘பொள்ளாச்சிதான் இலக்கு... இல்லையேல் அரசியலுக்கு முழுக்கு!’’ - கெளரவத்துக்காக போராடும் பொள்ளாச்சி ஜெயராமன்

‘‘பொள்ளாச்சிதான் இலக்கு... இல்லையேல் அரசியலுக்கு முழுக்கு!’’ - கெளரவத்துக்காக போராடும் பொள்ளாச்சி ஜெயராமன்

தமிழகத்திலுள்ள 124 நகராட்சிகளில் ஒன்றுதான் பொள்ளாச்சி. சின்ன நகரம்தான். ஆனாலும் சின்ன கோடம்பாக்கம், தென்னை நகரம் என்றெல்லாம் பெருமை பெற்ற நகரம். இயற்கையும் எழிலும் கொஞ்சி விளையாடும் இடங்களும், இதமான சீதோஷ்ண நிலையும் என பொள்ளாச்சிக்கென்று பல தனிச்சிறப்புகள் இருக்கின்றன. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அந்த நகரின் பெயருக்கு ஏற்பட்ட இழுக்கை எப்படித் துடைப்பதென்று தெரியாமல் ஆழ்ந்த வேதனையிலும் விரக்தியிலும் இருக்கிறார்கள் பொள்ளாச்சி மக்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுகவின் கோட்டையான கொங்கு பெல்ட்டிலும் பலத்த அடியை வாங்க வைத்ததில் இந்த பாலியல் விவகாரத்துக்கு மிகப்பெரிய பங்குண்டு.

அந்த விவகாரத்தில் அதிமுக நிர்வாகிகள் சிலர் கைதாகியிருப்பதும், ஆளும்கட்சி விஐபிக்களுக்குத் தொடர்பு இருக்கிறது என்று பரவிய தகவலும் இன்று வரையிலும் அரசியலில் அவ்வப்போது சூட்டைக் கிளப்பிக்கொண்டே இருக்கிறது. இந்தச் சட்டமன்றத் தேர்தலிலும் அது எதிரொலிக்கும் வாய்ப்புள்ளது. பொள்ளாச்சி தொகுதியில் மட்டுமில்லாமல், அருகிலுள்ள வால்பாறை, கிணத்துக்கடவு, உடுமலை ஆகிய தொகுதிகளிலும் இந்த விவகாரம் பெரிதாக எதிரொலிக்கும் என்பதுதான் பலருடைய கணிப்பாகவுள்ளது. ஆனால் அந்த விஷயத்தையெல்லாம் மறந்துவிட்டு, மக்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று அதிமுகவினர் நம்புவதுதான் வியப்பளிப்பதாகவுள்ளது.

தோற்றுப்போவோம் என்ற அச்சத்தில், தொகுதியை வேறு கட்சிக்கு அதிமுக தள்ளிவிடும் என்றுதான் சில மாதங்களுக்கு முன்பு வரை பேசப்பட்டது. ஆனால், இப்போது பொள்ளாச்சி தொகுதியில் சீட் வாங்குவதிலேயே ஆளும்கட்சிக்குள் மல்லுக்கட்டு ஆரம்பித்திருப்பதுதான் ஆச்சரிய மாற்றம். அதிலும் முக்கியமாக, பொள்ளாச்சி ஜெயராமன் இந்த விஷயத்தை கெளரவப் பிரச்சினையாக எடுத்துக்கொண்டு, ‘நின்றால் இங்குதான் நிற்பேன்’ என்று பொள்ளாச்சியில் சீட் கேட்டு முதல்வரிடம் முட்டிக்கொண்டிருப்பதாகப் பரவும் தகவல், கொங்கு மண்டல அதிமுகவினருக்கே அதிர்ச்சி தரும் தகவலாகவுள்ளது. ஆனால், அவருக்கு எதிராக பொள்ளாச்சி அதிமுகவிலேயே பலமான ஓர் அணி தோற்றுவிக்கப்பட்டு, ‘அவருக்கு சீட் தரவே கூடாது’ என்று முதல்வரிடம் முறையிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கோவை அதிமுக விவகாரங்களை நன்கறிந்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்...

‘‘தேர்தலுக்கான பிரச்சாரம் இன்னும் சூடு பிடிக்கவில்லை. ஏற்கெனவே பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை மையப்படுத்தித்தான் கனிமொழி, இங்கே இரண்டு முறை வந்து போராட்டம் நடத்தியிருக்கிறார். ஸ்டாலினும் அந்த விஷயத்தைத்தான் விலாவாரியாக விவரித்துப் பேசிச்சென்றிருக்கிறார். தேர்தல் நெருங்கும்போது இந்த விவகாரத்தை இன்னும் பெரிதுபடுத்தி பிரச்சாரம் செய்வதற்கு திமுக திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. அப்படிச் செய்யும்பட்சத்தில் அது இந்தத் தொகுதியை மட்டுமின்றி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பல தொகுதிகளிலும் அதிமுகவுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால்தான் பொள்ளாச்சி ஜெயராமனை உடுமலை அல்லது திருப்பூர் வடக்குத் தொகுதியில் போட்டியிடுமாறு கட்சித் தலைமை அறிவுறுத்திக்கொண்டிருக்கிறது. ஆனால் அவர் அப்படி தொகுதி மாறிப் போட்டியிட மறுத்து வருகிறார். ‘அப்படி நான் தொகுதி மாறினால், என் மகன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு உண்மை என்றாகிவிடும். அதையே திமுகவினர் திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். அதனால் நின்றால் பொள்ளாச்சி தொகுதியில்தான் நிற்பேன். ஒரு வேளை நான் தோற்றுவிட்டால் அரசியலை விட்டே விலகிவிடுகிறேன்!’ என்று கூறியிருக்கிறார். இபிஎஸ், ஓபிஎஸ் இருவரிடமும் இந்த விஷயத்தை விளக்கி சீட் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

ஆனால் பொள்ளாச்சியிலுள்ள யூனியன் கவுன்சிலர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் பலரும் சேர்ந்து ஒரு பெட்டிஷன் ஒன்றை முதல்வருக்கு அனுப்பியிருக்கிறார்கள். அதில், ‘பொள்ளாச்சி தொகுதி, கவுண்டர் சமுதாயத்தினர் அதிகமாக இருக்கும் பகுதி. ஆனால் இந்தத் தொகுதியில் செட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்த பொள்ளாச்சி ஜெயராமனுக்கே தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனால் கவுண்டர் சமுதாய மக்களிடம் கடும் அதிருப்தி நிலவுகிறது. அதனால் இந்த முறை கொங்கு வேளாளக் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கே பொள்ளாச்சி தொகுதியில் வாய்ப்பு வழங்க வேண்டும்’ என்று கூறியிருக்கின்றனர். இப்படியொரு பெட்டிஷன் அனுப்பியதன் பின்னணியில் கோவை மாவட்டத்தில் கோலோச்சும் எங்கள் கட்சி விஐபி இருப்பதாகச் சொல்கிறார்கள். எங்களுக்குத் தெரிய இந்த முறை பொள்ளாச்சி ஜெயராமனுக்கு இங்கு சீட் தரப்படுவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவுதான்!’’ என்றார்கள்.

கொங்கு மண்டலத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்றுவதற்கு, இந்தத் தேர்தலில் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை முக்கிய துருப்புச்சீட்டாக எடுப்பதற்கு திமுக முடிவு செய்திருப்பதை அந்தக் கட்சியின் நிர்வாகிகளும் உறுதி செய்தனர். அதனால் பொள்ளாச்சி ஜெயராமனை நிறுத்தினாலும், அதை வைத்தே அவருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யவும், அவர் தொகுதி மாறினால் இதனால்தான் அவர் தொகுதி மாறினார் என்று பிரச்சாரம் செய்யவும் திமுக தயாராக இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், கட்சியின் சீனியரான ஜெயராமனின் கோரிக்கையை இபிஎஸ் ஏற்பாரா அல்லது கொங்கு சமுதாயத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவருக்கு சீட் கொடுக்க மறுப்பாரா என்பதை அறிந்துகொள்ள கோவை மாவட்ட அதிமுகவினர் பெரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

தேர்தலில் எப்படி வேலை பார்க்க வேண்டுமென்பதில் பொள்ளாச்சி ஜெயராமன் கரை கண்டவர். அவரை கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளராக ஜெயலலிதா நியமித்ததும் அதனால்தான். இதுவரை எதிர்க்கட்சிகளைச் சமாளித்து பல வெற்றிகளை கட்சிக்குத் தேடித்தந்தவருக்கு இந்தமுறை, தன்னுடைய சொந்தக்கட்சியினரிடமே போராட வேண்டிய இக்கட்டான சூழ்நிலை.

என்ன செய்யப் போகிறார் பொள்ளாச்சி ஜெயராமன்?

-பாலசிங்கம்

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

ஞாயிறு 7 மா 2021