மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 மா 2021

6 சீட்-கட்சி எதிர்ப்பை மீறி கையெழுத்திட்டேன்: திருமாவளவன்

6 சீட்-கட்சி எதிர்ப்பை மீறி கையெழுத்திட்டேன்: திருமாவளவன்

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஆறு இடங்கள் வழங்கி தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இன்று காலை மின்னம்பலத்தில் திருமாவுக்கு 6 இடங்கள்: இன்று முடிவு

என்று வெளியான செய்தியில், “கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, திருமா 8 தொகுதிகளாவது வேண்டும் என நின்றபோது, 5 என திமுக தரப்பு நின்றநிலையில், வி.சி.க.வுக்கு 6 தொகுதிகள் என இறுதியாகியிருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தோம்.

அதன்படியே உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“ திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் - விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் இன்று (4-3-2021) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழகத்தில் 6 (ஆறு) சட்டமன்றத் தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது.

இந்த பேச்சு வார்த்தையின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர்கள் சிந்தனைச்செல்வன், டி.இரவிக்குமார், எம்.பி., பொருளாளர் முகமது யூசுப் - திமுக கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, எம்.எல்.ஏ., துணைப் பொதுச்செயலாளர்கள் இ.பெரியசாமி, எம்.எல்.ஏ., க.பொன்முடி, எம்.எல்.ஏ., திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு, எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவாலய வாசலில் செய்தியாளர்களிடம் இந்த ஒப்பந்தத்தை வாசித்த திருமாவளவன் மேலும்,

”விடுதலை சிறுத்தைகள் திமுக தலைமையிலான கூட்டணியில் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். தமிழ்நாட்டை சூழ்ந்திருக்கும் சனாதன பேராபத்தில் இருந்து காக்க வேண்டிய யுத்த களமாக இந்தத் தேர்தலை நாங்கள் பார்க்கிறோம். தமிழ்நாட்டையும், புதுச்சேரியையும் குறிவைத்து சங்க பரிவார் பல சதி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் அவர்களால் இங்கே காலூன்ற முடியாத நிலை பல பத்தாண்டுகளாக நீடித்து வருகிறது. காங்கிரஸ் கோலோச்சிய பல மாநிலங்களில், வடகிழக்கு மாநிலங்களில் சூது சூழ்ச்சிகளை செய்து சதித் திட்டங்களை அரங்கேற்றி ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்திய பாஜகவால் தமிழ்நாட்டில் எதையும் செய்ய இயலவில்லை. ஆனால் அதற்கான அனைத்து பகீரத முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை பலவீனப்படுத்திட கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். இத்தகைய சூழலில் 2019 தேர்தலில் இருந்து சிறுத்தைகள் திமுக அணியில் பயணித்து வருகின்றது. எங்கள் நோக்கம் சனாதன சக்திகள் தலையெடுத்துவிடக் கூடாது என்பதுதான். இதனால் எந்த நிபந்தனையும் இல்லாமல் திமுக கூட்டணியில் இடம்பெற்று பயணிக்கிறோம்.

இந்நிலையில் தொகுதிப் பேச்சுவார்த்தை நடத்தியதில் 6 இடங்களில் போட்டியிடுவது என்று முடிவெடுத்திருக்கிறோம். எங்கள் உயர் நிலை குழுவில் தலைமை நிர்வாகக் குழுவில் அதிருப்தி தெரிவித்த நிலையில், உடன்பாடு செய்ய வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்த நிலையில்....தமிழகத்தின் சூழலைக் கருத்தில் கொண்டு மதச் சார்பற்ற சக்திகளின் வாக்குகள் சிதறிவிடக் கூடாது, அப்படி சிதறுவதற்கு நாங்கள் காரணமாக இருந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில்தான் இந்த தொகுதி உடன்பாட்டை ஏற்படுத்தியிருக்கிறோம். ஆறு தொகுதிகளிலும் தனி சின்னத்தில் போட்டியிடுகிறோம்” என்று தெரிவித்தார் திருமாவளவன்.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

வியாழன் 4 மா 2021