மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 மா 2021

சி.பி.எம். கட்சிக்கு 8 இடங்கள்?

சி.பி.எம். கட்சிக்கு 8 இடங்கள்?

திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச்சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உடன்பாடு ஏற்பட்டுவிட்டது. மதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி ஆகியவற்றுடனான தொகுதிப்பங்கீட்டுப் பேச்சு மட்டும் இழுத்துக்கொண்டே இருந்துவந்தது.

மதிமுக குழுவினருடன் நேற்று முன் தினம் நடத்திய பேச்சுவார்த்தையின்போதும், திமுக குழுவினர் ’ஒன்றுக்கு மூன்று’ கணக்கையே சொன்னார்கள். மதிமுக தரப்பில் இதைக் கேட்டு நொந்துபோய், அங்கிருந்தே வைகோவிடம் தெரிவித்தார்கள். பேச்சுவார்த்தையை முடித்து அறிவாலயத்திலிருந்து கிளம்பும் முன், மதிமுக துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா ஊடகங்களிடம் சுருக்கமாக பேசினார். ’இனி அழைத்தால் பேசவருவோம்’ என திமுக பக்கம் பந்தைத் தள்ளிவிட்டது மதிமுக. ஆனாலும் திமுக அசைந்துகொடுக்கவில்லை.

ஒருவழியாக இன்று மதிமுகவுக்கு 6 தொகுதிகள் என்று உடன்பாடும் கையெழுத்தாகிவிட்டது.

முன்னதாக, மதிமுக தரப்பையாவது திமுக குழுவினர் பேசவருமாறு அழைப்பு விடுத்தனர். சிபிஐ கட்சியை அழைத்துப் பேசியபோதும் சிபிஎம் தரப்பை பேசவே அழைக்காமல் இருந்தது, திமுக. முதல் கட்டப் பேச்சுவார்த்தையில் குறைந்தபட்ச இரட்டை இலக்கம் வரை இறங்கிவந்த சிபிஎம் கட்சி மேற்கொண்டு குறைப்பதற்கு தயாராக இல்லை என்பதில் உடும்புப் பிடியாக நின்றது.

அந்தக் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியும் கோவையில் பேசும்போது, ”கலைஞருடன் அரசியல் செய்வதற்கான அதிர்ஷ்டம் கிடைத்தது; அவர் எங்களுக்கெல்லாம் போதனை செய்வார்.. நல்லவர்கள் எல்லாம் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும் என அவர் அடிக்கடி சொல்வார்.. அது இப்போதைக்கும் பொருத்தமாக இருக்கிறது.” என பேச்சோடு பேச்சாகக் குறிப்பிட்டார் என்றாலும், இரு தரப்பு அணிகளும் அதைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டுத்தான் போனார்கள்.

அதையடுத்து நேற்று சென்னை, திருவான்மியூர் பொதுக்கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேசும்போதும், பாஜக-அதிமுக கூட்டணிக்கு எதிரான சக்திகள் வலுவாக நிற்கவேண்டும் என்று அவர் பங்குக்கு வலியுறுத்தினார்.

அதாவது, சிபிஎம் கட்சி திமுகவுக்கு மட்டுமல்ல, வெளியில் உள்ளவர்களுக்கும் சேர்த்து, ‘நாங்கள் கூட்டணி ஒற்றுமைக்காக நிற்கிறோம். திமுகவின் திடீர் பார்முலா அவர்களாகவே வகுத்துக்கொண்டதுதான். ஒரு தரப்பில் அப்படியொரு கணக்குக்கு வந்துவிட்டு இன்னொரு கட்சி மீது அதை நிர்பந்தம் செய்வதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும் என அடிப்படையிலேயே அதை நிராகரிக்கிறோம்.’ என்பதை, உணர்த்த விரும்பினார்கள்.

அதன் விளைவு, இன்று காலையில் சிபிஎம் குழுவினரை அதிகாரபூர்வமாக இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு திமுக அழைப்புவிடுத்தது. காலை 10 மணியளவில் நடைபெற்ற பேச்சில் அதே ஆறு தொகுதியிலேயே திமுக நிற்க, சிபிஎம் தரப்பில் 6 என்றால் ஏற்கமுடியாது என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர். குறைந்தபட்ச இரட்டை இலக்கம் என்பதை எதிர்பார்ப்பதாகக் கூறிவிட்டு வெளியே வந்தனர். சிபிஎம் தலைவர்கள். சாதகமான முடிவை எதிர்பார்க்கிறோம் என்று ஊடகத்தினரிடம் கூறினார், கே.பாலகிருஷ்ணன்.

அவர் கூறியபடி, திமுக தலைவர் ஸ்டாலினிடம் கேட்டுச் சொல்வதாக டி.ஆர்.பாலு குழுவினர் சிபிஎம் தலைவர்களின் உறுதியான நிலையை எடுத்துச் சொல்லியிருக்கின்றனர்.

எதிர்த்தரப்பில் இரவோடு இரவாக அதிமுக - பாஜக உடன்பாடு அறிவிக்கப்பட்ட நிலையில், தாங்கள் தாமதம்செய்வது அணியில் பலவீனத்தை உண்டாக்கிவிடக்கூடாது என்று திமுக அணியில் உள்ள சிலர் அக்கறையுடன் செயல்பட்டனர். அதையடுத்து, சிபிஎம் கட்சிக்கு 8 இடங்கள் என திமுக தலைமை இறங்கிவந்துள்ளது. கிட்டத்தட்ட மூன்று நாடாளுமன்றத் தொகுதிகள் எனும் கணக்கில் ஒதுக்கியிருப்பதாக திமுகவின் புது கணக்குப்புலிகள் பார்முலாவை விடாமல் தெரிவித்துள்ளனர். சிபிஎம் தரப்பும் இதை ஏற்றுக்கொள்ளும் என்றே தெரிகிறது.

ஒன்றுக்கு மூன்று பார்முலா பற்றிய பேச்சின்போது, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தில், சத்யராஜிடம் ஜனகராஜ் பேசுவாரே, “ இது சாப்பாட்டுக்கு முன்னாடி.. இது சாப்பாட்டுக்குப் பின்னாடின்னு.. அதைப்போல இருக்குதுங்க இந்த பார்முலா கணக்கு’’ என தோழர் ஒருவர் கமெண்ட் அடித்துள்ளார்.

- பாலசிங்கம்

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

சனி 6 மா 2021