மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 மா 2021

ஒதுங்கிய சசிகலா: என்ன செய்யப் போகிறார் தினகரன்?

ஒதுங்கிய சசிகலா: என்ன செய்யப் போகிறார் தினகரன்?

சசிகலா அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவிப்பு செய்திருந்த நிலையில், டிடிவி தினகரன் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அமமுக தொண்டர்கள் மத்தியிலும் நிர்வாகிகள் மத்தியிலும் எழுந்துள்ளது.

நான்கு ஆண்டு காலம் சிறை வாழ்க்கை முடிந்து 2021 பிப்ரவரி 8ஆம் தேதி பெங்களூருவில் இருந்து புறப்பட்டு, பிப்ரவரி 9ஆம் தேதி காலையில் சென்னைக்குள் வந்தார் சசிகலா. பெரிய அளவுக்கு வரவேற்புகள் கொடுத்து டெல்லியைத் திரும்பி பார்க்கவைத்தார்கள் அமமுகவினர்.

சென்னை வரும் வழியில், “நான் தீவிர அரசியலில் ஈடுபடுவேன்”என்று தெரிவித்திருந்த சசிகலா, ஆனால் அதற்கு நேர் எதிரான முடிவை மார்ச் 3 ஆம் தேதி அறிவித்தார்.

“நம்முடைய பொது எதிரி தீய சக்தி என்று அம்மா நமக்குக் காட்டிய திமுகவை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்து விவேகமாக அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலைபெற அம்மாவின் தொண்டர்கள் பாடுபடவேண்டும். நான் அரசியலை விட்டு ஒதுங்கியிருந்து அம்மாவின் பொற்கால ஆட்சியை அமைய நான் என்றும் வணங்கும் என் அக்கா புரட்சித் தலைவியிடமும் எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பேன்” என்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் சசிகலா.

சசிகலாவின் அறிக்கைக்குப் பிறகான தினகரனின் நிலை என்ன என்பது பற்றி அமமுக முக்கியப் புள்ளிகள் சிலரிடம் பேசினோம்.

“சசிகலா ஆலோசனைகள் படிதான் நாடாளுமன்ற தேர்தலில் அமமுக வேட்பாளர்களை போட்டியிடவைத்து ஆயிரம் கோடி ரூபாய் செலவும் செய்தார் டிடிவி தினகரன். சமீபத்தில் அமமுக பொதுக்குழுவைக் கூட்டி, கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் தினகரன்தான் என்று தீர்மானமும் போட்டார்கள். அமமுக சார்பில் விருப்ப மனுக்களையும் வாங்கிவருகிறார்கள். இதுவரையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மனுக்கள் கொடுத்திருக்கிறார்கள்.

சசிகலா வழக்கமாக அண்ணா எம்.ஜி.ஆர் அம்மா படங்கள் இடம்பெற்றுள்ள லெட்டர் பேடில்தான் அறிக்கை வெளியிடுவார். ஆனால் இம்முறை சசிகலா வெறும் வெள்ளை பேப்பரில் அறிக்கை வெளியிட்டது அனைவரையும் திகைக்க வைத்துள்ளது. அவரது பழைய கையெழுத்தும் இம்முறை மாறியுள்ளது.

சசிகலா அறிக்கை ஜெயா டிவிக்கு போனதும் அந்த தகவல் தினகரனுக்குத் தெரிந்து பதறியடித்துப்போய் தி நகர் வீட்டில் சசிகலாவைச் சந்தித்துள்ளார். அங்கே இளவரசி, விவேக் மற்றும் குடும்பத்தினர்கள் துக்க வீட்டில் இருப்பதுபோல் இருந்துள்ளனர்.

சசிகலா இறுகிய முகத்துடன், ‘இந்த அறிக்கையை நீங்களே பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துவிடுங்கள்’ என்று தினகரனிடம் கொடுத்துள்ளார். ஆனால் அரைமணி நேரம் சசிகலாவுடன் தினகரன் வாக்கு வாதம் செய்து சமாதானம் செய்ய முயற்சித்ததாக தெரிகிறது”என்றவர்கள்,

“சசிகலா அரசியலைவிட்டு ஒதுங்குவதாக அறிவித்த பிறகும், மறுநாள் நேற்றும் தடைப்படாமல் விருப்ப மனுகளை பெறச் சொல்லியிருக்கிறார் தினகரன். தொடர்ந்து விருப்ப மனுக்கள் விநியோகம் அமமுக அலுவலகத்தில் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.

இதற்கிடையே நேற்று முன் தினமும் நேற்றும் டிடிவி தினகரன் தனது வீட்டில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன், ரங்கசாமி போன்ற நான்கு ஐந்து பேர்களுடன் இரவு வரையில் ஆலோசனைகள் செய்துள்ளார்.

அமமுகவை கலைத்து அதிமுகவில் இணைக்க விருப்பம்தான் பேசியதும் உண்மைதான். டெல்லியில் அழைத்து கூட்டணியில் போட்டியிடுங்கள் என்று பேசியதும் உண்மைதான். சசிகலா அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும், திமுக ஆட்சிக்கு இடம் கொடுக்கக்கூடாது என்று விருப்பப்பட்டதும் உண்மைதான்.

ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘சசிகலாவைக் கட்சியில் சேர்த்தால் நமக்கு வரக்கூடிய ஓட்டும் கிடைக்காது. அவர்களிடம் இருந்த முக்கியமானவர்கள் எங்களிடம் வந்துவிட்டார்கள். அவர்கள் உள்ளே வந்துவிட்டால் கட்சியில் உள்ளவர்கள் பலரும் வெளியேறிவிடுவார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாங்கிய வாக்குகள் பாஜக, அதிமுகவுக்கு எதிரான வாக்குகள்தான் பெற்றுள்ளார்கள். அதனால் நமக்கு பாதிப்பு இல்லை, அதனால் அவர்கள் இல்லாமல் தேர்தலைச் சந்திக்கிறோம் நிச்சயம் வெற்றிபெறுகிறோம்’ என்று பாஜகவிடம் தெரிவித்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு சீட் கொடுக்கிறோம். அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடட்டும். தினகரனுக்கு ராஜயசபா சீட் தருகிறோம் கட்சியில் எந்த பொறுப்பும் கொடுக்க முடியாது என்று எடப்பாடி சொல்லியிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

சசிகலா எவ்வளவோ இறங்கிவந்தார். ஆனால் அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் அவமானப்படுத்தும் வகையில் பேசிவருகிறார்கள். அவருக்கும் பலவிதமான நெருக்கடிகள், மனரீதியாகவும் நொறுங்கிப்போய் இருக்கிறார். அதனால்தான் நான் அரசியலைவிட்டு ஒதுங்கிக்கொள்கிறேன், நீங்கள் வெற்றிபெற்றாலும் தோற்றாலும் உங்களையே சாரட்டும் என்றுதான் ஒதுங்கியுள்ளார், அதாவது ஒதுங்கி நின்று பார்க்கிறார், அவரைத் தேடி பலர் வந்து கட்சிக்குத் தலைமையேற்று நடத்துங்கள் என்று வரும்போது நிச்சயம் வருவார்.

உறவு வேறு அரசியல் வேறு, அமமுக கட்சிக்குத் தினகரன் பொதுச்செயலாளர் அவருக்கு சசிகலா தடைபோடமுடியாது. அமமுக தனித்துப் போட்டியிடும் வேட்பாளர்களையும் தயார் செய்துவிட்டார், எங்கள் இலக்கு 2021 அல்ல 2026தான் தினகரனுக்கு வயசு இருக்கிறது சின்னா அம்மாவுக்குப் பக்குவம் இருக்கிறது தொண்டர்கள் இருக்கிறார்கள்.

உண்மையிலே எங்கள் தொண்டர்கள் மனநிலை என்ன தெரியுமா?திமுக வெற்றிபெறட்டும். அப்போதுதான் அதிமுகவினர் உணர்வார்கள். தென் மாவட்டங்களில் நாங்கள் அமைதியாகவே இருந்தாலே மக்களே மாற்றித்தான் போடுவார்கள்.

அதிகாரத்தில் உள்ளவர்களுக்குத் தலைவர்கள் பயப்படுவார்கள். ஆனால் மக்கள் பயப்படமாட்டார்கள். அவர்களின் அடக்குமுறையால் சசிகலாவின் இமேஜ் ஒவ்வொரு நாட்களும் உயர்ந்துகொண்டே வருகிறது. இன்னும் சில நாட்கள் பொறுப்போம் நல்லதே நடக்கும் என்று கூறியுள்ளார் தினகரன்”என்கிறார்கள் அமமுக முக்கியப் பிரமுகர்கள்.

-வணங்காமுடி

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

பிடிஆர் டு டிஆர்பி ராஜா: ஐடி விங் மாற்றப் பின்னணி!

10 நிமிட வாசிப்பு

பிடிஆர் டு டிஆர்பி ராஜா:  ஐடி விங் மாற்றப் பின்னணி!

டிஜிட்டல் திண்ணை: வார்டு வரையறை, இட ஒதுக்கீடு: நேரு சொன்னது ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல்  திண்ணை:   வார்டு வரையறை, இட ஒதுக்கீடு:  நேரு சொன்னது நடந்ததா?

வெள்ளி 5 மா 2021