Eபாமகவின் 167 வாக்குறுதிகள்!

politics

/�

ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் பாமக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து தேர்தலுக்கு தயாராகி, வரும் பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னையில் இன்று (மார்ச் 5) தேர்தல் அறிக்கையை காணொளி காட்சி வாயிலாக வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் அன்புமணி ராமதாஸ் எம்.பி, கட்சித் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இலவச கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம், எழுவர் விடுதலை, சட்டம் ஒழுங்கு என 167 வாக்குறுதிகள் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. அவை,

**கல்விக்கான திட்டங்கள்**

1. மழலையர் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும். தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும்.

2. அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பையும், கல்வித் தரத்தையும் வலுப்படுத்துவதன் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் அரசுப் பள்ளிகளுக்கு மாறும் சூழலை உருவாக்க வேண்டும் என்பது தான் அரசின் இலக்கு ஆகும்.

3. தமிழ்நாட்டில் ஒரு மாணவருக்கு ஓராண்டுக்கு கல்வி வழங்குவதற்கான அரசின் செலவு இப்போதுள்ள ரூ.32 ஆயிரத்திலிருந்து ரூ.40 ஆயிரமாக உயர்த்தப்படும். பள்ளிக் கல்விக்கான ஆண்டு ஒதுக்கீட்டை ரூ.80,000 கோடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

4. இடைநிற்றலைத் தடுக்கும் வகையில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.500 வீதமும், 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ரூ.1000 வீதமும் நிதியுதவி அளிக்கப்படும்.

5. 2021 & 2022ஆம் ஆண்டு முதல் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்கப்படும்.

6. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் & தேர்வுமுறை.

7. மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையாக தமிழக அரசின் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.

8. மாணவர்களின் ஆங்கில மொழித் திறனையும், ஆங்கிலத்தில் பேசும் திறனையும் வலுப்படுத்த சிறப்புப் பயிற்சி.

9. தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள 9ஆம் வகுப்பில் இருந்து சிறப்புப் பயிற்சி.

10. அரசுப் பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையிலும், தொகுப்பூதிய அடிப்படையிலும் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள்.

**உயர்கல்வி**

11. உயர்கல்வி கற்பதற்கான பொதுத்துறை வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை. கடன் தொகையை தமிழக அரசே வங்கிகளுக்குச் செலுத்தும்.

12. வருமான வரம்பு நிபந்தனைகளுக்கு உட்பட்டு உயர்கல்வி இலவசமாக வழங்கப்படும்.

13. அரசுப் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் 1000 பேரும், மாணவிகளில் 1000 பேரும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் உயர்கல்வி பயில அனுப்பப்படுவார்கள். செலவை அரசே ஏற்கும்.

14. வெளிநாட்டு மருத்துவப் பல்கலைக் கழகங்கள், தொழில் நுட்பப் பல்கலைக் கழகங்களுடன் உயர்கல்வி ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் செய்துகொள்ளப்படும். அதன் மூலம் உலகின் தலை சிறந்த பல்கலைக் கழகங்களில் கற்பிக்கப்படும் உயர்கல்வி தமிழ்நாட்டு மாணவர்களுக்கும் கிடைக்கும்.

15. சென்னைப் பல்கலைக் கழகமும், அண்ணா பல்கலைக் கழகமும் திறன்சார் அறிவு மையங்களாகத் (Centre of Excellence) தரம் உயர்த்தப்படும்.

16. தமிழகத்தில் 6 ஒருமைப் பல்கலைக்கழகங்கள் (Unitary Universities) அமைக்கப்படும். ஆராய்ச்சிகளைச் செய்வது மட்டுமே இவற்றின் முதன்மை நோக்கமாக இருக்கும்.

17. தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களும் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திலும் ஐ.ஐ.டி,க்கு இணையான ஓர் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (Tamilnadu Institute of Technology – TIT) அமைக்கப்படும். ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு சட்டக்கல்லூரியும், ஒரு வேளாண் கல்லூரியும் அமைக்கப்படும்.

18. மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குத் தரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து விசாரித்து முடித்து நல்ல தீர்ப்புப் பெறத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.

19. மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்படுவது போன்று, அண்ணா பல்கலைக் கழகத்திலும், அரசு பொறியியல் கல்லூரிகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யப்படும்.

20. நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள், தனியார் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த பா.ம.க. போராடும்.

21. தமிழகத்தில் உள்ள ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மத்தியப் பல்கலைக் கழகம், தேசியச் சட்டப் பள்ளி உள்ளிட்ட மத்தியக் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் 50% இடங்களை மாநில ஒதுக்கீடாக வழங்க வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தும்.

**நலவாழ்வுக்கான திட்டங்கள்**

22. தமிழ்நாட்டில் அனைவருக்கும் இலவச மருத்துவம் வழங்கப்படும்.

23. வருமான வரம்பின்றி அனைவருக்கும் இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்.

24. அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும். கொரோனா பாதிப்புக்குப் பிந்தைய சிகிச்சைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்படும்.

25. 50 வயதைக் கடந்த அனைவருக்கும் முழு மருத்துவப் பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படும்.

26. தமிழ்நாட்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மருத்துவக் கல்லூரிகள் இல்லாத காஞ்சிபுரம், பெரம்பலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.

27. கடலூர், ஈரோடு மாவட்டங்களில் 2வது அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும்.

28. மருத்துவர்கள் ஒன்றாக இணைந்து கூட்டுறவு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளை ஏற்படுத்த ஊக்குவிக்கப்படும். இதற்கான செலவில் 25% அரசு மானியமாக வழங்கப்படும். இந்தக் கல்லூரிகளில் குறைந்தக் கட்டணம் வசூலிக்கப்படுவது உறுதி செய்யப்படும்.

29. சென்னையில் ரூ.1000 கோடி செலவில் மாநில புற்றுநோய் மருத்துவ மையம் அமைக்கப்படும்.

30. கருவுற்றப் பெண்களுக்கான மகப்பேறு கால நிதியுதவி ரூ.18 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும்.

**வேளாண்மை**

31. தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் அனைத்து வேளாண் விளைபொருட்களும் அரசால் கொள்முதல் செய்யப்படும்.

32. காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும்.

33. வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். வேளாண்மை சார்ந்து 4 அமைச்சகங்கள் ஏற்படுத்தப்படும்.

34. உழவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை இடுபொருள் மானியம் வழங்கப்படும்.

35. வேளாண் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.2,500 குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படும்.

36. 60 வயதைக் கடந்த உழவர்களுக்கு மாதம் ரூ.1,500 ஓய்வூதியம் வழங்கப்படும்.

37. பொதுத் துறை வங்கிகளில் உழவர்கள் வாங்கிய பயிர்க் கடனில் ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்படும்.

38. கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் பயிர்க் கடனுக்கு 15% மானியம் வழங்கப்படும்.

39. உழவர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை சேமித்து வைக்க உலர்த்தும் வசதியுடன் கூடிய பிரம்மாண்ட கிடங்குகள் அமைக்கப்படும்.

40. அனைத்து மாவட்டங்களிலும் வேளாண் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும். அம்மண்டலங்களில் அந்த மாவட்டத்தில் விளையும் அனைத்து விளை பொருட்களையும் பதப்படுத்தி / மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

**நீர் மேலாண்மை**

41. காவிரி & கோதாவரி இணைப்புத் திட்டத்திற்கு விரைவில் ஒப்புதல் பெறப்பட்டு, ஓராண்டுக்குள் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்.

42. தமிழ்நாட்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் 20க்கும் மேற்பட்ட பாசனத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

43. தமிழ்நாட்டிற்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் திட்டம் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

**சமூக நீதி**

44. தமிழ்நாட்டில் அனைத்து மக்களுக்கும் முழுமையான சமூகநீதி வழங்குவதற்காகவும், இடஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காகவும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.

45. வன்னியர்களுக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக உள்இடஒதுக்கீடு வழங்கப்படும்.

46. பிற்படுத்தப்பட்ட வகுப்பில் விஸ்வகர்மாக்கள், யாதவர்கள், முத்தரையர்கள் ஆகியோரின் கல்வி, வேலைவாய்ப்பு நிலை மிகவும் மோசமாக உள்ளது. இந்தநிலையைப் போக்க 3 சமுதாயங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் உள்ஒதுக்கீடு வழங்கப்படும்.

47. நாவிதர், வண்ணார், பருவதராசகுலம், ஒட்டர், வலையர், அம்பலக்காரர், குரும்பர், குயவர், வேட்டுவக்கவுண்டர், ஊராளி கவுண்டர் ஆகிய 10 சமுதாயங்களையும் கொண்ட தனி இடஒதுக்கீட்டுப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு, அவர்களுக்குத் தனி இடஒதுக்கீடு வழங்கப்படும்.

48. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளில் உள்ள மற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் உள்ஒதுக்கீடு / தொகுப்பு ஒதுக்கீடு வழங்கப்படும்.

49. கூட்டுறவுச் சங்கங்களின் நகை மதிப்பீட்டாளர் பணிநியமனத்தில் விஸ்வகர்மா & பொற்கொல்லர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

50. தமிழ்நாட்டில் கடந்த 32 ஆண்டுகளில் இடஒதுக்கீட்டின் மூலம் ஒவ்வொரு சமூகத்திற்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது என்பது குறித்த புள்ளி விவரங்கள் திரட்டப்பட்டு, வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.

51. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள அனைத்துச் சாதிகளுக்கும் தனித்தனி வாரியங்கள் ஏற்படுத்தப்படும். இந்த வாரியங்களின் மூலம் அந்தச் சமுதாய மக்களின் நலனுக்காக 5 ஆண்டுகளில் ரூ.3 இலட்சம் கோடி செலவிடப்படும்.

52. நரிக்குறவர்களுக்கு அவர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் உண்டு உறைவிடப் பள்ளிகள் ஏற்படுத்தப்படும்.

53. பழங்குடியின மக்களுக்கு விண்ணப்பித்த சில நாட்களில் சாதிச் சான்றிதழ் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.

**சமூக நீதி & தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை**

54. தமிழ்நாட்டில் அனைத்து அரசு வேலைவாய்ப்புகளும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

55. தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் 80% பணியிடங்கள் தமிழக இளைஞர்களைக் கொண்டு நிரப்பப்படவேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.

56. மத்தியப் பொதுத்துறை நிறுவனங்களில் அதிகாரிகள் நிலை பணியிடங்களைத் தவிர்த்துத் தொழிலாளர் நிலைப் பணியிடங்கள் அனைத்தும் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களைக்கொண்டே நிரப்பப்பட வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தும்.

57. மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களின் இடைநிலைப் பணிகளில் 50% மாநில ஒதுக்கீடாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

58. ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் தமிழக மாணவர்களுக்கு 50% இடங்கள் மாநில ஒதுக்கீடாக வழங்கப்படவேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தும்.

59. தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

60. தனியார் பெரு நிறுவனங்கள் தானாக முன்வந்து இடஒதுக்கீட்டுக் கொள்கையைச் செயல்படுத்தும் வகையில் பெரு நிறுவனங்களில் பன்முகக் கொள்கை செயல்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும்.

**நிர்வாக சீர்திருத்தம்**

61. தமிழ்நாட்டின் நிர்வாக வசதிக்காக 2ஆவது தலைநகராகத் திருச்சியும், 3ஆவது தலைநகரமாக மதுரையும் அறிவிக்கப்படும்.

62. தமிழ்நாட்டின் தொழில் தலைநகரமாகக் கோயம்புத்தூர் அறிவிக்கப்படும்.

63. தமிழ்நாட்டில் அண்மையில் 6 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள மாவட்டங்களும் மறுசீரமைக்கப்படும். ஒரு மாவட்டத்தில் 12 இலட்சம் பேர் வாழும் வகையில் மாவட்ட மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும்.

64. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் சொத்து விவரங்கள் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தின் முதல் பணி நாளில் வெளியிடப்பட்டு, மக்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படும்.

65. புதிய அரசு பதவியேற்று ஒவ்வொரு ஆண்டின் நிறைவிலும் அமைச்சர்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டு, அதன் முடிவுகள் மக்கள் பார்வைக்காக வெளியிடப்படும்.

**ஊழல் ஒழிப்பு**

66. தமிழ்நாட்டில் லோக்அயுக்தா அமைப்பு வலிமையானதாக மாற்றப்படும்.

67. அனைத்து அரசு அலுவலகங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

68. அரசுப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றின் தலைவர்களாக அப்பழுக்கற்றவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள்.

69. தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்தவுடன் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வெற்றிபெறும்.

70. மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதைத் தடுக்க விரிவான செயல் திட்டத்தை வகுத்துக்கொடுத்துத் தமிழக அரசின் மூலம் செயல்படுத்தும்.

**தொழில் வளர்ச்சி**

71. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது ஒரு சிப்காட் தொழில் வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

72. தருமபுரி, திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 16.02.2021 அன்று அடிக்கல் நாட்டப்பட்ட 10 சிப்காட் தொழில் வளாகங்களையும் புதிய அரசு அமைந்த 6 மாதங்களில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

73. தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய முன்வருபவர்களைச் சந்திக்க முதலமைச்சர், வாரம் 3 மணிநேரம் ஒதுக்குவார்.

74. ரூ.100 கோடிக்கும் அதிக மதிப்புள்ள தொழில் திட்டங்களில் முதலீட்டாளர்களுக்கு உதவ முதலமைச்சரின் அலுவலகத்தில் தனிப் பிரிவு ஏற்படுத்தப்படும்.

75. மண்டல வாரியான தொழில் வளர்ச்சி: தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொருவிதமான இயற்கைச் சூழலும், மூலப்பொருள் வளமும் உள்ளது. அதற்கேற்ப அந்தந்த மண்டலத்துக்கான தொழில் வளர்ச்சி மேம்பாட்டு நோக்கங்கள் வகுக்கப்படும்.

76. மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் தொழில்வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்குடன் அங்குப் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும். இதற்காகச் சிறப்புத்திட்டம் செயல்படுத்தப்படும்.

77. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு வேளாண் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும். இதன் மூலம், அந்தந்தப் பகுதிகளில் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும்.

78. தொழில் வளர்ச்சிக்காகத் தமிழகம் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலமும் தனித்தனிப் பொருளாதார ஆணையரகங்களாக அறிவிக்கப்படும். ஒவ்வொரு மண்டலத்திலும் தலைமைச் செயலாளர் நிலையில் உள்ள அதிகாரி ஒருவர் பொருளாதார ஆணையராக நியமிக்கப்படுவார். மண்டல அளவில் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதுதான் இந்த ஆணையரகங்களின் பணிகளாகும்.

79. ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள இயற்கை வளங்கள், தொழில் முதலீட்டு வாய்ப்புகள் ஆகியவற்றைக் கண்டறிந்து, அதற்கேற்ற வகையில் புதிய தொழில்களைத் தொடங்குதல், அதற்கான முதலீட்டை வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஈர்த்தல் ஆகிய பணிகளில் இந்த அமைப்பு ஈடுபடும்.

80. ஒவ்வொரு மண்டலத்திலும் பெறப்பட்ட தொழில் முதலீடுகள், அவற்றைக் கொண்டு தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள் ஆகியவற்றின் விவரங்கள் குறித்து நிதியாண்டின் இறுதியில் விளக்க அறிக்கை வெளியிடப்படும்.

**வேலைவாய்ப்பு**

81. தமிழக அரசுத் துறைகளில் நீக்கப்பட்ட பணியிடங்களை மீண்டும் ஏற்படுத்துதல், காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரப்புதல் ஆகியவற்றின் மூலம் 5 இலட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்.

82. ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்சம் ஒருவருக்குக் காலமுறை ஊதியத்துடன் கூடிய வேலை உறுதி செய்யப்படும்.

83. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிந்தும் வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி வழங்கப்படும்.

84. இளைஞர்கள் கூட்டாகத் தொழில் தொடங்கச் சிறப்பு அமைப்பினை ஏற்படுத்தி, இளைஞர்களை ஒருங்கிணைத்து, அவர்கள் வாழும் பகுதிக்கு ஏற்ற தொழில்களைக் கூட்டுறவு முறையில் ஏற்படுத்துதல். 100, 500, 1000 இளைஞர்களை ஒருங்கிணைத்துக் கூட்டுறவுச் சங்கங்களை ஏற்படுத்தி, அதன் மூலம் தொழில்தொடங்க மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படும்.

85. பொருளாதார மந்தநிலை காரணமாக, வெளிநாடுகளில் இருந்து வேலையிழந்து தமிழகம் திரும்பிய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்க உதவிகள் செய்யப்படும்.

**ஒரு கோடி பேருக்கு வேலை**

86. தமிழ்நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

87. வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையில் 50 இலட்சம் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

88. ஊர்ப்புறங்களில் வேளாண்மை மற்றும் பொறியியல் பட்டதாரிகளை ஒருங்கிணைத்து வேளாண்மை மற்றும் தோட்டக்கலை ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தப்படும். அவர்கள் அந்தந்தப் பகுதிகளில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் சந்தைப் படுத்துதல் குறித்த ஆலோசனைகளையும், சேவைகளையும் வழங்குவார்கள். இதன் மூலம் 5 இலட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்.

89. தமிழ்நாட்டில் உள்ள 6 பெரிய துறைமுகங்கள் மற்றும் 20 சிறிய துறைமுகங்களை இணைத்துத் தமிழகம் உலகின் தளவாடக் கிடங்கு மையமாக மாற்றப்படும். துறைமுக நகரங்கள் அனைத்திலும் அனைத்து வசதிகளும் கொண்ட கிடங்குகள் ஆயிரக்கணக்கில் உருவாக்கப்படும். இதனால், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி அதிகரிக்கும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 லட்சம் பேருக்கு வேலை கிடைப்பது உறுதிசெய்யப்படும்.

90. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துச் சென்னையில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும். கோவை மற்றும் திருப்பூரில் ஆடை சார்ந்த தொழில்களும், நீலகிரி, கன்னியாகுமரி, திண்டுக்கல், நாமக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுலா சார்ந்த தொழில்களும் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் 2 இலட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்.

91. ஒரு கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவதற்கான இந்தப் பணிகளை மேற்கொள்ளத் தனித் துறை உருவாக்கப்படும். இத்துறை முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும். இத்துறைக்கான அலுவலகங்கள் மற்றும் கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்காகத் தொடராச் செலவினமாக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

**பொருளாதார வளர்ச்சி**

92. பொருளாதார விஷயங்களில் முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்கப் பொருளாதார வல்லுநர் குழு அமைக்கப்படும்.

93. தமிழகத்தின் ஆண்டுப் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 10 விழுக்காட்டுக்கும் கூடுதலாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

94. உற்பத்தித்துறை வளர்ச்சி ஆண்டுக்கு 20 விழுக்காடு என்ற அளவிற்கு உயர்த்தப்படும்.

95. வேளாண் துறை வளர்ச்சி ஆண்டுக்கு 5 விழுக்காட்டிற்கும் குறையாமல் உறுதி செய்யப்படும்.

96. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும் வணிக வளர்ச்சிக்கும் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி பெரும் தடையாக அமைந்துள்ளது. இந்த நிலையை மாற்ற ஜி.எஸ்.டி. வரி விகிதத்தைக் மாற்றியமைக்கும் படி மத்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்தும்.

97. மின் உற்பத்தியை அதிகரித்து, மின்சாரக் கொள்முதலை முற்றிலுமாகக் கைவிடுவதன் மூலம், மின் கட்டணம் குறைக்கப்படும்.

98. அரசுப் பேருந்துகளில் பயணிகளுக்குப் பாதிப்பில்லாத வகையில் சரக்குகளை ஏற்றிச் செல்வதன் மூலம் ஒவ்வொரு பேருந்துக்குமான சராசரி வருவாய் ரூ.20,000 ஆக உயர்த்தப்படும். இதனால் போக்குவரத்துக் கழகங்களுக்குக் கிடைக்கும் இலாபத்தைப் பயணிகளுக்குப் பகிர்ந்தளிக்கும் வகையில் பேருந்துக் கட்டணம் குறைக்கப்படும்.

**குடும்பத் தலைவியர் நலன்**

99. தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் மகளிருக்கான மகப்பேறு விடுப்புக்காலம் தற்போதுள்ள 9 மாதங்களில் இருந்து ஓராண்டாக அதிகரிக்கப்படும்.

100. 40 வயதைக் கடந்த அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் முழு மருத்துவப் பரிசோதனை இலவசமாகச் செய்யப்படும். அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை என குடும்பத் தலைவிகள் விரும்பிய இடங்களில் இந்த மருத்துவப் பரிசோதனையைச் செய்துகொள்ளலாம்.

101. காவல்துறையில் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படும்.

102. 18 வயது வரை உள்ள அனைவரும் குழந்தைகளாகக் கருதப்படும் வகையில், தமிழக அரசு சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்படும். குழந்தைகளுக்கான கொள்கை மற்றும் செயல்திட்டம் வெளியிடப்படும்.

103. பெண்களுக்கான திருமண வயதை 21ஆக உயர்த்தும்படி மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

104. தமிழக அரசுத் திட்டங்களில் குழந்தைகள் நலன் மற்றும் மேம்பாட்டுக்காகச் செலவிடப்படும் நிதியின் அளவு 23.43% என்ற அளவில் இருந்து குழந்தைகளின் மக்கள் தொகைக்கு ஏற்ப 39% ஆக உயர்த்தப்படும்.

105. தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் திருநங்கையர்களுக்குத் தனி இடஒதுக்கீடு வழங்கப்படும். திருநங்கையர்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பு மூலம் உறுதி செய்த பிறகு, இடஒதுக்கீட்டின் அளவு தீர்மானிக்கப்படும்.

**உட்கட்டமைப்பு மேம்பாடு**

106. தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் உட்கட்டமைப்புத் தேவையை மதிப்பீடு செய்து, நிறைவேற்றுவதற்காக தமிழ்நாடு கட்டமைப்பு ஆணையம் என்ற புதிய அமைப்பைத் தமிழக அரசு உருவாக்கும்.

107. தமிழ்நாட்டில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகத் தமிழ்நாடு கட்டமைப்பு ஆணையத்தின் மூலம் அடுத்த பத்தாண்டுகளில் ரூ.25 இலட்சம் கோடியில் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

108. சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான நிலங்கள் செங்கல்பட்டு அருகே அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மிகவிரைவில் கட்டுமானப் பணிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

**போக்குவரத்து**

109. தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களுக்கும் பேருந்து சேவை உறுதி செய்யப்படும். 200க்கும் மேற்பட்ட மக்கள் வாழும் ஊர்களுக்கு நகரப் பேருந்துகள் இயக்கப்படும். இருநூறுக்கும் குறைவான மக்கள் வாழும் ஊர்களுக்கு அரசு சிற்றுந்து சேவை அறிமுகம் செய்யப்படும்.

110. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்று, இதுவரை ஓய்வூதியப் பயன்கள் கிடைக்காத அனைவருக்கும் அடுத்த 3 மாதங்களில் அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

111. சென்னையில் பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்தும் நோக்குடன் பேருந்து விரைவுப் போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படும்.

112. சென்னைக்கு வெளியே முதல்கட்டமாக மதுரை, கோவை ஆகிய நகரங்களில் பேருந்து விரைவுப் போக்குவரத்துத் திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

113. சென்னையில் இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

114. சென்னையில் அடுத்தகட்டமாக விமான நிலையம் முதல், புறநகர்ப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வரும் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுதொடர்பாக, மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும்.

115. சென்னையைப் போன்று கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாநகரங்களில் மெட்ரோ இரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.

**மின்சாரம்**

116. தமிழ்நாட்டில் இரு மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கிடப்படும் முறையை மாற்றி, மாதத்திற்கு ஒருமுறை மின் பயன்பாட்டைக் கணக்கிடும் முறை அறிமுகப் படுத்தப்படும்.

117. மின்பயன்பாடு இரு மாதத்திற்கு ஒருமுறை கணக்கிடப்பட்டால், 1,000 யூனிட் பயன்படுத்தும் ஒரு வீட்டிற்கு ரூ.5,080 மின் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். மாறாக, மாதத்திற்கு ஒருமுறை மின் பயனீட்டு அளவு கணக்கிடும்போது ஒரு மாதத்திற்கு 500 யூனிட் பயன்படுத்தினால் ரூ.1,130 மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டி வரும். இரு மாதங்களுக்கு ரூ.2,260 கட்டணம் செலுத்துவதாக வைத்துக் கொண்டால் மின்கட்டணம் 56% வரை மிச்சமாகும். இது மின்சாரக்கட்டணத்தைப் பாதியாகக் குறைப்பதைவிட, நுகர்வோருக்கு அதிக இலாபம் கொடுக்கும்.

118. அனல்மின் நிலையங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், 2025ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிதாக அனல் மின் நிலையங்களைத் தமிழக அரசு அமைக்காது. இப்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து அனல்மின் நிலையங்களும், அதன் வாழ்நாள் காலம் முடிவடைந்த பிறகு செயலிழக்கச் செய்யப்படும். அவற்றுக்குப் பதிலாகக் காற்றாலை மற்றும் சூரியஒளி மின்சார உற்பத்தித் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

**தண்ணீர்**

119. தமிழ்நாட்டின் எல்லா மக்களுக்கும் போதுமான அளவு தூய்மையான குடிநீர் கிடைக்க வழி செய்தல்.

120. அனைத்து நகரப்பகுதிகளிலும் வீடுகளுக்குக் குழாய் மூலம் தூய குடிநீரை அளித்தல்.

121. விலைகொடுத்து வாங்கும் பாட்டில் தண்ணீருக்கு மேலான தரத்தில் குடிநீர்த் தேவைக்கான தண்ணீரைத் தூய்மைப்படுத்தும் அளித்தல்.

122. சென்னைக்கு தடையின்றி குடிநீர் வழங்க வசதியாக சென்னை முதல் மாமல்லபுரம் வரையிலான பகுதிகளில் மொத்தம் 4 இடங்களில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள் அமைக்கப்படும். மத்திய அரசின் நிதியுதவியுடன் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

**சமூக நலன்**

123. 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மாதம் ரூ.2,000 ஓய்வூதியம் வழங்கப்படும். இதற்காக, அவர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை.

124. கணவனை இழந்த பெண்களுக்கும், ஆதரவற்ற அனாதைகளுக்கும், உடல் ஊனமுற்ற வேலை செய்ய இயலாதவர்களுக்கும், இதே போல மாதம் ரூ. 2500 ஓய்வூதியமாக வழங்கப்படும்.

125. தகுதியுள்ள ஒரே ஒரு மாணவர் கூடப் பொருளாதாரக் காரணங்களால் படிப்பைத் தொடர இயலாத நிலை இல்லாமல் செய்யப்படும். கல்வி உதவித் தொகைக்கான நிதியம் உருவாக்கப்படும். இதன் மூலம் தகுதியுள்ள மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

**சிறுபான்மையினர், பட்டியல் மற்றும் பழங்குடியினர் நலன்**

126. தமிழ்நாட்டில் சிறுபான்மையினரின் அச்சத்தைப் போக்கும் வகையில் தேசியக் குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படாது.

127. தமிழ்நாட்டில் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு தயாரிக்கும் போது பெற்றோரின் பிறப்பிடம், பிறந்த தேதி, ஆதார் எண் ஆகியவை தொடர்பான 6 வினாக்கள் எழுப்பப்படாது.

128. மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பெறுவதற்கான கிரீமிலேயர் ஊதிய வரம்பைக் இப்போதுள்ள 8 இலட்சத்திலிருந்து 15 இலட்சமாக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி வெற்றிபெறும்.

129. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கிரீமிலேயர் வரம்பைக் கணக்கிடும்போது, ஊதியம் மற்றும் விவசாயம் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கணக்கில் கொள்ளக்கூடாது என்றும் மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தும்.

130. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்புக்கூறு திட்டம் மிகச் சிறப்பான

முறையில் செயல்படுத்தப்படும்.

131. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மாணவ&மாணவியர்கள் கல்வி உதவித் தொகைக்கான நிதி ஒதுக்கீடு 50% அதிகரிக்கப்படும்.

**இந்துசமய அறநிலையத்துறை, மசூதிகள், தேவாலயங்கள்**

132. கிராமப்புறக் கோவில்களில் பணியாற்றும் பூசாரிகளின் ஓய்வூதியத்தை இப்போதுள்ள ரூ.3 ஆயிரத்திலிருந்து, ரூ.5 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

133. கோவில்களுக்குச் சொந்தமான அனைத்து நிலங்களும் மீட்கப்படும்.

134. வ-க்ஃபு வாரியச் சொத்துக்கள் மீட்கப்படும்.

135. தேவாலயங்கள் தொடர்பான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

**பால் உற்பத்தியாளர், நெசவாளர், வணிகர் நலன்**

136. ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படும் பசுவின் பாலுக்கு லிட்டருக்கு 36 ரூபாயும், எருமைப் பாலுக்கு லிட்டருக்கு 45 ரூபாயும் கொள்முதல் விலையாக வழங்கப்படும்.

137. பட்டு நெசவாளர்களுக்கு 30% கூலி உயர்வு வழங்கப்படும். மேலும், இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு வழங்க வகை செய்யப்படும்.

138. தமிழ்நாட்டில் வணிகத்தைப் பெருக்கவும், வணிகர்களின் குறைகளைக் களையவும், சரக்கு மற்றும் சேவை வரி குறித்த வணிகர்களின் கோரிக்கையை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று சரி செய்யவும், வணிகர்கள் நலத்துறை என்ற தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும்.

**மீனவர் நலன்**

139. தமிழ்நாடு மீனவர்கள் நல வாரியத்தின் சார்பில் தமிழக மீனவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து நிதியுதவிகளும் இரட்டிப்பாக்கப்படும்.

140. மீனவர் கூட்டுறவுச் சங்கங்களில் மீனவர்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். மீனவப் பெண்கள் தொழில்தொடங்கக் கூட்டுறவுச் சங்கம் மூலம் வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்.

**இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் நலன்**

141. படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புப் பெறுவதற்கு வழிகாட்டத் தனி மையங்கள் அமைக்கப்படும்.

142. தமிழ்நாட்டில் வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்படும்.

143. அனைத்து ஊராட்சிகளிலும் உடற்பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும்.

144. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டின் அளவு 5 விழுக்காடாக உயர்த்தப்படும்.

**அரசு ஊழியர், ஆசிரியர் நலன்**

145. தமிழ்நாடு அரசுத் துறைகளில் ஒழிக்கப்பட்ட பணியிடங்கள் மீண்டும் உருவாக்கப்படும். அந்தப் பணியிடங்களும், ஏற்கெனவே காலியாக உள்ள பிற பணியிடங்களும் உடனடியாக நிரப்பப்படும். இதன் மூலம் படித்த இளைஞர்கள் 5 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும்.

146. ஏழாவது ஊதியக் குழுப் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்களைக் களைய அமைக்கப்பட்ட குழுவின் தவறான பரிந்துரை காரணமாக, அரசுத்துறைப் பொறியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் வரை ஊதியம் குறைக்கப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகளும், நில அளவை ஆய்வாளர்கள், நில அளவைத் துணை ஆய்வாளர்கள் ஆகியோரின் ஊதியக் குறைப்பால் ஏற்பட்ட பாதிப்புகளும் சரி செய்யப்படும். இந்தப் பிரிவினர் அனைவருக்கும் அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப புதிய ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்படும்.

147. அரசு பல்கலைக்கழகங்களிலும், பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளிலும் தொகுப்பூதியத்தில் பணியாற்றுவோர் அனைவரும் பணி நிலைப்புச் செய்யப்படுவர்.

**திரைத்துறை வளர்ச்சி**

148. தமிழ்த் திரையுலகில் ரூ.3,000 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட சுமார் 1500 படங்கள் முடங்கிக் கிடப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் திரைப்படங்களைக் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் வெளியிடத் திரையுலக அமைப்புகளுடன் இணைந்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.

149. ஒரு வாரத்தில் இரு பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியிடப்பட்டால், 4 சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியிடப்படுவது, திரைத்துறை அமைப்புகளின் கருத்தொற்றுமையுடன் உறுதி செய்யப்படும்.

150. திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு, ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகே ஓ.டி.டி. தளங்களில் வெளியிடப்படுவது தான் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும். இது குறித்த விதிகளை வகுப்பதற்காகத் திரையுலகின் சம்பந்தப்பட்ட அமைப்புகளை அழைத்துப் பேசி சுமூகமான முடிவு எட்டப்படுவதற்குத் தமிழக அரசு பாடுபடும்.

151. திரைப்படங்களுக்கு தனித் தமிழில் பெயர் வைக்கப்பட்டால், 8% கேளிக்கை வரி செலுத்துவதில் இருந்து முழுமையான விலக்கு அளிக்கப்படும். இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்படும் இழப்பை அரசே ஈடுகட்டும்.

**பத்திரிகையாளர் நலன்**

152. பத்திரிகையாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது. அரசு சார்பில் ஊடகங்களுக்கு வழங்கப்படும் விளம்பரங்களின் மொத்த மதிப்பில் 3% பத்திரிகையாளர் நல நிதிக்கு வழங்கப்படும். இந்த நிதியைக் கொண்டு பத்திரிகையாளர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும்.

153. பத்திரிகைத் துறையில் 20 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற, நலிந்த பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.15,000ஆக உயர்த்தப்படும்.

**ஈழத்தமிழர் நலன்**

154. இலங்கை இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க பன்னாட்டு நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையம் மற்றும் ஐ.நா. அமைப்புக்கு அழுத்தம் தரும்படி மத்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்தும்.

**நகர்ப்புற வளர்ச்சி**

155. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 12 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முடிக்கப்பட்ட பணிகள் தவிர, மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

156. அனைத்து நகரங்களிலும் திட்டமிட்ட வகையில் புதிய குடியிருப்புகள் உருவாக்கப்படும். இதன் மூலம் மக்கள் நெரிசலும், மக்கள் அடர்த்தியும் குறைக்கப்படும்.

157. தமிழகத்தில் அனைத்து நகரங்களையும், சிறுநகரங்களையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

**சட்டம் & ஒழுங்கு**

158. சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றக் காவல்துறைக்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்படும்.

159. காவல் துறைச் சுதந்திரத்தை உறுதி செய்ய மாநிலப் பாதுகாப்பு ஆணையம் ஏற்படுத்தப்படும்.

160. காவல்துறையினருக்கு 8 மணி நேரப் பணிவரம்பு நிர்ணயிக்கப்படும்.

161. ஊர்க்காவல் படையினருக்கு ஒரு மாதத்தில் குறைந்தது 25 நாட்கள் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தகுதியுள்ளவர்களுக்கு காவல்துறையில் பணிகள் வழங்கப்படும்.

**தமிழ் வளர்ச்சி**

162. சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தைத் தரம் உயர்த்திச் செம்மொழித் தமிழ் மத்தியப் பல்கலைக் கழகமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி வெற்றிபெறும்.

163. சென்னை பெருநகரில் போக்குவரத்து நெரிசல், காற்று மாசுமாடு, திடக்கழிவு, நீர்மாசுபாடு, குடிநீர்ப் பற்றாக்குறை, குடிசைகள் இடிப்பு, அதிகாரப்பகிர்வு இல்லாமை என்பன மிக முக்கியமான பிரச்சினைகளாக உள்ளன. இவற்றைப் போக்கிச் சென்னையை அழகு நகரமாக மாற்ற பா.ம.க. நடவடிக்கை எடுக்கும்.

**சுற்றுலா வளர்ச்சி**

164. தமிழ்நாட்டில் சுற்றுலாவை வலுப்படுத்துவதற்காகத் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகத் தலைமைச் செயலாளர் நிலையில் உள்ள அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார்.

165. சென்னைப் பழவேற்காடு ஏரி, பிச்சாவரம், முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அலையாற்றிக் காடுகளையும், அதையொட்டிய கடல் மற்றும் நிலப் பகுதிகளையும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க வசதியாகப் புதிய சுற்றுலாத் திட்டம் உருவாக்கிச் செயல்படுத்தப்படும்.

**7 தமிழர் விடுதலை**

166. பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்யப் பரிந்துரைக்கும் தீர்மானத்தைத் தமிழக அமைச்சரவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. அமைச்சரவைத் தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றமும் ஆணையிட்டுள்ளது. 7 தமிழர்களும் மிகவிரைவில் விடுதலை செய்யப்படுவதை பா.ம.க. உறுதி செய்யும்.

167. தமிழ்நாடு அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3ஆவது வாரத்தில் சென்னையில் தமிழிசை விழா நடத்தப்படும். இதற்காகச் சென்னையில் தமிழக அரசின் சார்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய தமிழிசை அரங்கம் பிரம்மாண்டமாக அமைக்கப்படும்.

இவ்வாறு பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *