மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 மா 2021

யாருடன் கூட்டணி? காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களிடம் குண்டுராவ் நேருக்கு நேர்

யாருடன் கூட்டணி? காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களிடம் குண்டுராவ் நேருக்கு நேர்

திமுக, அதிமுக போன்ற கட்சித் தலைமை அலுவலகங்களில் நேர்காணல்கள் நடந்து வருகின்றன. ஆனால் கூட்டணி இன்னும் முடிவு செய்யப்படாத காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திலும் நேர்காணல் இன்று (மார்ச் 4) முதல் நடைபெற்றுள்ளது. இது வேறு வகையான நேர் காணல்.

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு போதிய தொகுதிகள் ஒதுக்கப்படாத சூழ்நிலையில், இன்று மார்ச் 4 தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தை அவசரமாக கூட்டியிருக்கிறார் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்.

தமிழக காங்கிரஸில் இருக்கும் 72 மாவட்ட தலைவர்களும் இன்று காலை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்துவிட்டார்கள். பிப்ரவரி 25 ஆம் தேதி திமுகவுடன் நடத்திய முதல்கட்ட பேச்சுவார்த்தை , அதன்பிறகு மார்ச் 3ஆம் தேதி தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி அறிவாலயம் சென்று நடத்திய இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை என இரண்டு பேச்சுவார்த்தைகளிலும், உடன்பாடு எட்டப்படாத நிலையில் இன்றைய அவசரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் 41 இடங்களில் தொடங்க திமுகவோ 15 இடங்கள்தான் தர முடியும் என்று ஆரம்பித்தது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தையின் போது, கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளுக்குக் குறைவாக இருந்தால் கூட்டணியை மறுபரிசீலனை செய்கிறோம் என்று அறிவாலயத்துக்கே சென்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துவிட்டார்.

இதன் பிறகுதான் நேற்று அவசரமாக அழைப்பு விடுக்கப்பட்டு, இன்று மாவட்டத் தலைவர்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. ராகுல் காந்தியை சந்தித்து விட்டு சென்னைக்கு வந்திருக்கும் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்தான் இந்த கூட்டத்தை நடத்தி வருகிறார்.

தமிழக காங்கிரஸின் 72 மாவட்டக் தலைவர்களுக்கும் வரிசை எண் ஒதுக்கப்பட்டு டோக்கன் கொடுக்கப்பட்டு விட்டது. இன்று காலை முதல் ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் தினேஷ் குண்டுராவின் அறைக்குச் செல்கிறார்கள். அந்த அறையில் தினேஷ் குண்டு ராவ், மாவட்டத் தலைவர் தவிர வேறு யாருமில்லை.

நேருக்கு நேராக காங்கிரஸ் மாவட்ட தலைவர்களிடம் தினேஷ் குண்டுராவ் சில முக்கியமான கேள்விகளை வைத்திருக்கிறார்.

திமுக கூட்டணியில் நமக்கு குறைவான இடங்களை ஒதுக்கப்படும் நிலையில் அந்தக் கூட்டணியில் தொடரலாமா? அல்லது கமல்ஹாசனின் மக்கள் நீதி மையத்தோடு கூட்டணி வைக்கலாமா? தினகரனின் அம்மா முன்னேற்றக் கழகத்தோடு நாம் கூட்டணி வைக்கலாமா? இம்மூன்றும் இல்லையென்றால் தனித்துப் போட்டியிடலாமா? திமுகவுடன் கூட்டணி இல்லாவிட்டால் நீங்கள் தேர்தலில் போட்டியிடுவீர்களா?

ஆகிய கேள்விகளை வைக்கிறார் தினேஷ் குண்டுராவ். இதற்கு மாவட்டத் தலைவர்கள் கூறும் பதில்களை தனித்தனியே குறித்துக் கொள்கிறார்.

மொத்தம் 72 மாவட்டக் தலைவர்களிடமும் கருத்துக் கேட்டு முடிவதற்கு மாலை நெருங்கிவிட்டது.

இதுவரை தினேஷ் குண்டுராவ் சந்தித்த மாவட்ட தலைவர்கள் திமுக கூட்டணியில் இருந்தால் காங்கிரஸ் கட்சிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் என்றும், அடுத்து நடக்கும் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உரிய பலன்கள் கிடைக்கும் என்றும் அதனால் திமுக கூட்டணியில் தொடரலாம் என்றும் கருத்து தெரிவித்து வருவதாக நம்மிடம் பேசிய சில மாவட்டத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

மாவட்டத் தலைவர்களின் கருத்தையடுத்து நாளை காங்கிரஸ் செயற்குழுக் கூட்டமும் கூட்டப்படுகிறது. நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும் நடக்க இருப்பதால் நாளை திமுக காங்கிரஸ் கூட்டணி ஒரு ‘முடிவு’க்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

வியாழன் 4 மா 2021