மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 மா 2021

வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட மம்தா.. பிரசாந்த் கிசோர் தந்த ரிப்போர்ட் !

வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட மம்தா.. பிரசாந்த் கிசோர் தந்த ரிப்போர்ட் !

ஐந்து சட்டப்பேரவைகளுக்கான தேர்தலில் முழுமையான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அதிரடி காட்டியிருக்கிறார், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி. காங்கிரஸ்+இடதுசாரி கூட்டணியும் முதல் கட்டமாக வேட்பாளர், தொகுதிப்பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

அந்த மாநிலத்தில் மார்ச் 27ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 29வரை எட்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படுகிறது. மும்முனைப் போட்டியில் முந்திக்கொண்டு (3 தொகுதிகள் தவிர மற்ற )திரிணமூல் போட்டியிடும் அனைத்து தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் நேற்று அறிவித்தார், மம்தா. மலைப்பகுதியான டார்ஜிலிங்கில் கோர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா (பிமல் குருங்) அணிக்கு 3 தொகுதிகளைத் தந்திருக்கிறார். உலக அளவில் பிரபலமான நந்திகிராம் தொகுதியில் அவர் இந்த முறை போட்டியிடுகிறார்.

பட்டியல் அறிவித்த சூட்டோடு, வரும் 9ஆம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிட்டு, அடுத்த நாள் வேட்புமனுவையும் தாக்கல்செய்கிறார், மம்தா.

கொல்கத்தாவுக்கு உள்ளேயே தேர்தலில் போட்டியிடுபவர், அங்கிருந்து 140 கி.மீ. தொலைவில் உள்ள நந்திகிராமில் போட்டியிடுவது வங்கத்துக்குள் அதிர்ச்சியானது அல்ல. கடந்த ஜனவரியிலேயே இங்கு போட்டியிட விரும்புவதாகக் கூறிவிட்டார். கடந்த தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் வெற்றிபெற்றவர், மம்தாவின் அணுக்கமான அமைச்சராக இருந்து பாஜகவுக்குத் தாவிய சுவேந்து அதிகாரி. அவர் விடுத்த சவால்தான் மம்தாவை இங்கு போட்டியிடவைத்திருக்கிறது.

அப்படி என்ன சொல்லிவிட்டார், அவர்.. ”மம்தாவுக்குத் துணிவிருந்தால் நந்திகிராமில் என்னை எதிர்த்துப் போட்டியிடட்டும்; அவரை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் தோற்கடிக்காவிட்டால் அரசியலிலிருந்தே விலகிக்கொள்கிறேன்.”என்பதே சுவேந்துவின் சவால்.

சும்மாவே வரிந்துகட்டிக்கொண்டு வரும் மம்தா, தன் அமைச்சரவை முன்னாள் சகாவின் சவாலை உண்மையாகவே எதிர்கொள்ள இறங்கிவிட்டார். இதற்காக ஜனவரி மாதத்திலேயே நந்திகிராம் பகுதியில் வீடுபார்க்கத் தொடங்கிவிட்டார்கள், திரிணமூல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள். ஹெலிகாப்டர் இறங்குதளம் கொண்ட நந்திகிராம் கல்லூரியிலிருந்து 3 கிமீ தொலைவுக்குள் இருக்கும் நான்கு வீடுகள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. மம்தாவின் பாதுகாப்புப் பிரிவினர் ஒப்புதல் அளித்தவுடன், மம்தாவுக்கான வீட்டை இறுதிசெய்துவிடுவோம் என்கிறார்கள், கிழக்கு மிதினாப்பூர் மாவட்ட திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிகள்.

நந்திகிராமில் உலக அளவில் கவனத்தை ஈர்த்த 2007ஆம் ஆண்டுப் போராட்டம்தான், மம்தாவின் அரசியலில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. டாட்டாவின் கார் தொழிற்சாலை அமைப்பதற்காக விவசாய நிலங்களை இடதுமுன்னணி அரசாங்கம் கையகப்படுத்த முயன்றது. அதற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மம்தா, மத்திய அமைச்சர் பதவி, அகில இந்திய அரசியல் ஆகியவற்றை விட்டுவிட்டு, மாநில அரசியலுக்குள் குதித்தார். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸ் கட்சியைக் காலூன்றவைத்தார். மேற்குவங்கத்தில் 34 ஆண்டுகள் ஆட்சிசெய்த இடது முன்னணி அரசாங்கத்தைத் தோற்கடித்தார்.

இப்போது மூன்றாவது முறையாகவும் வங்கத்தில் ஆட்சியைப் பிடித்து ஹாட்ரிக் வெற்றிக்கு முயற்சிசெய்கிறார்.

வழக்கம்போல, காளிகாட் பகுதியில் இருக்கும் தன் வீட்டிலேதான் நேற்றும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார், மம்தா. அதுவும், தனக்கு ராசியான இடமென அவர் கருதும் அறையில்தான், வெளியீடு நடைபெற்றது. ஏனென்றால், கடந்த மக்களவைத் தேர்தலில் வழக்கத்துக்கு மாறாக வேறு ஒரு அறையில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டநிலையில், திரிணமூல் காங்கிரசுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்பது மம்தாவின் நம்பிக்கை. (2019 தேர்தலில் மொத்தமுள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளை பாஜக கைப்பற்ற, அதைவிட நான்கே தொகுதிகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றது, திரிணமூல் காங்கிரஸ். 2014-ல் 34 இடங்களில் மம்தா கட்சி வரலாற்று வெற்றியைப் பெற்றிருந்தது நினைவிருக்கலாம்)

தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் 23 பேரை இந்தத் தேர்தலில் கழற்றிவிட்டிருக்கிறார், மம்தா. 50 பெண்கள், 42 இசுலாமியர்கள், 79 பட்டியல் சாதியினர், 17 பட்டியல் பழங்குடியினர் என வேட்பாளர் பட்டியலில் சமூக நீதி காட்டியிருப்பதாக திரிணமூல் கட்சியினர் பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள்.

அது மட்டுமல்ல, காரணம்.

பட்டியல் சாதியினருக்கு 68 தனித் தொகுதிகள் இருக்கும்நிலையில் அதைவிடக் கூடுதலாக 11 பேரும், பட்டியல் பழங்குடியினருக்கான தனித்தொகுதிகளின் எண்ணிக்கையைவிடக் கூடுதலாக மொத்தம் 17 பேரும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளது, சாதாரணமானது இல்லை.

பிரசாந்த் கிஷோர் கம்பெனி எடுத்துத்தந்த கள ஆய்வு முடிவின்படிதான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் வங்காள தேர்தல் ஆய்வாளர்கள்.

கடந்த மக்களவைத் தொகுதியில் பட்டியல் சாதியினருக்கான தனித்தொகுதிகளில் 34 சட்டமன்றத் தொகுதிகளிலும் பட்டியல் பழங்குடியினருக்கான தனித் தொகுதிகளில் 13 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. பட்டியல் சமூகத்தினருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது அவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணம்; குறைந்தது 4 நாடாளுமன்றத் தொகுதிகளையாவது இதன் மூலம் பாஜக கூடுதலாக வென்றிருக்கிறது எனக் கூறமுடியும் என்பது பிரசாந்த் கிஷோர் கம்பெனி மம்தாவுக்குத் தந்த அறிக்கை.

இதன்படியே, மத்துவா சமூகத்தினரைக் கவரும்வகையில் 4 நாமசூத்திரர்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. வங்கத்தில் கணிசமாக இருக்கும் மத்துவா சமூகத்தினர் கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும் ஆதரவைத் தந்ததைக் கணக்கில் எடுத்திருக்கிறார், மம்தா. வடக்கு வங்கப் பகுதியில் பழங்குடியினர் மத்தியில் செல்வாக்கு கொண்ட ராஜேஷ் லக்ரா எனும் போதகருக்கும் திரிணமூல் சார்பில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

- இளமுருகு

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ...

4 நிமிட வாசிப்பு

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ஸ்டாலின்

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

3 நிமிட வாசிப்பு

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா? ...

3 நிமிட வாசிப்பு

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா?

சனி 6 மா 2021