மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 மா 2021

திமுகவின் ஆஃபர்: காங்கிரஸ் முடிவு என்ன?

திமுகவின் ஆஃபர்:  காங்கிரஸ் முடிவு என்ன?

தமிழக காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் கூட்டணி தொடர்பாக ஏற்பட்டுள்ள இடைவெளி, கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது என்கிறார்கள் காங்கிரஸ் மேலிடப் புள்ளிகள்.

திமுகவுடனான கூட்டணியில் காங்கிரஸ் கேட்ட எண்ணிக்கை கிடைக்கவில்லை என்பதால், காங்கிரஸ் பேச்சுவார்த்தை குழுவினர் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்தனர். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் தகவல் தெரிவித்தனர்.

இந்த நிலையில்தான் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களின் கருத்துக் கேட்புக் கூட்டம் நேற்று (மார்ச் 4) சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. முற்பகல் தொடங்கிய இந்தக் கூட்டம் இரவு 8 மணிக்குதான் முடிந்தது.

72 மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் முதலில் தனித்தனியாக பேசத் தொடங்கிய தினேஷ் குண்டுராவ், பின் நேரம் இல்லாததால் நான்கைந்து பேர்களைச் சேர்த்து கருத்துக் கேட்கத் தொடங்கினார்.

இதுபற்றி காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் சிலரிடம் பேசினோம்.

“இதுவரையிலான மேலிடப் பொறுப்பாளர்களுக்கு தமிழ் தெரியாது, அல்லது அரைகுறை ஆங்கிலத்தோடுதான் தமிழ் பேசுவார்கள். ஆனால் தினேஷ் குண்டுராவ் பெங்களூருவைச் சேர்ந்தவர் என்பதால் ஸ்பஷ்டமாக தமிழ் பேசுகிறார். எனவே மாவட்டத் தலைவர்களுக்கும் மேலிடப் பொறுப்பாளருக்கும் மொழி காரணமாக இருக்கும் இடைவெளி துளி கூட இல்லை.

தினேஷ் குண்டுராவே, ‘திமுக நமக்கு கம்மியாதான் தர்றதா சொல்லியிருக்காங்க. அதுலயே போட்டியிடலாமா இல்லேன்னா ஆப்ஷன் நமக்கு இருக்கு கமல் கூட பேசலாமா தினகரன் கூட பேசலாமா... தனியாவே நிக்கலாமா?’என்று கேட்டார். தனியா நின்னாலோ, திமுகவோட கூட்டணி இல்லாம நின்னாலோ நீங்க தேர்தல்ல இதே ஆர்வத்தோட நிப்பிங்களா என்பதும் அவரது அடுத்த கேள்வி.

மாவட்டத் தலைவர்களில் கணிசமானோருக்கு தாங்கள் எம்.எல்.ஏ. ஆகிவிடலாம் என்ற நினைப்பு இருக்கிறது. அவர்கள் நாம் இன்னும் கொஞ்சம்பேசி திமுகவுடனே கூட்டணி வைக்கலாம் என்று சொன்னார்கள்.

அதேநேரம் அழகிரியின் ஆதரவாளர்களாக கருதப்படும் மாவட்டத் தலைவர்களில் பலர், ‘திமுகவோட நாம சேர்ந்து நாம என்ன ஆட்சியைப் பிடிக்கப் போகிறோமா? திமுகதானே ஆட்சியைப் பிடிக்கப் போகுது? புதுச்சேரியில அவங்க என்ன பண்ணாங்கனு நமக்குத் தெரியாதா? நாளைக்கே திமுக ஆட்சியில உட்கார்ந்துடுச்சுன்னா ஆளுநர் சொல்றபடிதான அவங்களும் ஆடுவாங்க. இன்னிக்கு அவங்க 30 சீட்டு கொடுத்தா கூட நம்மளை 15 சீட்டுல தோக்கடிச்சுடுவாங்க. அதனால இந்த சட்டமன்றத் தேர்தலை பயன்படுத்தி கிராமம் வரைக்கும் கை சின்னத்தைக் கொண்டு போவோம். தனியாவோ இல்லேன்னா அமமுக, கமல் கூடவோ கூட்டணி சேருவோம். அதுதான் கட்சிக்கு நல்லது. இல்லேன்னா சில எம்.எல்.ஏ.க்களுக்கு ஆசைப்பட்டா காங்கிரஸ் இப்படியேதான் இருக்கும்’என்று அழுத்தம் திருத்தமாக சொல்லியுள்ளனர்.

இதையெல்லாம் அவர்கள் பெயரோடு குறித்துக் கொண்டார் தினேஷ் குண்டுராவ்.

இரவு 8 மணிவரை கூட்டம் நடந்தது. அதன் பின் உடனடியாக திருநாவுக்கரசர் தலைமையில் பிரச்சாரக் குழுக் கூட்டமும் தொடங்கி 10 மணி வரை நடைபெற்றது. உண்மையிலேயே இதுபோன்ற கருத்துக் கேட்புக் கூட்டம் திமுக காங்கிரஸ் இடையில் ஒரு கசப்புணர்வைதான் உண்டுபண்ணும். இதேபோல திமுக நடத்தினாலும் அந்த மாவட்டச் செயலாளர்கள் காங்கிரஸ் மீதுதான் கடுமையான புகார்களைக் கூறுவார்கள். கூட்டணி அமைந்தால் இப்படிப்பட்ட சூழலில்தான் அமையும்” என்கிறார்கள்.

இந்தக் கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே திமுக தலைமையிடம் இருந்து தினேஷ் குண்டுராவுக்கு, ‘27 சட்டமன்றத் தொகுதிகள் ஒரு ராஜ்யசபா என்று ஆஃபர் போயிருக்கிறது. அதை அவர் உடனடியாக ராகுல் காந்திக்கும் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி என்ன பதில் சொன்னாரோ தெரியவில்லை... நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி, ‘மூன்றாவது அணியில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை’ என்று தெளிவாகக் கூறினார்.

தினேஷ் குண்டுராவ், “வதந்திகளை நம்பாதீர்கள். திமுக காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக போய்க் கொண்டிருக்கிறது” என்றார்.

எனவே அறிவாலயத்தின் ஆஃபர் சத்தியமூர்த்தி பவனில் வேலை செய்துகொண்டிருக்கிறது என்றே தெரிகிறது.

-வேந்தன்

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர் ...

4 நிமிட வாசிப்பு

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர்  முருகன்

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

3 நிமிட வாசிப்பு

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

வெள்ளி 5 மா 2021